வெயில்கேற்ற நிழலுண்டு

வெயில்கேற்ற நிழலுண்டு
Published on

ம்பாசமுத்திரத்தில் நண்பன் வைத்தியின் வீட்டை விட்டு சந்தோஷ் புறப்படும்போது காலை ஒன்பது மணி.

"என்னமோ தெரியலே. இந்த ஊர் எனக்கு ரொம்ப பிடிச்சுப் போயிடுச்சு" என்றான் சந்தோஷ்.

"அம்பா சமுத்திரத்தைப் பத்தி நீ என்ன சாதாரணமா நினைச்சிட்டியா? இது ஒரு சொர்க்கம். சலசலன்னு ஓடற தாமிரபரணி. பச்சைப் பசேல்னு மலை. காத்துக்குப் பஞ்சம் இல்லே. அதனாலதான் அந்தக் காலத்துல வெள்ளைக்காரன் வந்து ஹார்வி மில்னு ஒன்னு  ஆரம்பிச்சான்" – வைத்தி பேச்சில் ஒரு கர்வம் தெரிந்தது.

"சரி… நான் கிளம்பறேன். என் ஊர், வீரவநல்லூருக்குப் போகனும். கூடிய சீக்கிரம் அமெரிக்கா வா. நான் இன்விடேஷன் லெட்டர் கொடுத்தா டூரிஸ்ட் விசா கிடைச்சுடும்."

சந்தோஷ் காரில் ஏறினான். கூடவே அவன் மனைவியும் ஆறு வயது பெண் குழந்தையும்.

கார் புறப்பட்டது. ஜன்னலில் சிறைப்பட்டு கூடவே மேற்குத் தொடர்ச்சி மலையும் வந்து கொண்டிருந்தது.

"எதுக்கு ஏ.சி? ஜன்னல் திறந்து விடுங்க… காத்து ஜிலு ஜிலுன்னு கன்னத்தை வருடிக்கிட்டு போறது எவ்வளவு ஆனந்தமா இருக்கு தெரியுமா?" என்றாள் மனைவி சாதனா.

ஜன்னல் கண்ணாடிகளை இறக்கினான் சந்தோஷ்.

"ஏய்… கைய வெளில நீட்டாதே…" என்று மகளை அடக்கினாள் சாதனா.

கடைவீதி வந்தது. ஒரு சில கடைகள் திறந்திருந்தன.

"என்னங்க…மர கடைசல் விளையாட்டு சொப்பு இங்கே அழகா இருக்கும். வாங்கிட்டுப் போலாங்க."

"எதுக்கு?" என்றான் சந்தோஷ்.

"இங்கே வாங்கினாத்தான் உண்டு. குழந்தை தீபுவுக்குப் பிடிக்கும். இதெல்லாம் நம்மூர்ல வால் மார்ட்ல கிடைக்காது"

"ம்ம்ம்ம்" காரை ஒரு கடை வாசலில் நிறுத்தினான்.

கடையை விட்டு வரும் போது ஒரு பெட்டி நிறைய பொம்மைகள் சேர்ந்து விட்டன.

"உன் பாட்டி நிஜமாவே இந்த மாதிரி சாமான் எல்லாம்  வச்சிருக்காங்க" என்றாள் சாதனா.

"நாம போற வீட்ல இருக்கும். காட்டறேன்"

"இதே மாதிரி கலர் பெயிண்ட் இருக்குமா?"

"நோ. பித்தளை, மாக்கல், ஸ்டோன்"

அரை மணி நேரத்தில் வீரவநல்லூர் அடைந்தார்கள். ஊர் மாறிப் போயிருந்தது.

அவனுடைய தெருவை கண்டுபிடிப்பது கூட சிரமமாக இருந்தது. ஒரு காலத்தில் வீடுகள் வரிசையாக இருந்தன. ஓட்டு வீடுகள். வீட்டு சுவற்றில் சிவப்பு வெள்ளை பட்டை பட்டையாக பூசப்பட்டிருக்கும். கோவில் சுற்றுச் சுவர் மாதிரி.

இப்போது சிவப்பு வெள்ளை நிறங்களையே காணோம். பல வீடுகளை புதுப்பித்துக் கட்டியிருந்தார்கள். சில வீடுகள் வணிகத் தலங்கள் ஆகியிருந்தன.

கோமதி ப்யூட்டி பார்லர் என்று ஒரு கடை இருந்தது.

"ப்யூட்டி பார்லரா? இந்த சின்ன ஊர்லயா?"

"ஆமா… ஜனங்க மாறிட்டாங்க… ஆனா இன்னும் கோமதியை மட்டும் விடல்லே."

கார் சத்தம் கேட்டு சந்தோஷின் அப்பா அம்மா வாசலுக்கு வந்தார்கள்.

தீபுவைப் பார்த்ததும் அம்மா வயதை மறந்து ஓடி வந்தாள். குனிந்து கன்னம் சேர்த்து கட்டிக்கொண்டாள்.

அப்பா அதிகம் உணர்ச்சிகளை காட்டவில்லை.

"வாடா…வாம்மா" என்றார். அப்பா எப்போதும் இப்படித்தான். அளந்து பேசுவார்.

அம்மா சூடாக காபி கொடுத்தாள். தீபு துளசி மாடம் அருகே போனாள்.

"இது என்ன?" என்றாள். அம்மாவும் சாதனாவும் அவளிடம் விளக்க ஆரம்பித்தார்கள். சந்தோஷ் வாசலுக்கு வந்தான். பின்னாலேயே அப்பாவும் வந்தார்.

"தெருவுல எல்லா வீட்டையும் இடிச்சிக் கட்டிட்டாங்க போல இருக்கு" என்றான் சந்தோஷ்.

"ஆமா…காலத்தோட வேகத்துக்கு ஈடு கொடுக்கறாங்க…"

"ஆனா நீ அந்த வேகத்தோட சேர்ந்து பயணிக்கல்லை… நம்ம வீடு இன்னும் அப்படியே இருக்கு. அதே முற்றம், இருட்டு ரூம், கம்பம் வைச்ச கூடம், வாசல் திண்ணை… உன்னால மாற முடியல்லையா?"

"முடியும். ஆனா பிடிக்கல்லே"

"ஏன்?"

"ஏன் மாறனும்? இந்த வீட்டோட அமைப்பு பிடிச்சிருக்கு. நடு முற்றம் வழியா வீட்டுக்குள்ள சூரியன் இறங்கறது பிடிச்சிருக்கு. மழை பெஞ்சா முற்றத்துல அண்டால தண்ணி பிடிக்கறது பிடிச்சிருக்கு."

"உனக்கு இந்த வாழ்க்கை கஷ்டமா தெரியலையா?"

"இல்லே…சில வசதிகள் மட்டும் செஞ்சிகிட்டேன். கேஸ் அடுப்பு, வென்னீருக்கு ஹீட்டர்… இது மட்டும் போதும். அவ்வளவு ஏன்? தாழ்வாரத்துல கல் தரைதான். எனக்கு அதான் பிடிச்சிருக்கு. இப்படியே இருந்துடட்டும்"

"வேணும்னா சொல்லுப்பா…இடிச்சிட்டு புதுசா மூனு மாடி போட்டு கட்டித் தர்ரேன். உள்ளே லிப்ட் கூட வைச்சிடலாம்"

"லிப்ட் எதுக்குடா? இதென்ன வீடா? இல்லே ஷாப்பிங் மாலா?"

வாசலில் கம்பம் வைத்து திண்ணை இருந்தது. இரண்டடி உயரம் இருந்தது. வாசற் கதவுக்கு நேராக நடுவில் வாய்க்கால்  மாதிரி ஒரு பிரிவு. வலது பக்க திண்ணை மூன்றடி தான் இருந்தது. இடது பக்கம் இருபது அடிக்கு வியாபித்திருந்தது.

திண்ணையில் யாரோ ஒருவர் படுத்துக் கொண்டிருந்தார். இன்னொருவர் அமர்ந்திருந்தார்.

"அப்பா…திண்ணைல இருக்கறது யாரு?"

"தெரியாது"

"தெரியாதா? இங்கே ஏன் இருக்காங்க?"

"வெயிலுக்கு உக்காந்திருக்காங்க"

"வேணாம்பா… இது தப்பு"

"எதுக்குடா இவ்வளவு பெரிய திண்ணை கட்டி வைச்சிருக்கு? எங்க ரெண்டு பேருக்காகவா? ஊர் ஜனங்களுக்காகத்தான்"

"ஊர் ஜனங்களைப் பத்தி நமக்கெதுக்கு இவ்வளவு அக்கறை?"

"அது தான்டா சமுதாயம். ஊர்ல எல்லாருமா சொந்த வீடு வைச்சிருக்காங்க? இல்லாதவனுக்கு இருக்கறவன் ஏதாவது செய்யனும்னு தான் அந்த காலத்துல இந்த மாதிரி திண்ணை கட்டி வைச்சாங்க"

"இது எனக்கு சரியா படல்லே"

"படாது. ஏன்னா உனக்கு சரித்திரம் தெரியாது. நம்ம நாட்டோட கிராமப்புற கட்டமைப்புகள் பத்தி தெரியாது"

"புரியல்லே"

"அந்த காலத்துல வண்டி கிடையாது. எல்லாரும் நடந்து தான் போவாங்க. எல்லார் தலைலயும் ஏதாவது சுமை இருக்கும். வெயில்ல நடந்து வர்ர்ப்ப அப்பப்போ இந்த மாதிரி திண்ணைல சுமையை இறக்கி வைப்பாங்க. கொஞ்ச நேரம் இளைப்பாறுவாங்க. நாங்க வாசலுக்கு வந்து அவங்களுக்கு குடிக்க தண்ணீ கொடுப்போம். தண்ணியை விலைக்கு விக்கற இந்த காலம் மாதிரி இல்லேடா அது"

சந்தோஷ் பதில் பேசவில்லை.

"இவ்வளவு ஏன்? சில வெளியூர்க்காரங்க ராத்திரி வந்து திண்ணைல படுத்துப்பாங்க. அவங்களுக்கு நாங்க சாப்பாடு கூட போடுவோம்"

"ஏன்?"

"லாட்ஜ் வசதி இல்லாத ஊர் இது. அதுவுமில்லாம எல்லாரும் ரூம் போட்டு தங்கறதுக்கு வசதி இருக்காது. இங்கே தூங்குவாங்க. தாமிரபரணில போய் குளிப்பாங்க. அப்புறமா வழியப் பாத்து போயிகிட்டே இருப்பாங்க"

"இதெல்லாம் நடந்தது அந்தக் காலம். இப்போ எதுக்கு திண்ணை?"

"இப்பவும் நான் சொன்னதுல பாதியாவது நடக்குது. யாராவது ஒருத்தர் ரெண்டு பேர் மூட்டை தூக்கிகிட்டு நடக்கத் தான் செய்யறாங்க. இந்த தெரு கடைக் கோடி வரைக்கும் பாரு. ஒருத்தர் வீட்லயும் திண்ணை இல்லே. தெரு சாக்கடை வரைக்கும் வீட்டை கட்டிட்டான். பெரிய இரும்பு கேட் போட்டு பூட்டிட்டான். வெயிலுக்கு ஜனங்க எங்கே ஒதுங்குவாங்க. நம்ம வீடு மட்டுமாவது அப்படியே இருந்துட்டுப் போகட்டுமே"

"எனக்கு ஒப்புதல் இல்லேப்பா. அம்மாவும் நீயும் தனியா இருக்கீங்க. உங்களுக்கு பாதுகாப்பு இல்லே"

"வேணாம்டா..இதுக்கு மேல இதைப் பத்தி பேச வேணாம். குளிச்சிட்டு வா…வீட்ல குளிக்கறியா? ஆத்துக்குப் போறியா?"

"ஹீட்டர் போடு. இங்கேயே குளிக்கறேன்"

இரண்டு நாட்கள் ஓடின. சந்தோஷ் ஏதோ சிந்தனையிலேயே இருந்தான்.

"என்னடா யோசனை?" என்றார் அப்பா.

"வீடு இடிச்சுக் கட்ட வேணாம். கொஞ்சம் ரூம் எக்ஸ்ட்ரா போட்டுக்கலாம். யாராவது விருந்தாளிங்க வீட்டுக்கு வந்தா வசதியா இருக்கும்"

"என்ன செய்யப் போறே?"

"வாசல் திண்ணையை இடிச்சுட்டு அங்கே ஒரு ரூம் போட்டுடலாம். அட்டாச்சுடு பாத் ரூம் ஒன்னும் போட்டுடலாம்"

"தேவையில்லடா. திண்ணை அப்படியே இருந்துட்டுப் போகட்டும்"

"நான் ஒரு இஞ்சினியர் கிட்டே பேசறேன்"

அடுத்த நாளே ஒரு இஞ்சினீயர் வீட்டுக்கு வந்து விட்டார். வாசலுக்குப் போய் அவருடன் ஏதோ பேசினான் சந்தோஷ்.

"அப்பா…இன்னும் ஒரு வாரத்துல இஞ்சினீயர் ப்ளான் கொண்டு வந்துடுவாரு. ஒரு மாசத்துல கட்டிடலாம்"

அப்பா பதில் பேசவில்லை. கோவிலுக்கு புறப்பட்டுப் போனார்.

சந்தோஷுக்கு போன் வந்தது. கொச்சியிலிருந்து அவன் பால்ய நண்பன் கேசவன் பேசினான்.

"அப்பா…கொச்சிக்கு ரெண்டு நாள் வந்துட்டு போகச் சொல்றான் கேசவன். நீங்களும் வர்ரீங்களா?"

"இல்லே..நீ போயிட்டு வா…கோவில் கமிட்டீல நான் இருக்கேன். ஒரு மீட்டிங் இருக்கு"

"கார்ல போலாம். போற வழி நல்லா இருக்கும்"

"எனக்குத் தெரியும்டா. நான் போகாத ரோடா?" – சிரித்தார் அப்பா.

அடுத்த நாள் கொச்சிக்கு கிளம்பி விட்டார்கள். கேசவன் நன்றாக கவனித்துக் கொண்டான்.

மாலையில் பேச்சை ஆரம்பித்தான் கேசவன்.

"எல்லா இடமும் சுத்தியாச்சு. ஷாப்பிங் மால் போலாமா?"

"ஹை.." என்றாள் தீபு சந்தோஷத்துடன்.

மாலுக்கு புறப்பட்டுப் போனார்கள். மால் மிகவும் பெரிதாக இருந்தது. தீபுவும் சாதனாவும் ஒவ்வொரு கடையாக சுற்றி சுற்றி வந்தார்கள். போன இடத்துக்கே திருப்பிப் திருப்பி வந்தார்கள். கிட்டத்தட்ட நான்கு மணி நேரம் சுற்றினார்கள்.

"மேல ஃபுட் கோர்ட் இருக்கு. அங்கே போலாம்" என்றான் சந்தோஷ்.

"உங்களுக்கு என்ன ஆர்டர் பண்ணட்டும்?" என்றாள் சாதனா அவனைப் பார்த்து.

"எனக்கு எதுவும் வேணாம். கால் வலிக்குதுன்னு உக்கார வந்தேன்"

அனைவருக்கும் பேபி கார்ன் ஸ்டார்ட்டர் வந்தது.

"இங்கே எவ்வளவு நேரம் வேணும்னாலும் உக்காரலாமா அப்பா?" என்று கேட்டாள் தீபு.

"ஆமா. பில் பேமெண்ட் பண்ற வரைக்கும் உக்காரலாம்"

அனைவரும் மெதுவாக சாப்பிட ஆரம்பித்தாள். திடீரென சாதனா கேட்டாள்.

"ரொம்ப கால் வலிக்குதா?"

"ஆமா"

"கால் வலி. கீழே உக்கார இடம் இல்லேன்னு இங்கே வந்துட்டீங்க. இந்த ஷாப்பிங் மால் இல்லே. எந்த ஷாப்பிங் மால் போனாலும் உக்கார விட மாட்டாங்க. உக்கார தோதா ஒரு இடம் இருந்தா 'இங்கே உட்காராதே' னு ஒரு போர்ட் வைச்சிடுவாங்க. ஃபுட் கோர்ட்ல உக்காரலாம். ஆனா டபுள் விலை கொடுத்து ஏதாவது சாப்பிடனும்"

சந்தோஷ் மெளனமாக இருந்தான்.

"இப்போ. வீரவநல்லூர்ல நம்ம வீட்ல என்ன நடந்துகிட்டிருக்கும்னு யோசிச்சுப் பாக்கறேன்"  என்றாள் சாதனா.

"என்ன நடந்துகிட்டிருக்கும்?"

"திண்ணைல கால் வலிக்கறவங்க ரெண்டு பேர் இப்போ உக்காந்திருக்கலாம். அநேகமா இந்நேரம் உங்க அம்மா அவங்களுக்கு குடிக்கத் தண்ணி கொடுத்திருப்பாங்க. ஏன் சாப்பிடக் கூட ஏதாவது கொடுத்திருப்பாங்க. இலவசமா"

அந்த 'இலவசமா' வை வேண்டுமென்றே அழுத்திச் சொன்ன மாதிரி இருந்தது.

அந்த அழுத்தம் பிடித்திருந்தது சந்தோஷுக்கு.

ஒரு மாதத்தில் அமெரிக்காவுக்குப் புறப்பட்டுச் சென்று விட்டான் சந்தோஷ். அந்த திண்ணை இன்னும் வீட்டு வாசலில் அப்படியே இருக்கிறது.

Loading content, please wait...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com