
"எலே…மாக்க கழட்டிட்டு பேசுலே…ஒரு எழவும் புரியமாட்டேங்கு…''
அந்த பாம்படக் கிழவி எரிச்சலுடன் அவனிடம் கத்தினாள்.
சுந்தரனுக்கு சிரிப்பு வந்தது.
"பாட்டி அது 'மாக்கு'ல்ல..! மாஸ்க்…." என்றான் மாஸ்க்கை இறக்கிவிட்டுக் கொண்டே. இந்த 'மாஸ்க்' இப்போது உலகப் பொதுமொழி அல்லவா?
அந்தக் கிழவிமேல் கோபம் வரவில்லை.மாறாக ஒருவித ஈர்ப்புதான் வந்தது.
திருநெல்வேலி மண்ணுக்கே உரிய அந்த உரிமை கலந்த அவளின் ரோசத்தை ரசித்தவாறே, "சேது வாத்தியார் வீடு எங்க பாட்டி இருக்கு?" என்றான்.
"அப்படி அழகா கேட்டுத்தொலைப்பியா… இரண்டு பயலுவ இருக்கானுவ…நீ யாரக் கேக்கிற?''
சுந்தரனுக்கு வியப்பு.
சேது வாத்தியாருக்கே இப்போ வயது எழுபது இருக்கும். அவரைப் போய் 'பயல்' என்கிறாளே கிழவி. அப்படி என்றால் இவளுக்கு வயது தொண்ணூறுக்கு மேலிருக்கும் போலிருக்கே?
"ஏல உன்னத்தானே கேக்கேன்… வாயில என்ன கொளுக்கட்டையா வைச்சிருக்கல?"
மீண்டும் பாய்ந்தாள் கிழவி.
"எந்த சேதுன்னு தெரியல பாட்டி…! வாத்தியாரு..! நம்பி நகர் ஸ்கூல்ல… முப்பது வருசமாச்சு பாட்டி… சாரி பாட்டி…"- குழைவாகச் சொன்னான். அப்படியும் பாய்ந்தாள்.
"சாரியாவது பூரியாவது… விவரத்த ஒழுங்காச் சொல்லித்தொலைல…ரெண்டு பயலுவ…ஒருத்தன் சிண்டு வைச்சிருப்பான்…மற்றவன் சேக்கு வைச்சிருப்பான் உனக்கு யாருல வேணும்?"
அவன் கிழவியை பாசம் பொங்க பார்த்தான். 'உதவவேண்டும்' என்று நினைக்கும் அவளின் மனப்பாங்கு ரொம்ப பிடித்திருந்தது.
யோசித்தான். அவனுக்கு பாடம் எடுத்த வாத்தியார் சேது, 'சேக்கு' தான். அதாவது கிராப்பு தலை. குடுமி கிடையாது.
"கிராப்புத்தலைதான் பாட்டி…"
"ஓ அந்த எழவெடுத்த பயலா..? போ போ… வடக்கு மாட வீதி கடைசி வீடு…"
அவள்முகம் சட்டென்று எரிச்சலில் தோய்ந்து அடங்கியது. ஏன் அந்த வாத்தியார் பேரைக் கேட்டதும் எரிச்சல்?
'எழவெடுத்த பயல்' எங்கிறாளே? எத்தனை தங்கமான மனுஷர் அவர்?
அவள் போய்விட்டாள்.
சுந்தரனுக்கு சேது வாத்தியாரைப் பற்றி நினைவுகள் சுருண்டன.
"டேய் சுந்தரா…! நீ நல்லா படிச்சு பெரிய வேலைக்கு வருவேடா…! என்ன ஞாபகம் வெச்சிருப்பியாடா?'' என்றார் சேது. அவனிடம் அதைக்கேட்கும் போது அவர் கண்கள் பனித்திருந்தன.
துண்டால் கண்களைத் துடைத்துக் கொண்டார்.
அவனுக்கு கண்கள் கலங்கின.
"சார்… அழறீங்களா சார்" என்றான்.
"ஆமாடா… நீ என் பிள்ள மாதிரிடா… உன் முன்னாடி அழ நான் வெட்கப் படலைடா! என் சொந்த பிள்ளை ஒன்றுக்கும் உதவாத பார்த்திய நினைச்சேன்… அழுகை வந்திருச்சு. வாத்தியார் பிள்ளை மக்கு என்பாங்க. எத்தனை உண்மை…! பயலுக்கு படிப்பு வர மாட்டேங்குதே. டேய் நீதான்டா என்னக் காப்பாத்தணும்… சம்பாதிச்சு சோறு போடணும்… செய்வியாடா?''
அவர் கண்களை ஆழமாகப் பார்த்துக்கொண்டே தலையாட்டினான்.
"சுந்தரா… நான் உனக்கு ஸ்பெஷலா சொந்தப் பையனாட்டம் கத்து தறேன்னா… அதுல என் சுய நலமும் அடங்கி இருக்குடா… நீ பெரியவனா வந்ததும் எனக்கு செய்யணும்டா…"
தழுதழுத்த சேதுவைப் பார்த்ததும் அவன் மனமும் வேதனையில் மூழ்கியது.
கண்டிப்பானவர். அதே சமயம் அன்பானவர். அதட்டி பாடம் சொல்லித்தராமல் அன்பாலேயே கற்றுத் தருவார். அவருக்கு மாணவர்களிடம் அமோக மதிப்பு.
அப்படிப்பட்டவர் நாலு சுவர்களுக்குள் அவனிடம் உடைந்து போனது கண்டு நெகிழ்ந்து விட்டான்.
அந்த சின்ன வயதில் அவன் மனதில் ஒரு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி விட்டார்.
'பிற்காலத்தில் ஒரு நல்ல நிலைக்கு வந்தால் உதவுவேன்… சத்தியம்'
மனதுள் சபதம் எடுத்துக் கொண்டான்.
ஆனால் காலச்சக்கரம் என்று ஒன்று இருக்கிறது. அதன் சுழற்சி மெதுவாக இருப்பதுபோல் தோன்றும். ஆனால் விளைவுகள் வீரியமானவை. மறதியை விதைக்கும். துயர்நினைவை தூக்கியடிக்கும்.
வன்மங்களுக்கு பாத்திகட்டும். வாக்குறுதியை வேரறுக்கும்.
சுந்தரனுக்கும் நடந்தது.
அவன் அப்பாவுக்கு வட இந்தியா ட்ரான்ஸ்பர்.
எல்லாவற்றையும் மறந்து போனான்… அவன் பிறந்து வளர்ந்த இடம், ஆரம்பக் கல்வி. நடுநிலை கல்வி தந்த கிராமம், மக்கள், கோவில், குளம், சேது வாத்தியார், என சகலமும்.
ஆனால், அவன் பெரியவனாகி நல்ல வேலை கிடைத்து, கை நிறைய சம்பளம், கார், பங்களா என்று வந்த போது, மறுபடியும் மகிழ்ச்சியான மனதில் இளமைக்கால நினைவுகள், கிராமம், ஸ்கூல், சேது வாத்தியார் என்று நினைவலைகள்.
ஓ… அதுதான் காலச்சக்கரம் என்று பெயர் வைத்தானோ!
புனேயில் ஒரு பெரிய கம்பெனியில் வேலை. ஒரு நாள் சென்னை வந்து அங்கிருந்து கூனியூர் சென்று பார்த்துவிட்டு வருவதாக முடிவெடுத்து வந்துவிட்டான். நண்பர்களையும் உறவினர்களையும், கற்றுக் கொடுத்த ஆசிரியர்களையும், குறிப்பாக சேது வாத்தியாரையும் பார்த்துவிட்டு வரத் தீர்மானித்தான்.
யாரும் தொடர்பில் சுத்தமாக இல்லை.
கிராமம் மாறவில்லை. அதே தெருக்கள், புழுதிச் சாலைகள், வற்றிய கிணறு, அழுது வடிந்த பெட்டிக் கடைகள் என்றுதான் இருந்தது. சென்னை போன்ற நகரங்களில் ஒரு மாதம் வெளியூர் போனால் தெருவே மாறி அடையாளம் தெரிவதில்லை.
சேது வாத்தியார் வீட்டிற்குப் போனான். பூட்டிக் கிடந்தது. அவர் அவனுக்கு டியூஷன் சொல்லிக் கொடுத்த திண்ணை தரை சிமென்ட் உதிர்ந்து அழுக்காக இருந்தது. அங்கு ஆடுகள் படுத்திருந்தன. இவனைப் பார்த்தும் எழுந்து ஓடின. நாழி ஓடு போட்ட கூரையில் வேப்பஞ் சருகுகள் மஞ்சள் துணி பரப்பிய மாதிரி காய்ந்து அப்பி இருந்தது.
இரண்டு வீடுகள் தள்ளி திண்ணையில் அமர்ந்து இருந்த பெரியவரிடம் விசாரித்த போது, சேது வாத்தியார் வீட்டைக்காலி பண்ணிவிட்டு நாங்குனேரி போய்விட்டதாகச் சொன்னார்.
இதோ நாங்குனேரி. அவன் சிறுவனாக இருக்கும் போது பலமுறை வந்த ஊர். பெருமாள் கோவில் தங்கச்சப்பரமும் தேர்த்திருவிழாவும், பிரசித்தம்.
தேடி வந்தபோதுதான் கிழவியிடம் மாட்டிக்கொண்டான்.
அவ்வளவு நேரம் சிரத்தையாய் மதிப்புக் கொடுத்துப் பேசிய கிழவி சேது வாத்தியார் பேர் சொன்னதும் முகத்தை மாற்றிக் கொண்டு போனது வியப்பாக இருந்தது.
ஏழ்மையின் விளிம்பில் இருந்ததும், மகன் பார்த்தி கையாலாகாதவனாய் இருப்பதால் எதிர்காலம் பற்றிய அவர் பயமும்தான் அன்று அவர் சுந்தரனின் கையைக் காலாக நினைத்துப் பிடித்து கெஞ்சியிருக்கிறார் என்று பெரியவன் ஆனபிறகுதான் அவனுக்குப் புரிந்தது.
'என் பய பார்த்தி குடும்பத்து தூண் என்று நினைத்தேன்டா சுந்தரா..!அவன் 'தூண்' இல்லை..'வீண்'டா..! நீ அற்புதமா படிக்கிறே…பெரிய ஆளா வருவேடா…என்னைக் காப்பாத்துவேடா…"
சுந்தரன், 'அவர் புலம்புகிறார்' என்று முதலில் நினைத்தான். ஆனால் அவர் 'உண்மையிலேயே அவனை நம்பி முறையிட்டு இருக்கிறார்' என்று பிறகுதான் புரிந்துக்கொண்டான்.
வீடு தூரத்திலேயே பிரமாதமாக தெரிந்தது. வியப்பாக இருந்தது. அந்த தெருவிலேயே பெரிய மச்சு வீடு. நம்ப முடியவில்லை.
தன் ஷர்ட் பையைத் தொட்டு சேது வாத்தியாருக்காக கொண்டு வந்திருந்த அதை பத்திரமாக இருப்பதை உறுதி செய்து கொண்ட சுந்தரன், எதிரே வந்த ஒரு 'ஒல்லிப் பாச்சா' பெண்ணைப் பார்த்ததும் சட்டென்று அடையாளம் கண்டு கொண்டான்.
அவளும் அவனைப் பார்த்தாள்.
"ஏய்…நீ.. நீங்க..ருக்மணில்ல?"
"ஆமாம்..நீங்க யாரு..?" என்றாள் அவள்.
"தெரியல…?கூனியூர் வைத்தியநாதன் மகன் சுந்தரன்"
"டேய்,எப்படிடா இருக்கே… எங்கேடா இருக்கே? என்னால நம்பவே முடிலைடா…ரொம்ப மாறிட்டேடா"
"நீ மட்டும் என்னவாம்… கிழவி மாதிரி இருக்கே…"
அவள் அவனை மேலும் கீழும் பார்த்தாள். வாஞ்சையாக சிரித்தாள்.
"போடா…டேய் உன்னப் பார்த்தது சந்தோஷமா இருக்குடா… வீட்டுக்கு வாடா''
"எவனாவது பார்த்து மதில் சுவத்துல கரியால கெட்ட படம் போடறதுக்கா.."
"சீ..! டேய் அதெல்லாம் இன்னும் ஞாபகம் வெச்சிருக்கியாடா?''
அவனும் ருக்மணியும் நல்ல நண்பர்கள். சில பேருக்கு பொறாமை!
அந்த சமயம்தான் மதில் சுவற்றில் அவர்களைப் பற்றிய ஆபாசப்படம்!
அதை வரைந்தது வேறு யாருமல்ல…சேது வாத்தியார் மகன் பார்த்திதான்.
அவன் ருக்மனிக்கு புத்தகத்தில் காதல் கடிதம் வைத்துக் கொடுத்து அவளிடம் கன்னத்தில் அடி வாங்கிய ஆத்திரம்!
"வீட்டுக்கு வாடா…"
"சேது வாத்தியாரப் பார்த்துட்டு வந்திடறேன் ருக்கு"
"பறக்காதேடா… வா வீட்டுக்கு…" அவள் கையைப்பிடித்து இழுக்காத குறையாய் கூட்டிச்சென்றாள்.
அவள் வீட்டைப் பார்த்ததும் துணுக்கென்றது. குடிசை மாதிரி மிகச் சிறிய வீடு. இருட்டாக இருந்தது.
அந்தக் காலத்தில் அவள் வீடுதான் பெரிய மெத்தை வீடு. அவள் அப்பா ஆறுமுகம் மிகப் பெரிய மளிகைக் கடை வைத்திருத்தார்.
"அந்த வீடெல்லாம் என்னாச்சு ருக்கு?''
"உக்காருடா…! நீ பார்த்த பழைய வீடு வாசல்லாம் போயிருச்சு… அப்பாவுக்கு தொழில் நஷ்டம்… சூசைட் பண்ணிட்டாரு… கவலையில் அம்மாவும் போய்ட்டா. பீடி சுத்தி பிழைப்பு ஓடுது… போற வரை போட்டும்னு இருக்கேன்… தைரியத்த முதலீடா போட்டு…"
"அப்ப கல்யாணம்?"
"அது கானல் நீர்டா…!அங்கே எப்படி..?''
"புனேயில் செட்டில் ஆயாச்சு… கல்யாண ஆசை வரல… தோணும்போது சொல்லுன்னு வீட்டுல சொல்லிட்டாங்க."
"உனக்கு எப்படா தோணப் போவுது?"
"ஒரு நல்ல தமிழ்ப் பெண்ண பார்க்கும்போது!"
"டேய் என்னைப் பார்த்தா நல்ல தமிழ்ப் பெண்ணா தோணலையாடா?"
ருக்மணியின் இந்த மடேர் கேள்வியால் அதிர்ந்துபோய் விட்டான் சுந்தரன்.
தலை சுற்றுவது போலிருந்தது.சின்ன வயதிலேயே இப்படித்தான். 'கோக்குமாக்கா' கேள்வி கேட்டு சிரிப்பாள். அவன் நெளிவதை ரசிப்பாள்!
அவன் வந்த விஷயம் வேறு. இப்போது நடந்து கொண்டிருப்பது வேறு!
"என்ன சொல்ற ருக்கு"
"திருப்பிச்சொல்ற பழக்கம் திருநெல்வேலிக்காரிக்கு கிடையாதுடா"
சிரித்தாள்.
"ருக்கு… நான் சேது வாத்தியாரைப் பார்த்துட்டு வந்திடறேனே?"
"சரிதான்டா… அவரைப் பார்க்கத்தானே வந்தே? என்னைத் தற்செயலாத்தானே பார்த்தே? போ…போய்ட்டு வா… நீ கட்டாயம் அவரப் பார்க்கணும்…பார்க்காம போகக் கூடாது…நீ ரொம்ப மதிக்கிற தோஸ்த் ஆச்சே"
அவள் தொனியில் கிண்டல் தெரிவது மாதிரி இருந்தது.
அவன் சேது வாத்தியார் வீட்டை அடைந்தபோது பிரம்மாண்டமான கதவு வரவேற்றது!
பணியாள் ஒருவன் அவன் வந்திருக்கும் விஷயத்தை உள்ளே போய் சொன்னான்.
சிறிது நேரத்தில் தூய மல் எட்டு முழ வேஷ்டியும் ஐவரிஒயிட் ஸ்லாக் ஷர்ட்டுமாக சேது வாத்தியார் வந்தார். அடையாளமே தெரியவில்லை.வாய் நிறைய வெற்றிலை. கழுத்தில் தங்கச் சங்கிலி.
'ஒரு நாலு முழ கிழிந்த வேஷ்டி ,அரைக்கை சட்டை, கையில் வாக்கிங் ஸ்டிக்குமாய், லேசாக கூன் விழுந்த முதுகுடன் ஒரு உடைந்த மர நாற்காலியில் உட்கார்ந்திருப்பார்..பாவம்..' என்று கற்பனை பண்ணியிருந்தவன் அவரைப் பார்த்ததும் திடுக்கிட்டான்.செழுமையில் உருவமே 'பண பண'த்தது..
"யாருப்பா நீ"
ஒரு கணம் அதிர்ந்து போனான்.
"வணக்கம் சார்… தெரியலையா சார்..? நான் சுந்தரன்…உங்க ஸ்டூடண்ட்.."
"இப்படித்தான் எல்லாரும் சொல்லிகிட்டு வறானுவ… டெண்டர்ல கையெழுத்துப்போடு…குண்டர்கள அனுப்புன்னு…சரி..சரி.. .உனக்கு என்ன வேணும்?"
அவன் தூள்தூளாகிப் போனான். அவன் காதுகளை நம்ப முடிவில்லை.
"பார்த்துட்டுப் போலாம்னு வந்தேன்சார்"
"சரி சரி…பார்துட்டேல்ல…? கிளம்பு… ஆமா…வாத்தியாரை பார்க்கவற பய, ரெண்டு ஆரஞ்சுப் பழம் கூட வாங்கிட்டு வராம வறே?"
"சாரி சார்…"
தலை தட்டாமாலை ஆட, மிடறு விழுங்கிவிட்டு கிளம்பினான்.
வெளியே சிலர் காத்திருந்தார்கள் கையில் பிஸ்கட் பழங்களுடன்.
" ஸார்வாள், பார்த்திய பார்த்துட்டு வறீயளா?" என்றான் ஒருத்தன். "அவுக இருக்காவளா?"
'தெறியலைப்பா…!சேது வாத்தியாரைப் பார்க்க வந்தேன்.." என்றான்.
"ஓ..அவாள்தான் தான் பார்த்தியோட மேனேசர்"
"என்னது!"
"ஆமா சார், பார்த்தியோட வரவு செலவை அவாள்தான பார்த்துக்கிறாவ."
"பார்த்தி?"
"பிரபல கட்சிக்காரராகி ரெண்டு கையாலும் வாங்கறாவ. ஆனா ஒண்ணு..! வாங்குற காசுக்கு கரெக்டா வேலைய முடிச்சுக் கொடுத்துடறாவ. அதனால மதிப்பு ஜாஸ்தி…"
சுந்தரனுக்கு விளங்கிவிட்டது.
சேது வாத்தியார் பயந்த மாதிரி பார்த்தி அவரைக் கைவிடவில்லை.
என்ன… கையெல்லாம் கறை… அவ்வளவுதான்!
அவனுக்கு ஒரு காலத்தில் சேது வாத்தியார் சொன்னது நினைவுக்கு வந்தது.
'டேய் சுந்தரா… உலகத்துல நாலு விஷயம் பாவப்பட்டதுடா… ஏணி, தோணி, ஆசான், நார்த்தங்கா…! ஏணி எல்லாத்தையும் உயரே ஏற்றும் ஆனா அது அங்கேயே இருக்கும்..தோணி எல்லோரையும் கரை சேர்க்கும் அது கரை ஏறாது. ஆசான் எல்லோரையும் உயர வைப்பான் அவன் அப்படியே இருப்பான். நார்த்தங்கா எல்லா உணவையும் செமிக்க வைக்கும். ஆனா அது செமிக்காது. ஏப்பம் வரும்…! அது விதிடா…'
'சேது சார்… நீங்க விதிவிலக்கு சார்'
முணுமுணுத்துக் கொண்டே வேகமாக நடந்தான்.
பைக்குள் கைவிட்ட போது சேது வாத்தியாருக்காக கொண்டு வந்திருந்த செக் தட்டுப்பட்டது. ரூபாய் ஒரு லட்சம்!
வெறித்துப் பார்த்தான். வெறுப்பில் கிழித்து எறியப் போகும் போது கவனித்தான். அவர் பெயர் எழுதவில்லை. கேட்டுவிட்டு எழுதலாம் என்று என்று நினைத்திருந்தது நினைவு வந்தது.
தெருவோரம் நிறுத்தப்பட்டிருந்த ஒரு டூவீலர் சீட்டில் அந்தச் செக்கை வைத்து,பேனாவை எடுத்து, குனிந்து, செக்கில் எழுதினான்—
'ருக்மணி'
அவள் வீட்டை நோக்கி நடக்க ஆரம்பித்தான்…