
தமிழ்நாட்டில் நாளுக்கு நாள் போதை மருந்துகளின் பயன்பாடும் அதற்கு அடிமையாகிறவர்களின் எண்ணிக்கையும் அதிகமாகி வருவது மிகவும் கவலைக்குரிய விஷயம். தமிழகத்தின் எல்லா நகரங்களிலும் மிக எளிதாகக் கிடைக்கும் ஒரு பொருளாக போதை மருந்துகள் மாறியிருக்கின்றன. அதிலும் குறிப்பாக பள்ளிமாணவர்களும், மாணவிகளும் அதிக அளவில் இந்த கொடிய பழக்கத்துக்கு வேகமாக அடிமையாகிக் கொண்டிருக்கிறார்கள்.
அண்மையில் தமிழக முதல்வர் போதைப் பொருள் தடுப்பு குறித்து மாவட்ட ஆட்சித் தலைவர்கள் மற்றும் காவல்துறை கண்காணிப்பாளர்களுடனான ஆலோசனைக் கூட்டத்தை நடத்தினார். அதில் "போதைப் பொருட்கள் இல்லாத தமிழ்நாடு" என்ற போதை ஒழிப்பு உறுதிமொழி அனைத்து காவல்துறை அதிகாரிகளாலும் எடுத்துக்கொள்ளப்பட்டது. அந்தக் கூட்டத்தில் முதல்வர் நிகழ்த்திய உரை ஒவ்வொரு ஆசிரியரும், பெற்றோரும் அவசியம் படிக்க வேண்டிய உரை. அதன் ஒவ்வொரு வார்த்தையும் அவரது கவலையை உணரச்செய்தது.
"எனது காவல் நிலைய எல்லையில் போதை மருந்து விற்பனையை முற்றிலுமாக தடை செய்து விட்டேன் என்று ஒவ்வொரு போலீஸ் இன்ஸ்பெக்டரும் உறுதி எடுத்துக் கொண்டால், தமிழ்நாட்டில் நிச்சயமாக போதை மருந்து நடமாட முடியாது" என்பதை வலியுறுத்தினார்.
போதை மருந்துகளை தடுக்க வேண்டுமானால் இரண்டு விதமான முறைகளில் அதைச் செய்தாக வேண்டும்.
முதல் வழி, போதை மருந்து நடமாட்டத்தைக் கட்டுப்படுத்துவது. அதனை விற்பனை செய்பவர்களைக் கைது செய்வது! இதை அரசுதான் செய்ய முடியும்.
அரசின் அண்மை கொள்கை முடிவுகள். "அவசியமானால் நான் சர்வாதிகாரியாக மாறி நடவடிக்கைகள் எடுப்பேன்" என்ற முதல்வரின் எச்சரிக்கைக் குரல் இந்த அரசு இதைச்செய்யும் என்ற நம்பிக்கையைத் தருகிறது.
இரண்டாவது வழி, போதை மருந்துகளைப் பயன்படுத்த வேண்டாம் என்றும், அதனால் ஏற்படும் பாதிப்புகளை உணர்த்துவது விழிப்புணர்வு ஏற்படுத்துவது.
இதை அரசு மட்டும் செய்ய முடியாது. இதில் இந்த சமூகத்தின் அங்கமாக இருக்கும் நம் அனைவருக்கும் பங்கு இருக்கிறது. போதை மருந்து என்பது அதனை பயன்படுத்தும் தனிமனிதனின் பிரச்னை அல்ல. சமூகப் பிரச்னை! ஒருவர் போதையைப் பயன்படுத்தி விழுந்து கிடப்பதின் காரணமாக, மற்றவர்களுக்கு என்ன பிரச்னை என்று ஒதுங்கி விடக்கூடாது. போதைதான் கொலை, கொள்ளை, பாலியல் தொல்லை உள்ளிட்ட பல்வேறு குற்றங்களுக்கு தூண்டுகோலாக இருக்கிறது.
இதில் பெற்றோர்கள், ஆசிரியர்களின் பங்கு மிகமிக முக்கியமானது! பாதி நேரம் பெற்றோருடனும், பாதி நேரம் ஆசிரியர்களுடனும்தான் படிக்கும் காலத்தில் பிள்ளைகள் இருக்கிறார்கள். எனவே, அவர்களை நல்வழிப்படுத்த வேண்டிய பொறுப்பு பெற்றோர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் இருக்கிறது. வகுப்பில் யாராவது சோர்வாக காணப்பட்டால், யாரிடத்திலும் ஒட்டாமல் இருந்தால், அந்த மாணவ, மாணவியரைக் கூப்பிட்டு தனியாக அழைத்து ஆசிரியர்கள் பேசவேண்டும். அந்த மாணவன் நல்லவர்களாக வளர்ந்தாலும், பெருமையும், அவர்கள் கெட்டவர்களாக ஆனாலும், அவலமும் தங்களுக்குத்தான் என்பதை ஒவ்வொரு ஆசிரியரும் உணரவேண்டும்.
அதேபோல் பெற்றோரும் தங்கள் பிள்ளைகளோடு அதிக நேரத்தை செலவு செய்ய வேண்டும். பெற்றோர்கள் குழந்தைகளோடு இயல்பாகப் பழகி நண்பர்களாக அவர்களை அணுக வேண்டும். கண்டிப்புடனும் இருக்க வேண்டும், அதே நேரத்தில் கனிவுடனும் இருக்க வேண்டும்.
இந்தப் போதையின் பாதையை அழிக்க வேண்டுமென்றால் போதை மருந்துகளை தடுக்க சட்டத்தின் காவலர்களாக காவல்துறையும் விழிப்புணர்வின் காவலர்களாக பெற்றோர்களும் ஆசிரியர்களும் இயங்க வேண்டும்.