இந்த நாடகம் தமிழ் நாடக உலகத்திற்கு மிகப்புதிது.

இந்த நாடகம் தமிழ் நாடக உலகத்திற்கு மிகப்புதிது.
Published on
தியேட்டர் மெரினாவின் ஆங்கில தமிழ் நாடகம்

நெவர் ஆட் ஆர் ஈவன் (NEVER ODD OR EVEN)

பி.எஸ் பிரபாகர்

ரு பேப்பர் ரிப்பனை எடுத்துக்கொண்டு நடுவில் ஒரு ட்விஸ்ட் வைத்து இரு முனைகளையும் ஒன்றோடொன்றாக ஒட்டியது தெரியாமல் ஒட்டி விட்டால் அதற்குப் பெயர் மொபியஸ் லூப் என்பார்கள். "ஆதி அந்தம் இல்லாத அருட்பெருஞ்சோதி" மாதிரி!   ஒரு எறும்பை அதன் மேல் விட்டால், எவ்விடத்திலும் அகலமுனைகளை கடக்காமல் அதே சமயம் அந்த ஸ்டரிப்பின் இரண்டு பக்கத்திலும் ஊறி, புறப்பட்ட இடத்திற்கே வந்து சேரும்! காட்சிப்பிழை மாதிரி தோன்றக்கூடிய "மறுபடியும் முதல்லேருந்தா?" என்ற வடிவேலு டயலாக்குக்கு (நாடகத்திலும் எடுத்தாளப்பட்ட) பொருந்தக்கூடிய ஒரு ஜானரில் எல்லோராலும் சுவாரசியமாக கதை எழுதிவிட முடியாது! கத்தி மேல் நடப்பது மாதிரி அது!

(ஆயிரத்தி தொள்ளாயிரத்து எழுபதுகளிலேயே சுஜாதா எழுதிய "மன்னிக்கவும், இது கதையின் ஆரம்பமல்ல என்னும் சிறுகதை இந்த  மோபியஸ் லூப் சித்தாந்த வகையைச் சார்ந்தது!). கூடவே குரோனோஸெப்ஷன் (Chronoception) என்னும் பரிமாணத்தாக்கம் கொண்ட காலக்கணிப்பு போன்ற சிக்கலான வகையில் கல்கியில் தொடர்ந்து கதை, கட்டுரைகள் எழுதி வரும் நண்பர் ஜெயராமன் ரகுநாதன் கத்திமேல் நடந்திருக்கிறார், சிறப்பாக!

ஜெயராமன் ரகுநாதன் எழுதி தியேட்டர் மெரினாவின் பத்தாவது படைப்பாக வெளி வந்திருக்கும் ஆங்கில தமிழ் நாடகம் NEVER ODD OR EVEN, கடந்த டிசம்பர் 18 மற்றும் 19ஆம் தேதி அல்லையன்ஸ் ஃபிரான்கையில் நடந்தது.

Never Odd or Even – திருப்பிப்போட்டாலும் அதே வாக்கியமாக வரும் palindrome ஜாதியைச் சேர்ந்த நாடகத் தலைப்பு. அதுவே ஒரு மொபியஸ் லூப் தான்!  குரங்கு முகமும் இல்லாத குரங்குத்தனமும் இல்லாத வாலி – சுக்ரீவன் போரிலே ஆரம்பிக்கிறது நாடகம். ராம பாணத்தின் மகிமை அவருக்கே புரியாமல், ராமாயணத்தில் கன்ட்ரி விட்டு கன்ட்ரி தாண்டும்  த்ரிகால ஞானி ஹனுமன் காலம் விட்டு காலம் தாண்டி இருபதாம் நூற்றாண்டுக்கு பிட்சா டெலிவரி பாயாக – நினைத்த மாத்திரத்தில் தரிசனம் கொடுத்து சாஃப்ட்வேர் பிரச்னையை சரிசெய்து மீண்டு வந்து – மீண்டும் சண்டை, மீண்டும் ராம பாணம், மீண்டும் ராமருக்கு குழப்பம் – இப்படி அகண்டமாக கதை போகக்கூடிய சாத்தியத்தோடு, மேலே சொன்ன வடிவேலுவின் லைனுடன் முடிகிறது. என்ன? முடிகிறதா? இல்லை இன்னொரு ஆரம்பமா?

என்ன ஒரு அபார (சற்று விபரீதமானதும் கூட!) கற்பனை என்ற வியப்போடு ரசிக மகாஜனங்களை பலத்த கரவொலி எழுப்பச் செய்த கதாசிரியர் – இயக்குனர் – நவரத்தின நடிகர் குழாம் டீமுக்கு ஒரு மனம் திறந்த சபாஷ்!

கொஞ்சம் புராணம், கொஞ்சம் விஞ்ஞானம், அளவான காமெடி, அமைதியான பின்னணி இசை என்று கலந்து கட்டி ஒரு அதகளம்!

அது சரி, அந்த லேப்டாப் தான் சற்று நெருடியது. 1990 காலகட்டம் என்பது லேப்டாப்களின் ஆரம்பம். அப்போதெல்லாம் அவையெல்லாம் ஒரு தினுசாக இருக்கும். மைக்கேல் மதன காமராஜன் படத்தில் கமல் கொண்டுவருவாரே – ஒரு ப்ரீஃப் கேஸ் மாதிரி. நாடகத்தில் அந்த பெண் உபயோகிப்பது மாதிரி ஹெப்பாக எல்லாம் இருக்காது.

அந்த பெண், ஹனுமன் உதவியுடன் டைம் ட்ராவல் செய்து 1990 இலிருந்து 1991 போவது சரி. ராமாயண காலத்திற்கும் போய், யார் கண்ணிலும் தென்படாமல், ஒரு கேரக்டரை மட்டும் தொட்டுப்பார்ப்பது என்ன லாஜிக் என்று புரியவில்லை!

அரசியல் நையாண்டி கலந்த மற்றும் 'அண்ணாத்த' வில் pun தொனித்த ஆரோக்கியமான டைமிங்குடன் கூடிய நகைச்சுவை வசனங்கள் மற்றும் மிகவும் பொருத்தமாக ஹனுமான் சாலிஸா ஸ்லோக மெட்டை பின்னணியில் இழைத்த இசை, ஆங்கிலம் தமிழ் என்று இரண்டு மொழிகளையும் சந்தர்ப்பத்துக்கு தேவைப்பட்ட அளவில் உபயோகித்த நேர்த்தி – இவை அனைத்தும் நிறைந்த இந்த படைப்பு, தமிழ் நாடக உலகில் தியேட்டர் மெரினாவை இன்னும் ஒரு படி மேலே எடுத்துச்செல்கிறது.

நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் பேரன் துஷ்யந்த்  முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அவரின் உடல் மொழிகளில் அந்த சிங்கத்தின் சாயல் வெளிப்பட்டது நெகிழ்ச்சியாக இருந்தது. ஆங்கிலமும் தமிழும் கலந்து பேசி எளிய உரையாடலில் நடித்த அனைவருமே (சாந்தாராம், சிவராம், தீப்தி, பிரேம், ஸ்ரீஹரி, பிரசன்னா, லதா வெங்கட், விதூர்) சிறப்பாக செய்திருந்தனர்.

செட்டோ ஜோடனையோ இல்லாமல் லைட்டிங் உபயத்தில் மிகச்சிறப்பாக டைரக்ட் செய்திருந்தார் கிரிதரன். சிக்கலான வளைவுகள் கொண்ட இந்த நாடகத்தை சிறப்பாகத் தயாரித்திருந்தனர் தியேட்டர் மெரீனாவின் கே ஏ ஸ்ரீனிவாசனும் கீர்த்தி மாரியப்பனும். ஒரு மணி நேரத்தில் விறுவிறுவென சம்பவங்கள் நடந்து முடிந்த இந்த நாடகம் தமிழ் நாடக உலகத்திற்கு மிகப்புதிது.

ஜெயராமன் ரகுநாதன் நாடக ஆரம்பத்தில் பேசும்போது  அடக்கத்துடன் ஆயிரம் பொன்னோ அல்லது அரைச்செங்கலோ எதுவாயினும் விமர்சிக்கலாம் என்று சொன்னார். ஆசை இருக்கிறது ஆயிரம் பொன் கொடுக்க. (விலைவாசி இருப்பில், அரைச்செங்கலுக்குக் கூட வழியில்லை!)

Loading content, please wait...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com