அதுபோலத்தான் இந்த இன்பமும்…துன்பமும்

அதுபோலத்தான் இந்த இன்பமும்…துன்பமும்
Published on

உத்தவ கீதை – 21

டி.வி. ராதாகிருஷ்ணன்

துக்கம்,ஆனந்தம்,பயம், கோபம்,பேராசை,காமம் மேலும் பிறப்பு, இறப்பு போன்றவை மனதனின் அகங்காரத்தால் ஏற்படுபவையே.ஆன்மாவிற்கல்ல.பிரம்மமே உண்மையானது(நினைவு நிலை),விழித்திருத்தல்,உறக்கம் ,கனவு என்ற மூன்று நிலைகளும் முக்குணங்களும் (சத்வ,ரஜஸ்,தமோ) காரண காரியத்தால் அமைந்த இந்த உலகமும் உண்மையானவையல்ல.

ஆரம்பத்திலும் முடிவிலும் இல்லாதது,நடுவிலும் இருக்க முடியாது.அவைகள் எந்தப் பெயரில் கூறினாலும் அவை வார்த்தை ஜாலங்களே!சொல்லலங்காரங்களே !

ஆகையால் பிரம்மம் ஒன்றே உண்மையானது என்று உணர்ந்து,தோன்றி மறையும் உடலை மறந்து,இந்திரியங்களின் சுகங்களிலிருந்து விடுபட்டு,எல்லாவற்றுக்கும் காரணமான இறைவனை உணர வேண்டும்.

உடல் பஞ்சபூதங்களின் சேர்க்கையால் உண்டானது. உடல், மனம், இந்திரியங்கள் யாவையும் உணவினாலும், அறிவாலும், அகங்காரத்தாலும், பிரகிருதி தத்துவத்தாலும் நிலைத்து நிற்கின்றன.

அவை… ஆன்மாவைச் சார்ந்ததல்ல…

இந்த உண்மையை உணர்ந்தவனுக்கு இன்பத்தாலும் துன்பத்தாலும் எந்தவித பாதிப்பும் ஏற்படாது.

எப்படி மேகங்களினால் சூரியனுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாதோ.. அதுபோல உண்மையை உணர்ந்த ஆன்மாவிற்கு இன்ப, துன்பங்களால் பாதிப்பு ஏற்படுவதில்லை.

பயிரிடுதல், பூமியில் பருவ மாற்றம், எரித்தல், மழைபெய்தல் போன்றவற்றால் எப்படி ஆகாயம் பாதிக்கப்படாதோ  அதுபோல ஆன்மா பாதிக்கப்படமாட்டாது.

எப்படி பருவ மாற்றங்களால் உலகில் மாறுதல்கள் ஏற்படுகிறதோ… அப்படி முக்குணங்களின் செயல்களால் நம் உடலில், வாழ்க்கையில் மாற்றங்கள் ஏற்படுகின்றன.

ஆகையால், பிரகிருதியின் செயலால்… இந்திரியங்களின் தன்மையால், மனதில் ஏற்படும் மாயையை நீக்கி பக்தியால் உண்மையை உணர வேண்டும்.

வியாதி சரியாக குணமடையாவிட்டால், அந்த வியாதி மீண்டும்… மீண்டும் துன்பம் உண்டாக்கும். அதைப்போல, செய்த கர்மாக்களின் பலனை அழிக்காதவரை, அதைப்போல உலகப் பற்றுகள் நீங்காதவரை, பரிபூரண யோகம் அடையாதவரை, பல முற்பிறவியின் பழக்கங்கள் நீங்காதவரை, ஞானமில்லாதவன், அறிவிலி மீண்டும்…மீண்டும்…செயல்களைச் செய்து, பிறப்பு, இறப்பு என்ற சம்சாரத்தில் உழன்று துன்பப்படுவான்.

ஞானம் பெற்றவன், உண்மையை உணர்ந்து… உலகப் பற்றுகள் நீங்கி, தன்னை உணர்ந்து, இந்த இறப்பு, பிறப்பினின்று விடுபட்டு முக்தி அடைவான்.

ஆன்மாவை உணர்ந்து, ஆன்மாவில் நிலைத்திருப்பவன், உடலால் பல செயல்களை (நடப்பது, சாப்பிடுவது, உறங்குவது போன்று பல செயல்களை) செய்தும்… அதனால் பாதிக்கப்படமாட்டான்.

ஆன்மாவைத் தவிர, மற்ற யாவையும் கனவில் ஏற்படும் அனுபவம் போல… அதில் கவனம் செலுத்த மாட்டான்.

இந்த மனம்… மற்றும் உடலால் ஏற்படும் அனுபவம், அறியாமையால் ஏற்படுவது. பிரகிருதி மற்றும் முக்குணங்களின் தன்மையாலும், அறியாமையாலும், உலக மாயையாலும் ஏற்பட்ட இவற்றுக்கும்… ஆன்மாவிற்கும் தொடர்பு கிடையாது.

உத்தவரே! இப்பொழுது உங்களின் ஞானத்தால் அறியாமை நீங்கியது. எப்படிச் சூரியன் உதிக்கும்போது நம் கண்களில் இருள் நீங்குமோ… அதுபோல ஞானத்தால் அறியாமை நீங்கியது.

ஆன்மா அறிவால்.. இந்த உண்மை நம் மனத்தில் முன்பே உள்ளது.இப்பொழுது ஞானத்தால் அறியாமை நீங்கியது. நம் மனதில் மறைக்கப்பட்ட ஆன்மா மனத் தெளிவால் ஒளி விடத் தொடங்கியது.

அந்த ஆன்மா பிறப்புக்கும், இறப்புக்கும் அப்பாற்பட்டது. அழிவில்லாதது… காலத்திற்கும் வரையறைக்கும் கட்டுப்படாதது. வார்த்தைகளால் வர்ணிக்கப்பட முடியாதது.

வார்த்தைகளும்… இந்திரியங்களும் அதன் உந்துததால்தான் செயல்படுகின்றன.

இந்த ஆன்மாவை உணராமலிருப்பதற்கு முக்கியக் காரணம் இந்த மனதுதான்.

மனம், உடல் என்று வேறுபடுத்திப் பேசுவது வெறும் வாய்ச்சொற்களே!

யோகத்தில் ஈடுபடும் யோகியானவன் தனக்கு ஏற்படும் எல்லாத் தடைகளையும் தாண்ட வேண்டும். என்னை நினைத்துத் தியானம் செய்ய வேண்டும். யோகத்தால் பல சித்திகள் கிட்டும்.அவற்றில் கவனம் செலுத்தக்கூடாது. இந்த உடம்பிலும் அதிக நாட்டம் காட்டக்கூடாது.காரணம்..இந்த உடலும் ஒரு நாள் அழியக்கூடியது.ஆகையால் என்னை நினைத்து யோகம் செய்து என்னையே அடைய வேண்டும்.

(தொடரும்)

Loading content, please wait...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com