மோசடிக்கு ஆளாகாமல் தப்பிப்பது எப்படி ?

மோசடிக்கு ஆளாகாமல் தப்பிப்பது எப்படி ?
Published on

சிம் ஸ்வாப் மோசடி

ஹரிஹரசுதன் தங்கவேலு,
சைபர் வல்லுநர்

டந்த நவம்பர் மாதம், சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள ஒரு பிரபலமான கண் மருத்துவமனையின் வங்கிக் கணக்கிலிருந்து 24 லட்ச ரூபாய் ஆன்லைன் மோசடி மூலம் களவு போனது. விசாரணையில் மேற்கு வங்கத்தில் இருக்கும் இரு வங்கி கணக்குகளுக்கு, இப்பணம் அனுப்பப்பட்டிருப்பதாகத் தெரிய வர, இப்பரிமாற்றம் குறித்த தகவல் மருத்துவமனையின் வங்கி கணக்கில் இருக்கும் மொபைல் எண்ணுக்கு குறுஞ்செய்தியாக வர வேண்டுமே, என் வரவில்லை என்ற கேள்வி எழுந்தது.

தொடர்ந்த விசாரணையில் வங்கி கணக்குடன் இணைத்திருந்த மொபைல் எண்ணை மோசடியாளர்கள் செயலிழக்க வைத்திருப்பது தெரிய வர, அதிர்ந்து போனார்கள் பணியாளர்கள். அது மட்டுமல்ல! அந்த எண் தற்போது மோசடியாளர்களின் கைகளில் இருப்பதால், பணப் பரிமாற்றத்தின் போது அனுப்பப்படும் ஒடிபி எண்கள் கிடைக்கப் பெற்று மோசடியை வெற்றிகரமாக நிறைவேற்றியிருக்கிறார்கள்.

பயன்பாட்டில் இருக்கும் உங்களது மொபைல் எண்ணை, எப்படி ஒரு சில நிமிடங்களில் மோசடியாளர்கள் கைப்பற்றுகிறார்கள் ?

இதுதான் சிம் ஸ்வாப் மோசடி, உங்கள் மொபைல் எண்ணின் நெட்வொர்க் சேவையை அவர்கள் வசமிருக்கும் சிம்மிற்கு மாற்றிக்கொள்வது, எளிதாகச் சொன்னால் உங்கள் மொபைல் எண் இப்போது அவர்களிடத்தில். உங்களுக்கு வரும் அழைப்புகள், செய்திகள், ஏன் நீங்களே இப்போது அவர்கள்தான். காரணம்,  உங்களது பிரதான அடையாளமாக இணையம் நம்புவது உங்கள் மொபைல் எண்ணையும், சில ஆவணங்களையும் தானே தவிர, உங்களை அல்ல !

சரி, இந்த மோசடி எப்படி நிகழ்கிறது?

நமது சிம் தொலைந்து போனாலோ அல்லது 3G, 4G, 5G என புதுப்பித்துக் கொள்ளவோ தொலைத்தொடர்பு சேவை நிறுவனங்கள் சில வசதிகளை வழங்குகின்றன. புதிய சிம் அட்டையை பெற்றுக் கொண்டபிறகு அதன் பின்னால் குறிப்பிடப்பட்டிருக்கும் 19 அல்லது 20 இலக்க (ICCID) எண்ணை  SIM என டைப் செய்து வாடிக்கையாளர் சேவை மைய எண்ணுக்கு குறுஞ்செய்தியாக அனுப்பினால் நமது பழைய எண்ணின் சேவை புதிய சிம்மிற்கு மாறிவிடும்.

நீங்கள் நேரடியாக அவர்களது விற்பனை மையத்திற்கு சென்றாலும், உங்களது ஆவணங்களை உறுதி செய்து கொண்ட பிறகு விற்பனை அதிகாரி இதையே தான் செய்வார். பெரும் கார்ப்பரேட் நிறுவனங்கள், அல்லது பிரபலங்கள் என்றால் நேரடியாக வருவது சாத்தியமில்லாத காரணத்தால், அதிகாரப்பூர்வமாக பதிவு செய்யப்பட்ட மின்னஞ்சல் கணக்கில் இருந்து ஒரு மெயில் தட்டினால் போதும். புதிய சிம் எண்ணிற்கு சேவை மாறிவிடும். மேற்குறிப்பிட்ட 24 லட்சம் மோசடி இந்த முறையில் தான் நிகழ்த்தப்பட்டுள்ளது.

மருத்துவமனையின் மின்னஞ்சல் கணக்கை Phishing முறையில் ஹேக் செய்த மோசடியாளர்கள், தங்களிடம் இருக்கும் ஒரு சிம் எண்ணை குறிப்பிட்டு இதற்கு சேவையை மாற்றவும் என மின்னஞ்சல் அனுப்ப, சமர்த்தாக அதற்கு மடை மாற்றிவிட்டது சேவை நிறுவனம். மருத்துவமனையின் கைவசம் இருந்த சிம் செயலிழந்து போனது.

சரி, மோசடியாளர்கள் இதை ஏன் நிகழ்த்துகிறார்கள் ?

நம்மை பற்றிய பெரும்பாலான தகவல்கள் இணையம் முழுவதும் விரவிக் கிடக்கின்றன. நமது பயனர் கணக்கு, கடவுச்சொல் இன்னும் இதர ஆவணங்கள் என அனைத்தையும் தேடிப்பிடிக்கும் மோசடியாளர்களுக்கான இறுதித் தேவை என்பது நமது மொபைலிற்கு வரும் ஓடிபி எண்கள் தான். அதைக் கைப்பற்றவே இந்த சிம் ஸ்வாப் மோசடியை நிகழ்த்துகிறார்கள்.

மோசடிக்கு ஆளாகாமல் தப்பிப்பது எப்படி ?

ஓடிபிக்கு நிகராக நமது 20 இலக்க சிம் எண்ணையும் கவனத்தில் கொள்ள வேண்டும். யார் அழைத்துக் கேட்டாலும், எந்த சூழ்நிலையிலும் இதைப் பிறரிடம் பகிரக் கூடாது.

உங்கள் மொபைல் செயல்பாட்டில் இருக்கிறதா என அவ்வப்போது சோதித்துக் கொள்வது உசிதம். சேவையில் ஏதேனும் சிக்கல் எனில் பிறர் எண்ணில் இருந்தாவது வாடிக்கையாளர் சேவை மையத்தை அணுகி, மோசடி ஏதும் நிகழவில்லை என உறுதி செய்து கொள்ள வேண்டும்.

முடிந்த வரை சமூக வலைதளங்களில் மொபைல் எண்ணை பகிர்வதைத் தவிர்த்தால் நலம்.

உங்கள் வங்கிக்கணக்கில் ஏதேனும் பரிமாற்றம் நிகழ்ந்தால் உங்களது மின்னஞ்சலுக்கும், மொபைல் எண்ணிற்கும் தகவல் வரும் சேவையை பயன்படுத்திக்கொள்ளுங்கள். வருடத்திற்கு 15 அல்லது 20 என சிறிய கட்டணம் வசூலித்தாலும் இச்சேவை பெரும் பலன் தரும். இறுதியாக ஒன்று,

இதைச் சொல்லுங்கள், அதைச் சொல்லுங்கள் என வரும் அத்தனை அழைப்புகளையும் நிராகரியுங்கள். இதுவே உங்களை 99% மோசடிகளிலிருந்து காப்பாற்றிவிடும்.

Loading content, please wait...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com