ஒவ்வொருவருக்கும் தனிதனியான  ஒரு டியூன் 

ஒவ்வொருவருக்கும் தனிதனியான  ஒரு டியூன் 
Published on

– ஆதித்யா

இசையோடு பிறந்து இசையோடு  வாழும்  மக்கள்

மேகாலயா மாநிலத்தின்  கிழக்குப் பகுதி  காசி மலைகளுக்குள் ஒளிந்திருக்கும் அழகான கிராமம்  காங்தாங்குக்கு. மேகாலயாவில் உள்ள மூன்று பழங்குடியினத்தில் காசியும் ஒன்று. காங்தாங்கில் காசி இனத்தவர்கள் தான்  வசிக்கிறார்கள். வீடுகள்  எல்லாமே மூங்கிலாலும் மூங்கில் இலைகளாலுமான குடிசைகள்.  உலகில் மிக அதிகமாக மழை பொழியும் இடமாகக் கருதப்பட்ட சிரபுஞ்சி, காங்தாங் கிராமத்துக்கு அருகில்தான் இருக்கிறது.

தலைநகர் ஷில்லாங்கிலிருந்து மூன்று மணிநேர கார் பயணம். இந்தக் குக்கிராமத்தில் எல்லாருக்கும் மூன்று பெயர்கள்.

அரசாங்க பதிவுகளுக்காக ஒரு பெயர். வீட்டில் கூப்பிட ஒரு செல்லப்பெயர், இது தவிர,  ஒரு தனி இசைக் கோவை பெயராக இருக்கிறது.

அவர்களுக்குள் ஒருவரையொருவர் அழைத்துக்கொல்லும்போது இந்த இசையை வாயால் எழுப்புகின்றனர். ஒரு ஹம்மிங் போல ஒவ்வொருவருக்கும் தனித்தனியான  ஒரு டியூனில்  மென்மையான ஒசையாக  ஒலிக்கிறது.  கிராமவாசிகள் ஒருவரையொருவர் இதன் மூலம் தான் அழைத்துக்கொள்கிறார்கள்.   இதில் அருகிலிருப்பவரை அழைக்க அதே  டியூனின்  ஒரு சிறுவடிவம். 

இந்தப் பகுதியில் வாழும்  'ஜிங்க்ர்வாய் இயாவ்பே'  என்ற  இன மக்களிடம் ஒரு தனித்துவமான மரபும் இருக்கிறது. இந்த மரபின்படி, காங்தாங்கில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தைக்கும், குழந்தையின் தாய் பெயரோடு சேர்த்து ஒரு இசைக்கோர்வையையும் அடையாளமாக சூட்டுவார்.

வார்த்தைகளால் சூட்டப்படும் பெயர் என்பது அதிகாரபூர்வ தேவைகளுக்கு மட்டும் பயன்படுத்தப்படுகிறது. ஆனால் இந்த இசைக்குறிப்பே அவர்களது அடையாளமாக வாழ்க்கை முழுக்க வருகிறது. ஒருவரையொருவர் அழைத்துக்கொள்ளவும் இதுவே பயன்படுகிறது. ஒரு மனிதர் இறக்கும்போது அந்த இசைக்குறிப்பும் அழிந்துவிடும், அந்த இசை வேறு எவருக்கும் பெயராக சூட்டப்படுவதில்லை 

இந்த கிராமத்தில் ஒருவரையொருவர் அழைக்க அடிக்கடி இப்படி இசை எழுப்பவது எதற்கு என்று புரியாத இங்கு வரும்  டூரிஸ்ட்கள்,  இந்த கிராமத்துக்கு  வைத்திருக்கும் பெயர் 'விசிலடிக்கும் கிராமம்'. 

Loading content, please wait...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com