
1980ஆம் ஆண்டில் ஆசிரியர் கல்கி ராஜேந்திரன் மூலமாக பத்திரிகைதுறையில் அறிமுகமானவர் எஸ். சந்திர மௌலி. அன்று தொடங்கிய பேனாப் பயணம் கல்கியோடு இன்றும் தொடர்கிறது என்பதில் அவருக்கு மட்டுமில்லை கல்கிக்கும் பெருமை. இந்த நாற்பதாண்டுகளில் பேட்டிகள், கட்டுரைகள், கவர் ஸ்டோரிகள், நகைச்சுவை என வெரைட்டியாக ஆயிரக்கணக்கான படைப்புகள்! அவற்றில் சாமானிய ஆட்டோக்காரரின் பேட்டியும் உண்டு; மக்கள் ஜனாதிபதி அப்துல் கலாமுடனான சந்திப்பும் உண்டு. சந்திர சேகர், வாஜ்பாய், வி.பி. சிங், ஐ.கே.குஜ்ரால், தேவ கௌடா, மன்மோகன் சிங் ஆகிய இந்தியப் பிரதமர்கள், என்.டி.ராம ராவ், ஜோதி பாசு, உமா பாரதி போன்ற மாநில முதல்வர்கள் என இவர் சந்தித்த வி.வி.ஐ.பி.க்களின் பட்டியல் நீளமானது.
கல்கியின் மாவட்ட சிறப்பிதழ்கள், மாநில சிறப்பிதழ்கள் மட்டுமின்றி, கடல் கடந்து மலேசியா சிறப்பிதழுக்கும் பயணம், பார்வை, படைப்பு என பங்களிப்பு செய்தவர். இவர் கல்கியில் எழுதிய டைரக்டர் ஸ்ரீதர் மற்றும் நடிகர் நாகேஷின் வாழ்க்கை அனுபவத் தொடர்கள் பின்னர் புத்தகங்களாக வெளியாகி வாசகர்களிடையே பெரும் வரவேற்பினைப் பெற்றவை. நரேந்திர மோடி குஜராத் முதல்வராக இருந்தபோது, குஜராத்தில் விரிவான பயணம் மேற்கொண்டு, "குஜராத் டுடே" என்ற தலைப்பில் கல்கியில் சிறப்புக் கட்டுரைகள் எழுதியவர்; நரேந்திர மோடியை சிறப்பு பேட்டி கண்டவர்.
கல்கியில் இவர் எழுதிய பெண் சிசுக்கொலை பற்றிய கவர் ஸ்டோரிக்காக "லாட்லி விருது"ம், ரோட்டரி சங்கத்தின் பத்திரிகையுலக சாதனையாளர் விருதும் பெற்றவர்.
அவரது இந்த நீண்ட பயணத்தில் – தான் கற்றது, பெற்றது, சந்திப்புகள், ஆச்சரிய அனுபங்கள் அனைத்தையும் நம்மோடு வரும் வாரங்களில் பகிர்ந்துகொள்கிறார்.