“களவு செய்யாதிருப்பாயாக” என்கிறது  பைபிள்

“களவு செய்யாதிருப்பாயாக” என்கிறது  பைபிள்
Published on

–  சுஹாசினி

முதல் தமிழ் பைபிள்  எங்கே?

"களவு செய்யாதிருப்பாயாக"என்கிறது  பைபிள். ஆனால் அந்த வேதபுத்தகத்தையே களவாடி நாட்டின் மன்னருக்கே பரிசாக அளிப்பவருக்கு என்ன தண்டனை கிடைக்கும் என்று பைபிளில் சொல்லப்படவில்லை.

தஞ்சாவூரில் உள்ள சரஸ்வதி மகால் காட்சியகத்தில் தமிழில் முதன்முதலில் ஸீகன்பால்க் பாதிரியாரால்  தமிழில் அச்சிடப்பட்ட வேதாகமப் புத்தகம் ஒன்று காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தது.

தற்போது ஜெர்மனியில் உள்ள சாக்ஸோனியில் பிறந்த பார்த்தலோமியோ ஸீகன்பால்க், 1706ஆம் ஆண்டு செப்டம்பரில் தரங்கம்பாடிக்கு வந்து சேர்ந்தார். விரைவிலேயே அங்கு ஓர் அச்சகத்தை நிறுவிய அவர் தமிழ் மொழி, இந்திய மதம், கலாசாரம் குறித்த புத்தகங்களை வெளியிட்டார். 1705ல் புதிய ஏற்பாடு இவரால் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டது. இது அங்கிருந்த அச்சகத்தில் அச்சிடப்பட்டது.

அங்கிருந்த பாதிரியார்களில் ஒருவரான ஸ்வார்ட்ஸ் பாதிரியார் தஞ்சாவூரின் அரசராக இருந்த துளஜி ராஜா சரபோஜியிடம் இதன் பிரதி ஒன்றைக் கொடுத்தார். இந்தப் பிரதி, இந்திய சுதந்திரத்திற்குப் பிறகு தஞ்சாவூரில் இருந்த சரஸ்வதி மகால் அருங்காட்சியகத்தில் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தது.2005ஆம் ஆண்டு அக்டோபர் மாதத் துவக்கத்தில் இந்த பைபிள் காணாமல் போனது.

இதையடுத்து அக்டோபர் 10ஆம் தேதி சரபோஜி அரண்மனையின் துணை நிர்வாகி தஞ்சை மேற்கு காவல் நிலையத்தில், அந்த பைபிள் காணாமல் போய்விட்டதாக புகார் ஒன்றை அளித்தார். கண்டுபிடிக்க முடியாத வழக்காக கருதப்பட்டு, அது மூடப்பட்டது.

2005ஆம் ஆண்டில்  காணாமல் போன அந்தப் புத்தகம் லண்டனில் உள்ள ஒரு சேகரிப்பில் இருப்பதாகத் தெரியவந்துள்ளது.

இதற்குப் பிறகு 2017ஆம் ஆண்டு அக்டோபர் 17ஆம் தேதி சிலை கடத்தல் தடுப்புப் பிரிவின் குற்றப் புலனாய்வுத் துறையிடம், இது தொடர்பாக புகார் அளிக்கப்பட்டு வழக்குப் பதிவுசெய்யப்பட்டது. இதற்குப் பிறகு இந்த வழக்கில் மீண்டும் தேடுதல் வேட்டையைத் துவங்கியது சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு.

சரஸ்வதி மகாலின் பார்வையாளர் வருகைப் பதிவேட்டை சிலை கடத்தல் தடுப்புப் பிரிவினர் ஆராய்ந்தபோது 2005ஆம் ஆண்டு அக்டோபர் 7ஆம் தேதி சில வெளிநாட்டவர் வந்திருப்பதை அறிந்தனர். அவர்கள் ஸீகன்பால்க் தொடர்பான விழா ஒன்றில் கலந்துகொள்வதற்காக இங்கு வந்திருந்தனர். இதையடுத்து, வெளிநாடுகளில் உள்ள பல்வேறு அருங்காட்சியங்கள், சேகரிப்பாளர்களின் இணைய தளங்கள், ஸீகன்பால்க் தொடர்புடைய அமைப்புகள் ஆகியவற்றின் இணையதளங்கள் ஆராயப்பட்டன.

பல நாட்கள் நடந்த ஆய்வுக்குப் பிறகு லண்டனில் உள்ள மூன்றாம் ஜார்ஜ் மன்னரின் சேகரிப்பில் இந்த பைபிள் இருப்பது கண்டறியப்பட்டதாக சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு தெரிவித்துள்ளது. காணாமல் போன பைபிளின் படத்தை வைத்துப் பார்த்தபோது, மூன்றாம் ஜார்ஜ் மன்னரின் சேகரிப்பில் இருந்த பைபிளும் இதுவும் ஒன்று எனத் தெரியவந்தது.

இந்த பைபிளில் சரபோஜி ராஜாவின் கையெழுத்து இருந்ததையும் பார்க்க முடிந்தது.இதையடுத்து மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில், காணாமல் போன பைபிள் அதுதான் என உறுதிசெய்யப்பட்டிருக்கிறது.

மன்னர் குடும்ப பொக்கிஷமாக மதிக்கப்படும் அதை "திருட்டுசொத்து" என்று வழக்காடி திரும்ப பெறுவதைவிட, யுனெஸ்கோ ஒப்பந்தத்தின் கீழ் அந்த பைபிள் மீட்கப்படலாம் என்று சொல்லப்பட்ட  யோசனையை ஏற்று இந்திய அரசு அதற்கான் முயற்சிகளை முன்னெடுத்திருக்கிறது.

தமிழ் நாட்டில் முதன் முதலில் அச்சிடப்பட்ட தமிழ் புத்தகம் தாய் நாட்டுக்கு திரும்பப் போகிறது.

Loading content, please wait...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com