பழகு தமிழில் தமிழ்த் தாத்தா

பழகு தமிழில் தமிழ்த் தாத்தா
Published on

சுஜாதா தேசிகன்

மீபத்தில் ஒருவர் "எங்கள் சிறுபத்திரிக்கைக்கு ஒரு கட்டுரை எழுதித் தர வேண்டும்" என்றார்

"சரி" என்றவுடன்

"நீங்கள் வழக்கமாக எழுதுவது போல இல்லாமல், நல்ல இலக்கியக் கட்டுரையாக எழுதித் தரவேண்டும்" என்றார்.

"அப்படி என்றால் நான் எழுதுவது இலக்கியம் இல்லையா?" என்று அதிர்ச்சியுடன்  "பார்க்கிறேன்" என்று உரையாடலுக்கு முற்றுப்புள்ளி வைத்தேன்.

இலக்கியக் கட்டுரைகள் எப்படி எழுதுவது என்று குழம்பி வீட்டில் இருந்த பழைய சிறுபத்திரிக்கைகள் சிலவற்றை எடுத்து அதில் உள்ள இலக்கியக் கட்டுரைகளைப் படிக்க ஆரம்பித்தேன்.

பொதுவாக 'இலக்கிய தரமான' சிறுபத்திரிக்கைகளிடம் எனக்குக் கொஞ்சம் அலர்ஜி. முற்றுப் பெறாத கூட்ஸ் வண்டிபோல நீண்ட வரிகளைப் படித்து முடிக்கும்போது பசி எடுத்துவிடும். 'குட்டிப் போட்ட பூனை போல உங்களுக்கு என்ன ஆச்சு?' என்றாள் என் மனைவி.

"இலக்கிய கட்டுரை ஒன்று எழுத வேண்டும்" என்றேன்.

"என்ன டாப்பிக்"என்றாள்.

"எதையாவது எழுத வேண்டும். ஆனால் இலக்கியமாக இருக்க வேண்டும்" என்றேன்.

"வீடு முழுக்க புத்தகம். ஆனா எழுதுவது எப்படி என்று தெரியலை" என்று சொன்னபோது, சட்டென்று நினைவு வந்தது. எப்போதோ பழனியப்பா பிரதர்ஸ் 'எழுதுவது எப்படி' என்று ஐந்து தொகுதிகள் அடங்கிய புத்தகம் போட்டிருக்கிறார்கள். (தற்போது கிடைக்கிறதா என்று தெரியவில்லை). இலக்கியக் கட்டுரை, நகைச்சுவை, கவிதை, நாவல், நாடகம்… என்று பல விஷயங்களை எப்படி எழுதுவது என்று பிரபல எழுத்தாளர்கள் தங்கள் அனுபவம் கலந்த 'டிப்ஸ்' அதில் கொடுத்திருக்கிறார்கள்.

புத்தகக் குவியல்களில்  'இங்கி பிங்கி பாங்கி' முறையில் ஒரு தொகுதியைத் தேர்ந்தெடுத்துப் படிக்க ஆரம்பித்தேன்.

டாக்டர் கலா தாக்கர் இலக்கிய கட்டுரை எப்படி எழுத வேண்டும் என்று ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார். அதில் என்னைக் கவர்ந்த பகுதி ஒன்று இருந்தது.

"எளிய நடையே கட்டுரைக்கு அழகு. சின்னஞ்சிறிய தொடர்கள் கட்டுரையின் ஓட்டத்திற்கு விறுவிறுப்பைத் தருவன. கடின. கரடுமுருடான நடையைக் கையாளாது, பழகுதமிழ் நடையை மேற்கொள்வது, படிப்பவருக்குச் சிக்கலை விளைவிக்காது. தொடர்ந்து படிக்கும் ஆர்வத்தைத் தூண்டும்.

சொல்லாட்சியிலும் தனிக் கவனத்தைச் செலுத்த வேண்டும். இனிய, எளிய சொற்களைக் கையாண்டு, கொச்சை மொழிக்கு இடமளிக்காமல் எழுத வேண்டும். தேவையற்ற அடுக்கு மொழிக்கும், சொற்சிலம்பத்திற்கும் இடமளித்தால் சொல்லவந்த கருத்து சிதைந்து உருவிழந்துவிடவும் கூடும்"

இந்த அழகான பகுதியை எழுதிய டாக்டர் கலா தாக்கரின் தாய்மொழி குஜராத்தி.

இதைப் படித்தபோது திரு உ. வே. சாமிநாதய்யர் அவர்கள் பல ஆண்டுகளுக்கு முன் உரைநடை குறித்துச் சொன்னது நினைவுக்கு வந்தது. அதை கல்கி வாசகர்களுக்கு அப்படியே தருகிறேன்

"பிழையின்றி இயன்றவரையில் யாவருக்கும் விளங்கும் சொற்களையே உரைநடையில் எழுதும் பழக்கத்தை மேற்கொள்வதே நல்ல முறையாகும். வழக்கற்ற சொற்களையும் திரிசொற்களையும் உரைநடையில் கூடியவரை விலக்குதல் நன்று. தமிழ்நாட்டினர் தம் கருத்தை எளிதில் அறிந்துகொள்ள வேண்டுமென்பதை எழுதுபவர்கள் தம் மனத்தில் கொண்டு எழுதுவதுதான் பயனை அளிக்கும். பேசினாலும் எழுதினாலும் கருத்தை அறிவிக்கும் நோக்கத்தை முக்கியமாகக் கொள்ள வேண்டுமேயன்றிக் கடின நடையைக் கைக்கொள்ளுதல் கூடாது"

இந்தப் பகுதியை அவர் நூறு வருடங்களுக்கும் முன் சொன்னார் என்றால் நம்ப முடிகிறதா?

இன்றைய பழம் தின்று கொட்டை போட்ட எழுத்தாளர்கள் பொதுவாகத் தங்கள் ஸ்டைலை மாற்றிக்கொள்ள மாட்டார்கள். சுஜாதா போன்றவர்கள் இதற்கு விதிவிலக்கு. உ.வே.சாவும் அன்றைய 'டிரண்ட்'க்கு தங்கள் எழுத்தை மாற்றிக்கொண்டார்கள் என்றால் நம்புவீர்களா ? கல்கி அவர்கள் இதைக் கண்டுபிடித்து எழுதியுள்ளார்.

"சாதாரணமாக மனுஷ்யர்களுக்கு வயதாக ஆக, நோக்கம் குறுகிப்போவதையும், புதிய எண்ணங்களைக் கிரஹிக்கும் சக்தி குன்றிவிடுவதையும் பார்க்கிறோம். அதிலும் தமிழ்ப் புலவர்கள் வயது ஆக ஆகக் கற்று தட்டிய 'பண்டித' மனப்பான்மையை அடைகிறார்கள். டாக்டர் உ.வே.சாமிநாதய்யரிடம் இதற்கு நேர் விரோதமான இயல்பைக் கண்டோம். வயதாக ஆக, அவருடைய மனம் விசாலமாகி வந்தது. தமிழ் வசனநடையில் ஏற்பட்டுவந்த மாறுதல்களை அவர் பெரிதும் ரஸித்து அநுபவித்தார்! அதைவிட ஆச்சரியம் என்னவென்றால், புதிய எளிய தமிழ் நடையைத் தாமே பின்பற்றி எழுதவும் தொடங்கினார்; அதில் வெற்றியும் அடைந்தார். இலக்கிய உலகில் இது ஒரு பெரிய அற்புதம் என்றே கூறவேண்டும்."

உ.வே.சா முன் 'மகாமகோபாத்யாய' என்ற அடைமொழியைப் பார்க்கலாம். அதன் விளக்கம் எனக்குப் பல காலம் விளங்கவில்லை. அதைப் பற்றித் தேடியபோது அதன் அர்த்தம்  'பெரும்பேராசிரியர்' என்று அறிந்துகொண்டேன். பொதுவாக வடமொழி அறிஞர்களுக்கு மட்டுமே பெரிதும் வழங்கப்பட்ட பட்டம் இது,  முதல் முறையாகத் தமிழ் மட்டுமே அறிந்த உ.வே.சா அவர்களுக்குக் கிடைத்தது.

19, பிப்ரவரி  உ.வே.சா அவர்களின் 168ஆம் பிறந்த தினம். அவருக்கு இந்த இலக்கிய தரமான கடைசிப் பக்கம் சமர்ப்பணம்.

Loading content, please wait...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com