அடுத்த வீட்டில் எழுந்த அலறலும் அமைதியும்  

அடுத்த வீட்டில் எழுந்த அலறலும் அமைதியும்  
Published on

தலையங்கம்

மக்கு மிக அருகிலிருக்கும் இலங்கை 2.2 கோடி மக்கள்தொகை கொண்ட தீவு தேசம். அங்கு  வரலாறு காணாத அளவுக்கு பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. பெட்ரோல், டீசல், சமையல் காஸ் சிலிண்டர் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலை பல மடங்கு உயர்ந்துள்ளது. கடுமையான பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள அந்நாட்டு மக்கள்,  இலங்கையில், தற்போதைய பொருளாதார சீரழிவுக்கு ராஜபக்சே குடும்பத்தினர்தான் முக்கியக் காரணம் என அந்நாட்டு மக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். அதிபர் கோத்தபய ராஜபக்சேவுக்கு எதிராக போராட்ட களத்தில் குதித்தனர்.

மக்களின் எதிர்ப்பு, கண்டன கூட்டங்கள், போராட்டங்கள் என பல வடிவங்களில் வளர்ந்து  கட்சி அரசியல்களைத்தாண்டி  அனைத்து  மக்கள் எழுச்சியாக எழுந்தது.  "எந்த நேரத்திலும் புரட்சி வெடிக்கலாம்" என்ற கொதி நிலையில் இருந்தது. மக்கள் எதிர்ப்பின்  விளைவாக எதிரொலித்த அரசியல் காட்சிகள் கடந்த மே மாதம் பிரதமர் மகிந்த ராஜபக்சே ராஜினாமா செய்ததில் தொடங்கியது. நிதி  அமைச்சர் உட்பட அமைச்சர்கள் பதவிகளை  ராஜினாமா செய்தனர். இம் மாதிரி ராஜினாமாக்கள் வெறும் "அரசியல் நாடகம்" என்று எழுந்த மக்களின் எதிர்ப்பு  அலை நாட்டின் அதிபர் மாளிகையைத் தொட்டது.

போராட்டகாரர்கள் தலைநகர் கொழும்புவில் உள்ள இலங்கை அதிபர் மாளிகையை சூறையாடினர். அதிபர் மாளிகையை முழுமையாக தங்களது கட்டுக்குள் கொண்டு வந்தனர். நிலைமை விபரீதமாகி சென்றதால், அதிபர் கோத்தபய ராஜபக்சே, தனது குடும்பத்தினருடன் மாலத்தீவுக்கு தப்பினார். அங்கும் எதிர்ப்பு வலுத்த காரணத்தால் சிங்கப்பூர் சென்று தஞ்சம் அடைந்துள்ளார்.

சிங்கப்பூரில் இருந்தபடி, அதிபர் பதவியை ராஜினாமா செய்திருக்கிறார். 1978ம் ஆண்டு இலங்கை அரசியலில், அதிபர் பதவி உருவாக்கப்பட்டது. அப்பதவி உருவாக்கப்பட்டதில் இருந்து முதன்முறையாக அதிபர் ஒருவர் ராஜினாமா செய்துள்ளார்.

''இலங்கையின் புதிய அதிபர் அடுத்த 7 நாட்களுக்குள் தேர்வு செய்யப்படுவார், கோத்தபய ராஜபக்சேவின் ராஜினாமா கடிதம் முறையாக ஏற்கப்பட்டுள்ளது" என்று சபாநாயகர் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார்.  இந்த விவகாரம் தொடர்பாக, இலங்கை நாடாளுமன்றத்தில்,  அனைத்துக்கட்சி கூட்டம் நடந்து முடிந்துள்ளது.

அதிபர் தப்பிச்சென்று விட்டதால், போராட்டக்காரர்கள் அதிபர் மாளிகையில் இருந்து  வெளியேறினர். "கோத்தபய ராஜபக்சேவை அதிபர் மாளிகையில் இருந்து வெளியேற்ற வேண்டும் என்பதே எங்களது நோக்கம், அது நடந்துள்ளதால் நாங்கள் அதிபர் மாளிகையிலிருந்து வெளியேறுகிறோம்" என்ற குரலை எழுப்பிவிட்டு வெளியேறியிருக்கின்றனர். ஆனால், போராட்டத்தை கைவிட்டதாக அறிவிக்கவில்லை.

இலங்கை அரசியலில் நிகழமும் எந்த ஒரு மாற்றமும் இந்தியாவில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியது. எந்த அண்டை நாடும் செய்யாத உதவியை இலங்கைக்கு, இந்தியா செய்துள்ளது. இலங்கைக்கு தேவையான எரிபொருள் உள்ளிட்ட  அத்தியாவசிய பொருட்கள் கொள்முதல் செய்ய, இந்தியாவால் ஒரு பில்லியன்  அமெரிக்க டாலர் கடனுதவி வழங்கப்பட்டது.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் முயற்சியால்,  இலங்கைக்கு 40,000 மெட்ரிக் டன் அரிசி, 500 மெட்ரிக் டன் அத்தியாவசிய பொருட்கள் மற்றும் மருந்து பொருட்கள் வழங்கப்பட்டுள்ளன.  நாடுகள் பல உதவினாலும், நிலையான அரசு அங்கு அமையாத காரணத்தால், அந்நாடு பெரும் தத்தளிப்புக்கு உள்ளாகியுள்ளது. மக்களும் பெரும் துயரத்தில் ஆழ்ந்துள்ளனர்.

"அடுத்த ஒரு வாரத்தில் புதிய அதிபர் தேர்வு செய்யப்பட்ட பிறகாவது அந்நாட்டில் அமைதி நிலவுமா?" என்ற எதிர்பார்ப்பு சர்வதேச அளவில் எழுந்துள்ளது.

இந்த நிலையில் புதிய அதிபரும், அமையப்போகும் புதிய அரசும் உள்நாட்டில் அமைதியை ஏற்படுத்துவதுடன்   இந்தியாவுடன் நட்பு பாராட்டும் வகையில் அமையும் என்று நம்பிக்கை கொள்வோம்.

Loading content, please wait...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com