பா.ஜ.க.விற்குத்தான் நிதி கொட்டுகிறது

பா.ஜ.க.விற்குத்தான் நிதி கொட்டுகிறது
Published on

? பிராமணனாக வாழ ஆசைப்படும் ஒரு பிற்பட்ட வகுப்பில் பிறந்தவனுக்கு தராசாரின் அறிவுரைகள்…?
– ஜோஷ், அயன்புரம்

! இந்தக் கேள்வி புத்தரிடம் கேட்கப்பட்டபோது அவர் சொன்ன பதில் இது. "பிறவியினால் யாரும் பிராமணரும் ஆவதில்லை; தீண்டத்தகாதவரும் ஆவதில்லை. இடைப்பட்ட நிலைகள் என்றும் ஏதுமில்லை. பிராமணர் என்பதை ஒரு உயர்நிலை எனக் கொண்டோமானால் உயிர்க் கொலை புரியாது, அற வாழ்வை மேற்கொள்கிற யாரும், ஆம் யாரும் பிராமணர் ஆகலாம்."

இந்த வார்த்தைகள் , கௌதம புத்தர் ஞானம் பெற்ற  போதி மரம் இருக்கும் இடத்தில் அமைந்துள்ள மஹாபோதி கோயிலில் பொறிக்கப்பட்டிருக்கிறது.

? தி.மு.க. ஆட்சியில் மதவாதிகளின் ஆதிக்கம் அதிகரித்து வருவதாக அர்ஜூன் சம்பத் கூறியிருக்கிறாரே…?
 எம். பானுமதி, மாங்குப்பம்

! நாத்திகர்களின் கூடாரம் தி.மு.க.  என்று வர்ணித்த இவர், இத்தகைய ஆதிக்கத்தால்  இன்று  மகிழ்ச்சி அல்லவா அடையவேண்டும். 

? மேக தாதுவில் அணையைக் கட்டிவிடுவார்களா?
– எஸ்.மோகன், கோவில்பட்டி

! கவலையே படாதீர்கள்.  அடுத்த 10 ஆண்டுகளில் வரும் இரண்டு மாநில தேர்தல்களுக்கு இரண்டு மாநிலங்களிலும் அரசியல்வாதிகளுக்கு இதுதான் பேசுபொருள். அதனால்,  அவ்வளவு எளிதில் இந்தப் பிரச்னையை முடித்துவிட மாட்டார்கள்.

? செயற்குழு , பொதுக்குழு என்ன வித்தியாசம்?
– ஆ. மாடக்கண்ணு, பாப்பான்குளம்

! இபிஎஸ் குழு ஓபிஎஸ் குழுக்களுக்குள்ள வித்தியாசம்தான்.

? சுவிஸ் வங்கியில் 14 ஆண்டுகளில் இல்லாத அளவு  இந்தியர்களின் முதலீடு  அதிகரித்துள்ளது சொல்வதென்ன?
– ஆ. மாடக்கண்ணு, பாப்பான்குளம்

! கறுப்பு பணத்துக்கு சரியான கணக்கு எழுதத் தெரிந்தவர்கள் அதிகமாகிவிட்டனர்.

? 'அக்னிபத்' திட்டம்  பயன் தருமா?
– நா. குழந்தைவேலு, , சென்னை-600129

! பயன் தரும், யாருக்கு என்பதுதான் கேள்வி.

? "ஆட்சி மாறியதும் முதல் கைது செந்தில் பாலாஜிதான்" என்று அண்ணாமலை கூறியிருப்பது எதைக் காட்டுகிறது?
– ஜெ. கிருஷ்ணதேவு, புதுச்சேரி – 605107

ஆட்சி மாறிவிடும் என்று அண்ணாமலையின் நம்பிக்கையை.

? "மத்திய அரசின் துறைகளில் அடுத்த ஒன்றரை ஆண்டில் 10 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும்" என பிரதமர் மோடி அறிவித்திருக்கிறாரே…?
– இராமதாசு, ரங்கநாதபுரம்

! அரசுத் துறையில்  அதிகரித்து வரும்  செலவினங்களைக் குறைக்கும் வழிகளில் ஒன்றாக "அரசுத் துறைகளில்  பணியாளர்கள்  எண்ணிக்கை  சீரமைக்கப்பட்டும்" என்றும் இந்தப்  பிரதமர்தான் சொல்லியிருக்கிறார்.

? சமீபத்தில் வியந்து ரசித்து மகிழ்ந்த நவீன உயர் தொழில்நுட்பம்?
– நெல்லை குரலோன், பொட்டல்புதூர்

! நம்ம வீட்டு மாடியில் இருக்கும்  படுக்கை அறையிலேயே சில சமயம் வைஃபை (wifi) வேலை செய்யாதபோது, விமானத்தில் வேலை செய்கிறது.  தெளிவாகவுமிருக்கிறது. (படம் கூட பார்க்கமுடிகிறது !)  டவர்களே இல்லாத கடல் பகுதியின் மேலே  பறக்கும் போது கூட பிரமாதமாக வேலை செய்கிறது.

"எல்.கே.ஜி.  வகுப்புகள் இனி கிடையாது" என்றும், பின்னர்  "இருக்கும்" என்றும் பல்டி அடித்திருக்கிறாரே பள்ளித்துறை  அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி?
– அ.ச.நாராயணன், பாளையங்கோட்டை

! அது மட்டும்தானா? சென்ற ஆட்சியிலிருந்த பள்ளித்துறை  அமைச்சர் அடித்த பல்டிகளை மிஞ்சிவிடுவார் போலிருக்கிறது.

? பா.ஜ.க.  ஆளும் மாநிலங்களில் லஞ்சம் ஒழிந்துவிட்டதா?
– மலர்விழி தங்கராஜ், கோவில்பட்டி

! அந்தக் கட்சிக்காரர்கள் அப்படித்தான்  சொல்லுகிறார்கள்.  ஆனால், கவனிக்க வேண்டிய ஒரு விஷயம்,  அரசியல் கட்சிகளிலேயே  பா.ஜ.க.விற்குத்தான் நிதி கொட்டுகிறது. இந்தியாவின் பணக்கார கட்சியான பா.ஜ.க.விற்கு அவர்கள் ஆட்சியில் இல்லாத மாநிலங்களிலும் பெருமளவில் நன்கொடைகள் கிடைக்கின்றன. அண்மையில் தமிழகத்தின் லாட்டரி நிறுவனம் ஒன்று 100 கோடி நன்கொடை வழங்கியிருப்பதாக  வந்த செய்திகளைப் பார்த்திருப்பீர்களே?

? "பேன் இந்தியா படங்கள்" என்றால் என்ன?
– ஆரோக்கிய தாஸ், கூடலூர்

! பிறமொழி டப்பிங் என்ற சொல்லின் புதிய அவதாரம். முன்போல வெற்றிகரமாக ஓடிய பிற மொழிப் படங்களை  மொழிமாற்றம் செய்யாமல்  கோடிகளைக் கொட்டி எடுக்கும் படங்களை எடுக்கும்போதே  மேலும் சில கோடிகளைச் செலவழித்துப் பல மொழிகளில் டப்பிங் செய்து ஒரே நேரத்தில் இந்தியாவின் பல பகுதிகளில் ரீலிஸ் செய்யப்படுவதை சினிமாக்காரர்கள் மொழியில்  பேன்(PAN) இந்தியப்படம் என்கிறார்கள். இதில் மிகப்பெரிய வியாபாரத் தந்திரம் இருக்கிறது. எல்லா மொழியிலும் முதல் ஒரு வாரம் படம்  பார்த்தவர்கள் படம் மொக்கை என்று சொன்னாலும்கூட  கல்லா நிரம்பி விடும்.

? போலி நிதி நிறுவனங்களின்  மோசடிகளை ஒழிக்க முடியாதா?
– சங்கர மகாதேவன், பாலக்காடு

! ஒரு நிதி சேர்க்கும் நிறுவனம் மக்களிடம் டிப்பாஸிட்கள் பெறுவதற்கு  ரிசர்வ் வங்கியில் கட்டாய  அனுமதி வாங்க வேண்டும். அந்த அனுமதி வெளிப்படையாக விளம்பரங்களிலும் மற்ற ஆவணங்களிலும் தெளிவாக சொல்லப்பட்டிருக்க வேண்டும். அதை மீறுபவர்களை கிரிமினல் சட்டத்தின் கீழ் தண்டிக்க வழி வகைகள் செய்தால் இந்த மோசடிகள்  பெருமளவில் குறையும். இப்போது இருக்கும் விதிகளில் இருப்பது  வெறும் ஓட்டைகள் இல்லை. திறந்துவைக்கப்பட்ட கதவுகள்.

? மிருகங்களும் நம்மைப்போலத் தும்பல்  போடுமா?
– ராஜன், திருச்சி

! தும்மல், என்பது  காற்று தவிர வேறு எந்த வெளிப் பொருளும் மூக்கில் நுழையும்போது , நமது மூக்கு அதை அனுமதிக்க மறுக்கிறது. அதற்கான அனிச்சை செயல்தான் தும்மல். நுரையீரலில் சளி தங்காமல் வெளியேற்றும் போதும் தும்மல் வருகிறது. .  இரண்டு நாசித்துவாரங்களிருக்கும் மிருகங்களும் தும்மல் போடும்… ஆனால் தும்பல்  போடுவது ஒரு  கெட்ட சகுனம்  என்று எண்ணாது. ஏனென்றால் சில மிருகங்களுக்குத் தும்பல் என்பது காதல் உட்பட  செய்திகளை வெளிப்படுத்தும் மொழியாகவும் இருக்கிறது.

Loading content, please wait...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com