100 வார்த்தை லிப்ட் கதைகள்

100 வார்த்தை லிப்ட் கதைகள்
Published on

கடைசிப் பக்கம்

சுஜாதா தேசிகன்

ஜெப்ரி ஆர்ச்சர் 'Tell Tale' புத்தகத்தில் 100 வார்த்தை சிறுகதை பற்றிச் சொல்லி ஒரு கதையும் கொடுத்திருப்பார். சிறுகதைப் போட்டிக்கு ஆயிரம் வார்த்தைகளுக்கு மிகாமல் என்பதைப் போலத்தான். ஆனால் சரியாக நூறு வார்த்தை இருக்க வேண்டும். 99,101 வார்த்தைகள் தகுதி நீக்கம் செய்யப்படும்!

சரியாக நூறு வார்த்தை வரும் வரை கதையைச் செதுக்கிக் கொண்டே இருக்க வேண்டும். சுலபம் மாதிரி தெரியும், ஆனால் இல்லை!

எழுத்தாளனுக்கு இது ஒர் அருமையான பயிற்சி – Brevity is the soul of wit!

நூவசிக்கு நல்ல ஆரம்பம். நடுப்பகுதி, முடிவு இருக்க வேண்டும் படிக்கும்போது உள்ளூர பரவசத்தை ஏற்படுத்த வேண்டும். தலைப்பு முக்கியம். அதுவும் கதையில் ஓர் அங்கம்.

நூவசி எழுதிய பின் அதுவே ஒரு நல்ல அவுட்லைனாக அமையலாம்.  கல்யாண சாம்பாரில் பருப்பு தண்ணீர் சேர்த்து பெரிதாக்குவது போல பிறகு அதைச் சுலபமாக சிறுகதையாக மாற்றலாம்.

மேலே இதுவரை நீங்கள் படித்தது ( தலைப்பையும் சேர்த்து ) சரியாக நூறு வார்த்தை !

கல்கிக்கு கடைசிப் பக்கம் எழுத ஆரம்பித்த போது 350 வார்த்தைகளுக்கு மிகாமல் எழுதுங்கள் என்றார் ஆசிரியர். நான் டைப் அடிக்க, என் கணினியில் வார்த்தைகளின் எண்ணிக்கை ஓரத்தில் வரும். 300 வார்த்தைகள் நெருங்கிய பின், பெங்களூர் ரயில் 'பேசின் பிரிட்ஜ்'க்கு பிறகு ஊர்ந்து செல்லுவது போல அடுத்த ஐம்பது வார்த்தைகளைப் பொறுக்கி போட்டு 350க்கு முடித்துவிடுவேன்.

நாம் தினமும் பார்க்கும் சம்பவங்களை 100 வார்த்தை கதைகளாக எழுதிப் பார்க்கலாம். அன்றாடம் லிப்டில் பார்க்கும் காட்சிகளை  நூறு வார்த்தை கதைகளாக முன்பு எழுதினேன். அதிலிருந்து ஒன்றும்( தமிழ் எழுத்தாளர்) கடைசிப் பக்கத்துக்குப் புதிதாக எழுதிய ஒன்றையும்(பதினைந்தாவது மாடி ) இந்த வாரம் வாரம் தருகிறேன். இரண்டும் உண்மை சம்பவங்கள்.

தமிழ் எழுத்தாளர்

லிப்ட் திறந்தபோது திவாரி அங்கிள் புன்னகைத்து "ஹலோ" என்றார்..

கூட இருந்த பெண் இறங்கிக்கொள்ள, தற்காலிக தனிமையில்…

சட்டென்று "ஓர் உதவி வேண்டும்" என்றார்.

"எனி டைம் அங்கிள் "

"மாலை… ஃப்ரிதானே ?"

"என்ன விஷயம்?"

"நீங்க தமிழ் எழுத்தாளர் என்று கேள்விப்பட்டேன்"

உச்சிகுளிர்ந்து "ஆமாம்" என்றேன்.

"தமிழில் ஒரு பாசேஜ் இருக்கு… ஆங்கிலத்தில் மொழிபெயர்க்க வேண்டும். கான்பிடன்ஷியல்"

செயற்கை அடக்கத்துடன் "சுமாராகதான் மொழிபெயர்க்கத் தெரியும்…" என்றேன்.

"பரவாயில்லை.. காஞ்சிபுரம் போயிருந்தேன்… அங்கே ஒருவர் எழுதிக்கொடுத்தார். சின்ன பேசேஜ் புரிஞ்சா போதும்"

லிப்ட் நிற்க திவாரி வெளியேறினார்… அவரைத் தொடர்ந்து..

"காஞ்சிபுரத்தில்?" என்று கேட்டவுடன். விவரித்தார்…

"திருமணத்துக்குப் புடைவை எடுக்கப் போயிருந்தோம். வரதராஜ பெருமாள் கோயிலுக்கு இடது பக்கம் எல்லோரும் ஜோசியம் பார்த்துக்கொண்டோம். தமிழில் எழுதி கொடுத்தார்…புரியவில்லை."

"ஜோசியர் யாரு?"

"தெரியாது… அவரிடம் கிளி இருக்கு… கூண்டைத் திறந்துவிட்டால் வெளியே வந்து சீட்டை எடுத்துத் தருகிறது… அமேசிங்…"

—o0o—

பதினைந்தாவது மாடி

லிப்டில் அந்தப் பெண் உள்ளே இருந்தாள். அவள் முக்கியமில்லை. உடுப்பி வாசனையுடன் ஸ்விகிக்கு பிறகு "15 ப்ளீஸ்" என்று நாய்க்குட்டியுடன் அதைவிடச் சற்று உயரமாக அந்தப் பையன்  நுழைந்தான்.

கதவு இருமுறை பாதி சாத்திக்கொண்டு யோசித்துவிட்டுச் சாத்திக்கொண்ட போது பையனின் முகத்தில் பதற்றத்தைக் கவனித்தேன்.

"1

2

3

4

5

6" நின்றது.

இருவர் நின்றுகொண்டு இருந்தார்கள்.

"மேலே போகிறது" சைகை செய்தாள் அந்தப் பெண்.

பாதி சாத்திக்கொண்டு, திறந்து மீண்டும் சாத்திக்கொண்டது.

"எந்த பட்டன் என்று தெரியாமல் கைக்கு எட்டிய பட்டங்களை அழுத்திவிடுகிறார்கள்" அந்தப் பெண்.

7

8…தாத்தா, 9-ஸ்விகி, 10-பெண் இறங்கிக்கொண்டார்கள்.

நானும் நாய்க்குட்டி பையனும் இருந்தோம்.

"அங்கிள்! அவசரமாக 'சூசூ' போக வேண்டும்" என்றான்.

ஒரு கையில் நாயும். மறுகையில்…  கஷ்டப்பட்டான்.

"11

12

"

"அங்கிள்!"

"13

"

"அங்கிள்"

"14

"

"இங்கேயே போ" என்றேன்.

"15"

"தேங்கியூ அங்கிள்" என்று நாயுடன் வெளியேறினான்.

கதவு பாதி சாத்திக்கொண்டு, திறந்து மீண்டும் சாத்திக்கொண்டது.

Loading content, please wait...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com