சுகிரா

சுகிரா
Published on

சிறுகதை                                                                    ஓவியம்: தமிழ்

– ஜெயந்தி நாராயணன்

யிலின் டட டட டட டட சத்தம் கிச்சாவுக்கு உற்சாகத்தைக் கொடுத்தது. காவேரிப் பாலத்தைத் தாண்டும் போதே பரபரவென ஆகிவிட்டது. இன்னும் சற்று நேரத்தில். ஸ்ரீரங்கம் ஸ்டேஷன் வந்துவிடும். பெரியப்பாவும், சுந்துவும் கண்டிப்பா ஸ்டேஷனுக்கு வருவார்கள் என்ற எதிர்பார்ப்பு கிச்சாவின் கோலிக் குண்டு கண்களில் தெரிகிறது. கிச்சாவைவிட இரண்டு வயது மூத்த சுந்துதான் கிச்சாக்கு ஹீரோ. அவன் விடற எல்லா வீர சாகசக் கதைகளையும் வாயப் பொளந்துண்டு கேட்டுக் கொண்டு இருப்பான்.

"டேய் நில்லுடா ரயில் நிக்கட்டும். இந்த பெட்டியப் பிடி, இடுப்பில் அம்முவை இடுக்கியபடி சரோ கத்தியதைக் கேட்காமல், கதவுகிட்ட இருந்து வெளியே எட்டிப் பார்த்தான். பெரியப்பா மட்டும்தான் தெரிந்தார். சுந்துவக் காணோம். ரயில் நின்னவுடன் வேகமா குதிச்சு பெரியப்பாகிட்ட ஓடி,

"சுந்து வரலியா"

அவனுக்கு பதில் சொல்லாமல், தோளில் மாட்டிய பை, இடுப்பில் குழந்தை, கையில் பெட்டி என திணறிக் கொண்டிருக்கும் சரோவை நோக்கி நகர்ந்தார் கோபாலன்.

"வாம்மா. ப்ரயாணம் சிரமமில்லாம இருந்ததா"

"வயசு பத்தாச்சு.  ஒரு ஒத்தாச பண்றதா பாருங்கோ அத்திம்பேர். வண்டி நின்ன உடன ஓடி வந்துட்டான்."

"சரி விடும்மா குழந்ததானே. ஊர்ல மாப்ள, மாமியார், மாமனார்லாம் செளக்கியமா…"

"எல்லாரும் செளக்கியம். இந்த பைய ஒரு நிமிஷம் பிடிங்கோ. தோள்பட்ட விட்டு போச்சு ரெண்டு நிமிஷத்ல."

"பெரீப்பா எங்க சுந்துவக் காணோம்?"

"அவன் ஏதோ வேலை இருக்குன்னு வரலேன்னுட்டான்."

கிச்சாவுக்கு ஏமாற்றம்.

வீட்டை நெருங்கும் போதே ஒரே சிரிப்பு சத்தம். அதுவும்  கிச்சாவுடைய பெரியம்மாவின் சிரிப்பு கனமாக ஆண் சிரிப்பது போல இருக்கும். பெரியம்மா, சுந்துவோட அக்கா உஷா, கான்பூர்ல இருந்து வந்த ராஜி சித்தி, எல்லாரும் திண்ணையில் சிரித்தபடி ஏதோ பேசிக் கொண்டிருக்க, அங்கு சுந்து இல்லை.

"வாடி சரோ, ஆத்ல எல்லாரும் எப்டி இருக்கா…"

தன்னை வரவேற்ற சகோதரிகள் சங்கமத்தில் சரோ கலக்க, உஷா அம்முவை தூக்கிக் கொண்டு வாசல் பக்கம் போக, கிச்சா சுந்துவைத் தேடி உள்ளே போனான்.

கூடத்தில் உள்ள ஒரு அறையில் விளக்கு எரிந்து கொண்டிருந்தது.  சுந்து ஒரு ஸ்டூல் மேல ஏறி பீரோ மேல இருந்த ஒரு பெட்டியை எடுக்க முயன்று கொண்டிருந்தான்.

"சுந்து சுந்து" என கிச்சா குரல் கேட்டவுடன், வேகமாக கீழே இறங்கி வெளியே வந்தவன்,

"டேய் என்னடா, இன்னும் வார் ட்ரவுசர் போட்ருக்க"

கிச்சாவுக்கு வெட்கத்தில் முகம் சிவந்தது. "தீபாவளிக்கு வார் இல்லாமத்தான் வாங்கிண்டேன்.  இது பழசுடா.  ட்ரெயின்க்காக போட்டுண்டேன்"

"சரி வாடா. நம்ம இடத்துக்கு போகலாம்" என்றபடி அவனை இழுத்துக் கொண்டு மாடிக்கு ஓடினான்.

இருவரும் மொட்டை மாடிக்குப் போய் அங்கிருந்த சிறிய கட்டைச் சுவற்றில் ஏறிக் குதித்து பக்கத்து வீட்டின் பின் புறம் மறைவாக இருந்த இடத்தில் போய் அமர்ந்தனர்.

காலை இருள் பிரிந்து மெல்லிய வெளிச்சம் பரவ ஆரம்பித்து இருந்தது. மார்கழி மாதத்தின் சில்லிப்புக்கு கையை குறுக்க கட்டியபடியே,

"ஏண்டா நீ ஸ்டேஷனுக்கு வரல. நீ வருவேன்னு எவ்வளவு ஆசையா இருந்தேன் தெரிமா"?

"அத விடுடா. உன்னய லீவுக்கு வரச்ச பைனாகுலர் எடுத்துண்டு வரச் சொன்னேனே, கொண்டு வந்தியா."

"இல்லடா அப்பா தர மாட்டேனுட்டா. ஸ்ரீரங்கத்துல அத வச்சுண்டு என்ன பண்ணப் போற? முழுப் பரீட்சை லீவுக்கு கொடைக்கானல் கூட்டிண்டு போறேன். அப்ப கொடுக்கறேன்னு சொல்ட்டா"

சுந்துவின் பார்வையில் நட்பு குறைந்தது. விநாடிகளில் சுதாரித்துக் கொண்டு, அது ஒண்ணும் பொருட்டில்லை என்ற பாவத்துடன்,

"எங்க டெல்லி அத்தை ஆத்துக்கு நானும் உஷாக்காவும் மே மாசம் போகப் போறோம்"

"டெல்லியா.. அது ரொம்ப தூரம்ல. நீங்க ரெண்டு பேரும் தனியாவா போறேள்"

"ஆமா. என்ன பயம்? அப்பா வந்து மெட்ராஸ்ல ட்ரெயின் ஏத்திவிடுவா. அங்க அத்திம்பேர் ஸ்டேஷனுக்கு வந்துடுவா. தவிர எனக்குத்தான் ஹிந்தி தெரியுமே"

"எப்டி? ஸ்கூல்ல ஹிந்தில்லாம் சொல்லித் தருவாளா?

"இல்லடா. இங்க கனகா டீச்சர்ட்ட  ப்ரைவேட்டா கத்துக்கறேன். ப்ரவேஷிகா பாஸ் பண்ணிட்டேன் தெரிமா"

"எனக்கும் சொல்லித் தரியாடா"

"அதெல்லாம் கஷ்டம். நீ லீவுக்கு வர ஒரு வாரத்ல எல்லாம் கத்துக்க முடியாது. கொடைக்கானல்கு தமிழ் போறும்.

ஊருக்குப் போன உடன அப்பாட்ட சொல்லி தன்னையும் ஹிந்தி க்ளாஸ்ல சேத்துவிடச் சொல்லணும்னு கிச்சா முடிவு பண்ணினான்.

அவர்கள் பேசிக் கொண்டிருக்கும் போது, அடுத்த வீட்டு ராஜுவும் அங்கே வர, கார்த்திகை அன்று யாருக்கும் தெரியாம மாடில ரெண்டு பேரும் சொக்கப்பானை கொளுத்தப் போய், ராஜுவோட அத்தை காயப் போட்டு எடுக்காம இருந்த புடைவைல நெருப்பு பத்திக் கொண்டு, ரெண்டு பேருக்கும் செம்ம அடி கிடைத்ததை சிரித்துக் கொண்டே சொன்னார்கள். கிச்சா கண்கள் விரிய அவர்கள் சொல்வதை கேட்டுக் கொண்டிருந்தான்.

ரெண்டு பேரும் கீழ வந்தப்ப,

"வந்தது வராததுமா எங்கடா அவன இழுத்துண்டு போன" என்ற பெரியம்மாவின் கேள்விக்கு பதில் அளிக்காமல், "காப்பி கொடும்மா" என்றான் சுந்து.

காப்பியக் குடிச்சுட்டு, குளிச்சு, ட்ரெஸ் மாத்திண்டு ரெண்டு பேரும் வெளிய கெளம்பினார்கள்.

"அம்மா, வெங்குவாத்ல போய் விளையாடிட்டு வரோம்."

"அவாத்லயே இருக்கணும்.  வேற எங்கேயும் ஊர் சுத்தப் போகக் கூடாது.  பத்து மணிக்கு தளிகை ஆயிடும்.  சாப்ட வந்துடுங்கோ, தேட வைக்காம."

பதில் ஏதும் சொல்லாமல் ரெண்டு பேரும் வெளியே வந்ததும் ராஜுவும் சேர்ந்துகொள்ள, வடக்கு கோபுர வாசல் வழியா கோவில்ல நுழைந்து, தெற்கு வாசல் வழியா வெளியே கடை வீதிக்கு வந்த உடன்,

"என்னடா, இங்க கடைதானே இருக்கு?  போன தடவ வெங்குவாத்துக்கு வேற வழில கூட்டிண்டு போனியே" என்ற கிச்சாவுக்கு.

"பேசாம வா என் கூட" என்று பதில் சொன்ன சுந்து, ராஜுவிடம்,

"வெங்குவாத்துக்கு போறோம்னுதானே சொல்லிட்டு வந்த?"

"ஆமாண்டா"

மொட்டக் கோபுரத்துக்கிட்ட வெங்குவும் இன்னும் இரண்டு பசங்களும் நின்றுக் கொண்டிருந்தார்கள்.

"என்னடா, ஜக்கு வரேன்னு சொன்னானே வரலையா?"

"வருவான், அஞ்சு நிமிஷம் காத்திருந்து பாப்போம்."

"எங்கடா போறோம்" என நச்சரித்த கிச்சாவை

"சும்மா நை நைன்னாம கூட வா"

சிறிது நேரத்தில் அங்கு வந்த ஜக்குவுடன் அனைவரும் நேராக நடக்க ஆரம்பித்தனர்.

அவர்களுடைய வேகத்துக்கு கிச்சாவால் ஓடித்தான் ஈடு கொடுக்க முடிஞ்சது.

கடைசியில் அவர்கள் வந்து நின்ற இடத்தைப் பார்த்து கிச்சா,
"ஹை கொள்ளிடம்"

"டேய் இது அம்மா மண்டபம் டா.  இங்க தண்ணி எவ்வளவு இருக்கு.  அங்க பாரு உச்சிப் பிள்ளையார் கோயில் தெரியறது."

கூட்டம் அதிகமில்லாமல் இருந்தது. அங்கொன்றும் இங்கொன்றுமாக சிலர் இருந்தனர்.  வெளியே ஒரு சின்ன டீக்கடை. நாலஞ்சு பேர் டீ குடித்துக் கொண்டிருந்தனர்.

"தண்ணில இறங்கலாமாடா " – இது சுந்து

"கால மட்டும் நனைக்கலாம்.  துணி ஈரமானா மாட்டிப்போம் – இது வெங்கு.

மெதுவாக தண்ணீரில் காலை வைத்தனர். சுந்து கொஞ்சம் கொஞ்சமாக முன்னேற, நீர் முட்டிக்கு மேல வந்துடுத்து.  மற்றவர்களையும் வாங்கடான்னு கூப்ட,  வெங்கு மட்டும் சற்று முன்னே வர, திடீரென தண்ணீர் மட்டம் அதிகரிக்க பயந்து திரும்பிய சுந்து பின்னால் வந்த வெங்குவை கவனிக்காமல் தள்ளிவிட்டு அதே வேகத்தில் அவனும் விழ, எழ முடியாமல் இருவரும் தண்ணீரில் அடித்துச் செல்ல ஆரம்பித்தபோது, கரையில் இருந்தவர்கள் அலற ஆரம்பித்தனர் சுந்து, வெங்கு வென.

அடுத்த நிமிடம், தன் இரு கைகளிலும் இருவர் முடியையும் பிடித்து இழுத்தவாறு, படித்துறையை நோக்கி வந்தவர்,

"ஏம்ப்பா பொடிப் பசங்களா சேந்து எங்கிட்டுப்பா வந்தீங்க. நா மட்டும் அங்க இல்லேன்ன ரெண்டு பேரும் ஆத்தோட போயிருப்பீங்க.  ஒழுங்கா வீடு போய்ச் சேருங்க.

தெற்கு வாசல் வரும் வரை யாரும் யாருடனும் பேசவில்லை.  போகும் போது இருந்த உத்சாகம் வடிந்து முகத்தில் பயம் சூழ்ந்திருந்தது.  ஒரு வேளை ரெண்டு பேரும் தண்ணீல போயிருந்தா.

ஆத்துக்கு வந்தும் ரெண்டு பேரும் பேஸ்தடிச்ச மாரி இருந்து அன்னிக்கி பூரா வெளியே எங்கயும் போகாததுல பெரியம்மாவிற்கு சந்தேகம்.

"என்ன ரெண்டு பேரும் வால சுருட்டிண்டு ஆத்லேயே இருக்கேள்.  என்ன சமாசாரம்?"

ரெண்டு பேரும் ஒரே குரல்ல, "ஒன்ணுமில்லயே"

எல்லாம் ஒரு நாள்தான்.

அடுத்த நாள் முதல் ஊருக்கு போகும் வரை, கார்த்தால, அன்றைய திட்டம் மொட்டை மாடி ரகசிய இடத்தில்  விளக்கப்படும். சாப்பாட்டுக்கு பிறகு வெங்கு அல்லது ஜக்குவாத்துக்கு போறதா சொல்லிட்டு கொட்டம்தான்.  ரகசிய இடத்துக்குப் பெயர் "சுகிரா" என்று சுந்து சொன்னபோது கிச்சா வாயைப் பொத்திக்கொண்டு சிரித்தான்.  சிறுவர் காமிக்ஸில் ஒரு தொடரில் வரும் இடம் அது. அங்குதான் கொள்ளையர்களுடைய சதியாலோசனையும், ரகசியக் கூட்டமும் நடக்கும்.

உடனே ராஜு, "கிச்சா இன்னொன்னு கவனிச்சியா சுகிரா, சுந்து, கிச்சா, ராஜு" என்றவுடன் கிச்சாவுக்கு மேலும் சிரிப்பு.

பள்ளி முடியும் வரை வருடா வருடம், அந்தந்த வயசுக்கு ஏத்த மாதிரி இவர்கள் லீலை தொடர்ந்தது. சுகிரா, மொட்டை மாடிக்கு பதிலாக வேற வேறு இடத்துக்கு மாறியது.

கிச்சாவுடைய அப்பாவுக்கு, மும்பைக்கு பணி மாற்றல் ஆனதால், அவன் கல்லூரி படிப்பை, ஸ்ரீரங்கத்தில் பெரியம்மாவாத்தில் இருந்து படிப்பதற்கு ஏற்பாடு ஆகியது.

சுந்து கிச்சாவுக்கு ரெண்டு வருஷம் சீனியர் மட்டுமல்லாது ஒரு பாடிகார்டாய்,  முதல் வருஷ ராகிங்ல இருந்து காப்பாத்தினது, மேலே என்ன படிப்பது என்ற ஆலோசனை,  பிறகு ஹேமாவை கிச்சா காதலித்து வீட்டில் அதற்கு எதிர்ப்பு வந்த போது, எல்லார்கிட்டயும் பேசி, கல்யாணத்துக்கு சம்மதிக்க வச்சது என்று, கிச்சாவின் வாழ்வின் எல்லாமே சுந்துவாகிப் போனான்.

****** ****** ******

ட டட டட டட… ரயில் கொள்ளிடம் பாலத்தைக் கடந்தது.  கிச்சாவின் உதட்டில் மெல்லிய புன்னகை.  இதோ ஸ்ரீரங்கம் வந்தாச்சு.  தன்னுடைய சிறிய தள்ளும் பெட்டியை எடுத்துக்கொண்டு மெதுவாக கீழே இறங்கியவர், பெட்டியை தள்ளிக்கொண்டே வெளியே வந்தபோது, "சார் எங்க போகணும், வாங்க"  என்றபடி ஆட்டோக்காரர்கள் மொய்த்தனர்.

"வடக்குச் சித்திரை வீதிப்பா" என்றவர் கையிலிருந்து பெட்டியை வாங்கிய ஒரு ட்ரைவரை பின் தொடர்ந்தார்.

இருள் இன்னும் முற்றிலும் விலகவில்லை. வழியெங்கும் வாசல் தெளிக்கும் சத்தம்.  சிலர் ட்ராக் பேண்ட், ஷூ போட்டுக் கொண்டு வாக்கிங் போய்க் கொண்டிருந்தனர்.

"அதோ அந்த நீல கேட் வீடுதான்" என்று அவர் காட்டிய வீட்டின் வாசலில் ஆட்டோ நின்றது."

வாசலில் கோலம் போட்டுக் கொண்டிருந்த ஜானு இவரைப் பார்த்த உடன், " வாங்கோ சித்தப்பா" என்றாள்.

"எப்டிம்மா இருக்கேள் எல்லாரும். சுந்து எப்படி இருக்கான்?" என்றபடியே உள்ளே நுழைந்தார் கிச்சா.

"பெருசா முன்னேற்றம் இல்லை. மறதி அதிகாமாயிண்டே போறது.  அம்மா போனதயே மறந்துட்டு, கெளசி காப்பி கொடு, கெளசி கோயிலுக்கு போயிருக்காளான்னு கேட்டுண்டு இருக்கார்"

இவர்கள் உள்ளே போன போது சுந்து நன்றாக தூங்கிக் கொண்டிருந்தார்.

கிச்சா, காப்பி சாப்டு. குளித்து விட்டு வந்தபோது, கூடத்தில் உட்கார்ந்திருந்த சுந்து, கிச்சாவை கேள்விக் குறியோடு பார்த்தபோது, "நாந்தான் கிச்சா, சென்னைல இருந்து வந்திருக்கேன்"

வெறும் புன்னகை மட்டும்தான் சுந்துவிடம் இருந்து.  கொஞ்ச நாழி கழிச்சு, "நீங்க யாரு"

"நாந்தான் கிச்சா, உன்னோட சித்தி பையன்"

"எனக்கு யாரு சித்தி"

"சரோ சித்தி.  "நாமெல்லாம் ஒரே காலேஜ்ல படிச்சோமே"

மறுபடியும் புன்னகை. கையை விரித்து, "யாருன்னு தெரியல.  சாப்டேளா"

பக்கத்துலயே உக்காந்து பழைய விஷயங்கள் பலவற்றைப் பற்றி பேசியும், சுந்து எதையும் புரிந்து கொண்ட மாதிரி தெரில.

"சரி நீ யாரு?" என்று கேட்ட கிச்சாவைப் பார்த்து, புன்முறுவலோடு

"நான், நாந்தான்" என்று கண்ணை மூடிக் கொண்டார்.

சற்று நேரம் கழித்து ஜானுவைப் பார்த்து, "தீபாவளி பட்சணம் தீந்து போயிடுத்தா? மைசூர் பாகு இருந்தா கொடேன்"

"தீபாவளி முடிஞ்சு ரெண்டு மாசம் ஆச்சு" என்ற அவள் பதிலை எதிர்பார்க்காமல் மீண்டும் கண்களை மூடிக் கொண்டார்.

அப்போது அங்கு வந்த சுந்துவின் பேரன்  ஆதித்யாவைக் கூப்டு மடியில் வைத்துக் கொண்ட கிச்சா,

"இங்க வா கண்ணா.  நன்னா படிக்கறியா? ஃப்ரெண்ட்ஸ்லாம் என்ன சொல்றாங்க? போன தடவ வந்தப்ப சந்தோஷ் கூட சண்டைன்னு சொன்னியே சரியா போச்சா? "

சிறிது வெட்கத்துடன் சிரித்துக் கொண்டே, "அதெல்லாம் எப்பவோ பேசியாச்சு தாத்தா,   இன்னிக்கி சண்டேல்ல, மத்தியானம் வருவான் விளையாட"

"நா லீவுக்கு இங்க வரச்ச, நான், சுந்து தாத்தா, அவரோட ஃப்ரெண்ட்ஸ் எல்லாரும்  நாள்பூரா விளையாடிண்டுதான் இருப்போம்.  எங்களுக்கு ஒரு சீக்ரெட் ப்ளேஸ் உண்டு தெரியு …மா ன்னு முடிக்கரதுக்குள்ள ஒரு சிரிப்பு சத்தம் சுந்துவிடமிருந்து…

சுகிரா சுகிரா வென்று அவர் வாய் முணுமுணுத்துக் கொண்டிருந்தது.

கண்களில் நீரும், இதழில் புன்னகையும்  ஒருசேர, பேரனை இழுத்து முத்தமிட்டார் கிச்சா.

Loading content, please wait...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com