
? தி.மு.க. ஆட்சியில் அறநிலையத் துறை அதீதமாக செயல்படுவது போல் தெரிகிறதே?!
– நெல்லை குரலோன், பொட்டல்புதூர்
! அந்தத் துறை அமைச்சரின் செயல்பாடுகள் மீடியாவில் அதிக முக்கியத்துவம் பெறுவதால் இப்படியொரு கருத்து நிலவுகிறது. உண்மையில் முன்னெப்போதையும்விட இப்போது அறநிலையத்துறை சிறப்பாகச் செயல்படுகிறது.
? மற்ற பண்டிகைகளைவிட கிருஷ்ண ஜெயந்தியை மக்கள் சந்தோஷமாகக் கொண்டாடுவது ஏன்?
– டி.எம்.சி. வாசுதேவன், பெங்களூரு
! இறைவனை பல வடிவங்களில் வழிபடும் இந்து மதத்தில் தெய்வத்தையே தன் குழந்தையாக பாவித்துச் சீராட்டிக் கொண்டாடும் இந்த விழாவில் பக்தியைவிட ஒரு குழந்தையிடம் தாய் காட்டும் பாசம் மேலோங்கியிருப்பதுதான் காரணம்.
? வாசகர்களின் கடிதங்கள் பகுதி "உங்கள் குரல்" இடம் பெற முடியாமல் போவதன் ரகசியம் என்ன?
– கார்த்திகேயன், சென்னை
! கல்கி ஆன்லையனில் வாசகர்கள் கருத்துக்களை அந்தந்த பகுதியிலேயே பதிவு செய்யும் வசதியைப் பயன்படுத்தி அதில் பலர் தங்கள் கருத்துகளைப் பதிவிடுகிறார்கள். அதனால் உங்கள் குரல் தனிப்பக்கமாக இடம் பெறவில்லை. இருப்பினும் உங்களைப் போல பல வாசகர்கள் கேட்டிருப்பதால் விரைவில் மீண்டும் அந்த பகுதி கல்கி இதழிலேயே இடம் பெறும்.
? குடியரசுத் தலைவர் 'நீட் தேர்வு' விலக்குக்கு ஒப்புதல் அளிப்பாரா?
– ஆ. மாடக்கண்ணு, பாப்பான்குளம்
! எந்த ஒரு மசோதாவுக்கும் குடியரசுத்தலைவர் தன் விருப்பப்படி ஒப்பதல் அளிப்பதில்லை. ஒன்றிய அரசின் விருப்பபடிதான் அவர் இயங்குவார்.
நீட்டில் இப்போதை ஒன்றிய அரசின் நிலைப்பாடு அனைவரும் அறிந்தது தானே.
? சர்வதேச போட்டோ தினம் என ஒன்று கொண்டாடப்படுகிறதா?
– எம் ஆரோக்கியதாஸ், கூடலூர்
! வார்த்தைகளால் வெளிப்படுத்த முடியாத பல உணர்வுகளை, ஒரு புகைப்படம் எளிதாக உணர்த்திவிடும். என்பதை இதுபோன்ற படங்கள் நமக்குச் சொல்லுகிறது.
பிரான்ஸ் நாட்டில் பெரிய கேமிரா மூலம் கண்ணாடி பிளேட்களில் படம் எடுத்து அதை போட்டோவாக அச்சிடும் முறையை கண்டுபிடித்த தனி நபர் அதன் காப்புரிமையைப் பெற்றிருந்தார். அதனால் போட்டோ எடுக்கும் எவரும் அவருக்கு ராயல்டி தர வேண்டியிருந்தது. அந்த உரிமையை அவரிடமிருந்து வாங்கி நாட்டுடைமையாக்கியது பிரான்ஸ் அரசு. அந்த நாள் 1839 ஆக 19. 2010ல் அதை நினைவு கூறும் வகையில் உலக புகைப்படக்காரர்கள் சங்கம் இந்த தினத்தைப் புகைப்படத் தினமாக அறிவித்தது.
? தமிழ்க் கடல் நெல்லை கண்ணன் மறைவு குறித்து…
– நெல்லை குரலோன், பொட்டல்புதூர்
! தமிழ் நன்கறிந்த ஆனால், அரசியல் மேடைகளில் தரம் தாழ்ந்து அநாகரிகமாக பேசியவர். தன் சாதிப்பற்று கொண்டு பேசிய வார்த்தைகளால் பலரை காயப்படுத்தியவர். காலம் முழுக்க கருணாநிதியை விமர்சித்த நெல்லை கண்ணன், தனது இறுதிக்காலத்தில் மு.க.ஸ்டாலினின் கருணையை வேண்டிப் பெற்றார். காலச்சக்கரம் முன்னோக்கியே சுழலும். அரசியல் சக்கரம் பின்னோக்கியும் சுழலும்.
? கசந்த காலங்கள் இனி வசந்த காலங்களாக மாறும் என்று
ஓ. பன்னீர்செல்வம் கூறியுள்ளாரே…!
– வாசுதேவன், பெங்களூரு
! காலங்கள் மாறுவதில்லை. அதை கசப்பாகவும், இனிப்பாகவும் மாற்றுவது மனித மனங்கள் தான்.
? மனம் சொல்வதை கேட்பது சரியா..?
– மீ.யூசுப் ஜாகிர், வந்தவாசி
! நீங்கள் மனம் என்று குறிப்பிடுவது உள்ளுணர்வுகள் என புரிந்துகொண்டால் அதைக் கேட்பதுதான் சரியாகயிருக்கும். காரணம் பலமுறை நிகழ்பவை அதேபோல் தானிருக்கும்
? கவர்னருக்கு சொந்தக் கருத்து இருக்கலாமா?
– கரிசல் புலி, பெரு நாழி
! எவருக்கும் சொந்தக் கருத்து இருக்கலாம். ஆனால் அரசியலமைப்பு சட்டப்படி பதவி வகிப்பவர்கள் தங்கள் சொந்தக் கருத்துகளைப் பொதுவெளியில் வெளியிட்டால் அது அரசின் கருத்தாக புரிந்து கொள்ளும் வாய்ப்பு இருக்கிறது என்பதால் வெளியிடக்கூடாது என்பது மரபு.
? தில்லி அரசின் துணைமுதல்வர் இல்லத்தில் ரெய்ட் நடந்திருக்கிறதே?
– கே. ஜெயபாலன், திருநகர்.
! இவர்தான் தில்லியின் கல்வி அமைச்சர். 'மது விற்பனை லைசென்ஸ் விநியோகத்தில் ஊழல் செய்திருக்கிறார்' என்ற குற்றச்சாட்டில் தகவலறிக்கை பதிவு செய்து சிபிஐ விசாரணை செய்து கொண்டிருக்கிறார்கள். இந்தக் குற்றச்சாட்டில் எந்த அளவுக்கு உண்மை என்பது தெரியாது. ஆனால், இந்த ரெய்டு நடத்த தேர்ந்தெடுக்கப்பட்ட நேரம் அலாதியானது. நியூ யார்க் டைம்ஸ் முகப்புப் படத்தில் மனிஷ் சிசோதியா படம் இடம் பெற்றிருக்கிறது. பன்னாட்டு அளவில் அவர் புகழ் பரவத் துவங்கிய நேரத்தில் அவர் பேரை ரிப்பேர் செய்யவே இது உதவும். 'எங்கள் தலைநகர கல்வி அமைச்சர் அவ்வளவு ஒன்றும் பெரிய ஆள் இல்லை; அவர் ஒரு சாதா ஊழல்வாதிதான்,' என்று கட்டமைக்க முயற்சி செய்திருக்கிறார்கள். இதில் பா.ஜ.க.வின் கீழான அணுகுமுறை தெரிகிறது.
? தமிழக நிதி அமைச்சர் பி.டி.ஆர். தியாகராஜன் மீண்டும் சர்ச்சையில் சிக்கியிருக்கிறாரே?
– கண்ணகி, திண்டுக்கல்
! தமிழ்நாடு நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் சமீபத்தில் ஒரு தொலைக்காட்சி விவாதத்தில், இலவசங்கள் குறித்து அவரிடம் கேட்கப்பட்ட கேள்வியும், அதற்கு அவர் அளித்த பதிலும் சமூக ஊடகத்தில் பரவலாகப் பேசப்பட்டு வருகின்றது.
அந்த நேர்காணலில் "இலவசங்கள் அளிப்பது உட்பட பல திட்டங்களின் மூலம் தமிழகம் பலதுறைகளில் வளர்ச்சி அடைந்திருப்பதையும், இப்படி எதையும் சாதிக்காத ஒன்றிய அரசு தமிழக அரசுக்கு அறிவுரை சொல்ல முடியாது" என்றும் சொல்லியிருக்கிறார். அன்று அவர் சொன்ன புள்ளிவிவரங்கள் நெறியாளரையும் பங்கேற்பாளர்களையும்
பார்வையாளர்களையும் ஆச்சரியப்படுத்தியது. ப. சிதம்பரத்தை அடுத்து புள்ளிவிவரங்களுடன் தெளிவாகப் பேசுபவர் பி.டி.ஆர்.