முடிவில்லாத தொடர்கதையா இந்த வெள்ளம்?

முடிவில்லாத தொடர்கதையா இந்த வெள்ளம்?
Published on

கவர் ஸ்டோரி 

– ஆதித்யா

ழையை  தான் படைத்த உலகிற்கு  வரமாகக் கொடுத்தார் கடவுள். அதனால்தான்  "மா மழை போற்றுதும்! மா மழை போற்றுதும்!"- என்று போற்றினான் இளங்கோ. மழையின் பெருமைகளை ஓர் அதிகாரமாகவே அமைத்துப் பேசுகிறான் வள்ளுவன். ஆனால்,  தனக்குக் கிடைத்த கொடையைச் சரியாகப் பயன்படுத்திக்கொள்ளத் தெரியாமல் அதைச்  சாபமாக்கியவன் மனிதன்.

அண்மையில், சென்னையில் ஓர் இரவு முழுவதும்  தொடர்ந்து பெய்த மழையால் மாநகரம் வெள்ளக்காடாகியது. பல பகுதிகளில் தண்ணீர் நான்கு நாட்களுக்கு மேல் தேங்கியுள்ளன. சில இடங்களில், தேங்கி நிற்கும் தண்ணீரில் கழிவுநீரும் கலந்தது. பல பகுதிகளில், வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. சாலையில் தேங்கி நிற்கும் நீரால் வாகனப் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. சுரங்கப்பாதைகள் மூடப்பட்டுவிட்டன.

2015-க்குப் பிறகு, சென்னையில் பெய்திருக்கும் பெருமழை இது என்று பதிவு செய்யப்பட்டிருக்கிறது.  நுங்கம்பாக்கம் உள்ளிட்ட பல இடங்களில் 20 செ.மீ.க்கும் அதிகமாக மழை பெய்துள்ளது. இது எதிர்பாராதது என்றும், பருவ நிலை மாற்றம் என்றும் சொல்கிறார்கள்.

ஆனால், 2015 போல் மேக வெடிப்பு,  முன்னறிவிப்பு இல்லாமல் ஏரியின் உபரி நீர் திறப்பு போன்ற அசாதாரணங்கள் இந்த முறை  நிகழவில்லை. இன்றைய சென்னை பெருநகரின்  ஆணையர்  சுகந்தீப் பேடிக்கும், நகரின் மேநாள் மேயர் இன்னாள் முதல்வர் ஸ்டாலினுக்கு சென்னை நகரின் ஒவ்வொரு அங்குலமும் தெரியும்.  இருவரும்  எதிர்பாராத பிரச்னைகளை எதிர்கொள்வதில் அனுபவம் வாய்ந்தவர்கள்.  ஆனாலும், சென்னை நகர் மிகப்பெரிய பேரிடரைச் சந்தித்திருக்கிறது.

அப்படியானால், ஏன் இந்த நிலை?

தண்ணீர்த் தேங்கியிருப்பதற்கான முக்கியமான காரணங்களில், மழைநீர் வடிகால் வாய்க்கால்கள் முறையாகப் பராமரிக்கப்படவில்லை என்பதும், வாய்க்கால்களின் வழித்தடங்களில் உள்ள ஆக்கிரமிப்புகள் முழுமையாக அகற்றப்படவில்லை என்பதும்தான் காரணம்.  இத்தகைய பெரிய வெள்ளம் வரும்போதெல்லாம் ஒரு அரசாங்கம் முந்தைய அரசாங்கத்தின் மீது பழி சுமத்துகிறது.  ஆனால், ஆண்டுதோறும் தொடரும் தொடர் மழையால் துயரங்களுக்கு உள்ளாகுபவன் சாமானியன்தான்.  'திட்டங்கள் சரியாகத் தீட்டப்படவில்லை, செயல்படுத்தப்பட்ட திட்டங்களில் ஊழல் நடந்திருக்கிறது. விசாரணைக் கமிஷன் அமைப்போம்'  என்கிறது அரசு. இவையெல்லாம் அரசியல் என்பது எல்லோருக்கும் தெரியும்.

இந்த நிலை ஏற்பட்டதற்கு மிக முக்கியமான காரணங்கள் இரண்டு.  தமிழக அரசின் நிர்வாகம் அந்த  மிக மோசமான நிலையிலிருக்கிறது. அரசு இயந்திரம் இயங்க முடியாமல் மோசமான அதிகாரிகளிடம் சிக்கித் தவிக்கிறது.

இரண்டாவது: சென்னை நகரின் வடிகால்  கட்டமைப்பு சிதைந்து சீரழிந்து போயிருக்கிறது. செலவழிக்கப்பட்ட கோடிகளினால் பயனில்லாமல் போனதற்குக் காரணம், முதலில் சொல்லப்பட்ட காரணம் ஒன்று

சென்னையில் 'கூவம் மற்றும் அடையார்' என்று இரண்டு ஆறுகளும் அவற்றுடன் நகரின் நீர் வழியாக 16 கால்வாய்களும் இருக்கின்றன. ஆனால், ஆண்டுதோறும் 500 கோடிக்கும் மேல் நிதி ஒதுக்கப்பட்டும்  இவைகள்  முறையாகப் பராமரிக்கப்படவில்லை. இதுகுறித்து பலமுறை ஊடகங்களில் விவாதிக்கப்பட்டும் எழுதப்பட்டும் பயனில்லை.

ஒவ்வொரு முறையும்  இம்மாதிரி பெருமழை ஆபத்தைச் சந்திக்கும்போதும்  'நிரந்தரத் தீர்வுக்கான பணிகள் மேற்கொள்ளப்படும்' என்ற அறிவிப்பும், மதிப்பீட்டுக் குழுவின் அறிக்கைகளும்,  நிவாரணப் பணிகளுக்காக  ஒன்றிய அரசிடம்  மாநில அரசு பல கோடிகள் நிதி  கேட்பதும்,  அதில் பாதிகூட  கிடைக்காத நிலையும் ஆண்டுதோறும் வரும் மழையைப் போலத் தொடரும்.

அரசு மட்டும்தான் இந்த நிலைக்குப் பொறுப்பா?

நிச்சயமாக இல்லை. கழிவுநீர் வழித்தடங்கள் அடைப்பட்டு, சீர்க்கேடு அடைந்திருப்பதற்கு முக்கியக் காரணம் மக்கள்தான். இந்தப் பெரும் மழையில் அவசர முயற்சியாக சென்னையில் சில கால்வாய்கள் சுத்தப்படுத்தப்பட்டு மழைநீர் வெளியேற வழிசெய்யப்பட்டது. அப்போது ஒரு கால்வாயிலிருந்து மட்டும் நீக்கப்பட்டத் திடக்கழிவு 140 டன். அதில் பெரும்பகுதி பிளாஸ்டிக். 'நெகிழி ஒழிக்கப்பட்ட நகரம்' என்று  கடந்த ஆண்டு அறிவிக்கப்பட்ட நகரம் சென்னை.  "நமது நகரம். நமது  மழைநீர் கால்வாய்கள்  பாதுகாக்கப்பட வேண்டியது நமது கடமை" என்ற எண்ணம் சிறிதும் இல்லாத நகரவாசிகளே இதற்கு முழு முக்கியக் காரணம். அடுக்குமாடிக் குடியிருப்புகள், உணவுக் கூடங்கள், வணிக நிறுவனங்கள்,  எந்தவிதப் பொறுப்பும் இல்லாமல்  மழை நீர் வடிகால் கால்வாய்களை கழிவுநீர் கால்வாய்களாகப் பயன்படுத்துகிறார்கள். இவற்றைக் கண்காணிக்க நகர அரசு நிர்வாகத்தில் போதிய கட்டமைப்புகள்,  அத்தகையச் செயல்களைத் தண்டிக்கப் போதிய சட்டங்கள் இல்லை.

பதவியேற்றதிலிருந்து சவால்களை மட்டுமே சந்தித்துக் கொண்டிருக்கும் ஸ்டாலினின் அரசு இந்த சவாலையும் சரியாகத் திட்டமிட்டுக்  குருகிய காலத்தில் சந்திக்காவிட்டால்  அடுத்த பருவ மழைக்காலத்திலும்  சென்னை நகர்  நீரில்  மிதக்கும் என்பதில் சந்தேகமில்லை.

2015ல் நாம் கற்றுக்கொண்ட பாடத்தை அடிக்கடி இயற்கை காட்ட விரும்புகிறது. இனியும் விழித்துக்கொள்ளாவிட்டால் சென்னையின் சோகத்தைத் தவிர்க்க முடியாது. எப்போது பெருமழை வந்தாலும் வெள்ளம் வடியும் அளவிற்கு அனைத்து சாலைகளிலும் மழைநீர் வடிகால்களை மாற்றியமைக்க வேண்டும். மழைநீர் செல்லவிடாமல் தடுத்து ஆக்கிரமித்த கட்டிடங்களை, தயவுதாட்சணை இன்றி இடித்துத் தள்ளி சரிசெய்வதே சிறப்பான நடவடிக்கையாகும்.

Loading content, please wait...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com