மாலை

மாலை
Published on

நேற்றிரவு முழுக்கக் குடித்துக்கொண்டேயிருந்தான் தனபால். சில சமயம் அப்படி ஆகிவிடும். கையில் அன்றைக்குச் சம்பாதித்த பணம் அத்தனையையும் தயவுதாட்சண்யமில்லாமல் குடிக்கக் கொடுத்து விடுவான். யார் கேட்டாலுங்கூட வாங்கியும் கொடுப்பான். அதிலும் தான் குடிக்க நினைத்த அளவுவரை குடித்தபின்னர்தான் கொடுப்பான். ரத்னமாலா அவன் மனைவி அதைக் கண்டுகொள்ளமாட்டாள். அவனைப் பற்றித் தெரியும்.

ரத்னமாலா (அழகாகக் கூப்பிடுவான்) எனக்கு நீ இருக்கே… புள்ளங்க இருக்கு… குடும்பம் இருக்கு… எல்லாமும் தெரியும். உணர்ந்தவன்தான். ஆனாலும் ஒரு மாசத்துல சில சமயம் இப்படி ஆயிடும். நமக்காக நாம எதுவுமே செஞ்சுக்கலியேன்னு. அதான் இப்படி நாள் முழுக்கக் குடிச்சிக்கிட்டேயிருப்பேன். அப்படி தன்னை மறந்து குடிக்கறப்ப எனக்கு ஒரு நிம்மதி… இதை விட்டுடு…

அப்படித்தான். அதை ஒரு விதிபோல அவன் கடைப்பிடிப்பான். மற்ற சமயங்களில் அளவாகக் குடிப்பான். நிதானமிருக்கும். வீட்டுக்கு வேண்டியதை வாங்கிவருவான். குடும்பச் செலவுக்கு என ரத்னமாலாவிடம் பணமும் கொடுத்துவிடுவான்.

அப்படி நேற்றிரவு முழுக்கக் குடித்ததால் போதை அப்படியே பகலில் தெரியும் நிலவைப்போல அவனிடத்துத் தங்கியிருந்தது. இத்தனைக்கும் எழுந்து குளித்துவிட்டு வேலைக்குக் கிளம்பத் தயாராகிக்கொண்டிருந்தான். கண்கள் கொஞ்சம் கிறங்கி நின்றன. நடையிலும் கொஞ்சம் தள்ளாட்டம் தேங்கியிருந்தது. வேலைக்குப் போகலாமா என்றும் ஒருகணம் யோசித்து முடித்தான். போகாமல் இருக்க முடியாது. இன்றைக்கு தென்னந்தோப்பில் நிறைய வேலை பாக்கிக் கிடக்கிறது.

காளிமுத்து பெரிய பண்ணையில்தான் தனபாலுக்கு வேலை. தாராளமா எல்லாம் கிடைக்கும். வேளா வேளைக்குக் காபி. வெயில் காலத்துல சொம்பு நிறைய மோரு… சுடச்சுட வடை… இஞ்சி டீ… மதியம் நாலு கறியோட சாப்பாடு… போதாக்குறைக்கு அன்னிக்கு என்ன வேலையோ அதனோட பலனும் உண்டு. உதாரணமா தென்னந்தோப்புல வேலையின்னா… நாலஞ்சு இளநீர், தேங்காய்கள்… மட்டை… தென்னையோலை (ரத்னமாலா அதுலதான் விளக்குமாறு கிழித்துக்கொள்வாள்.) இப்படி எடுத்துக்கலாம். அன்னன்னைக்குக் கூலியும் உடனே கொடுத்துவிடுவார்கள். நிறைய ஆட்கள் வேலை பார்த்தார்கள். என்றாலும் அதிலும் புரிந்தபடி வேலை பார்க்கிற ஒருசிலரில் தனபாலும் ஒருவன். எல்லா மரியாதையும் நாகரிகங்களும் தெரிந்தவன். காளிமுத்துவுக்குப் பிடிக்கும் தனபாலை.

"நாளைக்குத்தான் வேலைக்கு வரேன்னு சொல்லிவுட்டுடுங்க… மருதமுத்து அண்ணங்கிட்ட சொல்லிடுவாரு…"

"போடி… இவளே… தென்னந்தோப்பு இன்னைக்குத் தேங்காய் பறிச்சு லோடு ஏத்தணும்… நிறைய காச்சுக் கிடக்கு… சரி கிளம்பறேன்… என்ற வீட்டுக்கு வெளியே வந்து சற்று நின்று நிதானிக்கையில் தூரத்தில் ஓர் ஆள் ஓடிவருவது தெரிந்தது."

"என்னது மருதமுத்து அண்ணன் இப்படி ஓடிவராரு…"

"தனபாலு…தனபாலு… மூச்சிரைக்கக் கத்தியபடியே ஓடிவந்தான் மருதமுத்து."

"ஏண்ணே… இப்படி பதறி ஓடிவரே… என்னாச்சு…?"

"நம்ப… பெரியவூட்டு அம்மா… கொல்லையிலே வழுக்கி விழுந்து செத்துப்போச்சி…"

"அய்யய்யோ எந்தாயி… மகமாயி… என்னாச்சு? கதறினான் தனபாலு."

"அடக்கடவுளே… மகமாயி… மகராசி… நல்ல மனுஷியாச்சே… எல்லாரும் நல்லா இருக்கணும்னு நினைக்கிற மனுஷி அந்த தாயி… ரத்னமாலா பேசியழுதாள்."

"சரி வா… கிளம்பு போகலாம்… என்று மருதமுத்து சொல்லிவிட்டு தனபாலலை எதிர்பாராமல் ஓடினான்."

"கத்தியால் அறுத்ததுபோல போதை தெளிந்து துண்டானது. ஓடினான்… புள்ளங்கள அழச்சிக்கிட்டு வந்துடு. நான் முன்னால போறேன். ரத்னமாலா அங்க வேல நிறைய இருக்கும் சட்டுனு வந்துடு. சாப்பிட்டு வந்துடுங்க."

தனபாலும் ஓடினான்.

அதற்குள் காளிமுத்து பெரிய மாடிவீட்டிற்கு முன்னால் பெரிய பந்தல் இரும்புக்குழாய்களை நட்டு மேலே தகரசீட்டில் போட ஆரம்பித்தார்கள்.

காளிமுத்து தோளில்போட்ட துண்டால் அடிக்கடி முகத்தைத் துடைத்தபடி எல்லாருக்கும் சொல்லிக்கொண்டிருந்தார். அவர் முன்னால் போய் மருதமுத்துவும் தனபாலும் நின்றார்கள்… அழுதார்கள்…

"ஐயா… என்னங்க ஆச்சுங்கய்யா தாய்க்கு…"

"நல்லா இருந்தாங்கடா… இப்பக் கண்ணு போட்ட பசுவோட கன்னுக்குட்டி ஓடியிருக்கு… ஆத்தா கவனிக்கலே… மேலே மோதி வழுக்கி விழுந்துட்டாங்க… பின் மண்டையிலே அடிபட்டு அங்கனேயே உசிரு போயிடிச்சு…"

"சரி தனபாலு… நீ போய் நம்ப பாலாக்கிட்ட சொல்லிட்டு காட்டு வேலையை ரெடி பண்ணு. பூவுக்கு மருதமுத்து நீ பூச்சந்தைக்குப் போய்ட்டு வந்து நம்ப முருகவிலாஸ் வேன கூட்டிக்கங்க. ஏழு பேரு செட்டுமேளம் சொல்லிடு. அவர்கள் கையில் பணக்கற்றையாகத் திணித்தார் காளிமுத்து."

ஓடினார்கள் மருதமுத்துவும் தனபாலும்.

"ஐயா… ரதத்துக்கு சொல்லிடலாமா?"

"வேண்டாம்… நம்ப அரியலூர் ஜெயங்கொண்டம் ஆளுங்க இருக்காங்க… சொல்லிடுங்க. அவங்க வந்து தேர் பண்ணிடுவாங்க."

"சரிங்க ஐயா."

அடுத்த அரைமணியில் கொட்டு வந்தது. அவர்கள் அடிக்கிற ஒலியில் அந்த ஏரியாவே அதிர்ந்தது.

உறவினர்கள் வரத் தொடங்கியிருந்தார்கள்.

இரண்டு  பெரிய கேன்கள் நிறைய டீயும் காபியும் தனித்தனியாக வைத்திருந்தார்கள். அதற்கு நான்கு பேர்கள் போடப்பட்டிருந்தார்கள். அவர்கள் சதாகாலமும் டீயும் காபியும் தட்டுகளில் ஏந்தி வளைய வந்தார்கள். நாற்காலிகள் இறங்கியவண்ணம் இருந்தன.

"ஐயா சேர் போதுமாங்கய்யா?"

"பத்தாது… இன்னும்  கொண்டு வந்து போடு…வேணுன்னா எடுத்துப் போட்டுக்கலாம்."

விறுவிறுவென்று எல்லாமும் நடந்தன. ஊரெங்கும் விதவிதமான போஸ்டர்கள் அடிக்கப்பட்டன. கூட்டம் வரத்தொடங்கியது. பந்தலுக்குக் கீழே உட்கார்ந்து நிறையபேர் டீயும் காபியும் குடித்துக்கொண்டிருந்தார்கள். பலர் பேப்பர் பார்த்துக்கொண்டிருந்தார்கள். ஒரே பேப்பரை நிறைய வாங்கிப்போட்டிருந்தார்கள்.

பெண்களின் அழுகை, மேளம் அடிப்பவர்களைத் தூக்கிப்போடுமளவுக்கு இருந்தது.

கடைத்தெருவில் மருதமுத்துவும் தனபாலும் ஒரு ஏத்து ஏத்தியிருந்தார்கள். எல்லா வேலையையும் பார்த்து முடித்திருந்தார்கள். மருதமுத்து இரண்டு குட்டியானை முழுக்க பூ மூட்டைகளாக நிரப்பியிருந்தான். கடைத்தெருவில் தனபால் இறங்கிகொண்டான். நீ போண்ணே… நான் வந்துடுறேன்…

வேனில் கிளம்பிப்போனான் மருதமுத்து.

கையில் எவ்வளவு பணமிருக்கிறது என்று பார்த்தான். காளிமுத்து கொடுத்த பணத்தில் அல்ல தன் பணத்தில். ஒரு இருநூறு தேறியது. இது பத்தாது என்று நினைத்துக்கொண்டான்.

தெரிந்த பூக்கடைக்குப் போனான்.

"வாடா தனபாலு… காளிமுத்து அம்மா தவறிட்டாங்கப் போலருக்கு… நல்ல மனுஷிடா அவங்க…"

"ஆமாண்ணே…"

"சரி என்ன வேணும்?"

"அண்ணே எனக்கு பெரிய ரோஜாப்பூ மாலை வேணும். அந்தத்தாயி கையால எவ்வளவு சாப்பிட்டிருக்கேன்… எவ்வளவு கொடுத்திருக்கு… அதுக்கு எங்கையால ஒரு மாலை போடணும்னே… கையில இருநூறுதான் இருக்கு.. ஆளு உசர மாலையா கொடு… மிச்சத்த நான் கொடுத்துடறேண்ணே   என்று இருநூறை எடுத்துக்கொடுத்தான்."

"உன்ன தெரியாதாடா தனபாலு… வாங்கிட்டுப்போ… இது அரநூறுருவா.. எடுத்து ஆளுயர மாலை இரண்டு கை மொத்தத்துக்கு கொடுத்தார் பூக்கடைக்காரர்."

தனபால் வாங்கிக்கொண்டான்.

போகிற வழியில் சாவு வீட்டிற்குப் போகிற ஒரு வண்டியை வழிமறித்து ஏறிக்கொண்டான்.

வாசலிலேயே வருவோரைப் பார்த்துக் கும்பிட்டுக்கொண்டிருந்தார் காளிமுத்து.

தனபால் ஆளுயர மாலையுடன் வருவதைப் பார்த்தார். அவர் முகம் சற்றே மாறியது.

"என்னடா இது? என்றார்."

"ஐயா… அது எந்தாயிய்யா… எத்தனை சோறு தின்னிருப்பேன்.. எனக்கு பிச்சைப்போட்ட தாயிங்கய்யா… எத்தனை இந்தக் கையால அதுகிட்ட வாங்கியிருப்பேன். முகத்தப் பாத்து கொடுக்குங்கய்யா.. என்னால முடிஞ்சது…"

"இருடா… என்று அவனைத் தடுக்க முயல்வதுபோல செய்தாலும் அவரைத் தள்ளியபடி தனபால் உள்ளே போனான். உள்ளே உறவுப் பெண்கள் அழுதுகொண்டிருந்தார்கள். காளிமுத்து மனைவி தனபாலைப் பார்த்ததும், பாருடா… உங்காயியைப் பாருடா… என்று ஒப்பாரி வைத்தாள்."

அந்தப் பெட்டி நீளத்துக்கு அந்த மாலையைப் போட்டான். சரியாக இருந்தது. காலைத் தொட்டுக் கும்பிட்டான்.

"மகமாயி… எந்தாயியே… இப்படிப்போயிட்டியே… மவராசி… இனி யார் முகத்துல முழிச்சி வேலையைப் பார்ப்பேன்…" என்று அழுதான்.

அவனை இழுத்துக்கொண்டு வந்து வெளியே விட்டார்கள்.

காளிமுத்து அவனையே மாறிய முகத்துடன் பார்த்துக்கொண்டிருந்தார். இறுகிப்போயிருந்தது முகம். ஏதோ உள்ளுக்குள் பாம்பு ஊர்வதுபோல ஊர்ந்துகிடந்தது.

கூட்டம் ஏறிக்கொண்டிருந்தது.

"யேய்… தனபாலு வாடா… என்று அவனை அழைத்தபடி உள்ளே போனார். அது ஒரு தனி அறை. காளிமுத்துவின் அறை. உள்ளே போனான் தனபால். என்னங்க ஐயா…" என்றான்.

அந்த அறையில் அவனையும் காளிமுத்துவையும் தவிர யாருமில்லை..

காளிமுத்து கோபமாய் கேட்டார்…

"நாயே… உன்ன யாருடா மாலை போடச்சொன்னா?"

"ஏங்கய்யா… அது என்னோட தாயி…"

"வேலைக்கார நாயே… யாருக்கு யாருடா தாயி… என்னோட தாயி உனக்கு தாயியா? தாயோளி நாயே… என்றபடி ஓங்கி அவனை அறைந்தார். பிச்சைக்கார நாயே… உனக்கு இடங்கொடுத்தது தப்பாப் போயிடிச்சி… நீ வந்து மாலை போடுவியா… உன்னை எங்க வைக்கணுமோ அங்க நிறுத்தியிருக்கணும்… எந்தாயிக்கு நீ பொறந்தியா? மாலை போடுவியா? எடுபட்டநாயே… எச்சக்கலை நாயே… ஓடிப்போயிடு… சட்டென்று கதவைத் திறந்துகொண்டு வெளியே போனார் காளிமுத்து."

இதை எதிர்பார்க்கவில்லை.

கதவைத் திறந்துகொண்டு வெளியே போனான்.

மாலை ஐந்து மணிக்குக் கிளம்பியது ஊர்வலம். சுடுகாடு போகும்வரை தனபால் ஆட்டம் நிற்கவில்லை.

எல்லாமும் முடித்துத் திரும்பினார்கள்.

அங்கேயே ஆற்றில் குளித்தான். ஈர வேட்டி சட்டையை அணிந்துகொண்டான். நேராக வீட்டிற்கு வந்துவிட்டான்.

ரத்னமாலாவும் பிள்ளைகளும் முன்னமே திரும்பி வந்துவிட்டிருந்தார்கள்.

ஒரு வாரம் வேலைக்கே போகவில்லை.

"என்னாச்சுய்யா… வேலைக்குப் போகாம உட்காந்திருக்கே…" என்றாள் ரத்னமாலா.

"டேய் தனபாலு… என்று வாசலில் குரல் கேட்டது.  வெளியே போய் பார்த்தான்."

"காளிமுத்து நின்றிருந்தார்… என்னடா வேலைக்கு வரலே?" என்றார்.

பேசாமல் இருந்தான்.

"எதுக்குடா வேலைக்கு வரலே? மறுபடியும் கேட்டார்."

"நான் இனிமே வரமாட்டேங்கய்யா" என்றான்.

"சோத்துக்கு என்ன பண்ணுவே.. நக்குவியா? பிச்சை எடுப்பியா?" என்றார் காளிமுத்து.

அமைதியாக ஒருமுறை அவரைப் பார்த்துவிட்டு சொன்னான். அந்த மகமாயி பார்த்துக்குவாய்யா… அம்மாவப் பார்க்கமுடியாத அந்த வீட்டுக்கு வரப் பிடிக்கலேய்யா என்றான்.

Loading content, please wait...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com