
ஆந்திராவின் வெப்பம் உமிழும் நாட்கள் அவை. நகரத்தை விட்டு தூரத்திலிருந்த பொது நிறுவனத்தின் ஃபேக்டரியில் அன்றைய படப்பிடிப்பு நடந்தது. விடியற்காலையில் தொடங்கிய படப்பிடிப்பு கம்பெனியின் அலுவலகத்திலும், வெளியிலும் அங்கேயே வாழ்பவர்களுக்கு நடுவிலுமாக நடந்து கொண்டிருந்தது. இரண்டு மூன்று மலையாளப் படங்களை மொழிமாற்றம் செய்து நான் நடித்த படங்கள் தெலுங்கர்களுக்கு மிகவும் பிடித்துப் போனதால் எனக்குக் கிடைத்த நேரடி தெலுங்குப் படம் இது. யூனிட்டில் எல்லோரும் தெலுங்கு பேசுபவர்களாக இருந்தார்கள். சுற்றிலும் இருக்கும் மக்களும் தெலுங்கர்கள். எனக்கோ இந்த பாஷையில் எந்த ஈர்ப்புமில்லை. சூழல் பிடிக்காமலிருந்த அந்த நேரத்தில்தான் என்னை சிலர் பார்க்க வந்தார்கள். அவர்கள் எல்லோரும் கம்பெனி யூனிஃபார்மில் இருக்கும் மலையாளிகள். என்னைப் பார்த்து மிகவும் அன்பாய்ச் சிரித்தபடி பேசினார்கள்.
"சார், வி ஆர் மலையாளீஸ்"
"ம்ம்… எப்படி இருக்கீங்க? இங்க என்ன செய்யறீங்க?"
அவர்களுக்கு என்னைப் பார்த்ததில் அளவிட முடியாத சந்தோஷம். என் மனநிலையும் அப்படித்தான் இருந்தது. கரையில் பிடித்துப் போட்ட மீனைப்போல துடித்துக் கொண்டிருந்த வேளையில் சுவாசத்திற்கான ஒரு துளி நீரைப்போல மலையாளம் கேட்கமுடிந்தது. வெயிலின் கடுமை வேறு தாங்கமுடியவில்லை. நான் அவர்களிடம் விரிவாகப் பேச ஆரம்பித்தேன். நாட்டு நடப்புகள் கை மாறின.
"என்ன விசேஷம்?" என்ற கேள்வியிலேயே ஒரு மலையாளியைக் கண்டுபிடித்து விடலாம். இருந்தாலும் மலையாளிகள் தங்களை, "வி ஆர் மலையாளீஸ்" என்று அறிமுகப்படுத்திக்கொள்கிறார்கள். எனக்கு உள்ளுக்குள் சிரிப்பு பூக்க ஆரம்பித்தது. எங்கே போனாலும் மலையாளத்தை ஆங்கிலமாக்கி பேசும் மலையாளிகளும் நினைவில் வந்து போனார்கள். இப்படியான எண்ண ஓட்டத்திற்கிடையில் தான் "வி ஆர் மலையாளீஸ்" என்று தங்களை அறிமுகப்படுத்திக்கொண்ட சந்திரனையும், ராகவனையும் சந்திக்க முடிந்தது.
"நான் ராகவன். மலையாள அசோஷியேஷன் செக்ரட்டரி"
"நான் சந்திரன். அசோஷியேஷன் ப்ரசிடெண்ட்"
அதன்பிறகு அவர்கள் மலையாளிகளின் பிரச்னைகளைப் பேசினார்கள். அனேகமாக எல்லோரின் குழந்தைகளுக்கும் மலையாளம் எழுதத் தெரியாமலிருந்தது. ஓரளவு பேசத் தெரிந்திருந்தது. பேசவும் தெரியாத குழந்தைகளுக்கு மலையாளம் கற்றுக்கொடுக்க அவர்கள் எடுக்கும் சிரமத்தைக் கேள்விப்பட்டபோது "இந்த அந்நிய நாட்டில் இவர்கள் தங்கள் மொழியைத் தக்கவைத்துக்கொள்ள இவ்வளவு சிரமப்படுகிறார்களே" என்று சந்தோஷமாகவும், நிறைவாகவும் இருந்தது.
"மலையாளப் படங்களை டி.வி.யிலும், வீடியோவிலும் பாக்கறதனாலதான் கொஞ்சமாவது பசங்க மலையாளம் கத்துக்கறாங்க சார்"
அவர்கள் சொன்ன தகவல் புதியதாக இருந்தது. 'கேரளத்திற்கு அப்பால் உள்ள மலையாளிகளை மலையாளம் கற்க வைக்கும் வேலையைக்கூட நாங்கள் செய்கிறோம்' என்பது புரிந்தபோது மனதில் லேசான கர்வம் புகுந்தது. மலையாளிகளின் அருகாமை, முற்றிலும் வேறான அச்சூழலில் எனக்குப் பிடித்திருந்தது. கேரளாவின் மகத்தான ஒரு நடிகர் தெலுங்கில் நடிக்க வந்திருக்கிறார் என்கிற புரிதல் தெலுங்கர்களின் செயல்பாடுகளில் தெரிந்தது. படப்படிப்பு தொடர்ந்ததால் நான் அவர்களிடம் விடை பெற்றுக் கொண்டேன்.
நடு இரவிலும் படப்பிடிப்பு தொடர்ந்தது. ஹாஸ்டலில் ஒளிந்திருக்கும் நக்ஸலைட்டை போலீஸ் ஆஃபீசரான நான் வசிப்பிடங்களுக்கு மத்தியில் ஓடிப் பிடிப்பதான காட்சி படமாக்கப்பட்டுக் கொண்டிருந்தது. படப்பிடிப்பு நடப்பதற்கிடையே பக்கத்துக் காலனியிலிருந்து கூச்சல் கேட்டது. யாரோ இரண்டுபேர் ஹிந்தியில் பரஸ்பரம் திட்டிக் கொண்டிருந்தார்கள். அவர்கள் நன்றாகக் குடித்திருந்தார்கள் என்று யூனிட்டில் சொன்னார்கள். திட்டிக்கொள்பவர்களின் குரல் எங்கேயோ கேட்டதுபோலவே இருந்தது.
படப்பிடிப்பின் உச்சபட்ச வெளிச்ச உமிழ்தலுக்கிடையில் நிற்கும் எனக்கு அதிக வெளிச்சமில்லாத அந்த இடத்தில் நடப்பதைச் சரியாகப் பார்க்கமுடியவில்லை. அந்த ஷாட் முடிந்தவுடன் விளக்குகள் அணைந்தன. நான் மெதுவாகப் பிரச்னை நடக்கும் இடத்தைப் பார்த்தேன். பிரச்னையின் கதாபாத்திரங்களே சந்திரனும், ராகவனுமாக இருந்தார்கள். நான் அருகில் சென்றதும் கூட்டம் கூடியது. அவர்கள் இருவரும் என்னைப் பார்த்தார்கள். அவர்கள் அசிங்கப்பட்டுப் போயிருக்கலாம்.
"என்ன மலையாளீஸ் இது?"
"ஒரு சின்ன பிரச்னை சார்"
"நீங்க ரெண்டுபேரும் பச்சை மலையாளிகள்தானே. அப்புறம் ஏன் ஹிந்தியில் திட்டிக்கறீங்க?"
"மலையாளத்தில் பேசினால் இங்க இருக்கிற கொஞ்சம் மலையாளிக்குத்தான் சார் புரியும். ஹிந்தியில் திட்டினால் தானே எல்லோருக்கும் புரியும்."
என்னை அதிரவைத்தபடி ராகவன் பதில் சொன்னார். மலையாளிகளின் இப்படியான அறிவுக்கூர்மைக்கு முன்னால் நான் வெட்கித் தலைகுனிந்தேன். மொழியின் மதிப்பு இவர்களுக்குத் தெரியும். சட்டென என்னிடமிருந்து வார்த்தைகள் வந்தன.
"யெஸ். திஸ் ஈஸ் மலையாளி"
மலையாளி அவசியமில்லாத இடத்தில் ஆங்கிலம் பேசுவான். அவசியப்படும் இடத்தில் பேசமாட்டான். நேர்முகத்தேர்வில், மற்றவர்கள் முன்னால், ஏதாவது நல்லபடியாய்ப் பேச வேண்டிய இடத்தில் மலையாளி வார்த்தைகளுக்காக மூழ்கித் தத்தளிப்பான். கொஞ்சமும் ஆங்கிலம் தேவைப்படாத வீட்டுச்சூழலிலும், நண்பர்களுக்குக்கிடையிலும் மத்திலுமெல்லாம், 'நல்ல' ஆங்கிலத்தில் உரையாடவும் செய்வான். வெளியே போகும்பொழுதுதான் இந்த 'நல்ல' என்பதின் அர்த்தம் புரிகிறது. நான் இதைச் சொல்ல சகல தகுதிகளுமுடையவன். ஏனென்றால் நன்றாக ஆங்கிலம் பேசத்தெரியும் என்று நினைத்திருந்த நான், நிலைமை அப்படி இல்லை என்பதை 'அம்பேத்கர்' படத்தின் 'டப்பிங்' சமயத்தில் புரிந்து கொண்டேன். அயல்நாட்டுக்காரர்களுக்கு புரியும் ஆங்கிலத்தில் பேச, நான் ஒரு வெளிநாட்டுப் பெண்ணிடம் ட்யூசன் ஃபீஸ் கட்டி ஆங்கிலம் கற்றுக்கொண்டேன்.
மலையாளிக்கு மலையாளத்தில் பேச ஏதோ சில சங்கடங்கள் இருப்பதாக நான் நினைக்கிறேன். 'மலையாளத்தில் பேசினால் படிப்பறிவில்லாதவன் என்று அடுத்தவர்கள் நினைத்துவிடுவார்களோ' என்று பயப்படுகிறார்கள். ஆனால் கைவசம் இருப்பதோ, "வி ஆர் மலையாளீஸ்" என்ற மாடர்ன் ஆங்கிலம் மட்டுமே.
நாம் முதலில் மலையாளம் பேசும் முயற்சியை மேற்கொள்வோம். நல்ல மலையாளம் பேசுபவர்களால்தான் நல்ல ஆங்கிலத்தையும் நேசிக்கமுடியும். அதற்குப் பிறகுதான் மற்றவர்களுக்குப் புரியும் நல்ல ஆங்கிலத்தில் பேச முடியும். சரியாகச் சொன்னால் இரண்டையும் நல்லபடியாய் முழுமையாகக் கற்றுகொள்வதுதான் நல்லது. வெறும் "வி ஆர் மலையாளீஸ் இருப்பதில் என்ன அர்த்தம் இருக்கிறது?
(தொடரும்)