மைலாப்பூரில் இட்லி கச்சேரி

மைலாப்பூரில் இட்லி கச்சேரி
Published on
சுஜாதா தேசிகன்                                               

இந்த வாரம் முதலில் ஒரு கேள்வியிலிருந்து ஆரம்பிக்கிறேன். உலகிலேயே மிகப் பெரிய ட்ரெட் மில்(treadmill) எங்கே இருக்கிறது ? விடை கடைசியில்.

வெளிநாடு, வெளியூர், அல்லது பக்கத்து சந்திற்கு சென்றால் கூட அந்த இடத்தில் பிரபலமான உணவு எது என்று தெரிந்துகொண்டு மந்திரித்துவிட்ட கோழி மாதிரி சுற்றித் திரிவேன்.

போன மாதம்  சென்னை விஜயத்தின்போது,  ம.கோ போலக் காலை 6.30க்கு மைலாப்பூரில்  'ராயர் மெஸ்' இருக்கும் முட்டு சந்துக்குள்  தொப்பையும் தொந்தியுமாக நடைப்பயிற்சி முடித்துவிட்டு கோவிட் வந்தாலும் பரவாயில்லையென சுவைக்கு அடிமையாகிய கூட்டம்  வயிற்றுக்கும் ஈய காத்துக்கொண்டு இருந்தது.

பல பிரபலங்கள் சுவைத்த பிரபலமான இடம் 'ராயர் மெஸ்'ல் மெனு அட்டை அவஸ்தைக் கிடையாது. கச்சேரியில் வர்ணம், மெயின், துக்கடா போல் இட்லி, வடை, பொங்கல் அவ்வளவுதான். உள்ளே எட்டிப்பார்த்தால் சமையல் செய்யும் இடம் பக்கம் 2½  மேசை, ஸ்டூல். மொத்தம் 13 பேர் உட்காரலாம். "கடமையைச் செய் பலனை எதிர்பார்க்காதே" என்று கிரைண்டர் ஒன்று எப்போதும் தம்புரா வித்துவான் போல் சட்னியை அரைத்துக்கொண்டு தன் கடமையைச் செய்துகொண்டிருக்கும்.

இருக்கை கிடைத்தவுடன் ஆனந்தத்துடன் வாழை இலையுடன் ஒரு கிண்ணம் நிறைய வெள்ளையாக 'கெட்டி' சட்னி வரும் (நிஜமாகவே கெட்டி). அடுத்து பச்சை நிறத்தில் காரச் சட்னி ஆஜராகும். அது நாக்கில் பட்டவுடன் 'டேஸ்ட் பட்' மலர்ந்து… நம் உடம்பில் உள்ள ஓட்டைகளை அடையாளம் காண்பிக்கும் (ஓட்டைகளிலிருந்து புகை வரும்).

அடுத்து, சிகப்பாக மிளகாய்ப் பொடி ஆஜராகி சுவைத்தால் 'கடுக்கு முடுக்கு' என்று நிரவல் சத்தம் வரும்.  கூடவே வாசனையுடன் நல்லெண்ணெய். உணவுக்கட்டுப்பாட்டில் இருப்பவர்களுக்கு நெய்யும் உண்டு.

இலையில் சிகப்பு, வெள்ளை, பச்சை வர்ணங்களைக் கொண்டு 'ஜெய் ஹிந்த்' என்று வர்ணம் பாடி கச்சேரியைத் துவக்கினால் (கச்சேரி சாலையில் ஒரு சந்தில்தான் ராயர் மெஸ் இருக்கிறது ) பொங்கல் ஆலாபனை ஆரம்பிக்கும். ஆடி மாதம் சாப்பிட்டாலும் மார்கழி மாதம் நினைவுக்கு வந்து, "பொங்கலில் நான் 'ராயர் மெஸ்' " என்பான்.

அடுத்து, இட்லி துணியில் உதட்டோடு உதடு முத்தம் கொடுத்துக்கொண்டு இருக்கும் இட்லிகளைப் பிரித்து எடுக்கப்பட்ட சுடச்சுட இட்லிகள் பெரிய தட்டு நிறைய உங்கள் தலைக்கு மேல் ஹெலிகாப்டர் போலப் பறக்கும். இலையில் சட்னி, சாம்பார் வெள்ளத்தில் தத்தளித்துக்கொண்டு இருக்கும் உங்களுக்கு,   ஹெலிகாப்டர் மூலம் போடப்பட்ட இட்லிகள் உங்கள் இலையில் விழும் (இரண்டு சம்பிரதாயம் இல்லை. குறைந்தபட்ச செயல் திட்டம் நான்கு)

இட்லியை தேங்காய் சட்னியில் குளிப்பாட்ட, கூடவே  பெருங்காய வாசனையுடன் மாவு கலந்த குழம்பு அதன் மீது கலக்கும்போது குறுந்தொகையில் செம்மண் நிலத்தில் பெய்த மழைநீர், மண்ணின் நிறத்தை ஏற்று ஒன்றி யாராலும் பிரிக்க முடியாதது போல, சட்னியும் குழம்பும் கலக்கும்போது அதைப் பிரிக்க முடியாத இட்லியுடன் கச்சேரியை ஆரம்பிக்கும்போது முறுகலாக மெதுவடை பராக் பராக் என்று வர, இலையில் வடைக்கு (கூட்டணி தர்மம்) இட ஒதுக்கீடு செய்து கொடுத்து, அதைச் சாப்பிட ஆரம்பித்தவுடன், வடை,  இட்லியை ஓரம் கட்டி, இலையில்  இருக்கும் இடத்தையெல்லாம் ஆக்கிரமித்து ஆட்சியைப் பிடித்து, தனியாவர்த்தனம் செய்ய ஆரம்பிக்கும்.

மெதுவடையுடன் கச்சேரி இனிதே முடிந்த பின் மெதுவாக எழுந்திருக்க வேண்டும் (இவ்வளவு சாப்பிட்ட பின் எப்படி வேகமாக எழுந்துகொள்ள முடியும்?)

"சார் காபி வெளியே வரும்" என்று துக்கடாவை வெளியே அனுபவிக்கக் கூப்பிடுவார்கள். வெளியே தட்டு நிறையக் காபி கூடவே மேலும் காபியைக் கருப்பாக்கிக்கொள்ளத் தனியாக ஒரு கோப்பையில் டிக்காஷன்.

காபி குடித்துக்கொண்டு இருக்கும்போது, 'சொல்லுங்கோண்ணா' என்று விஜய் பேசும் வசனம்போல நாம் சாப்பிட்ட விஷயங்களைக் கேட்க, சாப்பிட்ட வாயால் சாப்பிட்டதைச் சொல்லச் சொல்ல "இவ்வளவு சாப்பிட்டோமா" என்று ஒரு குற்ற உணர்ச்சியைத் தவிர்க்க முடியாது!

பில்லிங் மிஷின், ஜி.எஸ்.டி போன்ற எந்தக் காம்பிளிகேஷனும் இல்லாமல்  நாம் சாப்பிட்டதற்கான தொகையைக் கூற,  'நவரசா சீசன்' முடிந்தவுடன்  குட்டித் தூக்கம் உத்தரவாதம்.

முதலில் கேட்ட கேள்விக்கு விடை : சென்னை.
எங்கே என்று யோசிக்காதீர்கள். அது நம்ம ஜி.என்.செட்டி ரோடு மேம்பாலம்! (சந்தேகமாக இருந்தால் பார்க்க படம்)

Loading content, please wait...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com