
தகடூர் புத்தகப் பேரவையின் வாசிப்புப் பயணம்
'வாசிப்பு பழக்கத்தை மேம்படுத்த நல்ல நூல்களை வாசகர்களுக்கு அறிமுகப்படுத்தலாம்!' என்று யோசித்து செயல்படுவதில் புதுமை ஏதும் இல்லை. ஆனால், 'மாதந்தோறும் 20 நூல்களை அதை வாசித்த 20 பேர் அறிமுகப்படுத்த வேண்டும். அது கட்டாயம் வாசிப்புக்கு உகந்த நல்ல நூலாக இருந்தே ஆக வேண்டும்!' என்று முடிவு எடுத்து செயல்பட்டதில்தான் நிற்கிறார்கள் தர்மபுரியை சேர்ந்த தகடூர் புத்தகப் பேரவையினர்.
2018 ஆம் ஆண்டில் இந்த இயக்கம் தொடங்கப்பட்டது. 2019-ல் கோவிட் காலத்தில் அது தடைப்பட்டது. ஆனாலும் விடவில்லை. எடுத்த எடுப்பில் ஒவ்வொரு வாரமும் ஜூம் மீட்டிங். அதிலும் வள, வளா, கொழ, கொழா இல்லை. ஒரு எழுத்தாளரின் நூலை வாசித்த ஒருவர் அறிமுகப்படுத்துவார். எழுதிய எழுத்தாளர் ஏற்புரை நிகழ்த்துவார். தொடர்ந்து ஒன்றிரண்டு பேர் அந்த நிகழ்வை ஒட்டி கருத்து சொல்வார்கள். சரியாக ஒன்றரை மணிநேரத்தில் அந்த நிகழ்வு முடிந்துவிடும். இந்த ஜூம் நிகழ்வு மட்டும் 150 வாரத்துக்கும் மேலாக தொடர்ந்து நடந்து வருகிறது. இவை ஒளிப்பதிவு யூ ட்யூப்பிலும் வலம் வருகிறது.
இப்படி மட்டும் இதுவரை 500-க்கும் மேற்பட்ட நூல்கள் அறிவார்ந்த வாசகர்கள் மூலம் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறது. நாஞ்சில் நாடன், ஜெயமோகன், எஸ்.ராமகிருஷ்ணன், வைரமுத்து, கீரனூர் ஜாகீர்ராஜா, கண்மணி குணசேகரன், சு.வெங்கடேஷன், பெருமாள் முருகன், வரலாற்று ஆசிரியர்களான ராமச்சந்திர குஹா, முன்னாள் அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் என இந்த நிகழ்வில் பங்கேற்றுப் பேசாத தமிழ் எழுத்தாளர்களே இல்லை.தவிர பேரவை ஆரம்பித்த 2018- ஆம் ஆண்டில் தொடங்கி வருடந்தோறும் நடக்கும் புத்தகத் திருவிழா மாபெரும் வெற்றியைப் பெற்றிருக்கிறது. சென்னையில் 846 ஸ்டால்கள் போட்டு நடந்த புத்தகத்திருவிழாவில் ரூ.8 கோடிக்கு நூல்கள் விற்பனையாகியிருக்க, அதே ஆண்டு இங்கே நடந்த புத்தகத்திருவிழாவில் வெறும் 45 ஸ்டால்களே போடப்பட்டு ரூ. 1 கோடிக்கு வியாபாரம் எட்டியிருக்கிறது. ஒப்பீட்டளவில் சிறியதாக இருந்தாலும் கீர்த்தி பெரிது என்று இங்கே புத்தகக் கடைகள் கொண்டு வர பெரிதும் ஆர்வம் காட்டுகிறார்கள் புத்தக விற்பனையாளர்கள். முதல் ஆண்டில் 45 கடைகள், இரண்டாம் ஆண்டில் 60 கடைகளாக மாறியது. அடுத்த இரண்டு ஆண்டுகள் கோவிட் தொற்றினால் புத்தகத்திருவிழா நடக்கவில்லை. சென்ற ஆண்டு கோவிட் காரணமாக 3 நாட்கள் மட்டும் புத்தகக்கண்காட்சி நடந்தது.
அது மட்டுமல்ல, தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கும் இந்த வாசிப்பு இயக்கத்தை எடுத்துச் செல்கிறார்கள் இவ்வமைப்பினர். கல்வி மையங்களில் இலக்கிய கூட்டங்கள், வாசிப்பு இயக்கங்கள், புத்தகம் எழுத ஆர்வம் உள்ள மாணவர்களின் புத்தகத்தை அச்சிட்டு வெளியிடுவது,, சுற்றுச்சூழல் விழிப்புணர்வு கருத்தரங்கு போன்றவற்றையும் நடத்தி வருகிறார்கள்.
''இன்று தர்மபுரியில் நாங்கள் போகாத பள்ளிகளோ, கல்லூரிகளோ இல்லை எனலாம். அந்த அளவுக்கு பள்ளி, கல்லூரி தாளாளர்களும், ஆசிரியர்களும் ஒத்துழைக்கிறார்கள்!'' என்று மகிழ்வு பொங்க இது ஆரம்பித்த விதத்தை விளக்கினார் இப்பேரவையின் ஒருங்கிணைப்பாளர் இ. தங்கமணி.
''இதோட தலைவரா எழுத்தாளர் இரா. சிசுபாலன், செயலாளராக மருத்துவர் இரா. செந்தில், பொருளாளராக கார்த்திகேயன்
இன்னும் பல நண்பர்கள் இந்த வாசிப்பு இயக்கத்தை முன்னெடுத்து செயல்படுத்தி வருகிறோம். ஆரம்பத்தில் நாங்கள் யாரும் அமைப்பாக இல்லை. அவரவர், அவரவர்க்கு தோன்றியபடி இலக்கிய தாகத்தை வெவ்வேறு நிகழ்வுகள் மூலம் செயல்படுத்தி தணித்து வந்தோம். நான் மொரப்பூர் இலக்கிய வட்டம் என்ற அமைப்பின் மூலம் நட்பார்ந்த எழுத்தாளர்களை அழைத்து இலக்கிய கூட்டம் நடத்தி வந்தேன். அதற்கு பாவண்ணன், நாஞ்சில்நாடன், பிரபஞ்சன், ஜெயமோகன் போன்ற ஆளுமைகள் எல்லாம் வந்து நிகழ்ச்சிகள் நடத்தித் தந்துள்ளார்கள். அதே நேரம் என்னைப் போலவே இலக்கியத்தில் பேராவல் கொண்டு புத்தகத் திருவிழாக்கள், இலக்கிய நிகழ்வுகளில் கலந்து கொண்டு வரும் டாக்டர் அறிமுகமானார். அவர் முன்னாள் எம்.பி. நகரில் பெரிய மருத்துவர் என்றாலும், அதையெல்லாம் பெரிதாக எண்ணாமல் புத்தகத்தின் மீது அபார பாசம் கொண்டிருந்தது எங்களை இணைத்தது என்கிறார் இரா. செந்தில்.
அதே நிலையில்தான் இருந்த பாலனும் அவ்வப்போது சந்திப்பு, கூட்டங்கள் என்று நடத்தி வந்த நாங்கள் வாசிப்புக்காக ஓர் அமைப்பாக இயங்கினால் என்ன என்று தோன்றியது. புத்தகத்திருவிழா என்று வரும்போது சென்னை மற்றும் கோவை, ஈரோடு, மதுரை போன்ற பெருநகரங்களில் மட்டுமே நடக்கிறது அதில் ஈரோட்டில் மட்டும் ஸ்டாலின் குணசேகரன் தனிப்பட்ட ஈடுபாட்டில் நடத்துகிறார். நாமும் நம்மூரில் நடத்தினால் என்ன என்று ஆரம்பித்தோம். புத்தகத் திருவிழாவோ, கண்காட்சியோ நடத்தும் போது மட்டும் பள்ளி, கல்லூரிகளுக்கு போய் மாணவர்களுக்கு வாசிப்புப் பழக்கத்தை ஊக்குவிப்பதை விட, வருடந்தோறும் இதற்கான முயற்சியை செய்ய வேண்டும் என்றுதான் இந்த மாதந்தோறும் 20 நூல்களை 20 பேர் அறிமுகப்படுத்துவது ஆரம்பித்தோம். அது 2 வருடங்கள் நடந்தது.
கோவிட் ஊரடங்கு வந்ததும் அதை எப்படி செய்வது என்று புரியாமல் தவித்தபோது, எங்களிடம் உள்ள வாசிப்பு பழக்கம் உள்ள ஐடி மாணவர்களே உதவினார்கள். அதற்கு முன்பு வரை வர்த்தக நிறுவனங்களே பயன்படுத்தி வந்த "ஜூம் மீட்டிங்" என்ற விஷயத்தை எங்களுக்கு அறிமுகப்படுத்தினார்கள். இன்றைக்கு ஜூம் மீட்டிங் நடத்தாதவர்களே இல்லை. அந்த அளவுக்கு பரவலாகி விட்டது. ஆனால், அன்றைக்கு சாமான்யர்கள் போட்ட ஜூம் மீட்டிங் எங்களுடையதாகத்தான் இருக்கும். இதற்கு மட்டும் தனியாக ஒரு வாரம் எங்களுக்குள்ளேயே ஒரு மீட்டிங் போட்டு பயிற்சி எடுத்துக் கொண்டோம். அதுதான் இவ்வளவு தூரம் விரிந்து பரந்து இருக்கிறது!'' என்றார்.
புத்தகத் திருவிழாக்கள் நடத்தும் பல்வேறு அமைப்புகள் மாவட்டத்தில் தலை நகரங்களில் மட்டுமே புத்தகத் திருவிழாவை நடத்துகின்றன, தகடூர் புத்தக பேரவையோ ஆண்டுதோறும் தர்மபுரியில் பத்து நாட்களும், அரூர், பொன்னகரம் உள்பட வட்டார தலைநகரங்களிலும், சிறுநகரங்களிலும் மூன்று நாட்கள் புத்தகத்திருவிழாக்களை நடத்துகிறதாம். கிராமத்து மக்களும், மாணவ, மாணவிகளுக்கும் கூட வாசிப்பு இயக்கம் இதன் மூலம் நன்கு பரவியிருக்கிறதாம். அதே போல் மாவட்டத்தில் உள்ள இளம் படைப்பாளிகளை ஊக்குவித்து அவர்களின் நூல்களை வெளியிடவும் பேரவை உதவுகிறது. முக்கியமாக தர்மபுரி தொடர்புடைய நூல்களை வெளியிட்டும், மறுபதிப்புச் செய்தும் வருகிறது. அந்த அடிப்படையில் கடந்த ஆண்டு பழமலை எழுதிய 'தருமபுரி மண்ணும் மக்களும்' நூல் வெளியிடப்பட்டது. இந்த ஆண்டு புத்தகத் திருவிழாவிற்கு 1939 இல் கோபால் செட்டியார் எழுதிய பதிப்பில் இல்லாத அரிய நூலான, 'தருமபுரி பூர்வ சரித்திரம்!' மறுபதிப்பு செய்யப்பட இருக்கிறதாம். இதுகுறித்து நம்மிடம் பேசிய இப்பேரவையின் செயலாளர் மருத்துவர் இரா. செந்தில்,
''மற்ற மண்ணுக்கு எப்படி வட்டார வழக்கு என்று இருக்கிறதோ, அதேபோல் தர்மபுரி மண்ணுக்கும் ஒரு வட்டார வழக்கு இருக்கிறது. அது முன்னோர் இலக்கியத்திலும் இருக்கிறது. அதையெல்லாம் வெளிக் கொண்டு வரவேண்டும். அதை வெளிப்படுத்தி வரும் புதிய இலக்கிய வகைக்கும் கை கொடுக்க வேண்டும். தர்மபுரியைப் பொருத்த வரை இது பின்தங்கிய மாவட்டம் என்ற பூச்சு உண்டு. மழையில்லை. நீர்வளம் குறைவு. தொழிற்சாலைகள் இல்லை. மலைப்பிரதேசம் என்றெல்லாம் அதற்கு அர்த்தம் சொல்லுவார்கள். ஆனால் அதையெல்லாம் தாண்டி தர்மபுரி மண்ணில் காலங்காலமாய் அறிவுசார் விஷயங்கள் சுடர்விட்டுள்ளது. அதற்கு ஒரு நல்ல உதாரணம்தான் இந்த மண்ணைச் சேர்ந்த கோபால் செட்டியார் எழுதிய நூல்கள். அதில் 1926-லேயே 'நியூ லைட் அப் ஆன் இண்டியன் பிலாஸபி' என்ற ஆங்கில நூலை லண்டனில் வெளியிட்டிருக்கிறார். அவர் இறந்தது 1956-ல் அப்போது அவரைப் பற்றி பெரியாரின் விடுதலை நாளேடு இரங்கல் செய்தி வெளியிட்டிருந்தது. அதேபோல் ராஜாஜி தர்மபுரி மண்ணைச் சேர்ந்தவர்தான். அவர்தான் மூதறிஞர் எனப்படுகிறார். இப்படி இந்த மண்ணுக்கு ஏகப்பட்ட அறிவுசார் முகங்கள் உண்டு. அதை மீட்டெடுப்பதே எங்கள் நோக்கம். எதையாவது படிக்க வேண்டும் அதுவும் புத்தகங்களாக இருக்க வேண்டும். கைபேசி, டீவி உடலுக்குக் கேடு. கண்டதையும் பார்க்க வேண்டாம். படிக்க வேண்டாம். அதில் கூட புத்தகங்களை படியுங்கள் என்கிறோம். ஏனென்றால் வலைத்தளங்களில் எது வேண்டுமானாலும், எப்ப வேண்டுமானாலும் எழுதி விடலாம். புத்தகங்கள் அப்படியல்ல. பொறுப்புணர்வுடன் எழுதப்படுவது. நாங்கள் நடத்திய புத்தகத் திருவிழாக்களைக் கண்டு மாவட்ட நிர்வாகம் இந்த ஆண்டு மண்டபத்தில் நடத்தாமல் வெளியில்- மைதானத்தில் நடத்தச் சொல்லியிருக்கிறது. அதற்கு இரட்டிப்பு மடங்கு செலவாகுமே என்று தவிர்க்கப் பார்த்தோம். ஆனாலும் மாவட்ட கலெக்டர் உறுதியாக இருந்தார். அதில் பாதி செலவை மாவட்ட நிர்வாகமே ஏற்பதாகவும் தெரிவித்துள்ளார்.
ஜூன் 24 முதல் ஜூலை 4 தேதி வரை நடக்க இருக்கும் அந்த புத்தகத்திருவிழாவை தர்மபுரி மாவட்ட நிர்வாகம், பாரதி புத்தகாலயத்துடன் இணைந்து தகடூர் இலக்கியப் பேரவை நடத்துகிறது. இதை தகடூர் புத்தகப் பேரவை வாசிப்பு இயக்கத்தின் அடுத்த கட்ட வளர்ச்சி என்று கொள்ளலாம்!'' என்று தெரிவித்தார்.