அனைவருக்குமே உதவுவதற்கு இந்த பிரபஞ்சம் எப்போதுமே காத்திருக்கிறது.

அனைவருக்குமே உதவுவதற்கு இந்த பிரபஞ்சம் எப்போதுமே காத்திருக்கிறது.
Published on

யக்குனர் ஆர்.சுந்தரராஜன் வாழ்வில் நடந்த ஒரு சம்பவம்.

அவரது இயக்கத்தில் 'நான் பாடும் பாடல்' வெளிவந்து வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருந்தது.

பல தயாரிப்பாளர்கள் அவரைத் தேடி வந்தார்கள். அவர்களிடம் ஒரே ஒரு விஷயத்தை மட்டும் தெளிவாக சொன்னார் ஆர்.சுந்தரராஜன்:

"எனக்கு இப்போது சொந்த வீடு வேண்டும். அதை யார் வாங்கி கொடுக்கிறீர்களோ அவர்களுக்குத்தான் அடுத்த படம் செய்வேன்."

உடனடியாக ஏவி.எம். நிறுவனத்திலிருந்து அழைப்பு வந்தது. அட்வான்ஸாக இரண்டு லட்ச ரூபாய் பணமும் வந்தது.

கொஞ்சம் தயங்கினார் ஆர்.சுந்தரராஜன். "அடுத்த படத்திற்கான கதையை இன்னும் தயார் செய்யவில்லையே..!"

"அதைப்பற்றி பரவாயில்லை. பிறகு பார்த்துக் கொள்ளலாம். இதை வாங்கிக் கொள்ளுங்கள்."

அந்தப் பணத்தை வாங்கி புது வீடு வாங்குவதற்கான அட்வான்ஸ் கொடுத்து விட்டார் ஆர்.சுந்தரராஜன்.

அடுத்த ஒரு சில நாட்களில்…

கதை தயாரானது. அதுதான் வைதேகி காத்திருந்தாள். ஏவி.எம்.முக்கு போய் கதையை சொன்னார் சுந்தரராஜன்.

"நல்லா இருக்கு. ஹீரோ யார் ?"

விஜயகாந்தை போட்டால் பொருத்தமாக இருக்கும். படமும் பிரமாத வெற்றி பெறும் என்றார் சுந்தரராஜன்.

"விஜயகாந்தா ?"

"அவர் வேண்டாம். ஏற்கெனவே வெளிவந்து வெற்றி பெற்ற 'நான் பாடும் பாடல்' படத்தில் சிவகுமார்தானே ஹீரோ? 'வைதேகி காத்திருந்தாள்' படத்திலும் அவரையே நடிக்க வையுங்கள்."

ஆர்.சுந்தரராஜன் உறுதியாகச் சொன்னார். "அந்த வெள்ளைச்சாமி கேரக்டருக்கு விஜயகாந்த்தான் பொருத்தமாக இருப்பார்."

பொறுமையாக அதைக் கேட்ட ஏவி.எம். : "இல்லை. அதில் எங்களுக்கு சம்மதமில்லை. அப்படியானால் நாங்கள் கொடுத்த இரண்டு லட்ச ரூபாயை திருப்பிக் கொடுத்துவிடுங்கள்."

ஆர்.சுந்தரராஜன் திகைத்துப் போனார்.

ஏனெனில் ஏவி.எம். கொடுத்த அந்த பணத்தை வாங்கித்தான் புது வீடு வாங்குவதற்கான அட்வான்ஸ் தொகையாக கொடுத்து விட்டிருந்தார் அவர். வேறு பணம் எதுவும் அவர் கைவசம் இல்லை.

என்ன செய்வதென தெரியாமல் தடுமாறினார் ஆர்.சுந்தரராஜன்.

ஏவி.எம் கொடுத்த இரண்டு லட்சம் ரூபாயை எப்படி அவர்களுக்கு திருப்பி கொடுப்பது?

அன்று மாலை வாடிய முகத்தோடு  வாக்கிங் சென்றபோது எதிரே வந்தார் தூயவன் என்ற கதாசிரியர்.

என்ன நடந்தது என்று உண்மையான அக்கறையோடு தூயவன் விசாரிக்க, நடந்த விஷயங்கள் அத்தனையையும் ஒன்றுவிடாமல் எடுத்துச் சொன்னார் ஆர்.சுந்தரராஜன்.

"இவ்வளவுதானே? இதற்கு போய் ஏன் இப்படி கவலைப்படுகிறீர்கள்? வாருங்கள் என்னுடன்."

அடுத்த சில நிமிடங்களில் பஞ்சு அருணாச்சலத்தின் வீட்டில் அமர்ந்திருந்தார்கள்.

'வைதேகி காத்திருந்தாள்' கதையை மறுபடியும் ஆர்.சுந்தரராஜன் சொல்ல…

உடனடியாக இரண்டு லட்ச ரூபாய் ஆர்.சுந்தரராஜன் கைகளில் கொடுக்கப்பட,

ஏவி.எம்மிடம் வாங்கிய பணத்தை திரும்ப கொடுத்துவிட்டு நிம்மதிப் பெருமூச்சு விட்டார் ஆர்.சுந்தரராஜன்.

தூயவன் வைதேகி காத்திருந்தாள் படத்தின் தயாரிப்பாளர் ஆனார்.

வீடு வாங்க வேண்டும் என்றபோது அதற்கான பணத்தை உடனடியாக ஏவி.எம். மூலமாக கொடுத்தது இந்த பிரபஞ்சம்.

'அந்தப் பணத்தை திருப்பிக் கொடுக்க வேண்டும்' என்ற சூழ்நிலை வந்தபோது கொஞ்சமும் தாமதிக்காமல் உடனடியாக வேறு ஒரு தயாரிப்பாளரை தேடி கொடுத்ததும் அதே பிரபஞ்சம்.

நமக்கு எப்போது எது தேவையோ அதை நம்மிடம் கொண்டுவந்து கொடுக்க ஏதாவது ஒரு வழியை இந்த பிரபஞ்சம் எப்படியாவது ஏற்படுத்திக் கொடுத்து விடுகிறது.

ஆர்.சுந்தரராஜனுக்கு மட்டுமல்ல; அனைவருக்குமே உதவுவதற்கு இந்த பிரபஞ்சம் எப்போதுமே காத்திருக்கிறது.

அதற்குத் தேவை அசைக்க முடியாத தன்னம்பிக்கை உள்ள மனிதர்கள் மட்டுமே !

ஜான் துரை ஆசீர் செல்லய்யா முகநூல் பக்கத்திலிருந்து…

Loading content, please wait...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com