
யார் என்ன
சமாதானம் செய்தும்
விடாமல் அழுதுகொண்டேயிருக்கிறது
அந்தக் குழந்தை.
திடீரென இறந்துபோன
அப்பாவின் சடலத்தை
பார்த்து அழுகிறது என்கிறார் ஒருவர்,
ஏதும் புரியாமல்
அப்பாவிற்கு அருகே
சித்தபிரமை பிடித்தது போல்
அமர்ந்திருக்கும் அம்மாவை
பார்த்து அழுகிறது என்கிறார் இன்னொருவர்,
பசியால்தான் இப்படி
அழுதுக்கொண்டே இருக்கிறது
என்கிறார் ஒரு அனுபவஸ்தர்,
கீழே விழுந்து உடைந்து போன
பொம்மையின் மேல் நிலைக்கொண்டுள்ள
குழந்தையின் கண்களையும்
உடைந்த பொம்மையையும்
கடைசிவரை கவனிக்கவே இல்லை யாரும்…