காண்கிற அனைத்துமே பகவானுடைய உருவம்தான்

காண்கிற அனைத்துமே பகவானுடைய உருவம்தான்
Published on

அருளுரை

கவான் எப்போதும் நம்முடன் இருக்கிறார். அவர் நம்முடைய கண்ணுக்குப் புலனாகாமலும் இருக்கிறார். கருணையினால், அவர் இருப்பதை உணர்த்தியும் இருக்கிறார். அவரை உருவத்துடனும் தரிசிக்கலாம். உருவமே இல்லாமல் அவருடைய அருள் வடிவத்திலும் காணலாம். பார்க்கப் போனால் நம் எதிரில் உள்ள அனைத்துமே பகவானின் உருவம்தான். ஆனால், அவரை நாம் இவ்வகையில் உணருவதில்லை. அவர் நமக்குள்ளேயே இருக்கிறார். ஆனால், நாம் நமது கண்களால் வெளி உருவத்தைக் காண்கிறோமே தவிர, உள்ளே உள்ள தத்துவத்தை  உணருவதில்லை. நுட்பமான புழுவொன்று என்னுடைய கால் நகத்தில் உட்கார்த்திருப்பதாக வைத்துக் கொள்ளுங்கள். அது என்னைத் தொட்டுக் கொண்டிருக்கிறதே தவிர, என்னைத் தெரிந்து கொள்ளுவதில்லை. அது என்னுடைய கால் விரலை ஒரு மலை என்றே எண்ணிக்கொண்டிருக்கிறது. இதேபோல் பகவானை நாம் தொட்டுக்கொண்டிருந்தாலும் அவரை நம்மால் உணர முடிவதில்லை.

கிருஷ்ணன் பிருந்தாவனத்தை விட்டுச் சென்றபோது அவனுடைய வயது எட்டரை என்று பாகவதம் கூறுகிறது. அந்த வயதிற்குள் கோபிகைகள் கண்ணனுடைய குழந்தைத்தனமான குறும்புகளை ரசித்ததாகவே காவியங்கள் கூறுகின்றன. ஆண்டவனைக் குழந்தையாக எண்ணி பக்தி செலுத்தும் உணர்வே கோபிகைகளுக்கும், கிருஷ்ணனுக்கும் இடையே இருந்தது.

ஒரிஸ்ஸாவில் வாழ்ந்த ஜயதேவரும், வங்காளத்தில் பிறந்த சைதன்ய மகாபிரபுவும், ராதா-கிருஷ்ணன் தத்துவத்துக்குப் புதிய வடிவம் கொடுத்தார்கள். புருஷா (ஆத்மா), பிரக்ருதி (பொருள்) ஆகியவற்றின் இடையே உள்ள நட்புத் தொடர்பை விளக்குவதே ராதா – கிருஷ்ணத் தத்துவம். பக்தர்களான இவர்கள் இருவரும் ராதையை இவ்வாறு உருவாக்கி, பூஜைக்குரிய பக்தையாக வழிபட்டார்கள்.

ராஸலீலை என்ற காதல் – உறவை ஏற்படுத்தியவர்கள் ராஜஸ்தானத்தில் வாழ்ந்த கிருஷ்ணாகர் அரசர்கள் புஷ்டி மார்க்கத்தைப் (காதல் வழி) பின்பற்றிக் கண்ணனை வழிபடுபவர்கள் இவர்கள். கிருஷ்ணனுக்கு வண்ண அலங்காரங்கள் செய்வித்து அலங்கார உடைகள் அணிவித்து, அழகு மிகுந்த இளவரசனாக வைத்து வணங்கினார்கள் இந்த அரசர்கள். இவர்களால் ராதை என்ற பக்தை, காதலியாக உருவாக்கப்பட்டாள். ராதையையும், கண்ணனையும் காதலி – காதலன் பாவத்தில் வைத்து, ஓவியங்கள் வரைந்து விழாக்கள் கொண்டாடினார்கள் இவர்கள்.

குஜராத்திலும் இந்தத் தத்துவம் மக்கள் சிலரால் பின்பற்றப்பட்டது. இத்தகைய ஒரு தத்துவத்துக்கு பக்தி மார்க்கமாக அமைக்கப்பட்ட பஜன், பாடல் கீர்த்தனைகளில் இடமில்லை. கண்ணனைப் பாலகோபாலனாக வழிபட்டவர்களே அவர்கள். புரந்தரதாசர், தியாகராஜர், சியாமா சாஸ்திரி, முத்து ஸ்வாமி தீக்ஷிதர் போன்றவர்களின் கீர்த்தனைகளில் கிருஷ்ணனின் துணைவியாக ருக்மணியும் பாமாவும் மட்டுமே வருணிக்கப்படுகிறார்கள். ராதை அவை எவற்றிலும் இடம் பெறவே இல்லை.

கிருஷ்ணன் ஆண் – பெண் – உறவுகளுக்கு அப்பாற்பட்டவர் என்பதற்கு ஒரு பாகவதக் கதையை உதாரணமாகக் கூறலாம். அசுவத்தாமா பாண்டவர்களைப் பழிவாங்க குலக் குழந்தைகளைக் கருவிலே அழிக்கிறான். அபிமன்யுவின் குழந்தை, தாயின் கருவிலிருந்து பிண்டமாக நழுவுகிறது. அந்தப் பிண்டத்தை உயிர்ப்பிக்க, இச்சைகள் எதனாலும் கவரப்படாத நைஷ்டிகப் பிரம்மச்சாரி ஒருவன் தொட்டு ஆசி கூறினால் போதும் என்று பெரியோர்கள் கூறுகிறார்கள். அப்போதும், மற்றவர்கள் யாவரும் தயங்கிய வேளையில் கண்ணன் முன்வந்து தொடுகிறான். பிண்டம் குழந்தையாக உருப்பெறுகிறது. கண்ணன் இச்சைகளுக்கு அப்பாற்பட்ட பரமாத்மா என்பதற்கு இந்த பாகவதக் கதையே சான்று.

– சுவாமி கிருஷ்ணானந்தர்       

Loading content, please wait...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com