எண்ணிக்கையில் எனக்கு நம்பிக்கை இல்லை

எண்ணிக்கையில் எனக்கு நம்பிக்கை இல்லை
Published on

சிபிராஜ் நேர்காணல்

ராகவ்குமார்

 சிபிராஜ் நடிக்க வந்து பதினெட்டு ஆண்டுகள் ஆகிவிட்டது. அவ்வப்பொழுது படங்கள் தந்தாலும் திரும்பி பார்க்கும் வகையில் படங்கள் தருகிறார். விரைவில் வெளிவர இருக்கும் 'ரங்கா' பட வேலைகளில் பிசியாக இருந்தவர், நேரம் ஒதுக்கி நம்மிடையே பேசுகிறார்.

'ரங்கா' என்ன களம்?
கல்யாணமாகி ஹனிமூன் போகும் தம்பதிகள் ஒரு பிரச்னையில் மாட்டி கொள்கிறார்கள். இதிலிருந்து எப்படி வெளி வருகிறார்கள் என்பதை ஆக்க்ஷனுடன் சொல்லியிருகிறார் டைரக்டர் டி.எல். வினோத். படத்தின் கதை நடக்கும் இடம் குலுமணாலியாக இருந்தாலும் படப்பிடிப்பு நடந்த இடம் காஷ்மீர்.

காஷ்மீரில் படப்பிடிப்பு என்றவுடன் உங்களுக்கு பயம் வரவில்லையா?

இல்லை. 'காஷ்மீர் என்றவுடன் துப்பாக்கி, தீவிரவாதம்' என்ற எண்ணங்கள் நம் மனதில் ஓடும். ஆனால் உண்மையில் காஷ்மீர் மக்கள் நிறைய அன்பானவர்கள். படப்பிடிப்பு நடக்கும்போது
எந்தவித தொந்தரவும் தரவில்லை. 'ஜூபேர்' என்ற லோக்கல் மேனேஜர் எங்களுக்கு பலவிதங்களில் உதவியாக இருந்தார். சுவிட்ச்சர்லாந்தைவிட பல மடங்கு அழகான பகுதி நமது காஷ்மீர்.

காஷ்மீரில் சந்தித்த பிரச்னைகள் என்ன?

உள்ளூர் அரசியல் நிகழ்வுகளால் படப்பிடிப்பு நடத்துவதில் கால தாமதம் ஏற்பட்டது. இருந்தாலும் இருபது நாள் படப்பிடிப்பை முடித்துவிட்டுதான் திரும்பினோம். பனிபொழிவில் கேமரா உதவியாளர் ஒருவர் மாட்டிக்கொண்டார். கேமராவை தலையில் தூக்கிக் கொண்டு பனி சறுக்களில் பல கிலோமீட்டர் தூரம்  நடந்து  ஸ்பாட்டிற்கு வந்தார்.

படத்தின் தலைப்பை, தனுஷ் போன்று ரஜினி படத்திலிருந்து வைக்க ஆரம்பித்துவிட்டீர்களே?

படத்தின் தலைப்பு என்பதை முடிவு செய்பவர்கள் தயாரிப்பாளரும், டைரக்டரும் தான். இவர்களுக்குத்தான் படத்தின் வியாபாரம், மார்க்கெட்டிங் பற்றி தெரியும். இதை வைத்துத்தான் தலைப்பை முடிவு செய்கிறார்கள். இதில் நான் தலையிடுவதில்லை. படத்தில் என் கேரக்டர் பெயர் ஆதி. காக்கும் கடவுள் ரெங்கநாதரை
மையப்படுத்தி 'ரங்கா' என்று பெயர் வைத்திருக்கிறார்கள்

நிக்கிலா…..

கிடாரி உட்பட பல படங்களில் நடித்துள்ள திறமையான  நடிகை. பனிச்சறுக்களில் வேகமாக ஓட சிரமப்பட்டார். சமாளித்து ஓடி நடித்தார். 'நடிப்பு' என்ற ஒற்றை விஷயத்திற்காக எந்த கஷ்டத்தையும் தாங்கிக்கொள்ள கூடியவர் நிகிலா.

இவ்வளவு வருடங்கள் நடித்தும் மிகக் குறைந்த எண்ணிக்கையிலான படங்களில் மட்டுமே நடித்திருக்கிறீர்களே?

எண்ணிக்கையில் எனக்கு நம்பிக்கை இல்லை. முன்பு சினிமா மட்டுமே பொழுதுபோக்காக இருந்தது. அதுவும் தியேட்டரில் சென்றுதான் படம் பார்க்க வேண்டிய சூழல் இருந்தது. இப்போது அந்த சூழல் இல்லை. ஓ.டி.டி., டி.வி., என்று வந்த பிறகு சினிமாவும் ஒரு பொழுது போக்கு என்று ஆகிவிட்டது. ரசிகர்கள் பிறமொழி படங்களையும் பார்க்க ஆரம்பித்து விட்டார்கள். இன்று எண்ணிக்கையைவிட தரம் தான் முக்கியம். 'ரங்கா' படத்திற்கு முன் பத்து கதைகள் வரை கேட்டு நிராகரித்து உள்ளேன். ஒரு வேளை  நான் சினிமா பின்புலம் இல்லாமல் இருந்திருந்தால் பணம் சம்பாதிப்பதை குறிக்கோளாக கொண்டு நடித்து இருக்கலாம்.

சத்யராஜ், கவுண்டமணி, மணிவண்ணன் என முன்பெல்லாம் கூட்டணி போட்டு ஹீரோக்கள் நடித்து வந்தார்கள். இப்போது இது போன்று சூழல் இல்லையே?

இப்போது கூட்டணி தத்துவம் சரியாக வராது. முன்பெல்லாம் ஹீரோக்களும் குறைவாக இருந்தார்கள். நடிகர்களும் குறைவாக இருந்தார்கள். இப்போது நிறைய ஹீரோக்களும், மற்ற நடிகர்களும் நிறைய பேர் இருக்கிறார்கள். குறும்பட டைரக்டர்கள்,
உதவியாளராக இல்லாமல் நேரடியாக படம் டைரக்ட் செய்பவர்கள் என பலர் வந்து விட்டார்கள். பலருக்கும் வாய்ப்பு தரவேண்டி உள்ளதால் கூட்டணிக்கு வாய்ப்பு இல்லை.

அப்பா சத்யராஜ் அவர்களிடம் பிடித்த விஷயம் என்ன?

அப்பா எஸ் பாஸ் என்று வில்லனுக்கு அடியாள் வேஷத்தில் அறிமுகம் ஆகி, வில்லனாக நடித்து, ஹீரோவாக, காமெடி, ஆக்க்ஷன், நடிப்பு என பல முகங்கள் காட்டி ரசிகர்களை தன்பால் ஈர்த்தார். இன்று தென்னிந்தியாவின் மிக சிறந்த நம்பர் ஒன் கேரக்டர் ஆர்ட்டிஸ்ட் அப்பாதான். ஆனாலும் இன்றும் ஒரு படத்திற்கு நடிக்க கிளம்பும் முன் முதல் படம் போன்று அப்படத்தை அணுகுவார். தனது ரோல் பற்றி நுணக்கமான விஷயங்களை தெரிந்துக் கொள்வார். இதுதான் அப்பாவின் வெற்றிக்கு முக்கியக் காரணம். இதை நான் பின்பற்ற முயற்சிக்கிறேன்.

இப்போது நடிக்கும் மற்ற படங்கள் என்ன?

எஸ்.ஆர்.பிரபுவின் வட்டம், ரேஞ்சர், மாயோன் உட்பட பல படங்களில் நடிக்கிறேன்.

Loading content, please wait...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com