ஆபீசில் இருப்பே கொள்ளவில்லை சரண்யாவிற்கு.."மத்தியானம் வரைக்கும் அழைத்தபோதெல்லாம் போனை எடுத்து பேசின கிருஷணன் இப்போ எடுக்கமாட்டேனெங்கிறானே…" நாட்டில் நடப்பதையெல்லாம் பார்க்கும்போது சற்று பயமாகத்தானிருந்தது.."தூங்கியிருப்பார்களோ? என்று நினைத்த மறுகணமே அவளுக்கே பதிலும் தெரிந்தது. 'அவர்களாவது… பகலில் தூங்குவதாவது..!".வீட்டில் தாத்தா பாட்டி இல்லை. அப்புறமென்ன… அவிழ்த்துவிட்ட கழுதைகள்தானே! தான் லீவு போட்டு வீட்டில் இருந்திருக்கவேண்டும் என்று தோன்றியது. அதற்கெல்லாம் எங்கே அவகாசமிருந்தது?.அன்றைய காலை எப்போதும் போல்தான் விடிந்தது. ஆனால் ஏழு மணிக்கு திருச்சியிலிருந்து வந்த மொபைல் செய்தியில் வீடே அதிர்ந்து போய்விட்டது. சரண்யாவின் அண்ணன் . விடியற்காலையில் எழுந்து பாத்ரூமிற்குள் போனவர் அப்படியே உள்பக்கமாய் கதவில் மோதி விழுந்த சப்தம் கேட்டு, அவரது மனைவி பதறியபடி கதவை அழுத்தித் திறந்திருக்கிறாள். அரை குறை உடையோடு மூச்சுப்பேச்சில்லாமல் இருந்தவரை நகர்த்தி, ஆம்புலன்சில் ஏற்றி ஆஸ்பத்திரிக்கு கொண்டு போயாயிற்று. இடுப்பெலும்பில் சிறிய முறிவு என்று எக்ஸ்ரேயில் தெரிந்திருக்கிறது..செய்தி கேட்ட மறுநொடி, 'நாராயணா' என்று சரண்யாவின் அம்மா மயக்கம் போட்டு விழுந்தாள். அவளை எழுப்பி உட்காரவைத்து தைரியம் கொடுக்கவேண்டும் என்பது அப்பாவின் உடனடி கவலையாக மாறியது..அவர்கள் இருவரும் கடந்த வாரம்தான் திருச்சியிலிருந்து வந்திருந்தார்கள். இரண்டு மாத காலம் பெண் வீட்டில் இருக்கலாமென்ற திட்டம். சரண்யாவின் கணவர் ஆபீஸ் வேலையாக ஹைதராபாத் போயிருக்கும் சமயத்தில் அவளது பெற்றோர் வந்தது அவளுக்கு பெரிய ஆதரவாக இருந்தது..சரண்யாவின் குழந்தைகளுக்கு தாத்தா பாட்டி வந்ததில் ஏகத்திற்கு சந்தோஷம். அதுவும், மாலையில் பள்ளியிலிருந்து வரும்போது வீட்டில் பெரியவர்கள் இருந்தால் கூடுதல் மகிழ்ச்சிக்கு சொல்லவா வேண்டும்.."டேய் கிருஷ்ணா.. ஸ்கூல் பையை இப்படி தூக்கி வீசிட்டுப் போறியே.." என்று தாத்தா கேட்டால், "நான் எவ்வளவு டயர்டா இருக்கேன் தெரியுமா தாத்தா.." என்று பாவமாய் முகத்தை வைத்துக் கொள்வான் கிருஷ்.. அவனது முகபாவத்தை ரசித்தபடி, பாட்டி சப்போர்ட்டுக்கு வந்துவிடுவாள்.."என்ன தாத்தா… குழந்தையை திட்டுறீங்க… சரிடா நான் உன் பையை எடுத்து வைக்கிறேண்டா…" என்று பாட்டி மெதுவாய் குனிந்து பையை எடுத்து வைப்பாள்..அவன் அப்படியென்றால், தங்கை சிந்து சமத்துக்குட்டி. ஒண்ணாங்கிளாஸ். டி.வி. முன்னால் உட்கார்ந்து கொண்டு கார்ட்டூன் சானல் பார்த்துக் கொண்டிருந்தால் போதும் அவளுக்கு..சரண்யா ஆபீசிலிருந்து திரும்பிவரும் நேரம் பார்த்து இரண்டு பேரும் ஹோம் ஒர்க் என்று உட்கார்ந்துவிடுவார்கள். சரண்யாவிற்கு அந்த பாசாங்கெல்லாம் தெரியாமலில்லை. சரண்யாவின் சிறுவயது சேட்டைகளை எப்படி அவளது தாத்தா பாட்டி மகிழ்ந்தார்களோ அதுபோல்தான் இதுவும். 'என் தாத்தாவும், பாட்டியும் மகிழ்ந்து உலவி இருந்தது இந்நாடே…" என்று பாட வேண்டியதுதான்..இப்போது ஒரு திருச்சி போன் அழைப்பில் எல்லாம் தலைகீழ். என்ன செய்வது? அவளும் ஒரு டாக்சி ஏற்பாடு செய்து தர அவர்கள் அடித்துப் பிடித்துக் கொண்டு கிளம்பிவிட்டனர். அவசர ஏற்பாட்டிற்கு தன்னுடைய ஒரு பழைய போனை மகன் கிருஷ்ணனிடம் கொடுத்துவிட்டு அவசர அவசரமாய் அலுவலகத்திற்கும் புறப்பட்டாள்..அந்த போனைத்தான் இந்த கிருஷ்ணன் எடுக்காமல் படுத்தி எடுக்கிறான்..அவளுக்கு இருப்பு கொள்ளவில்லை. சற்று சீக்கிரம் கிளம்புவதற்கு பெர்மிஷன் போட்டுவிட்டு, எப்போதும் பஸ்சிற்கு காத்திராமல் ஊபர் ஆட்டோவைப் பிடித்தாள். நகர்புற எல்லையில் இருக்கும் மிகப்பெரிய அடுக்கக வளாகம் ஒன்றில்தான் அவளது வீடு..மூன்று உயரமான கோபுரங்கள். ஒவ்வொன்றிலும் ஏறக்குறைய நூறு வீடுகள். நல்ல பார்க்கிங் வசதி. குழந்தைகள் விளையாட, மாடுகள் மேயாத புல்தரையுடன் பெரிய மைதானம். வளாகத்திற்குள்ளேயே பள்ளி வேறு. ஒண்ணரைக் கோடியில் வீட்டைக் கடனில் வாங்கியாயிற்று. எளிதாக தவணை கட்டுவதற்காக எடுக்கப்பட்ட சிக்கன நடவடிக்கைகளில் ஒன்று ஆபீசிற்கு தினசரி பஸ்சில் பிரயாணம். இன்றைக்கு மட்டும் அதில் விதிவிலக்கு..ஆட்டோ சர்ரென்று இடதுபுறம் வளைந்து கட்டிட காம்பவுண்டு அருகில் நாணியபடி ஒதுங்கி நின்றது..'குட் ஈவினிங் மேம்சாப்' என்று வாசலில் செக்யூரிட்டியின் வணக்கத்தை தலையசைத்து ஏற்றுக்கொண்டபடி அவசரமாய் உள்ளே நுழைந்தாள்..அவள் நினைத்தபடியே, கிருஷ்ணனும் சிந்துவும் குழந்தைகள் மைதானத்தில் விளையாடிக் கொண்டிருந்தனர். தாத்தா பாட்டி சமீபத்தில் பழக்கிவிட்டிருக்கவேண்டும்..'ஆனால் அவர்களது ஸ்கூல் பைகள் எங்கே?' சரண்யா 360 டிகிரியில் கண்களால் துழாவினாள். சற்று தள்ளி ஒரு கறுப்புநிற இரும்பு பெஞ்சினடியில் அவை கிடந்தன..குழந்தைகளை அதட்டி, மிரட்டி புரியவைக்கிற குணம் கொண்டவளில்லை சரண்யா. பொறுமையாக பெஞ்சை நோக்கி நடந்து அவர்களது பைகளைத் தூக்கிக் கொண்டாள்..அப்போதுதான் பெஞ்சில் அமர்ந்திருந்த அந்த பெரியவர்களைப் பார்த்தாள்..தலைமயிருடன், புருவமும் வெள்ளையாய் நரைத்த பெரியவர். சில நாட்களாக சலூனுக்கு யாரும் கூட்டிக்கொண்டுபோகவில்லை போல. பாகவதர் மாதிரி தலையின் பின்புறம் நிறைய முடி வளர்ந்திருந்தது. தலைமுடிக்கு பொருத்தமாக, வெள்ளை பைஜாமா, ஜிப்பா அணிந்திருந்தார். கையில் ஒரு ஏழு எண் வடிவத்தில் ஒரு ஊன்றுகோல். அருகில் மனைவி அவரது மணிக்கட்டைப் பிடித்தபடி அமர்ந்திருந்தாள். கழுத்தில் கருகமணி. உச்சி நெற்றியில் சிந்தூரம். வெள்ளை மேகங்களுக்கு பின்னால் மறைந்து நிற்கும் சூரியன் போல. சுருக்கு பைக்குள் வலது கையை விட்டு மாலையை உருட்டியபடி மந்திரம் துடிக்கும் உதடுகள்..இருவரையும் பார்க்கும் போது எளிதில் வடநாட்டவரென்று ஊகிக்க முடியும். முந்நூறு வீடுகள் உள்ள வளாகம் சந்தேகமின்றி ஒரு பாரத விலாஸ்தான்..சரண்யா பைகளை எடுப்பதைப் பார்த்ததும், உதட்டின் உச்சரிப்பை நிறுத்த மனமின்றி , வலதுகையை பையுடன் சற்றே உயர்த்தி "நீ… நீ" என்ற பாவனையுடன் பையைக் காட்டி விளக்கம் கேட்டாள்..விளையாடிக்கொண்டிருந்தவர்களைச் சுட்டிக் காட்டி, 'அவர்களுடைய அம்மா' என்று சொல்லும்போது ஏனோ அவளது உள்ளிருந்து பெருமை பொங்கி முகத்தில் புன்சிரிப்பாய் கசிந்தது..சரண்யாவை பார்த்த மாத்திரத்தில் கிருஷ்ணனும், சிந்துவும் ஓடி வந்து அவளது இடுப்பைக் கட்டிக் கொண்டார்கள். பலதடவை அழைத்தும் போனை எடுக்கவில்லை. மண்ணில் புரண்டு உடைகளெல்லாம் அழுக்காய் இருக்கிறார்கள். ஊரே கெட்டுக் கிடக்கிற காலத்தில், பார்த்துக் கொள்பவர் யாருமின்றி பார்க்கில் விளையாடிக் கொண்டிருக்கின்றனர்..எல்லாம் சரிதான். அப்புறமாகக் கோபித்து கொள்ளலாம். அவர்களை உச்சி முகர்ந்தாள். கட்டியணைத்து முத்தமிட்டாள். உதடுகளில் அவர்களது வியர்வையின் உப்புக் கரிப்பும், கூடவே மண்துகளின் நெருடலும்.."யாருடா இவங்க..?" என்று கேட்டாள் சரண்யா..பெரியவர் முந்திக் கொண்டார். "ஆப்கோ ஹிந்தி மாலும் ஹே க்யா?" என்று லாஜிக்கே இல்லாமல் இந்தி தெரியுமா அவளிடம் இந்தியில் கேட்டார்..சரண்யா, 'தெரியாது' என்று உதட்டைப் பிதுக்கினாள். பள்ளியில் படித்த இந்தி புலமையை இப்போது காட்டினால் பெரியவர் அந்த மொழியிலேயே பொளந்து கட்டிவிடுவார் என்று தெரியும் அவளுக்கு. இந்திப்பட வசனங்களையே ஆங்கில் சப்டைட்டிலோட பார்த்தால்தான் புரியும் . ரிஸ்கெல்லாம் எடுக்கக்கூடாது.."பர்வா நஹி… நாங்க அண்ணாநகர்ல இருந்தோம். இப்போ இங்கே வந்துருக்கோம்… 'பி' பிளாக்கில் இருக்கோம். நாலாவது மாடி…" என்று பேசிவிட்டு மௌனமானார்..அவளது பக்கத்து பிளாக்தான். பார்த்தால் தெரியும்… சரண்யாவின் ஆபீஸ் சிநேகிதி மயூரியும் அதே பிளாக்கில்தான் இருக்கிறாள்.."கொளந்தைங்க விளையாடறதைப் பார்க்க நாங்க தினமும் இங்க வருவோம். எவ்ளோ நேரந்தான் டி.வி. பாக்குறது?" என்று சொல்லி சிரித்தார். கடைவாயில் எச்சில் ஒழுகியது.."குழந்தைங்க உங்களை டிஸ்டர்ப் பண்ணலியே?" என்றாள்.."இல்லேம்மா… அவங்கபாட்டுக்கு விளையாடிக்கிட்டு இருந்தாங்க… அவங்களோட தாத்தா, பாட்டி ஊருக்குப் போயிட்டாங்களாமே… பரவாயில்லை… நாங்களும் தாத்தா பாட்டிதான்னு சொன்னோம்…" என்று சொல்லி உடல்குலுங்க சிரித்தார். இயற்கையாகவே மனம் விட்டுச் சிரிக்கிற சுபாவம் உள்ளவர் போல. அவரது பேச்சைக் கேட்டவண்ணம் தலையாட்டியபடி, மனைவி துளசிமாலையை உருட்டிக் கொண்டிருந்தார்..இருட்ட ஆரம்பித்திருந்தது.."பசங்களா… தாத்தா பாட்டிக்கு பை சொல்லிட்டு வாங்க…" என்றபடி கிளம்பினாள்..கிருஷ்ணனும் சிந்துவும் கையை ஆட்டி விடைபெற்றனர்..தாத்தா பதிலுக்கு தனது கரத்தை உடலிலிருந்து உதறிவிடுபவர் போல் கைத்தடியோடு ஆட்டினார். அது கையில் ஒட்டிக் கொண்டது போல "வேண்டாம்…வேண்டாம்." என்கிற மாதிரி கையை ஆட்டுகிறாரே என்று நினைத்த மாத்திரத்தில் அவளுக்கு சிரிப்பு வந்தது..ஆனால்… 'இதே மாதிரி கை அசைவை எங்கோ பார்த்திருக்கிறோம்" என்று யோசித்தபடி லிப்டில் ஏறினாள்..வீட்டு வேலைகளெல்லாம் முடித்துவிட்டு , குழந்தைகள் இருவரும் தூங்கப் போனபின்னர்தான் அவளுக்கு நிம்மதியாகவே மூச்சுவிடமுடிந்தது. திருச்சிக்கு போனில் அம்மாவிடம் பேசி அண்ணனைப் பற்றி விசாரித்து முடித்து படுக்கையில் விழுந்தாள். சிறிய ஆபரேஷன் முடிந்து இப்போ பரவாயில்லை. பழையபடி நடப்பதற்கு ஐந்து மாதங்களாகுமாம். "உசிருக்கு ஆபத்தில்ல… சனி முடியப்போறது.. கால் வழியா போச்சுன்னு நினைச்சுக்க வேண்டியதுதான்" அம்மா தன்னையே சமாதானப்படுத்திக் கொண்டாள்..அவளது வீடு பதினொன்றாம் மாடியில் இருக்கிறது. அவளது படுக்கையறையிலிருந்து பார்த்தால் அருகிலிருக்கும் 'பி' ப்ளாக்கின் அனைத்து வீட்டு ஜன்னல்களும் தெரியும் . அறை விளக்கை அணைத்துவிட்டு வெளியில் பார்த்தாள். இரவு நேரத்தில் அடுத்த ப்ளாக்கின் அனைத்து வீட்டு ஜன்னல்களும் டி.வி. ஒளித்திரைகள் போல் உயிர்பெற்று வசந்த் அண்ட் கோ கடையில் பார்வைக்கு அடுக்கி வைத்தமாதிரி தெரியும்..ஒரு வீட்டு ஜன்னலில் சமையல் செய்வது தெரியும். டி.வி. ஓடிக்கொண்டிருக்க, டீப்பாயின் மேல் கால்களை நீட்டியபடி பார்த்துக்கொண்டிருக்கும் சில ஜன்னல்கள். மற்றொன்றில் ஓடிப்பிடித்து விளையாடும் குழந்தைகள். அவர்களைத் திட்டும் அம்மா, ஒரு மௌனப்படமாக. சாப்பாட்டு டேபிளைச் சுற்றி அமர்ந்து கொண்டு வாய்விட்டு சிரித்தபடி … என்று பல சானல்கள் ஓடியபடி இருக்கும்..இரவு மேலும் நீள்கையில், ஒவ்வொரு ஜன்னல் டி.வி.களும் அணைந்து , மொத்தக் கட்டிடமே கும்மிருட்டில் ஒரு ராட்சதனாய் உறங்க ஆரம்பிக்கும்..பளீரென்று அவளுக்கு ஞாபகம் வந்தது. அவற்றில் ஒரு ஜன்னலில்தான், மாலையில் பார்த்த தாத்தாவையும், பாட்டியையும் முன்பொருமுறை பார்த்த ஞாபகம் வந்தது..இதே தாத்தா கைத்தடியுடன் கையை ஆட்டியபடி பின்னுக்கு செல்ல, அவரது கையிலிருந்த தடியைப் பிடுங்கி அவரை அடிப்பது போல் ஒருவன் கையை ஓங்குகிறான். பாட்டி வேண்டாமென்று தடுப்பது போன்று சைகை காட்டுகிறாள். அடிக்க வந்தவன் யாரென்று தெளிவாகத் தெரியவில்லை. அப்போது. அவர் பின்னுக்குப் போய் சோபாவில் தடுக்கி அப்படியே சாய்ந்து விழுகிறார்..அதை நினைவு கூர்ந்ததும் அவளுக்கு குலையே நடுங்கிடுற்று. 'அடிக்க வந்தவன் யார்? எதற்காக வீட்டிற்குள் நுழைந்து அடிக்கவேண்டும்?'.அதே பிளாக்கில்தான் அலுவலகத் தோழி மயூரியும் இருக்கிறாள். மறுநாள் காலை அவளிடம் விபரங்கள் கேட்கவேண்டும் என்று நினைத்துக் கொண்டு உறங்கச் சென்றாள்..•••••.மறுநாள் முதல்வேலையாக வடநாட்டு தாத்தா, பாட்டி என்றதுமே மயூரிக்கு அடையாளம் தெரிந்தது.."அவங்களா? என்வீட்டுக்கு எதிரில்தான் இருக்கிறாங்க… பாவம்யா…" என்றவள் தொடர்ந்தாள்.."அவங்களுக்கு ஒரே பையன். செம்ம திமிரு புடிச்சவன். கல்யாணமாகி அவனைத் தாக்குப் பிடிக்க முடியாம டைவர்ஸ் வாங்கிட்டு போயே போய்ட்டா…" என்றாள்.."அதுக்காக பெத்தவங்க மேல கோபப்பட்டா?"."அவனோட குடும்பவாழ்க்கை தோல்விக்கு, அப்பா அம்மாதான் காரணம்னு நெனைக்கிறானாம்…"."அவன் நல்லவனா?" என்று கேட்டாள் சரண்யா.."அப்பா அம்மாவை அடிக்கிறவன் நல்லவனா?" என்றாள் மயூரி பதிலுக்கு.."நேரம் கிடைக்கும் போதெல்லாம் அப்பா அம்மாவிற்கு திட்டுதான். எனக்கு எதிர்த்த வீடுதானே… அவன் போடற சத்தம் கதவை மூடி வெச்சாலும் எனக்கு கேட்கும்… அப்படி ஒரு கூச்சல். என் பசங்களுக்கு அவன் பேசற கெட்ட வார்த்தையெல்லாம் கேட்கக்கூடாதுன்னு பல நாளைக்கு அவங்களை பெட்ரூமில படிக்கச் சொல்லி அனுப்பியிருக்கேன்." முந்தின நாள் பார்த்த தாத்தாவின் இயல்பான புன்சிரிப்பு கண்முன் வந்தது.."பாவம்பா…" என்றாள் சரண்யா.."எனக்கு ஹிந்தி வேற தெரியுமா… அவன் சொல்றதோட முழு அர்த்தமும் புரிஞ்சு தொலைக்கும்…" என்றாள் மயூரி.."அதானாலதான் அந்தப் படுபாவி வீட்டுல இருக்கான்னா அவங்க ரெண்டு பேரும் வெளியில கிளம்பிடுவாங்க… அவன் எழுந்திருக்கிறதுக்கு முன்னால சமைச்சு வெச்சுட்டு இங்க இருக்கிற கோவிலுக்கு போயிடுவாங்க. அதே மாதிரி தலைவர் சாயங்காலம் வீட்டுக்கு வரான்னா உக்கிரமூர்த்தியாத்தான் வருவான். அந்த நேரத்தில வீட்டுல இருக்கவேண்டாம்னு அவங்க கிளம்பி பார்க்கில போய் உட்கார்ந்திருவாங்க…"."அங்கதான் நானும் அவங்களைப் பார்த்தேன்…" என்று சரண்யா முடித்தாள்..ஒரு நடுநிசியில் அவர்களை வீட்டிற்கு வெளியில் நிற்கவைத்தது, அசோசியேஷன் செக்ரட்டரி வந்து சமாதானப்படுத்தியது என்று கதை நீண்டுகொண்டே போனது.."அப்போதுகூட அவங்க சாவியை எடுத்துக்க மறந்துட்டோம்னு அவனை விட்டுக்கொடுக்காம பேசினாங்க. இல்லாடி அன்னிக்கே போலீஸ் கேசாயிருக்கும். அவனை உள்ள போட்டிருப்பாங்க…" என்றாள்..கனத்த இதயத்துடன் சரண்யா அன்று அலுவலகத்தில் வேலையைச் செய்து முடித்தாள்..அன்றைக்கு சாயங்காலம் அவள் எதிர்பார்த்தது போலவே , கிருஷ்ணனும் சிந்துவும் விளையாடிக் கொண்டிருக்க, அவர்கள் இருவரும் அதே இரும்பு சேரில் இம்மியளவு இடம் பிசகாமல் அமர்ந்திருந்தனர்.அவள் வருவதைப் பார்த்ததும் தாத்தா முகத்தில் சிநேகப் பூ மலர்ந்தது. பாட்டி முணுமுணுத்த உதடுகளோடு அவளைப் பார்த்து சிரித்தாள்..வரும் வழியில் வாங்கி வைத்திருந்த சமோசாவை அவர்களிடம் பகிர்ந்து கொண்டாள். அவர்கள் முகத்தில் எவ்வளவு மகிழ்ச்சி. அவர் சௌகார்பேட்டையின் அகர்வால்பவனிலிருந்து கடைகளைப் பற்றி சிலாகித்து பேச ஆரம்பித்தார். வயதானவர்களுக்கு பழம் நினைவுகளே சுவாசம்..அன்றிரவும் சரண்யா படுப்பதற்கு முன்னால் தன்னிச்சையாக அந்தப் பெரியவரின் வீட்டை நோட்டம் விட்டாள். விளக்குகள் அணைந்திருந்தன..கட்டிய மனைவி குழந்தைகளுடன் அவனைப் பிரிந்து தண்டனை கொடுத்துவிட்டாள். ஆனால் தினமும் தங்களை கொடுமைப்படுத்தும் மகனை விட்டுக் கொடுக்காமல் , அதை வெளியில் காட்டிக்கொள்ளாமல் காலத்தை ஓட்டும் அவனது பெற்றோர்கள்..'அவனது போக்கிற்கு என்ன காரணமாக இருக்கும்? சிறுவயதிலிருந்து ஒரே மகனென்ற முக்கியத்துவத்தில் அவர்கள் அதீத செல்லம் கொடுத்ததா? அவன் தவறு செய்தபோதெல்லாம் திருத்தி நல்வழிப்படுத்தாமல் இருந்ததா? தவறு செய்தால் அதற்கு தண்டனை உண்டென்று சொல்லித் தராததா?'.அவர்களைப் பற்றிய நினைவுகளில் உழன்று வெகுநேரம் கழித்து தூங்கினாள்..மறுநாள் காலை பஸ்ஸ்டாப்பில் மயூரியைப் பார்த்ததும் கையை ஆட்டினாள். முந்தின நாள் அவர்களுக்கு சமோசா வாங்கிக் கொடுத்ததைச் சொன்னாள்.."சரண்யா… நீ அவங்களை மறக்கவே இல்லை போலிருக்கே…?"."எப்படி மறக்கமுடியும் . எனக்கும் வயசான அப்பா அம்மா இருக்காங்களே…".சட்டென்று மயூரியின் குரல் தாழ்ந்தது. "மெதுவாய் பேசு, அந்த வில்லன் உனக்குப் பின்னால வந்து நின்னுக்கிட்டிருக்கான்…" என்றாள்.."யாரு அந்த மொகரைக்கட்டை… கொஞ்சம் க்ளோசப்லதான் பார்க்கிறேன்.." சொல்லும்போதெ சரண்யாவிற்கு நெஞ்சம் படபடவென்றது. 'பெத்தவர்களைக் கைநீட்டி அடிப்பவன் ஒரு மனித ஜென்மமா?'."உடனே திரும்பிடாத.. அடையாளம் சொல்றேன்.. மெட்ராஸ் செக்கர்ஸ் சட்டை போட்டுக்கிட்டு தோளில் லாப்டாப் பையோட நிக்கறவன்தான் அந்த கடங்காரன்…" என்றாள் மயூரி..சரண்யா சற்றே திரும்பி சாலையைப் பார்ப்பது போல அவனை ஒரு முறை பார்த்தாள்..நன்றாக கோதுமையும், நெய்யுமாகத் தின்று வளர்ந்து கொழு கொழுவென்றிருந்தான்..'நல்லாத்தான் அந்த வெள்ளைப் பன்றியை வளர்த்திருக்காங்க' என்று நினைத்தாள்.."ஏன் மயூரி… பாக்க நல்லவன் மாதிரி சாதுவா இருக்கானே.. இவனா அப்படி?"."பார்த்தால் அப்படித்தான் தெரியும்.. அவன் பொண்டாட்டிக்கிட்டே கேட்டா எல்லாம் சொல்லுவா… பெத்தவங்க விட்டுக் கொடுக்க மாட்டாங்க…" என்றாள் மயூரி..அன்றைக்கு பார்த்து பஸ்சில் கூட்டம் சற்று அதிகமாக இருந்தது..அவர்கள் இருவரும் பஸ்சில். அவனும் அதே வண்டியில் ஏறினான்..ஒரு ஸ்டாப்தான் கடந்திருக்கும். அந்த வில்லன் கூட்டத்தில் தள்ளப்பட்டு சரண்யாவின் பின்னால் வந்து நின்றான். அவன் பூசியிருந்த செண்டின் மணம் அவளது மூக்கில் வந்து மோதியது..ஓரக்கண்ணால் அவனை வெகு அருகே பார்க்க முடிந்தது. நாகரீகமாக உடையணிந்த ஒரு மிருகம் என்று மனதிற்குள் அவனை காறி உமிழ்ந்தாள். அதே சமயம் , கடந்த இருநாட்களில் அவள் கேள்விப்பட்ட சம்பவங்கள். பார்த்த நிகழ்வுகளின் நினைவு அனைத்தும் ஒன்று சேர்ந்து அவனைக் குற்றவாளிக் கூண்டில் ஏற்றியது… பெற்றவர்கள் செய்யத் தவறியதை அவள்தான் செய்யவேண்டும் போல..யார் செய்தால் என்ன…?.ஆனால் அதற்கு இதுதான் சரியான தருணம்..சட்டென்று திரும்பி, "அறிவில்லை உனக்கு?" என்று உரக்கக் கத்தியபடி அவனது கன்னத்தில் ஓங்கி அறைந்தாள். கண்டக்டர் ஏதோ விபரீதம் நடந்திருக்கவேண்டுமென்று விசில் ஊத, வண்டி நின்றது..'எதற்காக முன்னால் நின்றிருந்த பெண் தன்னை அறைந்தாள்?' என்ற புதிருக்கு விடை தெரியாமல் அதிர்ந்தபடி நின்றிருந்தான் அந்த செக்கர் சட்டைக்காரன்.."அதற்காகத்தான் அந்த அம்மா அவனை அறைந்திருக்கவேண்டும்" என்று பற்பல ஊகங்களுக்கு எதிர்வினையாக அவனை மேலும் அடிப்பதற்கு சில பயணிகள் அவன் மேல் பாய்ந்தனர்..பஸ் நின்ற இடம் அவள் இறங்கும் இடமல்ல. ஆனாலும் சரண்யா மௌனமாக பஸ்ஸை விட்டு கீழிறங்கி ஆபீசை நோக்கி நடக்க ஆரம்பித்தாள். தன்னால் சிறிய அளவிலாவது தண்டனையை அவனுக்கு கொடுக்க முடிந்ததே என்ற திருப்தி அவள் முகத்தில் தெரிந்தது.