சாரதா முதுகின் வலி தாங்கமுடியாமல் ஈனஸ்வரத்தில் முனகினாள்.."சாரதா என்ன சாரதா… ? பாட்டி…" அப்படி எல்லோரும் கூப்பிட்டு அவளுக்கு தன் பெயரே மறந்து போய்விட்டது..வீட்டில் பல வருடங்களாக வேலை செய்துகொண்டிருக்கிற சின்னத்தாயி அவளை சாரதாம்மா என்றழைத்துக் கொண்டிருந்தாள். அவளும் கூட கடந்த சில வருடங்களாக "பாட்டி" என்று அழைக்கிறாள்..கேட்டால், பாட்டி என்பது மரியாதையான வார்த்தையாம். 'கிழவி' என்பது வயதானவர்களைக் கேலி செய்யும் வார்த்தையாம். சாரதாவின் பார்வையில் இரண்டுமே வயதையும், இயலாமையையும் சுட்டிக்காட்டும் வார்த்தைகள்தான்..எல்லோரும் பாட்டியென்று கூப்பிடுவதால், அதையே பெயராக மாற்றம் செய்துகொண்டு விடலாமா? அப்படி வயதான எல்லோருமே பாட்டியென்றால் சாரதா யார்? பேரன் முகுந்தனின் பாட்டி என்று மாற்றிக்கொள்ளலாம்..எப்படி வேண்டுமானாலும் சொல்லித் தொலைக்கட்டும். இரண்டரை வருடங்களாக படுத்தே கிடக்கிற பாட்டி, கஞ்சியைத் தவிர எதுவும் சாப்பிடாத பாட்டி, படுக்கையிலேயே எல்லாத்தையும் செய்கிற பாட்டி, அதையெல்லாம் பார்த்துக்கொள்ள நர்ஸை வைத்துக்கொண்டிருக்கிற பாட்டி. இன்னும் வேறெதாவது விட்டுப் போயிருக்கிறதா?.பெயரளவிற்கு உடலை அசைத்ததில், முதுகில் ஈரம் உணர்ந்தாள். வியர்வையா அல்லது மூத்திரம் டயபரை உடைத்துக்கொண்டு வெளியேறிவிட்டதா? நாற்றத்திலேயே கிடப்பவளுக்கு வேறு மணம் உண்டோ?.யாரையாவது உதவிக்கு கூப்பிடலாமென்று குரல் எழுப்பினால் அது முனகல் சப்தமாகத்தான் வெளிவருகிறது. முனகல் மெலியதாக இருந்தால் யாரும் வரப்போவதில்லை. அதுவே உரத்து ஒலித்தால் நர்ஸ் என்னவென்று பார்த்துவிட்டு போவாள். அவளுக்கு மொபைலில் வீடியோ, சினிமா பார்க்கவே நேரம் சரியாக இருக்கிறது. சில சமயம் , சாரதா முனகும்போது சம்பந்தமே இல்லாமல் நர்ஸ் சிரிப்பாள். அவளது அவஸ்தையைக் கண்டுதான் சிரிக்கிறாள் என்று சுயபச்சாதாபத்தில் தோன்றும். ஆனாலும் சினிமாவில் ஏதோ காமெடி சீன் போல என்று தன்னையே சமாதானம் செய்து கொள்வாள்..அவளது முனகலை எப்போதும் வலியின் வெளிப்பாடாகவே எல்லோரும் நினைத்து கொள்கிறார்கள். எப்போதும் அப்படியில்லை. "சில சமயம் அதில் அவள் சொல்ல விழைகின்ற செய்தியும் இருக்கிறது" என்று யாரும் நினைப்பதில்லை.."சாம்…"- மறுபடியும் முனகல் சப்தம்தான்..அவளது குரலுக்கு அந்த செல்ல நாய் சாம்சங் வரவேண்டாமோ? அதுவும் இப்போதெல்லாம் கூப்பிட்டவுடன் வருவதில்லை. 55 வருடங்களுக்கு முன்னால் திருமண உறவில் விளைந்த மகனே அருகிலிருந்து கவனிப்பதில்லை… ஆஸ்திரேலியாவில் இருக்கும் மகள் வீடியோ போனில் பேசினால் அதில் அவளது பிரச்னைகள்தான் சொல்லிப் புலம்புகிறாள். இந்த லட்சணத்தில் 12 வருடங்களுக்கு முன்னால் வீட்டிற்குள் வந்த சாம்சங்கிற்கு, மகனைவிட பெரிய ஒட்டுதல் என்ன இருக்கப் போகிறது ? அப்படியும் சொல்வதற்கில்லை..அவரைச் சொல்லவேண்டும். மனிதர் தான் சீக்கிரம் போய்விடுவோம் என்று தெரிந்தோ என்னவோ அவளது மனஅழுத்தத்திற்கு மருந்தாக இருக்கட்டும் என்று ஒரு நாய்க்குட்டியை வாங்கி அவளது மடியில் தவழவிட்டார். பஞ்சுப் பொதியாய் ஒரு குட்டி. உடல் முழுக்க பழுப்பு நிறமும், முகத்தில் வெள்ளையாக ஒரு திட்டும் அதில் தீவுகளாய் இரு கண்களுமாய் பார்த்ததுமே அவளுக்குப் பிடித்துப் போனது..அந்த வாரம்தான் வீட்டில் புதியதாக சாம்சங் டிவி வந்து இறங்கியிருந்தது. அதையே நாய்க்கும் பெயராக வைத்தாள் சாரதா..மடியில் கதை கேட்டு வளர்ந்த பேரன், பேத்தி இருவரும் 'ஹாய் பாட்டி, பை பை பாட்டி' என்று கையை ஆட்டிவிட்டுச் செல்வதோடு நிறுத்திக்கொள்ள, சாம்சங் அவளது மடியில் இடம் பிடித்துக்கொண்டது.."இப்போ இருக்கிற ரெஸ்பான்சிபிலிட்டி போதாதென்று எதுக்கு அப்பா வயசான காலத்தில் ஒரு நாயையும் வாங்கிண்டு வந்திருக்கிறார்"என்று மகன் மதன்குமார் சொல்லும் போது… அப்பா, அம்மாவையும் சுமையென்று சொல்லாமல் சொல்கிறான் என்றுதான் அவள் புரிந்து கொண்டாள். அதை அவள் மறுத்தாலும் அதுதான் உண்மை. உண்மை எப்போதும் உச்சி வெயில் போல. தலைக்கு மேல்தான் இருக்கும். பார்க்கையில் கண்கள் கூசும்; அதன் வெப்பம் மண்டையைப் பிளக்கும்..ஆனால், சாரதாவின் கணவர் மாரடைப்பால் எதிர்பாராதவிதமாக இறந்து அவள் தோப்பில் தனிமரமாய் நின்றபோது துணை நின்றது சாம்சங் மட்டுந்தான்..மகன், மகள் குடும்பங்கள் தினசரி லௌகீக வாழ்க்கை நியதிப்படி இயங்கிக் கொண்டிருக்க, சாரதாவும் சாமும் தமக்குள் ஆறுதலாக இருந்தார்கள்..தனக்கு வயதானாலும் நாயை வாக்கிங் அழைத்துச் செல்வதினால் அவளுக்கு உடற்பயிற்சி கிடைக்கிறது என்றபடியால் அதை மனப்பூர்வமாக செய்து கொண்டிருந்தாள்..சாரதா படுக்கையில் விழுந்ததும் சாம்சங் கதி அதோகதியானது. ஆரம்பத்தில், தினமும் காலையில் ஓடி வந்து அவளது கட்டில் கால் அருகில் நின்று அவளது நைட்டியைப் பிடித்து இழுத்து வெளியில் போவதற்கு அழைக்கும். சினேகமாக உர்ர்ரும்… சாரதாவின் இயலாமையைப் புரிந்து கொள்ள முடியாமல் அதற்கு வேண்டிய தினசரி நடையும், அதன் நடுவே கழிவு விலக்கல் நின்று போனதையும் சொல்லி ஊங்காரமிட்டு அங்கலாய்க்கும்..மூடு இருந்தால் மதன் அதை நடைக்கு கூட்டிக்கொண்டு போவான். பெரும்பாலும் அன்றைக்கு அவன் மனைவியோடு சண்டை போட்ட நாளாக இருக்கும். ஆனால், அவன் வெளியில் நடைக்கு அழைத்து செல்லும் அந்த பத்து பதினைந்து நிமிடங்களுக்குள் சாம் அனைத்தையும் முடித்துக் கொள்ள வேண்டுமென்று எதிர்பார்ப்பான். இல்லாவிட்டால் அவனுக்கு கோபம் வந்துவிடும்.."சனியன்… டயம் கான்சியஸ்னசே கிடையாது. என்னவோ பிக்னிக் போற மாதிரி ஒவ்வொரு இடமா நின்னுக்கிட்டு… செல்பி எடுத்துக்கிற மாதிரி ஒரு போஸ் வேற…" என்று வீட்டிற்குள் வரும்போதே கத்திக்கொண்டு வருவான்..இந்த வீதி உலாவில் சாம் வெளியில் இறங்கிவிட்டால் , அடுத்த வீட்டுக்காரன் எதிர்த்த வீட்டுக்காரன் எல்லோரும் அவரவர் வாசலில் வந்து நின்றுவிடுவார்கள்.."எங்க வீட்டு வாசலில் எதுக்கு சார் உட்கார வைக்கிறீங்க?" என்று சாம் குந்திக் கொண்டிருக்கும்போது சண்டைக்கு வருவார்கள். பாதிவரைக்கும் அங்கே போய்விட்டு மீதியை எங்கேயாவது போய்க் கொள்ளட்டுமென்று சங்கிலியைப் பிடித்தாலும் , "அட இருப்பா… என்ன அவசரம்? " என்கிற மாதிரி சாம் எழுந்திருக்காது.."சார்… அது பத்து வயது குழந்தை மாதிரி சார்.. அதுக்கு போய் கம்ப்ளெயிண்ட் பண்றீங்களே" என்று சொன்னால், "எங்க வீட்டுல பத்து வயசுல குழந்தையே இருக்கு… உங்க வீட்டு வாசலில் கொண்டு வந்து உட்கார்த்தவா?" என்று மறுபேச்சு வரும்..அதன் கோபமும் சேர்ந்து வீட்டிற்குள் நுழையும்போதே வெடிக்கும். அந்த வெடியில் தெறித்து விழும் வார்த்தை குப்பைகளில் அவனது அப்பா, அம்மா கட்டாயம் இருப்பார்கள்..அவள் படுக்கையில் விழுந்ததும் சாமிற்கு எல்லாம் நழுவிப்போனதாயிற்று. வயது வேறு பன்னிரண்டு ஆகிவிட்டது. இன்னும் ஓரிரண்டு வருடங்கள் தாக்குபிடிக்கும் என்று சாரதாவிற்கு தோன்றியது..மனிதர்களைப் போலவே, வயதானால் நாய்களுக்கும் பசியின்மை, மூட்டு வாதம் எல்லாம் வருகின்றதாம். உடலிலிருந்து உயிரைப் பிரிக்க இயற்கைக்கு எத்தனை பாசாங்குகள் தேவைப்படுகின்றன?.வீட்டிற்குள் யாரோ நடமாடுவது போல் ஒலியெழ , தலையைச் சற்றே திருப்பி ஹாலை நோக்கினாள். அவளுடைய மகன் சாம்சங்கை தூக்கிக் கொண்டு உள்ளே நுழைந்தான். என்னாயிற்று அவனுக்கு? தூக்கிவாரிப் போட்டது அவளுக்கு..நாய் டாக்டர் சாய்பிரசாத்திடம் கேட்டால் பதில் கிடைக்கும். எப்படிக் கேட்க முடியும் அவளால்? யாரிடம் சொன்னால் கேட்டுச் சொல்வார்கள்? அவளது இயலாமையின் வெளிப்பாடு முனகலாய் மட்டுமே வெளிவந்தது..கண்களை மறுபடி மூடிக்கொண்டாள். குட்டி சாம்சங் அவளுக்கு அளித்த அந்த மகிழ்ச்சியான தருணங்களை கண் முன்னே சுழலவிட்டாள்..கடற்கரைக்கு போய் பந்தைத் தூக்கிப் போட்டால், கால்கள் மண்ணில் புதையப் புதைய ஓடிப்போய் பொறுக்கிக் கொண்டுவருவதும், , அவனை விட்டுவிட்டு வெளியில் போய் திரும்பி வந்தால் அவர்களைப் பார்த்த மாத்திரத்தில் மேலும் கீழுமாய் குதித்து ஊடல் கூடல் ஜாலங்கள் செய்வதும், காரின் நெடுந்தூரப் பயணத்தில் ஜன்னல் கண்ணாடியை இறக்கி வைத்தால் வேடிக்கை பார்த்தபடி செல்வதும் ஞாபகத்திற்கு வந்தன. கிராமத்து குளத்தில் அவளது பேரன் வழுக்கி விழுந்ததை யாரும் கவனிக்காதபோது , தொடர்ந்து குலைத்து எல்லோருடைய கவனத்திற்கு கொண்டுவந்து அவனைக் காப்பாற்றியதும் சாம்சங்தான். அவனுக்கு இறுதிக்காலம் வந்துவிட்டதா? அவளுக்கு முன்னல் அவன் போகப்போகிறானா?.அடுத்த இரண்டு நாட்கள் தன்னுடைய வலிகளை மறந்து சாம்சங்கைப் பற்றி கூடுதலாக கவலைப்பட்டபடி இருந்தாள். பதில் சொல்கிறானா என்பதற்காக ஐந்தாறு முறை சாம் என்றெல்லாம் முனகிப் பார்த்தாள். பதில் கொடுக்காமலிருந்தான் சாம்..அவனுக்காக அவளது மனம் இரங்கிற்று. "வா சாம்.. நாம் ரெண்டு பேரும் போய்விடலாம். இந்த உடலை விட்டு, உலகை விட்டு…".கட்டிலின் அருகே யாரோ சேரை இழுத்துப் போட்டு அமரும் சப்தம் கேட்டது..மெதுவே கண்களைத் திறந்தாள். நாய் டாக்டர் சாய்பிரசாத் புன்னதைத்தபடி அமர்ந்திருந்தார்.."மேடம்… உடம்பு எப்படி இருக்கு?" என்று அதே புன்னகை மாறாமல் விசாரித்தார். அவர் மனிதர்களுக்கான டாக்டராக இருந்திருக்கலாம். மேடம் என்றல்லவா விளிக்கிறார்.."ஏதோ இருக்கேன்… நீங்க எப்படி இருக்கீங்க…?" என்று அவள் சொன்னதை அவர் புரிந்துகொண்டாரா என்ன?!."நான் நல்லா இருக்கேன் மேடம்" என்றவர் தொடர்ந்து, "ஒரு விஷயம் உங்ககிட்ட சொல்லணும். உங்க சன் அந்த பொறுப்பை என்கிட்ட கொடுத்திட்டாரு.. அதான்.." பேசியபடி வந்தவர் சற்றே தயக்கம் காட்டினார்.."எப்படி சொல்றதுன்னு தெரியல.. சாம்சங்கிற்கு ரொம்ப உடம்பு சரியில்ல… புற்றுநோயின் ஆரம்ப அறிகுறிகள் தெரியுது… இது போகப் போக மோசமாகும். அதுக்கு பன்னண்டு வயசு வேற ஆச்சா. ஓல்ட் ஏஜ் பிராப்ளம்சும் இருக்கு…" சற்று இடைவெளி விட்டார்.."பெரிசா ட்ரீட்மெண்ட் கொடுத்தா இன்னும் ரெண்டு மூணு வருஷம் தாக்குப்பிடிக்கலாம். ஆனால், உறுதியாக சொல்லமுடியாது. நிறைய செலவாகும். அது படுகிற வேதனை என்னன்னு ஒரு டாக்டரா எனக்கு தெரியும்.. அதனால.." என்று பேச்சை நிறுத்தினார்..'ஏதோ பெரிதாக முடிவு எடுத்திருக்கிறார்கள் போலிருக்கிறது' என்று தோன்றியது சாரதாவிற்கு.."அதனால…?" அவளது புருவங்கள் உயர்ந்தன.."உங்க மகன் சாம்சங்கிற்கு யூதனேசியா பண்ணலாமான்னு கேட்டாரு… அதாவது கருணைக்கொலை… எனக்கும் அவர் கேட்டது நியாயம்னு தோணுது… உங்ககிட்ட ஒரு வார்த்தை சொல்லிட்டு அதுக்கு ஊசி போடப் போகிறேன்…" என்றார் தாழ்வான குரலில்.."சிம்பிளான முறைதான் மேடம். பெண்டோ பார்பிடால்னு மருந்தை உள்ளே ஏத்துவோம்… ஒண்ணு ரெண்டு நிமிடந்தான். அதுக்கு வலியே தெரியாது. உங்க வீட்டுக்காரரு ஆசையா வாங்கி தந்த நாய்னு எனக்கு தெரியும்… பட் ஐயம் ஹெல்ப்லெஸ்… நீங்க உடம்பைப் பாத்துக்குங்க…" கைகூப்பி வணங்கிவிட்டு எழுந்து போனார்..வாயில்லாத ஜீவன் தன்னைக் கொன்றுவிடச் சொல்லி ஒன்றும் கெஞ்சவில்லை. 'உடம்பு வலிக்கிறது' என்று மனிதர்களிடம் சொல்லி அழவில்லை.. ஆனால், எல்லோருமாய் சேர்ந்து சாமைக் கொலை செய்ய முடிவு செய்து விட்டார்கள். வலியே தெரியாமல் அவர்கள் செய்யப் போகிற கொலைக்கு 'கருணைக் கொலை' என்கிற பெயராம்..சாரதாவிற்கு முதுகில் ஈரம் கோர்த்தது போலிருந்தது. இந்த முறை கண்களிலிருந்து வழிந்த கண்ணீராக இருக்கலாம்.."நானும் இப்படி எந்த உணர்வும் இன்றி மாதக்கணக்கில் படுத்துக் கிடக்கிறேன்… எனக்கும் கருணைக் கொலை அவசியம்தான். எந்த ஆட்சேபணையும் எனக்கில்லை. உனக்கு ஒப்புதல் தராமலிருக்க எந்த தடையுமில்லை… சாம்சங்குடன் என்னையும் சேர்த்து அனுப்பு… நாய் டாக்டர் எனக்கு ஊசி போட்டாலும் பரவாயில்லை… டேய் மதன்குமார் " என்று மகனை நோக்கி உரக்க கத்தி கூப்பிட்டாள் சாரதா.."என்ன வேணும் பாட்டி ? எதுக்கு முனகுறீங்க" என்றபடி மொபைல் போனைக் கீழே வைத்துவிட்டு எழுந்து வந்தாள் நர்ஸ்.