
? "தொலைநோக்கியில் தேடினாலும் பிரதமர் நரேந்திர மோடி போன்ற தலைவர் ஒருவர் கிடைக்கமாட்டார்" என்ற உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் இந்தக் கருத்தை நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள்?
– இரா. அருண்குமார், புதுச்சேரி – 605001
! "மோடிக்கு பின் நமக்கான தலைவரை விண்வெளியிலும் வேறு கிரகங்களிலும் தொலைநோக்கி மூலம்தான் தேட வேண்டும்" என்று அவர் நம்புகிறார்.
? மக்களுக்கு சேவை செய்ய வந்த சட்டமன்ற உறுப்பினர்கள், 5 கிலோ மீட்டருக்கும் குறைவான தூரத்திற்கு குளுகுளு பஸ் வசதியும், சம்பளம் 2 லட்ச ரூபாயும், ஓய்வூதியத்தை இரு மடங்காகவும் உயர்த்திக் கேட்பது நியாயமாக இல்லையே?
– ஆர்.எஸ்.மனோகரன், முடிச்சூர்.
! நிச்சயமாக இல்லை. அதிலும் ஓய்வுபெற்ற அரசு ஊழியர்களுக்கு பலனளிக்கும் பழைய முறை ஓய்வூதியத்தை கைவிட நினைப்பவர்கள்கூட ஓய்வூதியம் கேட்கிறார்கள்.
? உத்திரபிரதேசத்தில் மசூதிகளில் ஒலிபெருக்கிகளுக்குத் தடை விதித்திருக்கிறார்களே?
– வண்ணை கணேசன், சென்னை
! வரவேற்கப்பட வேண்டிய ஒன்று. மாநிலத்தின் பல பகுதிகளில் இருந்து சுமார் 10,900 ஒலிப்பெருக்கிகள் நீக்கப்பட்டு இருக்கின்றன.
மசூதிகளில் ஒலிப்பெருக்கிகளுக்கான தேவை அறுபதுகளிலும் எழுபதுகளிலும் இருந்தன. அப்போது பல வீடுகளில் சுவர் கடிகாரம்கூட இருக்கவில்லை. ஏரியா மக்களுக்கு தொழுகை நேரத்தை அறிவிக்க வேண்டிய அவசியம் இருந்திருக்கலாம். இன்று எல்லாரிடமும் கடிகாரம் இருக்கிறது, தொழுகை அறிவிப்புக்கென பிரத்தியேகமாக மொபைல் செயலிகள்கூட வந்துவிட்டன. எனவே, இன்றைய தேதிக்கு சும்மா பந்தா காட்ட மட்டுமே ஒலிப்பெருக்கிகள் பயன்படுகின்றன என்பதுதான் உண்மை. இஸ்லாமியப் பெரும்பான்மை கொண்ட மலேசியா, சவுதி அரேபியா போன்ற நாடுகளிலும் கூட மசூதிகளில் ஒலிப்பெருக்கிகளை நீக்கவும், ஒலி அளவை கட்டுப்படுத்தவும் அரசாணைகள் வெளியிடப்பட்டிருக்கின்றன.
இது வீதிகளில் ஸ்பீக்கர் பொருத்தி 'செல்லாத்தா, செல்ல மாரியாத்தா' என்று அலறவிடும் இந்து கோயில்களிலும் செய்ய வேண்டிய விஷயம். இதே போன்ற முயற்சிகள் இந்தியாவெங்கும் தொடர்ந்து 'அல்லாஹு அக்பர்களுக்கும்', 'செல்ல மாரியாத்தாக்களுக்கும்' சவுண்ட் செக் செய்யத்தான் வேண்டும்.
? மோடி ராஜதந்திரம்மிக்க தலைவராக உள்ளார்; பொறுமையும் பெருந்தன்மையும் அண்ணாமலைக்கு அதிகம் இருப்பதைக் கண்டு பெருமைப்படுகிறேன்" என்கிறாரே பழ.நெடுமாறன்?
– நாகூர் ஹமீது, மதுரை
! இவரைக்கண்டு பெருமைப்பட்டவர்கள் வருந்துகிறார்கள்.
? "டெல்லியின் முக்கியமான சாலைகளுக்கு சூட்டப்பட்டுள்ள முகலாய மன்னர்களின் பெயர்களை மாற்ற வேண்டும்" என்று அம்மாநில பா.ஜ.க. வலியுறுத்துவதைப் பற்றி…
– எஸ். இராமதாஸ், புதுச்சேரி – 605001
! பெயர் மாற்றச் சொல்லிக் கேட்பதில் இல்லை பிரச்னை. மாற்று பெயர்களாக சொல்லப்படும் ஆலோசனைகள்தான் "வரலாற்றை திரிக்க முயற்சிக்கிறார்கள்" என்ற அச்சத்தை ஏற்படுத்துகிறது.
? "இந்த அரசு சிலரைத் திருப்திப்படுத்த அளவுக்கு அதிகமாக ஆன்மிகம், ஆன்மிகம் எனத் தம்பட்டம் அடிக்கவேண்டுமா?" என்று கி.வீரமணி விமர்சித்துள்ளதைப் பற்றி…
– இரா. அமிர்தவர்ஷினி, வாணரப்பேட்டை, புதுச்சேரி
! "தன்னுடைய ஆன்மிக எதிர்ப்பு அரசியல் செல்வாக்கு இழந்துவிடுமோ" என்ற அச்சம்தான் காரணம்.
? "காங்கிரஸ் கட்சியைப்போல் தி.மு.க.வும் அழிந்துவிடும்.
10 ஆண்டுகள் கழித்து தி.மு.க. இருக்காது" என்ற அண்ணாமலையின் ஆரூடம் பலிக்குமா ?
– எம். நிர்மலா, புதுச்சேரி
! நிச்சயம் பலிக்காது. தமிழக அரசியலில் அழியாத இடம் பெற்றிருப்பது கழகங்கள்தான். தமிழ்நாட்டு அரசியல் அண்ணாமலைக்குத் தெரியாது.
? "ஆசிரியர்களுக்கு உடல்/மன ரீதியாக தொந்தரவு தரும் மாணவர்களுக்கு TC கொடுத்து பள்ளியில் இருந்து நீக்கப்படுவார்கள்" என அமைச்சர் அன்பில் மகேஷ் கூறியிருப்பது குறித்து உங்கள் கருத்து என்ன ?
– ச. ராமதாசு சடையாண்டி, ரங்கநாதபுரம், விழுப்புரம் மாவட்டம்
! மிகவும் அச்சுறுத்தும் ஒரு அறிவிப்பு.
மனரீதியாக ஏன் இப்படி மாறி இருக்கின்றார்கள் என்பதனை ஆராய வேண்டும். அதனைக் களைவதே முதல் பணியாக இருக்கவேண்டும். அது ஆசிரியர், பொதுச்சமூகம் மற்றும் அரசின் கடமை. அதில் இருந்து நழுவும் முயற்சி இது. இந்த முடிவில் குழந்தைகளை பள்ளிகளில் இருந்து வெளியேற வைக்கும் அபாயம் உள்ளது. இதில் சிக்கப்போவது அதிகாரமோ விழிப்புணர்வோ கல்வி விழிப்புணர்வோ இல்லாத பெற்றோர்களின் குழந்தைகளே. அரசு இவர்கள் பக்கம் நின்று அந்த நிலையினை மாற்றவே முனைய வேண்டும். அதுவே சமூக நீதி. அவர்களை சிறப்புக் குழந்தைகளை பார்ப்பதுபோல பாவித்து சிறப்பு கவனம் செலுத்தவேண்டும்.
? அரசாங்கங்கள் தங்களது சாதனைகளை விளக்கும் வகையில் அனைத்து செய்தித்தாள்களிலும் முழுப்பக்க விளம்பரங்களாக வெளியிட்டு மக்களின் வரிப் பணத்தை விரயம் செய்கிறார்களே, இதைப்பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
– எஸ். இராமதாஸ், புதுச்சேரி – 605001
! அரசுகள் தங்கள் சாதனைகளை மக்களுக்கு எடுத்துச்சொல்ல வேண்டியது என்பது உண்மைதான் என்றாலும், தனி மனித சாதனைகளாக படங்களுடன் அரசு செலவில் தம்பட்டமடித்துக்கொள்வது தவிர்க்கப்படத்தான் வேண்டும். விதிவிலக்கில்லாமல் எல்லாகட்சி அரசுகளும் செய்யும் இந்த விஷயத்தை தடுத்து நிறுத்த உச்ச நீதிமன்றம் தானே முன்வரவேண்டும்.
? 87வது வயதில் ஹரியானா முன்னாள் முதல்வர் ஓம் பிரகாஷ் சௌதாலா பிளஸ்-2 தேர்ச்சி பெற்று உள்ளது எதை காட்டுகிறது?
– மதுரை குழந்தைவேலு, , சென்னை-600129
! வயது என்பது எண்ணிக்கைமட்டுமே என்பதையும், முயன்றால் முடியாதது எதுவுமில்லை என்பதையும்தான்.
? குருவி உட்கார பனம்பழம் விழுந்த சமீபத்திய அரசியல் நிகழ்வு?
– கண்ணன் நெல்லை
! பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை கைதாகி இலங்கைச் சிறையிலிருக்கும் மீனவர்களை சந்தித்ததும், சில நாட்களில் அவர்கள் விடுதலையானதும்.
? ரனில் விக்ரமசிங்கே இலங்கையின் பிரதமராகி இருப்பது குறித்து…?
– மாடக்கண்ணு, நெல்லை
! நாடாளுமன்றத்தில் கட்சியின் ஒரே எம்.பி. அதுவும் நியமன எம்.பி. பிரதமராயிருப்பது உலகின் எந்த நாட்டிலும் நடந்ததில்லை. ஆனால், நீண்ட நாள் நிலைக்க மாட்டார். ராஜபக்ஷேவை எதிர்க்கும் மக்கள் அவரது பினாமி ஏஜென்ட்களையும் நிச்சியம் எதிர்ப்பார்கள்.
? இலங்கையில் என்ன நடக்கிறது?
– ஆா்.நாகராஜன் செம்பனாா்கோவில்
! யுத்த காண்டத்திற்கு முந்தைய லங்கா தகனம் படலம். சற்றுப் பொருங்கள் விரைவில் பட்டாபிஷேகத்துடன் காவியம் முடியும்.
? "மக்களை பாதிக்காத வகையில் போக்குவரத்து கட்டணத்தை உயர்த்துவது குறித்து முதல்வர் முடிவு எடுப்பார்" என்று அமைச்சர் கே.என் நேரு கூறியுள்ளதை பற்றி…?
– இரா. அமிர்தவர்ஷினி, , புதுச்சேரி
! நகை முரண்! ஜோக்கடிப்பதில் நம் அமைச்சர்களை யாரும் மிஞ்சமுடியாது.
? கடந்த சில நாட்களாக அரசு எடுக்கும் முடிவுகளில் பின்வாங்கிக் கொண்டிருக்கிறதே?
– சங்கர், நாகர்கோவில்
! இதுவும் திராவிட மாடலின் ஒரு அம்சமோ?
? "இலங்கை பிரச்னைக்கான தீர்வைக் கொடுக்கின்ற ஒரே ஒரு மனிதர் மோடிதான் என்கிறாரே அண்ணாமலை?
– சம்பத் குமாரி, சென்னை
! பின் ஏன்? எதற்காக காத்திருக்கிறார் என்றும் சொன்னால் நல்லது.
? ஒப்பிடுக… ஐ.பி.எல். முடிவுகள், தேர்தல் முடிவுகள்…!
-வாசுதேவன், பெங்களுரு.
! இரண்டு விளையாட்டுகளிலும் பெருமளவில் பணம். செலவழிக்கப்பட்டாலும் முடிவுகள் ஆச்சரியங்களைத் தருபவை. முன்னதில் முடிவை விளையாடுபவர்கள் முடிவு செய்கிறார்கள். பின்னதில் விளையாட்டைப் பார்ப்பவர்கள் முடிவு செய்கிறார்கள்.
? அண்மையில் ரசித்த வரிகள்?
– சந்திரமெளலி, இராஜபாளையம்
! "கடைசியில் இந்தி ஜிம்ப்மரில் அனுமதிக்கப்பட்டிருக்கிறது. வருந்துகிறோம். – வைரமுத்து.
? தேசத் துரோக சட்டம் குறித்து உச்ச நீதிமன்றம் ஒன்றிய அரசை கடுமையாக விமர்சித்திருக்கிறதே?
– லஷ்மி புத்திரன், மதுரை
! "பிரிட்டிஷ் காலத்தில் காலனிய ஆட்சியாளர்கள் போட்டு வைத்துப் போன பல்வேறு சட்டங்கள் இப்போதும் நடைமுறையில் இருக்கின்றன. அவற்றை எல்லாம் காலாவதியாக்க வேண்டும்" என்ற குரல்கள் தொடர்ந்து எழுந்து வருகின்றன. ஆனால், ஒரே ஒரு பிரிட்டிஷ் காலத்திய சட்டம் மட்டும் இன்றைய அரசுக்கு மனதுக்கு மிகவும் பிடித்தமான ஒன்றாக இருக்கிறது: Sedition எனப்படும் 'தேச துரோக குற்றம்'. சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கு எதிராக காலனிய அரசு கொண்டு வந்த சட்டம் இது. காந்தி, நேரு என்று பல்வேறு தலைவர்கள் இதன் கீழ் சிறையில் இருந்திருக்கிறார்கள். இந்த சட்டம் இன்றுவரை வழக்கில் இருக்கிறது. மோடியின் முதல் ஆட்சிக் காலத்தில் 326 தேசத்துரோக வழக்குகள் பதியப்பட்டு இருந்திருக்கின்றன. (இத்தனை வழக்குகளில் இவற்றில் ஆறில்தான் குற்றம் நிரூபணமாகி தண்டனை கிடைத்திருக்கிறது. அதாவது நிரூபண விகிதம் 1.8%தான். ஆனால், "தேசத்துரோக பிரிவின் கீழ் ஜாமீன் கொடுக்க முடியாது" என்பதால் நிரூபணமோ இல்லையோ, தீர்ப்பு வரும்வரை கைதானவர்கள் பல்லாண்டு காலம் சிறையில் வாட வேண்டியதுதான். "இதை எப்போது நீக்கப்போகிறீர்கள்" என்று அரசைக் கேட்கிறது உச்ச நீதிமன்றம். "நீங்கள் நீக்காவிட்டல் நாங்கள் செய்வோம்" என்று மிரட்டியும் இருக்கிறது. ஆம் மிரட்டல்தான். அப்படி செய்தால் அது நாடாளுமன்ற உரிமையில் நீதிமன்றம் தலையிடுவதாக, judicial overreachஆகிவிடும். அதனால்தான் இந்த மிரட்டல். வழக்கம் போல அரசு அவகாசம் கேட்டிருக்கிறது… பார்க்கலாம்.