
ராணுவச் சேவையில் இளைஞர்களை ஊக்குவிக்கும் 'அக்னி பாதை' என்றொரு திட்டம் அண்மையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ராணுவச் சேவையில் சேர்வதற்கு தயாராகிவரும் இளைஞர்களிடையே இந்தப் புதியத் திட்டம் பெரும் வரவேற்பை பெறும் என்ற எதிர்பார்ப்புடன் ஒன்றிய அரசு இந்த திட்டத்தை அறிமுகப்படுத்தியது. ஆனால், திட்டத்துக்கு எதிர்ப்புகளும் அதை முன்னிட்டு நடத்தப்படுகிற வன்முறைச் செயல்களும் எழுந்திருக்கின்றன. அவை கண்டனத்துக்கு உரியவை என்பதோடு, கடுமையான தண்டனைக்கும் உட்படுத்தப்பட வேண்டியவை என்பது உண்மையானாலும் இந்தப் போராட்டங்களில் பின்னே உள்ள இளைஞர்களின் கோபத்தை அரசு புரிந்துகொள்ள வேண்டும் .
தங்களது வேலைவாய்ப்பு கேள்விக்குறியாகுமோ என்ற எண்ணம் எழுந்துள்ளது. அத்தகைய எண்ணம் தவறானது என்று மத்திய அரசு அறிவித்துக்கொண்டிருந்தாலும் போதுமான விளக்கங்களை அளிக்காமலிருப்பதினால் அவர்களின் சினம் கனலாக கனிந்து பெருஞ் ஜுவாலையாக எரிந்து கொண்டிருக்கிறது.
இந்த அக்னிபத் திட்டம் 2020இல் முப்படையின் தலைமை தளபதி மறைந்த பிபின் ராவத் தலைமையிலான ராணுவ விவகாரத் துறையால் திட்டமிடப்பட்டது. இந்திய ராணுவத்தை நவீனமயமாக்க வேண்டும் என்பதற்காக செலவுகளைக் குறைக்கும் திட்டங்களில் இது முக்கியமானதாகும். மத்திய அரசின் ராணுவத்துறை கொண்டு வந்திருக்கும் 'அக்னிபத்'
இந்தத் திட்டத்தின்படி வேலைக்குப் புதிதாக தேர்ந்தெடுக்கப்படும் போர் வீரர்கள் நான்கு ஆண்டு ஒப்பந்தத்தில் வேலைக்குச் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள். அந்த ஒப்பந்தக் காலம் முடிவடைந்ததும் அவர்களில் 25 சதவிகித வீரர்கள் மட்டுமே பணியில் தொடர அனுமதிக்கப்படுவார்கள். மீதி 75 சதவிகிதம் பேரின் பணிக்காலம் முடிவடைந்து விடும். பிஎஃப் போல அவர்கள் சம்பளத்திலிருந்து பிடிக்கப்படும் தொகையும் வேறு சில உதவித் தொகைகளும் சேர்ந்து சுமார் 12 லட்சம் அவர்களுக்கு வழங்கப்பட்டு பணியிலிருந்து விடுவிக்கப்படுவார்கள்.
ஒன்றிய அரசின் பட்ஜெட்டில் முப்படைகளுக்குமான ராணுவ செலவுகளுக்கு ரூ.5.25 லட்சம் கோடி. (மொத்த பட்ஜெட்டின் அளவு ரூ.39.45 லட்சம் கோடி.)). இந்த ரூ.5.25 லட்சம் கோடியில் ஓய்வூதியத்திற்கு மட்டும் ரூ.1.20 லட்சம் கோடி. இதை வெகுவாக குறைக்கும் நோக்கத்தில் அக்னிபத் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. 17 வருடம் பணியாற்றும் சிப்பாய் ஒருவருக்கு ஆகும் மொத்த செலவை விட 3 ஆண்டுகள் மட்டும் பணியாற்றும் சிப்பாய் ஒருவருக்கு ஆகும் மொத்தச் செலவு ரூ.11.5 கோடி குறைவாக இருக்கும் என்று இந்திய ராணுவம் கணித்துள்ளது. 5 லட்சம் சிப்பாய்களுக்குப் பல லட்சம் கோடி மிச்சப்படுத்த முடியும். இதுதான் இந்தத் திட்டத்தின் அடிப்படை.
ஆனால், செலவினத்தைக் குறைக்கவும், தேர்தல் வாக்குறுதிகளின்படி இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்க (அதுவும் சுழற்சி முறையில்) ராணுவத்தைப் பயன்படுத்திக்கொள்வது தவறு. ராணுவப் பணி என்பது ஜாலியான தற்காலிக வேலை தேடும் 'சாகச முகாம்' இல்லை. இராணுவத்தில் பணிபுரிவது என்பது வாழ்க்கைக்கும் உயிரிழப்பிற்கும் இடையேயான போர். முழுமையான உண்மையான அர்ப்பணிப்பு உள்ளவர்களால் மட்டுமே முடியும்
இந்தத் திட்டத்தின் மூலம் 4 ஆண்டுகள் பணிக்குப்பின் விடுவிக்கப்படும் இளைஞர்களின் எதிர்காலம் என்னவாக இருக்கும்? என்ற கேள்வி எழுகிறது. அவர்களுக்குத் தொழில் துவங்க வங்கிக் கடன்களில் முன்னுரிமை அளிக்கப்படும் என்றெல்லாம் இந்தத் திட்டத்தில் இடம் இருந்தாலும் இவர்கள் அனைவரும் போர்ப் பயிற்சி பெற்றவர்கள். ஆயுதங்களைக் கையாளத் தெரிந்தவர்கள். இவர்களால் தீவிரவாத குழுக்களுக்கும் மாவோயிஸ்ட் குழுக்களுக்கும் வேலை சுலபமாகி விடும். இப்படி ஈராக் ராணுவத்தைக் கலைத்து எல்லாரையும் வேலையிலிருந்து தூக்கியதில், வேலை போன வீரர்கள் சேர்ந்தும்தான் ஐஎஸ்ஐஎஸ் இயக்கம் வலுப் பெற்றதற்கு காரணம். என்பது வரலாறு.
மேலும், தொழில் வளர்ச்சி குறைவாக உள்ள வட மாநிலங்களில் வேலை வாய்ப்புக்கு இளைஞர்களில் ஒரு சாரார் ராணுவத்தேர்வைத்தான் நம்பி இருக்கிறார்கள். இப்போது ஒப்பந்த அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவது துவங்கினால் இதில் வேலை உத்தரவாதம் இல்லை என்ற நிலை உருவாகிறது. ராணுவப்பணியை ஒரு பெருமையான வாழ்வாதாரம் என்று நம்பி வளரும் லட்சக்கணக்கான இளைஞர்கள் பாதிப்புக்கு உள்ளாகும் ஆபத்தும் இருக்கிறது
நமது ராணுவத்தைச் சம்பளச் செலவுகளைக் குறைத்து தொழிநுட்பங்களின்உதவியுடன் அதிநவீனப்படுத்த வேண்டும் என்பதில் எவருக்கும் மாற்று கருத்து இருக்கமுடியாது. ஆனால், அதிரடியாக, எழப்போகும் எதிர்மறை விளைவுகளைக் கணிக்காமல் அறிவித்தால் இளைஞர்களின் எதிர்காலத்தைக் கேள்விக்குறியாகிவிட்டது இந்த திட்டம். அதனால் தான் பல முன்னாள் மூத்த ராணுவ அதிகாரிகளும் இந்தத் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார்கள்.
விவசாயச் சட்டம், குடியுரிமைச்சட்டம் போல, காலம் கடந்து இல்லாமல் இந்த திட்டத்தை உடனே திரும்பப் பெற்று நாட்டு இளைஞர்களின் நம்பிக்கையைப் பெறவேண்டிய கட்டாயத்திலிருக்கிறது இந்த அரசு. தவறினால் அக்னிபத் திட்டம் இந்தியாவை நிஜமாகவே நெருப்பு சூழ்ந்த பாதைக்குத்தான் கொண்டு சென்றுவிடும்.