பாரதியைப் பயில்வோம். பாரதியராக என்றும் எங்கும் வாழ்வோம்

பாரதியைப் பயில்வோம். பாரதியராக என்றும் எங்கும் வாழ்வோம்
Published on

பாரதி 100

மாலன்

ன்னுடைய மொழியை நேசித்தார்; ஆனால் மற்ற மொழிகளை வெறுக்கவில்லை. சுந்தரத் தெலுங்கினில் பாட்டிசைக்கவும், மராத்தியர் கவிதைக்குப் பரிசளிக்கவும், இந்திப் பாடங்களை வெளியிட்டதும், வங்கத்திலிருந்தும், பிரெஞ்சிலிருந்தும், ஆங்கிலத்திலிருந்தும் மொழிபெயர்த்தமை இதற்குச் சான்று. இனிமையான தமிழ் மொழி வலிமையானதாகவும் இருக்க எட்டுத் திக்கிலிருந்தும் கலைச் செல்வங்கள் கொண்டு வந்து சேர்க்க முயன்றார்.

தன்னுடைய நாட்டை நேசித்தார்; அதே நேரம் உலக நடப்புகளையும், அவற்றிலிருந்து நாம் கற்க வேண்டியவற்றையும் சொல்லி வந்தார். இங்கிலாந்து, துருக்கி, இத்தாலி, பெல்ஜியம், ரஷ்யா, சீனம், பிஜி ஆகியவை பற்றி அவர் எழுதியவை சான்று.

தன்னுடைய மதத்தை மதித்தார்; ஆனால் மற்ற மதங்களை இகழவில்லை. அல்லா, ஏசு, குரு கோவிந்த சிங் ஆகியோர் பற்றி எழுதிய பாடல்கள் சான்று.

தமிழின் தொன்மை குறித்துப் பெருமை கொண்டார் (தென்றலுடன் பிறந்த பாஷை).ஆனால் எளிய பதங்கள், எளிய நடை, எளிதில் அறிந்து கொள்ளக் கூடிய சந்தம் , பொது ஜனங்கள் விரும்பும் மெட்டு இவற்றை உடைய காவியம் செய்து தருவோர் நமது தாய் மொழிக்குப் புதிய உயிர் தருவோனாகிறான் என்று நம்பினார். இலக்கணம் துறந்த கவிதைகளை எழுதிப் பார்க்கவும் தவறவில்லை.

கம்பனை, இளங்கோவை, வள்ளுவனைப் போல் எங்கணும் கண்டதில்லை என்று சிலாகித்தார். ஆனால் ஷெல்லிதாஸனாகத் தன்னைக் கருதிக் கொண்டார்.

கவிதையில், இதழியலில் புதுமைகள் செய்த அவர், சிறுகதைகளில் மேல்நாட்டு இலக்கணங்களை மறுதலித்து நம் நாட்டு கதை சொல்லல் மரபுகளை கைக் கொண்டார்.

எல்லா உயிர்களிலும் இறைவன் இருக்கிறான் என்ற அத்வைதக் கொள்கையை ஏற்ற அவர் அதன் மாயாவாதத்தை நிராகரித்தார்.

அரசியலிலே ஈடுபட்டு களமிறங்கினார். ஆனால் அதிகாரப் பதவிகளை நாடவில்லை.

பத்திரிகைகளை ஒரு தேசத்தினுடைய ஞானத்தின் அடையாளம் எனக் கொண்ட அவர் இதழியல் அறம் பிறழ்ந்தபோது அவற்றைச் சுட்டிக் காட்டவும் தயங்கியதில்லை.

பாரதியைப் பயில்வோம். பாரதியராக என்றும் எங்கும் வாழ்வோம்.

*பாரதியர் – இந்தியர் 

Loading content, please wait...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com