நகரும் மேகங்கள்

நகரும் மேகங்கள்
Published on

 – தஞ்சை ப்ரணா  

"ஹலோ! ரகு, நான் சுரேஷ் பேசறேன்!"

"ஹலோ! சுரேஷ், சொல்லு என்ன ஏதாவது முக்கியமான விஷயமா?"

"ரகு, நீயும் எனக்கு சாதகமாத்தான் வோட்டு போடணும். இன்னிக்கு எட்டு மணிக்கு நம்ம அப்பார்ட்மெண்ட் மீட்டிங் இருக்கு வருவீல?"

"இன்னிக்குள்ள ஒரு ப்ராஜக்ட் முடிச்சே ஆகணும். அதனால தெரியலை; பத்து மணியா பதினொரு மணியா? எப்ப கிளம்புவேன்னே தெரியல" என்றேன்.

"ஓ…அப்படியா சரி!" ஆனா எனக்கு சாதகமா கையெழுத்து போட்டா அது கூட போதும்"

"பார்க்கலாம்!"

எனக்கும் சுரேஷுக்கும் சில நாட்களுக்கு முன்பு நடந்த தொலைபேசி உரையாடல் தான் மேலே உள்ளது.

சில வாரங்களாய் ஓடிக்கொண்டிருக்கும் பிரச்னை இது.

பெங்களூரில் உள்ள எங்கள் 'நீலத் தாமரை' அப்பார்ட்மெண்ட்-ல் வேலைப் பார்க்கும் வாட்ச் மேன்களில் ஒருவரான மாரியப்பன் போன மாதத்தில் ஒரு நாள் இரவு 1.00 மணியளவில் டுயூட்டி நேரத்தில் லேசாக கண் அயர்ந்து விட்டார்.

சினிமா இரண்டாம் காட்சி பார்த்துவிட்டு வந்த சுரேஷின் காருக்கு கதவைத் திறக்க ஆள் இல்லாமல் போகவே மிகுந்த கோபம் வந்துவிட்டது அவனுக்கு. காரின் வெளிச்சம் பார்த்து அவர் சற்று நேரத்தில் ஓடி வந்து கதவைத் திறந்தாலும் தன்னை காத்திருக்க வைத்த மாரியப்பன் மீது சரியான கோபம்.

இரண்டு வாரங்களுக்கு முன்பு மீண்டும் இரவு 2 மணிக்கு சுரேஷ் பார்ட்டி முடித்துவிட்டு வந்த போது மாரியப்பன் நாற்காலியில் அமர்ந்தபடியே கண் அயர, அதை போட்டோ எடுத்து குடியிருப்புவாசிகளின் வாட்ஸ் அப் குழுவுக்கு அனுப்பி மிகப்பெரிய பிரச்னை ஆக்கிவிட்டான் சுரேஷ்.

"வாட்ச் மேனை நம்பித்தானே நாம இரவு நிம்மதியா வீட்ல தூங்குறோம். அவங்களே தூங்கினா? எப்படி நாம நிம்மதியா இருக்கறது" என்ற அவனின் கேள்வி ஒரு விபரீத உணர்வையே எல்லோருக்குள்ளும் தந்தது. சுமார் நாற்பத்தைந்து குடும்பங்கள் குடியிருக்கிறோம் எங்கள் அப்பார்ட்மெண்டில்.

தமிழ், கன்னடம், தெலுங்கு, ஹிந்தி மற்றும் குஜராத்திக்காரர்கள் என கலவையாய் குடியிருக்கும் இதில்  காலை ஒருவர் இரவு வேளையில் ஒருவர் என இரு வாட்ச் மேன்கள் வேலை பார்க்கிறார்கள். நான் இங்கு குடிவந்து ஐந்து மாதங்கள் ஆகின்றன.

சுரேஷ் செய்த அமளியில் மாரியப்பனை வேலையில் வைத்துக் கொள்ளலாமா வேண்டாமா என்பதை முடிவு செய்ய அசோசியேஷன் உறுப்பினர்கள் கூடும் நாளில் தான் சுரேஷ் எனக்குப் போன் செய்தான். அதுவும் அவனுக்கு ஆதரவு அளிக்குமாறு கேட்டு.

நானும் இந்தப் பிரச்னையில் சுரேஷ் பக்கம் தான் இருந்தேன். ஆனால் சில நிகழ்வுகளால் என் எண்ணம் அடியோடு மாறியது.

இந்தப் பிரச்னை நடந்து கொண்டிருந்த ஒருநாள் அலுவலகத்திலிருந்து கிளம்ப இரவு பத்து மணி ஆகிவிட்டது. சுமார் பத்தரை மணிக்கு அப்பார்ட்மெண்டுக்கு வந்த போது மாரியப்பன் கதவைத் திறந்தார். சற்றே முகத்தில் அணிந்திருந்த மாஸ்க் விலகியிருந்தது. இப்போது தான் அவரை உற்றுப் பார்த்தேன். அந்த காலத்து நடிகர் எஸ்.எஸ்.ஆர். போல் இருந்தது அவருடைய முக ஜாடை.

"என்ன தம்பி அப்படிப் பார்க்கிறீங்க?" என்றார்.

"நானும் தமிழ் நாடு தான்-னு எப்படி தெரியும் உங்களுக்கு?" என்றேன்.

"இந்த ஊர்ல பாதி பேர் தமிழ் பேசுவாங்க; அது மட்டுமில்லாம உங்க முகத்த பார்த்தவுடனே தெரிஞ்சுகிட்டேன் நம்ம ஊர் ஆளுனு" என்றார்.

இருவரும் புன்னகைத்தோம்.

அவர் கண்களோ தூக்கத்தை கெஞ்சியது.

எங்கள் அப்பார்ட்மெண்ட் வாசலில் தள்ளுவண்டியில் டீ விற்கும் சலீம் என் கண்ணில் பட மாரியப்பனிடம் திரும்பி,

"வறீங்களா ஒரு டீ சாப்பபிடலாம்" என்றேன்.

சட்டென உணர்ச்சிவசப்பட்டவர் "நானும் ரெண்டு வருஷமா இங்க தான் வேலையில இருக்கேன் தம்பி… என்னை இதுவரைக்கும் யாருமே டீ சாப்பிட கூப்பிட்டதில்லை" என்றார்.

"சலீம் ரெண்டு டீ" என்றேன்.

இந்த பெங்களூர் குளிரில் இரவில் சுடச்சுட டீ குடிக்கும் சுகமே சுகம்.

நானும் மாரியப்பனும் அப்பார்ட்மெண்ட் வாசலில் கேட் அருகே நின்று டீ அருந்தத் துவங்கினோம்.

"உங்களுக்கு எந்த ஊரு?' என்றேன்.

"தஞ்சாவூரு"

"அட நான் மாயவரம்…" என்றேன்.

புன்னகைத்தோம்.

"உங்களைப் பார்த்தா  எஸ்.எஸ்.ஆர். மாதிரி இருக்கு" என்றேன்.

வாய்விட்டுச் சிரித்தார்.

"ஒரு விஷயம் தெரியுமா தம்பி, நான் அந்த காலத்துல நிறைய நாடகமெல்லாம் நடிச்சிருக்கேன்" என்றார்

ஆச்சரியமாய் அவரைப் பார்த்த நான், "அப்படியா?" என்றேன்.

"ஆமாம் தம்பி அது என்னோட வாழ்க்கையோட வசந்த காலம்".

"தப்பா நினைச்சுக்கக் கூடாது… உங்க வயசு என்ன?" என்றேன்.

"இந்த ஆவணி வந்தா அறுபத்தி மூணு முடிஞ்சு அறுபத்தி நாலு"

"பார்த்தா தெரியலையே; சும்மா மிலிட்டரி மேன் போல நல்லா ஃபிட்டா இருக்கீங்களே!" என்றேன்

சிரித்தார்.

"நீங்க எஸ்.எஸ்.ஆர்.க்கு சொந்தமா? என்றேன். நம்ப மாட்டீர்கள் கிட்டத்தட்ட அப்படியே இருந்தார்.

நெளிந்தவர், "அதெல்லாம் இல்ல தம்பி… ஆனா எஸ்.எஸ்.ஆர்-னு சொல்லி நீங்க பழைய ஞாபகத்தை எல்லாம் கிளறிவிட்டீங்க தம்பி…" என்றவர் தொடர்ந்தார், "சின்ன வயசுல இன்னுமே ஜொலிப்பா இருப்பேன். அரிதாரம் பூசிப் பூசி முகத்தை எப்போதும் மினுமினுப்பா வெச்சிருப்பேன்."

"நீங்க சொல்றதெல்லாம் ஆச்சரியமா இருக்கு"

"இப்ப  நினைச்சா எனக்கே ஆச்சரியமாத்தான் இருக்கு தம்பி… அந்த காலத்துல எங்க ஊர்ல என்னை சின்ன எஸ்.எஸ்.ஆர். தான் கூப்பிடுவாங்க; தமிழ்நாட்ல நான் போகாத ஊரு இல்ல, நாடகத்துல நான் போடாத வேஷம் இல்ல தம்பி; ராஜா, மந்திரி, திருடன், டாக்டர், குடிகாரன், வக்கீல், போலீஸ், எம்.எல்.ஏ, இப்படி விதவிதமா வேஷம் போட்டு நடிச்சிருக்கேன்…" ஒரு நிமிடம் மெளனத்தில் ஆழ்ந்துவிட்டு தொடர்ந்தார்.

மேடை நாடகம் மட்டுமில்லாம தெருத்தெருவா வீதி நாடகம் கூட கை காசை போட்டு நடத்தியிருக்கேன். புரட்சி கருத்து பேசியிருக்கேன். அதெல்லாம் ஒரு காலம். இந்த சினிமா, டி.வி.யெல்லாம் வந்த பிறகு மக்களோட ரசனையெல்லாம் திசை மாறி போயிடுச்சு. இவ்வளவு ஏன் கலைஞர் கையால கலைமாமணி பட்டம் வேற வாங்கியிருக்கேன். ஆனா இப்ப பாருங்க என் வாழ்க்கை எங்கயோ திசை மாறி போயி இப்ப இங்க வாட்ச் மேனா இருக்கேன். ஆனா ஒன்னு தம்பி, "நான் எந்த நாடகத்திலும் வாட்ச் மேன் வேஷம் போட்டதேயில்ல" என்றவரின் குரல் கரகரத்தது.

"அப்புறம் எப்படி இந்த வேலைக்கு நீங்க வந்தீ…" நான் முடிப்பதற்குள் அவரே தொடர்ந்தார்.

"என்ன பண்ண? குடும்பம் இருக்கே… வருமானம் வேணுமில்ல, பெரிய பொண்ணுக்கு நாற்பது வயசாச்சு இன்னும் கல்யாணத்துக்கு நேரம் வரலை; சின்ன பொண்ணு காலேஜ் படிக்கிறா. கடைகுட்டி பையன்; அவனுக்கு கொஞ்சம் மனநிலை சரியில்ல; என் பொஞ்சாதி எங்க ஊர்லயே நாலஞ்சு வீட்ல வீட்டு வேலை செய்யுது. ராஜாவா வேஷம் கட்டி திரிஞ்ச ஊர்லயே வேலை பாக்குறதுக்கு தன்மானம் இடம் கொடுக்கல, கொஞ்ச நாளு சென்னையில வேலைப் பார்த்தேன், அப்புறம் கொஞ்ச நாளு ஹொசூர்ல வேலை செஞ்சேன். இப்ப பெங்களூர் பக்கம் வந்து வேலை பார்க்கிறேன்."

பேசுவதற்கு ஆள் இல்லாமல் தவிப்பவரைப் போல் படபடவென தன்னைப் பற்றி அத்தனையும் கொட்டித் தீர்த்தார்.

"இன்னொரு டீ சாப்பிடுறீங்களா?" என்றேன்

"அட வேணாம் தம்பி!"

சலீமிடம் இரு டீ-க்கான பணத்தைக் கொடுத்தேன். இருவரும்  அப்பார்ட்மெண்ட் வாயிற் கதவை நோக்கி நகர்ந்தோம்.

"தம்பி…" ஏதோ சொல்ல வந்தவர் சொல்லாமலே நிறுத்திக் கொண்டார்.

"என்ன சொல்லுங்க?"

"சுரேஷ் சார் பண்ண பிரச்னை உங்களுக்கே தெரியும்… நான் டியூட்டி நேரத்துல தூங்கினது தப்புதான். ஆனா ஏதோ அசதி; வயசு வேற ஏறுது, அதான் என்னையே அறியாம கண் அசந்துட்டேன். அதுக்காக என்னை வேலைய விட்டு நீக்குறதா பேசிக்கிறாங்க, நீங்க தான் எப்படியாவது…."

"உங்க நிலைமை எனக்குப் புரியுது; ஆனா இது ஒருத்தர் எடுக்கற முடிவில்ல; குழு உறுப்பினர்கள் கூடி எடுக்கற முடிவு. என்னால முடிஞ்ச வரைக்கும் நான் சொல்லிப் பார்க்கிறேன்" என்றேன்.

பிறகு எனது பைக்கை பார்க்கிங்கில் விட்டுவிட்டு எனது பிளாட்டுக்கு வந்தேன். மனைவி ஊரில் இல்லை. வேலைக்காரம்மா வராததால் வீடு கொஞ்சம் குப்பையாய் இருந்தது. படுக்கும் அறையை மட்டும் பெருக்கி விட்டு படுத்து தூங்கியே போனேன்.

மாறி மாறி ஏதேதோ கனவு, நான் ராஜா வேஷம் போட்டுக்கொண்டு சென்று எஸ்.எஸ்.ஆர். கையால் விருது வாங்குவதுபோல் கனவு கண்டேன்.

சுரேஷ் எனக்கு தொலைபேசிய தினத்தில் மாரியப்பனை வேலையை விட்டு நீக்குவது குறித்து முடிவு எடுக்கும் கூட்டம் கூடியது; நானோ ஃப்ராஜட் டெட்லைனில் மாட்டிக்கொண்டேன், நான் மாரியப்பனுக்கு ஆதரவாய் இருக்கிறேன் என்பதை பதிவு செய்யும் வாய்ப்பு கூட எனக்குக் கிடைக்கவில்லை.

மாரியப்பனை வருகிற முப்பதாம் தேதியுடன் கணக்கு முடித்து அனுப்புவது என கூட்டத்தில் தீர்மானம் ஆனதாய் கேள்விப்பட்டேன்.

அவரது நாடகத் திறன், கலைஞன் என்ற மதிப்பு, கலைமாமணி வாங்கியவர் என்ற பெருமை, சிரமத்தில் இருக்கும் குடும்ப சூழல் என இவை எது பற்றியும் அறியவோ அல்லது கணக்கில் எடுத்துக்கொள்ளவோ யாருக்கும் அன்று நேரமும் இல்லை, பொறுமையும் இல்லை; பணியில் கண் அயர்ந்த ஒரு குற்றவாளிதான் மாரியப்பன் என்கிற முழு மனிதன் என்று எல்லோரும் முடிவே செய்துவிட்டனர் போலும்.

நான் அன்று பணி முடித்து வரும் போது மாரியப்பன் என்னிடம் முகம் கொடுத்தே பேசவில்லை.

சரி அவரை தொந்தரவு செய்ய வேண்டாம் என விட்டுவிட்டேன்.

பிறகு தாமதமாகும்  இரவு நேரங்களில் எனக்காக கேட்டை திறக்கும் போதும் சரி; நேருக்கு நேர் பார்க்க நேரிட்டாலும் சரி அவர் என் முகத்தைப் பார்ப்பதை தவித்தார்.

மாரியப்பன் என்னை தவிர்ப்பது என்னை என்னமோ செய்தது. முப்பதாம் தேதிக்கு இன்னும் இரு தினங்களே இருந்தன.

நான் அவரை ஆதரிக்க அன்று இல்லாதது அவருக்கு வருத்தமோ என யூகித்தேன். நான் இருந்து அவரை ஆதரித்து பேசியிருந்தாலும் கூட்டதில் உள்ள பெரும்பான்மையோர் என்ன முடிவெடுக்கிறார்களோ அது தான் வெல்லும். இதை அவருக்குச் சொல்லி புரிய வைக்க முடிவு செய்தேன்.

என்னைத் தவிர்த்தாலும் பரவாயில்லை என வலுகட்டாயமாக நானே அவரை வழிமறித்துப் பேசினேன். முதலில் தயங்கியவர் பின் மெதுவாக,

"இப்படி முதுகுல குத்திட்டீங்களே தம்பி!"

எனக்கு ஒன்றுமே புரியவில்லை.

"என்ன சொல்றீங்க? அன்னிக்கு அசோசியேஷன் கூட்டத்துக்கு என்னால வரமுடியாம போயிடுச்சு…"

"அது புரியுது தம்பி, எனக்கு இந்த வேலை எப்படியும் போயிடும்னு தெரியும்; ஆனா நீங்க கூட எனக்கு ஆதரவா இல்லையேனு தான் வருத்தம்"

"என்ன சொல்றீங்க புரியலையே?"

"சுரேஷ் சார்கிட்ட போன்ல 'மாரியப்பனை வேலையவிட்டு தூக்குறதுல எனக்கு எந்தவித எதிர்ப்பும் இல்ல'னு சொன்னீங்களாம்?"

"யார் சொன்னது?"

"வோட்டெடுப்பு நடந்த போது சுரேஷ் சாரே எல்லார் முன்னிலையிலயும் இதைச் சொன்னார்"

சுரேஷ் நான் இல்லாததை பயன்படுத்திக் கொண்டான் என புரிந்து கொண்டேன்.

"அப்படி எதுவும் நான்..…."

"இல்ல தம்பி… நீங்க எதுவும் சொல்ல வேண்டாம், என்னை மாதிரி ஆளுங்க எல்லாம் நகர்ந்துகிட்டே இருக்குற மேகம் மாதிரி. எங்களோட தேவை உங்களுக்கு நிரந்தரம் கிடையாதுனு புரிஞ்சுகிட்டேன்".

அவர் வார்த்தையிலும், முக பாவணையிலும், இயலாமை, ஆற்றாமை, வேலை இழந்த துடிப்பு, மெல்லிய கோபம் என எல்லாம் இருந்தது.

ஆனால் இது எதுவும் நடிப்பு இல்லை.

Loading content, please wait...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com