கச்சிதமாய் ஒரு கடத்தல்

கச்சிதமாய் ஒரு கடத்தல்
Published on

ள்ளிக் குழந்தைகளைக் கடத்தும் பாஸ் ஆணைக்கேற்ப அந்த சி.பி.எஸ்.இ. பள்ளியின் வாசலில் நின்று கொண்டிருந்தார்கள் ஷேவிங் மறந்த சேவகர்கள்.

குழந்தைகள் கண்ணாடி கோலி குண்டுகளாய் வெளியே வந்தார்கள். அத்தனை குண்டுகளும் ஒரே நிறத்தில். காபி பொடி நிறத்தில் சீருடை. இடுப்பில் அதற்கு இணையான நிறத்தில் கோடு போட்ட பெல்ட்.

அவர்களை கவ்விக் கொண்டு போக கார்களும் ஸ்கூட்டிகளும் ஒழுங்கில்லாமல் நின்றுகொண்டிருந்தன.

"அதோ பார்…அந்த பையன் தான்" என்றான் மணி.

"எங்கே?" என்றான் கூட்டாளி கதிர்.

"மூஞ்சி பும்முன்னு இருக்கு பார். இரும்புச் சட்டி கமுத்தின மாதிரி முடி" – கையை காட்டினான் மணி.

"ம்ம்ம்…நல்லா வளப்பமாதான் இருக்கான். அமௌண்ட் நல்லா தேறும் போல இருக்கு"

"வா…பின்னாலேயே போலாம்"

அந்த பையன் பின்னாலேயே போனார்கள். பையனின் வலது கை ஒரு வேலைக்காரப் பெண் கைகளில் புதைந்திருந்தது. தாறுமாறாய் இருந்த வண்டிகளின் இடுக்கு வழியே அவனை இட்டுச் சென்று கொண்டிருந்தாள் அவள்.

அந்தப் பெண் முப்பது வயதுக்குள் இருந்தாள். முதலாளி வீட்டு பாதாம் பருப்பு அவள் உடம்பில் வேலையைக் காட்டியிருந்தது. எடுப்பாக இருந்தாள்.

பள்ளிக் கட்டிடத்தைத் தாண்டி வலது புறம் திரும்பினாள் அவள். அது ஒரு குறுகலான சாலை. அதிகம் வண்டிகள் இல்லை.

"பையை இங்கே கொடு" என்றாள் வேலைக்காரப் பெண்.

பையைக் கொடுத்தான் பையன். பாரம் குறைந்ததும் குதித்துக் குதித்து நடந்தான்.

"அக்கா…லாலி பாப்"

"கூடாது. அம்மா திட்டும்"

"ஐ ஹேட் யூ" – அவளை ஆங்கிலத்தில் வெறுத்தான் பையன். பொருட்படுத்தாமல் நடந்தாள் அவள்.

"பணக்கார இடம். பையனை கடத்தினா ஐம்பது லட்சம் மேல தேறும்" என்றான் மணி.

"குடும்பப் பின்னணி?"

"விசாரிச்சிட்டேன். அம்மா பெரிய டாக்டர். காத்தால போனா ராத்திரி தான் வீட்டுக்கு வருவாங்க. அப்பா பிசினஸ் மேன். பாதி நேரம் வெளியூர் தான். ஒரே பையன்"

"இவ்வளவு பணம் இருக்கற பையன் ஏன் கார்ல வராம நடந்து?"

"காரணம் இருக்கு. பையன் கொஞ்சம் பூசின மாதிரி இருக்கானா…நடந்தா நல்லதுன்னு அம்மா நினைக்கறாங்க"

"அம்மாவோட டாக்டர் புத்தி"

"ஆமாம்"

"வீடு பக்கம் தான்"

கதிர் சிகரெட்டை பற்ற வைத்தான். யோசித்தான்.

"ஆழமா திட்டம் போடனும். எந்த இடத்துல வைச்சி முடிக்கறதுன்னு ஆராயனும்"

"நாமளா எதுவும் முடிவு எடுக்க வேணாம். பாஸ் முடிவெடுக்கட்டும். ஆள் நடமாட்டம் அதிகம் இருக்கற ஏரியா…ரிஸ்க் அதிகம்"

அரை கிலோ மீட்டர் தள்ளி ஒரு ஒதுக்குப் புறமான சந்தில் பாஸ் வீடு இருந்தது. ஆதார் அட்ரஸுக்காக இருக்கும் டம்மி வீடு அது. வாசலில் தண்ணீர் அடிக்கும் பம்ப் ஒன்று இருந்தது.

பாஸ் முண்டா பனியன் போட்டு அமர்ந்திருந்தார். தொப்பை இன்னும் உற்பத்தியாகவில்லை. வயிறு நேர்க் கோட்டில் கீழே இறங்கியிருந்தது.

"என்னடா?" என்றார் தாடையை சொறிந்து கொண்டே.

"ஒரு பார்ட்டி மாட்டியிருக்கு"

"டேய் முட்டாள். இங்கே எதுக்குடா வந்தே…வா…கார்ப்பரேஷன் பார்க்குக்கு போலாம்"

கார்ப்பரேஷன் பார்க் திறந்திருந்தது. மூலையில் இருந்த பெஞ்சில் அமர்ந்தார்கள்.

"பாஸ்…ஒரு ஸ்கூல் பையன். ஏழு வயசு இருக்கலாம்"

"பசையுள்ள பார்ட்டியா?"

"நல்லா தேறும். விசாரிச்சிட்டேன். மினிமம் அம்பது  கியாரண்டி. போலீஸுக்கு எல்லாம் போக மாட்டாங்க"

"வீட்டு அட்ரஸ்…போன் நம்பர்?"

"எல்லாம் ரெடி…களத்துல இறங்கினா போதும்"

"ஆபரேஷன் எப்படி செய்யறது?"

"ஒரே ஒரு கார் இருந்தா போதும். கச்சிதமா முடிச்சிடலாம்"

"நீ அவசரப்படறே….நான் பார்ட்டியைப் பாக்கனும். இடத்தைப் பாக்கனும்"

மறுநாளே பாஸ் ஸ்கூல் வாசலுக்கு வந்து விட்டார். எதிரே ஒரு பேனா பென்சில் விற்கும் கடை இருந்தது. ஒரு கலர் பென்சில் பாக்ஸ் வாங்கிக் கொண்டே பள்ளியை நோட்டம் விட்டார்.

"பாஸ்…பையன் வர்ரான்"

வேலைக்காரப் பெண்ணுடன் வந்த பையனைப் பார்த்தார்.

"இவனா? ஒர்க் அவுட் ஆகுமா?"

"நல்லா பாருங்க பாஸ். கரெக்டா அடிச்சா ஆறு மாசம் உக்காந்து சாப்பிடலாம்"

பாஸ் இருவரையும் உற்றுப் பார்த்தார்.

"ம்ம்ம்..வீட்டுக்கு நடந்தே போறானா?"

"ஆமா…வேலைக்கார பொண்ணு கூட…"

"நான் நடக்கற ரூட்டைப் பாக்கனுமே.."

"போலாம் பாஸ்"

மூவரும் அந்த பையன் பின்னாலேயே வீடு வரை போனார்கள்.

"தூக்கிடலாம். ஒன்னும் பிரச்சினை இல்லே. ஆனா இப்போ எல்லா கடை வாசல்லயும் சி.சி.டீ.வி இருக்கு. நம்மளை காட்டிக் கொடுத்திடும்"

"முகமூடி போட்டா?"

"பட்டப்பகல்ல நடு ரோட்ல முக மூடியா?"

"இல்லே பாஸ். ஒரு ஐடியா தான்"

"பையன் போற ரூட்ல சி.சி.டீ.வீ கவரேஜ் இல்லாத கேப் எதுன்னு பாரு. அந்த இடத்துல முடிச்சிடலாம்"

"பாக்கறேன் பாஸ்"

"நீ சொதப்பிடுவே..நானே வந்து பாக்கறேன்"

"சரி பாஸ்"

பொதுவாக பாஸ் இவ்வளவு இறங்கி வேலை செய்ய மாட்டார். அவர்கள் இருவரிடமும் பொறுப்பைக் கொடுத்துவிட்டு கடைசி நாள் சம்பவத்தன்று மட்டும் தான் இறங்குவார்.

"பாஸ்..எங்க மேல நம்பிக்கை இல்லையா? செளகார்பேட்டை கேஸ் கூட நாங்க தானே முடிச்சோம்"

"டேய்….இது சாதாரண இடம் இல்லே. இந்த பார்ட்டியை நான் விடறதா இல்லே. கடைசி நிமிஷத்துல திட்டம் தோல்வி ஆச்சுன்னா நான் டென்சன் ஆயிடுவேன். அதான் நானே நேரிடையா…"

மறு நாளும் ஸ்கூல் விடும் போது பாஸ் வந்து விட்டார். பையனையே உற்றுப் பார்த்தார்.

"அவங்க மூவ்மெண்டை நல்லா கவனிக்கனும்டா…இன்னைக்கும் பின்னாலேயே போலாம். நேத்து ராத்திரியே நான் சி.சி.டீ.வி கணக்கெல்லாம் எடுத்துட்டேன். ரெண்டு தெரு திரும்பினவுடனே ஒரு பெரிய பாதாம் மரம் இருக்கு. அந்த ஏரியால கேமிரா இல்லே. மரத்துக்கு பின்னால நாம் ஒளிஞ்சிருந்து காரியத்தை முடிச்சிடலாம்" என்றார் பாஸ்.

பையன் பின்னாலேயே நடந்தார்கள்.

"திரும்புங்கடா…முஞ்சியைக் காட்டாதீங்க"

பாதாம் மரம் வந்ததும் நின்றார்கள்.

கதிரும் மணியும் மரத்தை சுற்றி வந்தார்கள். அக்கம் பக்கம் பார்வையை சுழல விட்டார்கள்.

"பாஸ்..நீங்க சொன்னது சரி தான். அடுத்த வாரம் தூக்கிடலாம்"

"அடுத்த வாரம் எதுக்குடா? நாளைக்கே தூக்கிடலாம்"

"பாஸ்..இவ்வளவு அவசரமாவா?"

"ஆமா…எதுக்கு தள்ளிப் போடனும்? உடனே முடிச்சிடலாம்"

அடுத்த நாள் காலை. பாதாம் மரத்துக்கு பின்னால் மூவரும் கூடினார்கள்.

"பாஸ்…ஒரு நல்ல செய்தி"

"என்ன?"

"நாளைக்கு பையனுக்கு பர்த் டே. இன்னைக்கு தூக்கினா ரேட் கூடும். இன்னும் இருபது ரூபா சேத்திக்கலாம்"

பாஸ் பதில் சொல்லவில்லை. ஏதோ ஆழ்ந்த யோசனையில் இருந்தார்.

"என்ன பாஸ்?"

"வேலை கச்சிதமா முடியனுமேன்னு எனக்கு கவலை. என்னமோ தெரியல்லே…கொஞ்சம் பதறுது"

"முடிச்சிடலாம் பாஸ். வண்டி ரெடி. நம்பர் ப்ளேட் ரெடி. திருநெல்வேலி நம்பர். ஒரு டிப்பர் வண்டியோடது"

"நல்லது. ஆனா இந்த ஆபரேஷன்ல டைமிங் முக்கியம்டா…ஒரு மில்லி செகண்ட்ல முடிக்கனும்"

"அந்த நேரத்துல பத்து பேரை நான் தூக்கிடுவேன்" இந்த பதிலில் அவனின் கர்வம் தூக்கலாகத் தெரிந்தது.

டாக்டர் வீட்டில் மறுநாள் வரப் போகும் பிறந்த நாள் ஏற்பாடுகள் மும்முரமாக நடந்து கொண்டிருந்தன.

"பாபுவை ஸ்கூல்லேர்ந்து சீக்கிரம் கூட்டி வந்துடு. அவன் வந்தவுடனே ஷாப்பிங் போகனும்" என்றார் டாக்டரம்மா.

"சரிம்மா.." என்றாள் வேலைக்காரப் பெண்.

"அதுக்கப்புறம் வீட்ல டெகரேஷன் வேலை இருக்கு. பரபரன்னு செய்யனும்"

"செஞ்சிடறேன்"

"பையனை பத்திரமா கூட்டி வா. ஜென்ம நட்சத்திரம், பிறந்த நாள் எல்லாம் வர்ரப்ப கொஞ்சம் திருஷ்டி இருக்கும். ஒரு சில அசம்பாவிதங்கள் கூட நடக்கும்னு பெரியவங்க சொல்லுவாங்க. ஜாக்கிரதையா இருக்கனும்"

"நான் பாத்துக்கறேன். வர்ர வழில பயம் எதுவும் கிடையாது"

மதியம் ஸ்கூல் விட்டது. பையனும் வேலைக்காரப் பெண்ணும் நடந்து வந்துக் கொண்டிருந்தார்கள். பையன் வழக்கத்தை விட சந்தோஷமாக இருந்தான். நடையில் ஒரு துள்ளல் இருந்தது.

அம்புக் குறியிட்ட இடத்தை நோக்கி நடந்து கொண்டிருந்தார்கள் இருவரும்.

கார் கதவைத் திறந்து வைத்துக் கொண்டு கதிர் தயாராக இருந்தான். டிரைவர் இருக்கையில் மணி. மரத்துக்குப் பின்னால் பாஸ்.

பையனும் வேலைக்காரப் பெண்ணும் அருகில் வந்ததும் கதிர்  அவர்களை நோக்கி ஓடினான்.

"சீக்கிரம் தூக்குடா" என்றார் பாஸ்.

பையன் மேல் கை வைத்தான் கதிர்.

"பையன் இல்லேடா…அந்த வேலைக்காரியை தூக்குடா"

"பாஸ்.."

"சிக்குன்னு இருக்காடா. தூக்குடா அவளை."

Loading content, please wait...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com