இதில் கூட பிரிபெய்ட் வந்துவிட்டது!

இதில் கூட பிரிபெய்ட் வந்துவிட்டது!
Published on

கடைசிப் பக்கம்

சுஜாதா தேசிகன்

செய்தித்தாளில் தினமும் சாவைப் பற்றிய செய்திகள், நினைவு அஞ்சலி என்று சிரஞ்சீவியாக இருப்பது மரணம் என்று நினைக்கிறேன். எனக்கு யாரைக் கண்டாலும் பயமே இல்லை என்று சொல்லுபவர்கள் சாவிற்குப் பயப்படவே செய்கிறார்கள். மரண பயம், "Scared to Death" என்பதால் தான் மருத்துவமனைகளில் டாக்டர் எந்த ஸ்கேன் செய்ய சொன்னாலும் உடனே செய்கிறோம். எந்த மருந்தைச் சாப்பிடச் சொன்னாலும் வாங்கி விழுங்குகிறோம்.

'Hound of the Baskervilles' என்ற ஷெர்லாக் ஹோம்ஸ்(sherlock holmes) கதையில் சார்லஸ் என்பவர் முரட்டுத்தனமான நாயைப் பார்த்துப் பயந்து மாரடைப்பால் இறந்து போவார். பிரிட்டிஷ் மருத்துவப் பத்திரிக்கையில் 'Hound of the Baskervilles Effect' என்ற கட்டுரையில் சாவு எப்போது என்ற பயம் காரணமாக வரும் மாரடைப்பு பற்றி ஆராய்ச்சி செய்துள்ளார்கள். நிச்சயம் மரண பயத்தால் நிறைய மாரடைப்பு ஏற்படுகிறது என்று காண்பிக்க ஜப்பான் சீனாவில் மாதத்தின் நாலாம் நாளை அவர்கள் தேர்ந்தெடுத்து அந்நாளில் எவ்வளவு பேர் மாரடைப்பினால் இறந்து போகிறார்கள் என்று கணக்கிட்டுள்ளார்கள். (ஜப்பான், சீனாவில் நான்காம் எண் மரணத்தைக் குறிக்கும் என்று நம்பப்படுகிறது). ஆராய்ச்சி முடிவில் மாதத்தின் நான்காம் நாள் மற்ற நாள்களைக் காட்டிலும் நிறையப் பேர் மாரடைப்பால் இறக்கிறார்கள் என்று கண்டுபிடித்தார்கள்.

இதேபோல், சாவிற்கும் அமாவாசைக்கும் சம்பந்தம் இருக்கும் என்று நினைக்கிறேன். கல்லூரிக்குச் செல்லும் போது திருச்சி பெரியாஸ்பத்திரி அருகே  பிண ஊர்வலம் செல்லும். பெரும்பாலும் அந்த நாள் அமாவாசையாக இருக்கும். இதேபோல் சென்னையில் அலுவலகம் போகும்போது வழியில் ஒரு சுடுகாடு இருக்கும். அங்கேயும் பிண ஊர்வலம் போகும் அன்று பெரும்பாலும் அமாவாசையாக இருக்கும். தமிழ் சீரியலில் யாராவது இறந்துபோய் ஒப்பாரி வைப்பார்கள் அன்று வெள்ளிக்கிழமையாக இருக்கும்!

"சாவின் விளிம்பிற்குச் சென்றுவந்தேன்" என்று சிலர் சொல்லுவதைப் பார்த்திருக்கலாம். எனக்கு பல்பு தெரிகிறது, வெளிச்சம் தெரிந்தது, தாத்தா பேசினார், ஏன் கடவுள் கூடத் தெரிந்தார் என்று சொல்லுவது எல்லாம் உங்கள் ரத்த ஓட்டத்தில் அதிகமாக இருக்கும் அதிக அளவு கார்பன் டையாக்சைடுதான் காரணம் என்று கண்டுபிடித்துள்ளார்கள்.

சில வருடங்களுக்கு முன் சாவை மிக அருகில் பார்த்திருக்கிறேன். ஒரு முறை வட தேசத்து யாத்திரைக்குச் சென்று திரும்பிக்கொண்டு இருந்தேன். பேருந்து ஓர் இடத்தில் நின்றது. சாப்பிட இறங்கினோம். அங்கே கணுக்கால் அளவு வாய்க்கால் ஓடிக்கொண்டு இருந்தது. எல்லோரும் சாப்பிட்ட பின் அதில் கைகளைக் கழுவினார்கள்.

என்னுடன் வந்த முதியவர் ஒருவர் கைகளை அலம்பும் போது சறுக்கிக் கீழே விழுந்தார். அருகில் இருந்தவர்கள் உடனே அவரை தூக்கி தரையில் கிடத்தினார்கள். பேச்சு மூச்சு இல்லாமல் அப்படியே கிடந்தார். எங்களுடன் பயணித்த அமெரிக்க மருத்துவர் ஏதேதோ செய்து மூச்சை மீட்க முயன்றார். முடியவில்லை. பத்து நிமிஷம் முன் தயிர்ச் சாதம் சாப்பிட்டவர், அடுத்த பத்தி நிமிஷத்தில் இல்லை!

கொரியாவில் மரணம் அடைந்தால் எப்படி இருக்கும் என்று பார்க்க ஒரு நிறுவனம் இருக்கிறது. உங்களை மஞ்சள் உடையில் (இறந்தபின் அணிவிக்கப்படும் அங்கி) ஒரு சவப்பெட்டியில் படுக்கவைத்து மூடியை மூடிவிடுவார்கள். கொஞ்சம் நேரம் கழித்துத் திறந்துவிடுவார்கள். இப்படி வெளியே வந்தவர்கள், "வாழ்கை என்றால் என்ன என்று புரிந்துகொண்டேன், இனிமேல் எல்லோரிடமும் அன்பு செலுத்துவேன், பேராசையை விட்டுவிடுவேன்" என்று சொல்லுகிறார்கள்.

சில வருடங்கள் முன் லண்டன் சென்றபோது ஷாப்பிங் சென்ற ஒரு கடையில் கூட்டமே இல்லை. என் நண்பனை இது என்ன கடை என்று கேட்டேன். இந்தக் கடையில் உங்கள் சாவிற்கு நீங்கள் முன்பதிவு செய்யலாம். இறந்த பின் எந்த மாதிரி பெட்டியில் உங்களை அடக்கம் செய்ய வேண்டும் என்று ஆடர் கொடுக்கலாம்.

இதில் கூட பிரிபெய்ட் வந்துவிட்டது!

Loading content, please wait...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com