நல்லதோர் குடும்பம்

நல்லதோர் குடும்பம்
Updated on

– ரமணன்

மிழ் மறை என்றும் ஐந்தாவது வேதம் என்றும் போற்றப்படுகிறது நாலாயிர திவ்விய பிரபந்தம்  என்ற நூல். கி.பி. 6ஆம் நூற்றாண்டு முதல் 9ஆம் நூற்றாண்டு வரை  திருமாலின் பெருமைகளைப் பாடிய 12 ஆழ்வார்களால்  வெவ்வேறு காலகட்டங்களில் பாடப்பெற்ற இந்தப் பாடல்களை 10ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த 'நாதமுனிகள்' என்ற சித்தபுருஷர்  தொகுத்தார். தொடர்ந்து வந்த காலங்களில் இராமானுஜ நூற்றந்தாதி என்ற பிரபந்தமும்  இணைக்கப்பட்டு உருவான நூலே  நாலாயிர திவ்வியப் பிரபந்தம்.  'திவ்ய' என்ற சொல் 'மேலான' என்றும் 'பிரபந்தம்' என்ற சொல் 'பலவகைப் பாடல் தொகுப்பு' என்பதையும்  குறிக்கும்.  தமிழ் பேசும் வைணவர்கள் மட்டுமல்லாது தெலுங்கு, கன்னடம் பேசும் வைணவர்களாலும் இது இன்றும் தினமும்  பிரார்த்தனை பாடல்களாகப் படிக்கப்பட்டு வருகிறது. இதற்கு பல தமிழறிஞர்கள் எழுதிய  விளக்க உரைகள் பதிப்பிக்கப்பட்டிருக்கின்றன. அண்மையில்  எளிய தமிழில் பிரபந்த பாடல்களின் பொருளுடன்  ஒரு விளக்க உரை பதிப்பு
8 பகுதிகளடங்கிய தொகுப்பாக வெளியாகியிருக்கிறது.

தனது கணவர்
பி.எஸ் ரங்கநாதனுடன் இணைந்து இந்தப் படைப்புக்களை உருவாக்கியவர் தற்போது அமெரிக்காவில் வசிக்கும்  89 வயது திருமதி கமலா ரங்கநாதன்.
பி.எஸ் ரங்கநாதன் கல்கி வாசகர்களுக்கு அறிமுகமான எழுத்தாளர். கடுகு, அகஸ்தியன் போன்ற பெயர்களில் நீண்டகாலம் பல தமிழ் பத்திரிகைகளில் எழுது வந்தவர்.

இந்த வயதிலும் ஆர்வத்துடன் இந்த தமிழ் இலக்கியப் பணியைச் செய்திருக்கும் திருமதி கமலா ரங்கநாதனுடன் பேசியபோது, மிகத் தெளிவாக, நிதானமாக, பேசுகிறார்.  வயது குரலிலோ உடல் மொழியிலோ தெரியவில்லை.

இப்படி ஒரு படைப்பை உருவாக்கவேண்டும் என்ற எண்ணம் எப்படி எழுந்தது?

இளமைக் காலத்திலேயே என்னைக் கவர்ந்த விஷயங்களில் ஒன்று.  இந்தப் பிரபந்தம். அதிர்ஷ்டவசமாகத் திருமணத்திற்கு பின்னர் என் கணவருக்கும் இதில் ஆர்வம் அதிகமிருந்ததால் இருவரும் ஈடுபாட்டுடன் பிரபந்த பாடல்களைப் பாடுவதோடு பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராச்சாரியார், பெரியவாச்சான்பிள்ளை கிருஷ்ணஸ்வாமி அய்யங்கார்  நாட்டேரி விஜயராகவாச்சாரியார், வேளுக்குடி கிருஷ்ணன் போன்றவர்களின் உரைகளைப் படித்தும், உபன்யாசங்களைக் கேட்டும் பாடல்களின் பொருளை முழுமையாக உணர்ந்து கொண்டோம். கிட்டத்தட்ட 50 வருடங்கள்  இப்படிச் செய்து வந்ததில் அதோடு ஒன்றிவிட்டோம்.  அப்போது நாங்கள் உணர்ந்த விஷயம் இந்தப் பாடல்களின் வார்த்தைகளைப் பதம் பிரித்துக் கொண்டால் படிப்பதும் மனப்பாடம் செய்வதும் எளிது என்பது. அது எல்லோருக்கும் பயன்பட வேண்டும் என்பதால் 2008ல் புத்தகமாகப் பதிப்பித்து வெளியிட்டோம்.  இப்படி எழுதப்பட்டதில் அதுதான் முதல் புத்தகம். பெரும் வரவேற்பைப் பெற்ற இந்த புத்தகம் இதுவரை 10 பதிப்புகளைக் கண்டிருக்கிறது.

இப்போது நீங்கள் வெளியிட்டிருக்கும் பதிப்பு எந்த வகையில் வேறுபட்டது?

பதம் பிரித்து எழுதியதைப் படிப்பது என்பது வேறு, அந்தப் பாடல்களுக்கான   அர்த்தத்துடன் படிப்பது என்பது வேறு. அதைத்தான் இந்தப் பதிப்பில் செய்திருக்கிறோம். ஒவ்வொரு பாசுரத்தையும் அதன் கீழே அர்த்தத்துடன் வெளியிட்டிருக்கிறோம். 2015ல் குடும்ப நண்பர் கிரேசி மோகன்தான் இப்படி அர்த்தத்துடன் புத்தகம் போட வேண்டும் எனச் சொன்னார். 'மிக எளிய தமிழில் எவரும் எளிதாகப் புரிந்துக்கொள்ளும்படி எழுதுங்கள்' என்றார்.  அப்போது என் கணவருக்கு 83 வயது, எனக்கு 82 வயது. " வயதாகிவிட்டது முடியாது" என்று முதலில் சொன்ன என் கணவரை, "எல்லாம் முடியும்… பெருமாள் கூட இருப்பார் ஆரம்பிங்கோ…"  என்று சொல்லி ஊக்குவித்தவர் கிரேசி.  முதல் 100 பாட்டுக்கு எழுத ஒரு வருடமாகியது. அடுத்த 1000 பாடல்களுக்கு  மூன்று வருடமாகியது. அதன்பின் வேகம் பிடித்தது. ஆனால் துரதிருஷ்ட வசமாக 2020ல் என் கணவர் மறைந்துவிட்டார். .  ஆழ்ந்த யோசனைகளுக்குப் பின்னர்,  'அவருக்குப் பிடித்த பணி, அவருக்காகவாவது  செய்யவேண்டும்' என்று எண்ணி நான் தொடர்ந்து  எழுதி ஓராண்டில்  முடித்துவிட்டேன்.

முதல் பகுதிக்கு அவ்வளவு காலம் எடுத்துக்கொண்ட  விஷயத்தை இப்போது எப்படி   இவ்வளவு விரைவாகச் செய்ய முடிந்தது? பாசுரங்களுக்கு அர்த்தம் சொல்லி யாராவது ஆச்சாரியார்கள் உதவினார்களா?

என் கணவரின் ஆசியும் பெருமாள் அனுகிரஹமும்  இருந்ததால்தான் முடிந்தது. தினசரி காலை 7 மணி முதல் மதியம் 1 மணிவரை சாப்பாடு நேரம் தவிர வேறு எதற்கும் எழுந்திருக்காமல் செய்து முடித்தேன். என் கணவர், அவர் மற்றும் அவரது அப்பாவின்  புத்தகங்களின் பக்கங்களில் சரியான அர்த்தங்களைப் பாடல்களின் அருகில்  குறித்து வைத்திருந்தார். பிரபந்தம் என்றில்லை. என் கணவர் எங்கு ஒரு புதிய வார்த்தையைப் பார்த்தாலும் அடிக்கோடிட்டு தன் டெஸ்கில் வைத்திருப்பார்.  அமரர் கல்கியின் படம் அவரது மேஜையில் எப்போதும் இருக்கும்.

அப்படி பிரபந்தப் புத்தகங்களில் குறித்து வைந்திருந்தவை, பல முறை உபநியாசங்களில் கேட்டது, படித்தது எல்லாம் நினைவிலிருந்தால்  அர்த்தம் எழுத பிறர் உதவியை நாடவில்லை. நான் 2010ல்  சென்னையிலிருந்தபோது
என்  79வது வயதில் வைஷணவிஸம் எம்.ஏ. படித்திருந்ததும்   உதவியாகயிருந்தது.

2021 பிப்ரவரியிலிருந்து எழுதிய  பகுதிகளின் ஃப்ரூப்களை சென்னையிலிருக்கும் நண்பர்கள் வாசித்துத் திருத்தி அனுப்பிக்கொண்டிருந்தார்கள்.   எல்லாம் இ-மெயிலில்தான்.

எப்படி எழுதுவீர்கள்?

எனக்கு ஆங்கிலம்,  தமிழ், சமஸ்கிருதம், டைப்பிங் எல்லாம் தெரியும். அதனால்  கம்யூட்டரில் மைக்ரோ சாஃப்ட் வேர்ட்டில்  டைப்செய்வது, திருத்துவது, ஃபைல்களாக சேவ் செய்வது மெயில் அனுப்புவது  எல்லாம் கற்றுக்கொண்டேன். அதனால் இந்தப் பணி எளிதாகயிருந்தது.

இந்தப் புத்தகங்கள்  மின் புத்தகங்களாக (e books) வந்திருக்கிறதா?

ஆமாம். எனது மகளும் மருமகனும் அதைச் செய்திருக்கிறார்கள். விபரங்களை என் மகளிடம் கேளுங்களேன்  என்கிறார்.

"அம்மா  மைக்ரோ சாஃப்ட் வேர்ட்டில் டைப் செய்தவற்றை கிண்டில் புத்தக வடிவிற்கேற்ப மாற்றி  இ-புத்தகமாக வெளியிட்டிருக்கிறோம். அடுத்த தலைமுறை இனி இ – புத்தகங்கள் தான் படிப்பார்கள் இல்லையா" என்று சொல்லும் ஆனந்தி, புற்று நோய் தடுப்பு மருத்துவ நிபுணர். அவர் கணவர் பல்கலைக்கழக  பேராசிரியர். ஆனந்தி தன்  பணி ஓய்வுக்குப் பின்னர் அம்மாவின் புத்தகப் பணிகளில்  உதவுகிறார்.

"பெரிய மேஜையில் குறிப்பெடுக்கவேண்டிய, தகவல் சரிபார்க்க வேண்டிய புத்தகங்களுக்கிடையில் தொடர்ந்து ஆறு மணிநேரம்  எழுதும் அம்மாவைப் பார்க்கும்போதே  நமக்கு உற்சாகம் வரும்" என்று சொல்லும் இவர், இந்த பிரபந்த பாடல்களையும், அதன் பொருளையும் குரல் வடிவில் இணையத்தில் எளிதாகக்  கேட்கும் வண்ணம்  பாட்காஸ்ட்டில் வழங்கிக் கொண்டிருக்கிறார். இந்த பாட்காஸ்ட்டின் டெக்னிக்கல் விஷயங்களைச் செய்திருப்பவர் கமலா ரங்கநாதனின்  பெயர்த்தி அருந்ததி.  இப்படி தன் குடும்பத்தினர் அனைவரும்  இந்தப் பணியில் ஈடுபட்டிருப்பதில்  அவருக்கு மிகப் பெருமை.

அமெரிக்காவில் வாழும்  ஜெயலக்ஷ்மி ஶ்ரீனிவாசன் பாசுரங்களையும்
ராதிகா ரங்கராஜன்  அதன் அர்த்தங்களை தங்களின் அசத்தலான குரலில் பதிவு செய்திருக்கிறார்கள். 'பலரும் கேட்டுச் சரியான உச்சரிப்புகளுடன் பாசுரங்களைக் கற்றுக்கொள்ள வேண்டும்' என்ற ஒரே காரணத்துக்காக வாரம் 20 பாசுரங்கள் என்று  இந்த ஒலிக்கோர்வையை இலவசமாக அளிக்கிறார்கள்  நமது வாசகர்களும் இதை   https://divyaprabandham.podbean.com/ தளத்தில் கேட்டு மகிழலாம்.

தமிழ் இலக்கியத்தில்   திவ்யபிரபந்தத்துக்கு  ஒரு தனியிடம் உண்டு. ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர்  எழுதப்பட்டு, தொடர்ந்து  தமிழறிஞர்களால் பக்தி இலக்கியமாகப் போற்றப்பட்டு வருகிறது. அதை இன்று வளரும் தலைமுறையினருக்குப் புரியும் வண்ணம் அதன் விளக்கத்தை எளிய தமிழில் எழுதியது மட்டுமில்லாமல்  அதை இணையத் தொழில்நுட்ப உதவியால் சரியான உச்சரிப்புடன் கேட்கவும் செய்திருக்கும் ரங்கநாதன் குடும்பத்தினருக்கு நன்றி சொல்லி விடை பெறுகிறோம்.

Loading content, please wait...
logo
Kalki Online
kalkionline.com