தங்க முட்டையா, நீர்க்குமிழியா

தங்க முட்டையா, நீர்க்குமிழியா
Published on

– சோம. வள்ளியப்பன்

கிரிப்டோ- பிட்காயின் விலை உயர்வு ஓர் அலசல்

"இதுதான் அடுத்த பெரிய விஷயம்"

"சுலபமான பணம்"

"முதலீடு செய்தவர்கள் அனைவரும் பெரும் லாபம் பார்த்திருக்கிறார்கள்"

"கடந்த சில ஆண்டுகளாகவே கொட்டிக்கொடுத்திருக்கிறது. நான் பெரும் வாய்ப்பை இழந்துவிட்டேன். இனியும் தள்ளிப்போடக்கூடாது"

"எல்லாவற்றிலும்தான் ரிஸ்க் இருக்கிறது. 'டெஸ்லா' போன்ற பெரிய நிறுவனங்கள்  தெரியாமலா இதில் முதலீடு செய்திருக்கிறன? "

"அரசாங்கம் தடை செய்யவில்லை. அனுமதி கொடுத்துவிட்டது."

இந்தப் பேச்சுக்கள் எல்லாம் எதைப்பற்றி என்று தெரிகிறதா?

சிலருக்குத் தெரிந்திருக்கலாம். தெரியாதவர்களுக்கு கொஞ்சம் விளக்கம் கொடுத்துவிட்டு சொல்ல வருகிற விஷயத்துக்கு வருவோம்.

இந்தப் பேச்சுகள் எல்லாம் முதலீட்டு உலகில் சிம்மாசனம் போட்டு அமர்ந்து, கடந்த சில ஆண்டுகளாக கோலோச்சிக் கொண்டிருக்கும் 'கிரிப்டோகரன்சி'கள் குறித்துதான்.

இதுகுறித்து ஓரளவு தெரிந்தவர்களே, கேள்விப்பட்டிருப்பவர்களே, 'அதென்ன கிரிப்டோகரன்சி! 'பிட்காயின்' என்று சொல்லிவிட்டுப் போகவேண்டியதுதானே! என்று புருவம் உயர்த்தலாம்.

'பங்குகள்' என்று பொதுவாகச் சொல்வதற்கும், 'ரிலையன்ஸ் பங்கு' என்று குறிப்பிட்டுச் சொல்வதற்கும் வித்தியாசம் இருக்கிறதா இல்லையா? அதேபோன்றதுதான் இதுவும். பிட்காயின் என்பது பல்வேறு கிரிப்டோகரன்சிகளில் ஒன்று. பிட்காயின் போல பல நூறு மின்னனுப் பணங்கள் (!) இருக்கின்றன. வர்த்தகம் ஆகின்றன.

கிரிப்டோகரன்சி என்றால் மின்னணுப் பணம்.

டாலர், என், யூரோ போன்ற பல்வேறு நாட்டுப் பணங்களை (கரன்சிகளை) சந்தையில் வாங்கலாம் – விற்கலாம் என்பது போல, கிரிப்டோகரன்சிகளையும் முதலீட்டாளர்கள், வர்த்தகர்கள் வாங்குகிறார்கள், விற்கிறார்கள். சுமார் 2000க்கும் அதிகமான கிரிப்டோகரன்சிகள் வாங்க – விற்கக் கிடைக்கின்றன.

2009ம் ஆண்டு தொடங்கிய இந்த  வியாபாரம், மெல்ல மெல்ல  சூடு பிடித்து, நெருப்பு பற்றி, கோவிட் 19 காலகட்டத்தில் இப்போது அங்கிங்கெனாதபடி எங்கும் பிரகாசமாய், கொழுந்துவிட்டு எரிகிறது. இந்தியா விதிவிலக்கல்ல. தமிழ்நாடு பின்தங்கிவிடவில்லை!

உலகிலேயே மிக அதிகமான மின்னணுப் பண உரிமையாளர்கள் இருப்பது இந்தியாவில்தான். 2021,அக்டோபர் நிலவரப்படி 10 கோடிக்கும் அதிகமானவர்கள்! யு.எஸ். சில் 2.74 கோடி நபர்கள்தான். ரஷ்யாவுக்கு மூன்றாவது இடம். 1.74 கோடி உரிமையாளர்கள். நான்காவது இடம் பிடித்திருக்கும் நாட்டின் பெயரைச் சொன்னால் வயிற்றில் ஜிலீர் என்றாகும். அதன் பெயர், நைஜீரியா (போதுமா!). 1.3 கோடி பேர்.

கிரிப்டோகரன்சிகளில் மிகவும் பிரபலமான பிட்காயின் ஒன்றின் விலை ஓராண்டுக்கு முன்பு 11,500 யு.எஸ். டாலர். இப்போது, நவம்பர் 1ம் தேதி, 63,000 டாலர். ஓராண்டில் ஐந்து மடங்கிற்கும் மேல் விலை உயர்வு.

இப்படி முரட்டுத்தனமாக விலை உயர்வதால், இந்த வர்த்தம் நோக்கி வரும் மக்கள் எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இந்தியாவில் பெருநகரங்களில் வசிப்போர் மட்டுமில்லாமல் சிறு நகரங்களில் இருப்போரும் ஆர்வம் காட்டுவதாகவும் கணக்குகள் திறந்து வர்த்தகம் செய்வதாகவும் செய்திகள் வருகின்றன. அடுத்து கிராமங்களிலும் இவற்றின் பிரசாரங்கள் நடப்பதாக கேள்வி. மும்பை பங்குச் சந்தையில் மட்டும் , ஜூன் மாதம் 8 கோடி பேர் (முதலீட்டாளர்கள் என்று சொல்லமுடியவில்லை) கிரிப்டோ வர்த்தக கணக்கு வைத்திருக்கிறார்கள்.

சரி. இது அல்லது இவை ஏன்  இவ்வளவு விலை உயர்கின்றன?

இங்கேதான் விஷயம் இருக்கிறது.

மக்களுக்கு பல்வேறு அரசாங்கங்கள் வெளியிடும் 'கரன்சி'கள் மேல் நம்பிக்கை இல்லை(யாம்). எதிர்காலத்தில் கிரிப்டோகரன்சிகள்தான் புழக்கத்தில் இருக்கு(மாம்). எதை வாங்கவும் விற்கவும் இவற்றை பணம் போல பயன்படுத்தலாம் என்கிறார்கள். இது ஒன்றுதான் அவர்கள் சொல்லும் ஒரே பயன்பாடு.

ரொக்கத்தில் இருந்து மக்களை ஆன்லைனுக்கு மாற்ற அரசாங்கங்களே முடியாமல் திணறுகிறபோது, பல்வேறு நாட்டு மக்களும் ஒரே பிட்காயினுக்கு மாறி அதிலேயே கொடுக்கல் வாங்கல் செய்வார்கள் என்பது எவ்வளவு பெரிய கனவு அல்லது திட்டம் அல்லது ஏமாற்று! 'அத்தைக்கு மீசை முளைக்கும். சித்தப்பா என்று அழைக்கலாம்' என்கிற பழமொழிதான் நினைவுக்கு வருகிறது.

சரி. அவர்கள் சொல்வது சிலபல ஆண்டுகளுக்குப் பிறகு அப்படியே நடக்கப்போகிறது என்றாலும், ஏன் இத்தனை கிரிப்டோகரன்சிகள்? அவற்றில் எது நிலைக்கும்? அப்படியே நிலைத்தாலும் அதற்கு ஏன் இவ்வளவு விலை? அதுவும் ஏன் தொடர்ந்து உயர்ந்துகொண்டே போகவேண்டும்?

கிட்டத்தட்ட அமெரிக்க டாலர் என்பது உலக கரன்சி இல்லை என்றாலும் அது பெரும்பாலான நாடுகளில் ஏற்றுகொள்ளப்படும், மதிப்பிருக்கும் ஒரு கரன்சி. அதற்கே டாலருக்கு 74 ரூபாய்தானே. பிட்காயின் ஒன்றுக்கு ஏன், 48 லட்ச ரூபாய்.(ஆமாம் ஒரு பிட்காயின் விலை 66 ஆயிரம் டாலர் அல்லவா)

தங்கம் கூட உலகெங்கும் மதிப்பிருக்கிற ஒரு பொருள். அது கூட தொடர்ந்து விலையேறுவதோ, இவ்வளவு வேகமாக விலை ஏறுவதோ இல்லையே! பிட்காயின் மற்றும் பிற கிரிப்டோகரன்சிகள் ஏன் இப்படி குதித்துக்கொண்டு தினமும் விலை உயர்கின்றன?

இந்தக் கேள்விகளுக்கு சரியான மற்றும் உறுதியான பதில் தெரியவில்லை. ஆனால், நிதிசார் விஷயங்கள் குறித்தும் மக்களின் மனநிலை குறித்தும் ஓரளவு தெரிந்துவைத்திருப்பவர்கள் காரணங்களை யூகிக்கலாம்.

அந்த யூகம், கிரிப்டோகரன்சியைச் சுற்றி பெரிய கட்டமைப்புகளையும் வியாபார சந்தையையும் உருவாக்கிவிட்டார்கள். பல்வேறு நிறுவனங்களுக்கும் அரசாங்கங்களுக்கும் இந்த வர்த்தம் மூலம் வருமானம் வருகிறது. பல பங்கு மற்றும் வர்த்தக சந்தைகள் இந்த வர்த்தகத்தால் பிழைக்கின்றன. விடுவானேன்? என்பது காரணமாக இருக்கலாம்.

வெளிப்படையாக, 'இப்படித்தான்' என்று நடக்கும் சூதாட்டங்களும், விலைமாது தொழில்களுமே பல்வேறு நாடுகளில் அனுமதிக்கப்பட்டிருக்கும் நிலையில் மின்னணுப் பணம் வாங்கி விற்பதை ஏன் தடை செய்யப்போகிறார்கள்? ஈடுபடுகிறவர்களின் சொந்த முடிவு அது என்று விட்டு விடுகிறார்கள்.

அமெரிக்கா, கனடா, இங்கிலாந்து உள்ளிட்ட பல தேசங்களில் கிரிப்டோகரன்சி வர்த்தகத்தை தடை செய்யவில்லை. அதன்மூலம் மக்களுக்கு கிடைக்கும் லாபத்தின் மீது வரி போடுகிறார்கள். சீனா, ரஷ்யா போன்ற பல நாடுகள் அங்கீகரிக்கவில்லை.

இந்த வர்த்தகத்தை முன்னெடுத்துச் செல்வோர், 'இப்போது இது இந்தியாவில் அனுமதிக்கப்பட்டது' என்று உரக்கச் சொல்கிறார்கள்.  அதற்கு காரணம், 'இந்த வர்த்தகத்திற்கு கடன் கொடுக்கவேண்டாம்' என்று வங்கிகளை அறிவுறுத்திய இந்திய ரிசர்வ் வங்கி, பின்னர் அந்தத் தடையை மார்ச் 2020ல் விலக்கிக் கொண்டதும், மத்திய அரசு செய்திருந்த தடைக்கு கிரிப்டோகரன்சி வர்த்தகத்தில் ஈடுபடுகிறவர்கள் நீதிமன்றம் சென்று தடை வாங்கியதும்தான். தடைக்கு தடை கிடைத்துவிட்டது.

மேலும், மத்திய அரசு கிரிப்டோகரன்சி வர்த்தகத்தை வரைமுறை செய்யும் சட்ட வரைவு தயார் என்றும், சட்டத்தை விரைவில் கொண்டுவரவிருப்பதாக தகவல்கள் வந்தாலும், இன்னும் அந்த சட்டம் வராததால் கிரிப்டோகரன்சி வர்த்தகம் சட்டபூர்வமானதா என்பதை தீர்மானமாக சொல்லமுடியவில்லை.

'எவர் வெளியிடுகிறார்' என்று தெரியாத, 'வெளியிடுகிறவர் மற்றும் அரசாங்கங்களும் பொறுப்பு எடுத்துக்கொள்ளாத', 'ஏன் உயர்கிறது' என்று தெரியாமலே தொடர்ந்து விலை உயர்கிற, 'ஒரே போல பல இருக்கிற', 'அதற்கென்று அவசியமான பயன்பாடு இல்லாத', 'ஊழல் அல்லது சிக்கல் ஏற்பட்டால் நீதிமன்றம் செல்ல முடியாத', 'தொலைந்தால் கண்டுபிடிக்க முடியாத' ஒரு 'பொருளற்ற பொருளை' பலரும் வாங்குகிறார்கள் என்றால் அதற்கு ஒரே காரணம், பணம் செய்யும் ஆசை.

'எப்போது என்ன விலையில் வாங்கினாலும் அதன்பின் விலை உயரும்' என்பது போன்ற தோற்றம் உருவாகியிருக்கிறது. அதனால் இது மிகச் சுலபமாக பணம் பண்ணும் வழியாகப் பார்க்கப்படுகிறது. பிட்காயின் போன்றவை விலை உயர்ந்தது போல இன்னும் பலவும் பலமடங்கு உயரும் என்று சொல்லி விற்கப்படுகின்றன.

துரிதமாக பெரிய பணம் பண்ண இது ஒரு பெரிய வாய்ப்பு என்று சொல்லி, சமீப விலை மாற்றங்களைக் காட்டுகிறார்கள். தங்கம் வெள்ளி, பங்குகள், நிலம் என்று எதோடு ஒப்பிட்டுப் பார்த்தாலும் கிரிப்டோகரன்சிகள் அதிலும் குறிப்பாக பிட்காயின் விலை மிகக் குறுகிய காலத்தில் மிகப்பெரிய அளவில் விலை உயர்ந்திருப்பதை பார்கிறவர்கள் அசந்துபோகிறார்கள்.

அப்படிப்பட்ட கூட்டங்களுக்கு வெளிப்படையான விளம்பரங்கள் எதுவும் கண்ணில் தென்படவில்லை. ஆனால், அதிக விபரமறியாத இளையோர் குறிவைக்கப்படுகிறார்கள். இந்த வர்த்தகத்திற்குள் அழைத்து வரப்படுகிறார்கள். வாங்க வைக்கப்படுகிறார்கள்.

இவ்வளவு விலை உயரும், இன்னும் தடை செய்யப்படாத ஒன்றை நானும் கொஞ்சம் வாங்கினால் என்ன? அதில் கிடைக்கும் லாபம் எனக்கும் தேவைதானே! என்று அவர்களுக்குத் தோன்றுவது இயல்புதான்.

ஆனாலும் இதைத் தவிர்ப்பதுதான் நல்லது என்று சொல்லக் காரணங்கள்:

இவற்றை அரசாங்கங்கள் வெளியிடவில்லை. தனியார் நிறுவனங்கள் வெளியிடுகிறார்கள். அதனால் ஏதும் ஆனால், இழப்பீடு பெற வாய்ப்பில்லை.

இப்படிப்பட்ட கிரிப்டோகரன்சி உருவாக்கும் நிறுவனங்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே போகிறது. அவர்களுக்கிடையே மிக பலத்த போட்டி இருக்கிறது. அதனால் தொழில் போட்டி மற்றும் பொறாமை இருக்கிறது. ஒரு நிறுவனத்தின் மீது மற்றொரு நிறுவனம் மின்னணு முறையில் தாக்குதல் நடத்தலாம். அதனால் அவர்கள் வெளியிடும் மின்னணு பணத்திற்கு சேதம் உண்டாகலாம். காணாமல் போகலாம்.

இந்த வர்த்தகம் அதிக தொழில்நுட்பம் சார்ந்த ஒன்று. அதனால் இதை புரிந்துகொண்டவர்கள் குறைவு. அதனால் சிக்கல்கள் வரலாம்.  அமெரிக்கா போன்ற நாடுகளிலேயே இது குறித்து ஒழுங்குபடுத்தும் சட்டங்கள் இல்லை.

அதிக வெளிப்படைத்தன்மை மற்றும் முறைப்படுத்துதல் இல்லாத வர்த்தகத்தில் ஈடுபட்டு, அங்கே  ஏமாற்றப்பட்டால் நீதிமன்றம் போய் முறையிட இழப்பீடு பெற முடியாது.

முறைப்படுத்தப்பட்ட பங்கு வர்த்தகங்களிலேயே திடீர் திடீரென ஊழல் என்று சொல்லி, பெரிய சரிவுகளை ஏற்படுத்துகிறார்கள். அப்படி சரிவுகள் ஏற்படும் நேரம் ரிசர்வ் வங்கி மற்றும் செபி போன்ற கண்காணிப்பு ஆணையங்கள் உதவிக்கு வந்து புதிய கட்டுப்பாடுகள் விதித்து சரிவைக் கட்டுப்படுத்தும். கிரிப்டோகரன்சி வர்த்தகத்திற்கு அப்படிப்பட்ட உதவிகள் வரும் என்று சொல்ல முடியாது.

தவிர, தீவிரவாதிகள் எவரேனும் இவற்றில் இயங்குகிறார்கள், பண பறிமாற்றம் செய்கிறார்கள் என்பது போல தெரியவந்தால், அரசு இந்த வர்த்தத்ததை தடை செய்யலாம். அப்படி செய்தால் அதுவரை போட்டிருந்த பணத்தை திரும்ப எடுக்க முடியுமா? நிலை சரியாகும் வரை விலைகள் நிற்குமா என்றெல்லாம் சொல்லமுடியாது.

கிரிப்டோ நாணயங்களை வாங்கி வைக்கும் டிமேட் கணக்கு போன்ற வேலட்டுகளை இணையக் கொள்ளையர்கள் ஹேக் செய்ய வாய்ப்புண்டு. தனிப்பட்ட ஆப்லைன் வேலட்டுகளில் அவற்றின் பாஸ்வேர்ட் போன்ற 'பிரைவேட் கீ' தொலைந்து போனாலோ, ஹேக் செய்யப்பட்டாலோ போட்ட பணம் போய்விடும்.

இவை விலை உயர்வதற்கும் இறங்குவதற்கும் பண்டமெண்டல்ஸ் எனப்படும் அவற்றின் செயல்பாடுகள் மதிப்புயரும் விஷயங்கள் ஏதும் காரணமில்லை. எல்லாம் 'டிமாண்ட் & சப்ளை' என்ற டெக்னிக்கல் விஷயத்தை மட்டுமே பொருத்தது. எல்லாம் நன்றாகப் போகிறது என்கிற நம்பிக்கை மட்டுமே இப்போதைக்கு இதற்கு அடிப்படை. எந்த பெரிய 'ஆப்பரேட்டரோ (ஆம்..மீண்டும் முதலீட்டாளர் என்று சொல்ல முடியவில்லை) அல்லது வர்த்தகரோ பெரிய அளவில் விற்றால், விற்று லாபத்தை எடுக்க முயன்றால் அல்லது தொழிநுட்ப கோளாறு காரணமாகவோ  விலைகள் வீழ்ந்தால், பெரும் பீதி உண்டாகும். சந்தை ரணகளமாகிவிடும்.

இவ்வளவு இருந்தும் ஏன் விலை உயர்ந்து கொண்டே இருக்கிறது என்ற கேள்வி வரலாம்.

இவையெல்லாம் இப்படி இருந்தாலும்… கிரிப்டோகரன்சி வர்த்தகம் பெரிதாகிக்கொண்டு போவது என்னவோ உண்மைதான்.  அதற்கு கிரிப்டோகரன்சிகள் நம்ப முடியாத அளவு விலை உயர்ந்துகொண்டே போவதும், உலகில் வெற்றிகரமாக இயங்கி வரும் பல பிரபலங்களும் அதில் முதலீடு செய்திருப்பதாக தெரிவிக்கும் செய்திகளும் காரணமாக இருக்கலாம்.

சமீபத்தில் ஒரு பேட்டியில், ஆப்பிள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி டிம் குக் அவர்கள் அவருடைய சொந்தப் பணத்தில் ஒரு பகுதியை பிட்காயின் மற்றும் எத்திரியம் ஆகிய கிரிப்டோகரன்சிகளில் முதலீடு செய்திருப்பதாக சொன்னார். உலகின் மிகப்பெரிய நிறுவனங்களில் ஒன்றான டெஸ்லா, கிரிப்டோகரன்சியில் முதலீடு செய்திருக்கிறது.

இந்தியாவிலும் அதன் வர்த்தகதிற்கு தடை இல்லை என்பதால் விளம்பரங்கள் வர ஆரம்பித்திருக்கின்றன. கிரிப்டோகரன்சியை நீங்கள் பணம் போல டெபாசிட் செய்யலாம். அதற்கு '6.75 மூதல் 12.5 சதவீதம் வரை வட்டி தருகிறோம்' என்றெல்லாம் விளம்பரங்கள். இடைசெருகலாக, 'கிரிப்டோகரன்சிகளுக்கு காப்பீடு இருக்கிறது' என்ற வாக்கியங்களும் வருகின்றன.

டெபாசிட்டு வட்டி என்பதும் வேலட்டில் வைக்கும் கிரிப்டோகரன்சிக்கு திருட்டு போன்ற ஆபத்துகளில் இருந்து இன்சூரன்ஸ் என்பதெல்லாம் சரிதான். ஆனால், மக்கள் கவனிக்கத் தவறுவது, கிரிப்டோகரன்சிகளின் விலைகளுக்கு எவரும் உறுதி சொல்ல முடியாது என்பதை. அது சந்தைப் போக்கில்தான் ஏறும், இறங்கும். எவ்வளவு வேகமாக அதிகமாக விலை உயர்கிறதோ அதே அளவுகளில்  வேகத்தில் இறங்கவும் செய்யும்.

அந்த ரிஸ்கிற்கு தயாரானவர்களுக்கு ஓகேதான். மற்றவர்கள், சந்தேகத்துடனும்  எரிச்சலுடனும் நடப்பதை வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கவேண்டியதுதான்.

பலருக்கும் பணம் பண்ணும் ஆசை இருக்கிறது. வேகமாக பெரிய அளவுகளில் பணம் பண்ணும் ஆசை நிறையவே இருக்கிறது. அப்படிப்பட்ட ஆசையை காலம்தோறும் ஏதாவது ஒரு திட்டம் மூலம் அறுவடை செய்துகொள்கிறவர்கள் உண்டு. 2008ம் ஆண்டு அமெரிக்காவில் இப்படித்தான் பைத்தியம் போல வீடுகள் வாங்கினார்கள். விலை ஏறுகிறதென்று, கடன்  வாங்கி வீடுகள்  வாங்கிக்கொண்டேயிருந்தார்கள். பின்னர் அந்தக் குமிழ் உடைந்து, உலக நிதி சந்தைகள் அனைத்தும் பாதிக்கப்பட்டன.

கிரிப்டோகரன்சி அப்படிப்பட்ட மிகப்பெரிய 'பபுள்' ஆக இருக்கும் என்கிறார்கள் பலர்.
இதில் நம்பிக்கை இல்லாதவர்களில் முக்கியமானவர்
வாரன் பபெட்.

Loading content, please wait...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com