தமிழக பட்ஜெட் 2022  ஒரு பார்வை

தமிழக பட்ஜெட் 2022  ஒரு பார்வை
Published on

தலையங்கம்

மு.க ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க. அரசு ஆட்சிப் பொறுப்பேற்ற பின்னர்  முதல் முழுமையான நிதியாண்டு 2022-23க்கான பட்ஜெட்  அண்மையில் தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது.

எந்த ஒரு அரசாலும் "குறையே இல்லாத பட்ஜெட்" என்ற ஒன்றை அளிக்க முடியாது.   கொரோனா பெருந்தொற்றால்  வீழ்ந்த பொருளாதாரத்தால், தொடர்ந்து வாங்கப்பட்ட  கடன்களால்  அரசின் நிதிச்சுமை அதிகரித்து வரும்  சூழலில்,  "இந்த அரசு என்ன மாதிரியான பட்ஜெட்டை திட்டங்களை அளிக்கப் போகிறது?" என்ற ஆவலும்  எதிர்பார்ப்பும்  எல்லா தரப்பினரிடமும்  இருந்தது.

மாநில அரசுக்கு வரி வருமானத்தைப்பெருக்கும் வழிகள் எதுவுமில்லாத நிலையில்  மாநில அரசின் வருவாயைக்கூட்ட 'ஆயத்தீர்வை, முத்திரைத்தாள், பத்திரப் பதிவு கட்டணங்கள், மோட்டார் வாகனங்கள் வரி போன்றவை  உயரும்' என்ற எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அதில் மாற்றங்கள் அறிவிக்கப்படவில்லை.

நிதிப்பற்றாக்குறையைக் குறைக்க, வளரும் கடன் சுமையைக் குறைக்க  வேண்டிய இக்கட்டான சூழ்நிலையில் இருக்கும் இந்த அரசு அதற்கான சீர்திருத்தங்களை மட்டுமே முன்னெடுத்தால்  வளர்ச்சி திட்டங்களுக்கும், தேர்தல் வாக்குறுதிகளில் அறிவித்த நலத்திட்டங்களுக்கு நிதி ஒதுக்க முடியாது. இந்த சவாலான சூழ்நிலையில் வெளியிடப்பட்டிருக்கும் இந்த பட்ஜெட் இரண்டையும் ஓரளவு சமன் செய்யும்  நிலையிலிருப்பது பாராட்டத்தக்கது.

2014ஆம் ஆண்டிலிருந்து வருவாய் பற்றாக்குறை ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. "முதல் முறையாக அந்தப் பற்றாக்குறை சற்று குறைந்திருக்கிறது" என்பது மகிழ்ச்சியைத்தரும் விஷயம்.

தாக்கல் செய்யப்பட்டிருக்கும் பட்ஜெட்டில் பல புதிய திட்டங்களுக்கான அறிவிப்புகள் இடம் பெற்றிருக்கின்றன. அதில் முக்கியமானது பெண் கல்விக்கு அளிக்கப்பட்டிருக்கும்  முக்கியத்துவம். அரசுப் பள்ளிகளில் படித்து உயர் கல்வியில் சேரும் பெண்களுக்கு மாதம் 1000 ரூபாய் நிதி உதவி என்ற திட்டம் பல கிராமப்புற பெண்களைக் கல்லூரியில் சேர்ந்து படிக்க ஊக்குவிக்கும். அதுவும் அந்தப் பணம் அந்தப் பெண்ணின் வங்கிக்கணக்கில்  நேரிடையாக செலுத்தப்படும். இது அந்த பெண்களின் தன் நம்பிக்கையை, நிதி நிர்வாகத்திறனை வளர்க்க உதவும்.

சென்னை நகரைப்போலவே  மாவட்டங்களில் புத்தக காட்சிகள், உயர்தர வசதிகளுடன் கூடிய நவீன  பெரிய நூலகங்கள் உருவாக்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பது இந்த அரசு புத்தக வாசிப்பை மக்கள் இயக்கமாக எடுத்துச்செல்லும் முயற்சியைக் காட்டுகிறது.

ஆனால் தொடர்ந்து பெரும் நஷ்டத்தில்  இயங்கும், மின் வாரியத்தையும், போக்குவரத்து கழகங்களையும்  மீட்டெடுத்து சீர் செய்ய எந்த திட்டமும் அறிவிக்கப்படாதது  ஏமாற்றமே.   இந்த இரு துறைகளையும் முந்தைய அரசுகள் போல  இனியும்  கடன் வாங்கியே  சமாளித்துக்கொண்டிருந்தால்   மாநிலம்  மிகப்பெரிய நிதிச்சிக்கல்களை சந்திக்க  நேரிடும்.

இந்த நிதியாண்டு இறுதிக்குள்ளாவது, அதற்கான வலுவான திட்டங்களை முதல்வரும்  நிதியமைச்சரும்   முன்னெடுக்க வேண்டும்.

Loading content, please wait...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com