‘ஜுராஸிக் பார்க்’ படம் நினைவிருக்கிறதா?

‘ஜுராஸிக் பார்க்’ படம் நினைவிருக்கிறதா?
Published on

கிறிஸ்டி நல்லரெத்தினம்

'ஜுராஸிக் பார்க்' படம் நினைவிருக்கிறதா? 'பல ஆயிரமாண்டுகளுக்கு முன் வாழ்ந்து மறைந்த  டைனோசர்  மிருகத்தின் மரபணுவிலிருந்து அதை  மீண்டும் ஒரு உயிரனமாக எழுப்ப முடியுமா' என்ற ஆராய்ச்சியில் வென்றதான கற்பனை கதை.

கனவாகக் கற்பனையில் எழுந்த  அந்த கதையைப்போலவே  இப்போது ஒரு மறைந்து போன ஒரு மிருக  இனத்தின் மரபணுவிலிருந்து அதை உருவாக்க  முயற்சி செய்கிறார்கள் உயிரியல் விஞ்ஞானிகள்.

செப்டம்பர் 7, 1936ம் ஆண்டுஇ ஆஸ்திரேலியாவின் தஸ்மேனிய மாநிலத்தில் இருந்த 'ஹோபார்ட் பேமொறிஸ்' மிருகக்காட்சிச்சாலை அன்றும் வழக்கம் போல் விடிந்தது. ஆனால், அன்று ஒரு சோகநாள்! அங்கு காட்சிக்கு வைக்கப்பட்டிருந்த உலகின் கடைசி தஸ்மேனியன் புலி (Tasmanian Tiger) இனி இல்லை. முதுமை காரணமாக தன் இறுதி மூச்சைவிட்டது. உலகம் ஓர் உயரினத்தை நிரந்தரமாக இழந்தது நின்றது!

2000 ஆண்டுகளுக்கு முன்பே இவை ஆஸ்திரேலியாவின் மற்ற மாநிலங்களில் முற்றாக அழிக்கப்பட்டுவிட்டன. தஸ்மேனிய தீவில் மட்டுமே உயிர் வாழ்ந்த கடைசி மிருகமும் உயிர்நீத்தது!

தஸ்மேனியன் புலி என இவற்றிற்கு இங்கு குடியேறிய ஆங்கிலேயர் பெயரிட்டாலும் இவை பைம்மாவினம் (marsupials) எனும் பாலூட்டிகளின் ஓர் உட்பிரிவாகும். இவற்றுக்கு தைலசின்கள் (Thylacines) என்ற விஞ்ஞானப் பெயரும் உண்டு.

இவை ஆஸ்திரேலியா மற்றும் அமெரிக்காவிலும் காணப்படும் தனித்துவப் பண்பு கொண்ட உயிரினமாகும். இந்த வகை உயிரினங்களின் இளம் குட்டிகள் இவற்றின் வயிற்றுப்பகுதியில் உள்ள பை போன்ற அமைப்பில் பாதுகாக்கப்படுகிறது. இந்த வகை உயிரினங்களில் நன்கு அறியப்பட்ட விலங்குகள் கங்காரு, வாலபி, கோவாலா, போசம், ஒப்போசம், வாம்பட்டு, தஸ்மேனிய டெவில் ஆகியவை ஆகும். மேலே உள்ள உயிரினங்களில் இருந்து நமது நாயகன் சிறிது வேறுபடுகிறார். ஆம், ஆண் தஸ்மேனிய புலிக்கும் பெண் புலியைப் போல் வயிற்றில் பை இருக்கும். இதனால் தம் வாரிசுகளை பேணுவதில் இருவருக்கும் சமபங்குண்டு என எண்ணவேண்டாம். ஆணுறுப்பை குளிரான காலநிலைகளில் இருந்து பாதுகாப்பதற்கும் சக மிருகங்களுடன் சமர்செய்யும்போது ஒரு பாதுகாப்பாக இருப்பதற்காகவே இந்த ஏற்பாடு.

இவை பார்ப்பதற்கு வேட்டை நாயைப்போல் தோன்றினாலும் அவற்றைப் போல் நாலுகால் பாய்ச்சலில் விரைவாய் ஓட முடியாது. கங்காருவைப்போல் துள்ளிக்குதித்தே நகரும். இதனாலேயே ஐரோப்பியர் அறிமுகப்படுத்திய வேட்டை நாய்களுக்கு இவை பலியாகின. மேலும் இவற்றின் தாடையில் உள்ள தசைநார்கள் சிங்கம் புலி போன்ற விலங்குகளுக்கு உள்ளதைப் போல் பலம் வாய்ந்ததாய் இருப்பதில்லை. எனவே, குரூரமான விழைவுகளை இதன் கடி ஏற்படுத்தாது.

சுமார் 2000 ஆண்டுகளுக்கு முன், பழங்குடியேற்றவாசிகளின் குடியேற்றத்தினால் ஆஸ்திரேலியாவில் இவற்றின் எண்ணிக்கை படிப்படியாக குறைந்து இறுதியில் மறைய ஆஸ்திரேலிய கடல் பரப்பிற்கு அப்பாற்பட்ட தீவான தஸ்மேனியாவில் மட்டுமே இவை தப்பிப்பிழைத்து வாழ்ந்தன. இத்தீவின் பொருளாதாரத்தின் உயிர்நாடியான செம்மறி ஆடு வளர்ப்பிற்கு இப்பிராணிகள் அச்சுறுத்தலாக இருந்தமையினால் இவையும் வேட்டையாடி அழிக்கப்பட்டன. இவற்றை கொன்றால் 1 பவுண்ட் சன்மானம் வேறு அரசால் வழங்கப்பட்டது!

இன்னமும் தஸ்மேனியாவில் இப்பிராணிகள் சில தப்பி வாழ்கின்றன என்று ஒரு சிலர் சொல்லுகின்றனர்.  இவர்கள் இப்பிராணிகள் வாழ்வதற்கான ஆதாரங்களை தேடி அலைந்து கொண்டிருக்கின்றனர். இவை உயிருடன் இருப்பதற்கான ஆதாரங்களை வழங்கினால் பணப்பரிசு வழங்குவதாக பல நிறுவனங்கள் அறிவித்துள்ளன. ஆனால் இன்றுவரை இப்பரிசை எவரும் தட்டிச்செல்லவில்லை! எனவே நீங்கள் தஸ்மேனியாவிற்கு விஜயம் செய்வதாய் இருந்தால் 'புலிப்பொறி' ஒன்றை கொண்டு வருவது உகந்ததே!

இவ்வுலகைவிட்டு மறைந்துபோன இந்த உயிரினத்தை மீண்டும் விஞ்ஞானத்தின் உதவியுடன் மீட்டுருவாக்கம் செய்ய முயற்சிகள் நடைபெறுகின்றன என்பது ஒரு உற்சாகமான செய்தி!

மைக்கேல் கிரிக்டன் எழுதிய நாவலான Jurassic Parkஇல் எவ்வாறு மரபணு பொறியியலைப் பாவித்து விஞ்ஞானிகள் டைனோசர்களை உருவாக்கினார்களோ அதே செயல்பாட்டை பாவித்து இந்த தைலசின்களை மீள உருவாக்க முடியும் என்பது விஞ்ஞானிகளின் நம்பிக்கை.  இந்த புலி எப்படியிருக்கும்?  இந்த வீடியோவைப்பாருங்கள்….

பேராசிரியர் ஆண்ட்ரூ பாஸ்க் தைலசின்களுக்கும் 'நம்பட்' (Numbat) எனும் சிறு அணில் போன்ற பிராணியின் நிறமூர்த்தத்திற்கும் 95% ஒற்றுமை இருப்பதை கண்டுபிடித்ததின் விளைவாக இந்த அணிலை செவிலித்தாயாக பாவித்து மறைந்த தஸ்மேனியன் புலியை மீள உருவாக்க முடியும் என நம்பிக்கை தெரிவித்தார். 'உதவி இனப்பெருக்க தொழில்நுட்பங்கள் (Assisted Reproductive Technology – ART) மூலம் உயிருள்ள ஸ்டெம் கலத்துடன் தஸ்மேனியன் புலியின் நிறமூர்த்தத்தை இணைத்து பின் நம்பட் எலியின் கருப்பையில் பதியம் போடப்படும். நாளடைவில் கருப்பையில் கலங்கள் வளர்ந்து பெருகி ஒரு பூரண உயிரினத்தை உருவாக்கும். எலிக்கும் புலிக்கும் இடையே உள்ள உடல் பரிமாண வேற்றுமை பற்றி உங்களுக்கு சந்தேகங்கள் எழுவது சகஜமே. அதிஷ்டவசமாக பாலூட்டிகளின் குட்டிகள் அளவில் மிகமிக சிறிதானவையே. உதாரணமாக ஒரு கங்காருவின் குட்டி பிறக்கும் போது பருத்திக்கொட்டை அளவே இருக்கும்! பின் தாயின் வயிற்றிற்கு வெளியே உள்ள பைக்குள் குடியேறி வளர்ந்து பெரியவனாகும்.

மெல்பேர்ன் அருங்காட்சியகத்தில் பாதுகாப்பாக கண்ணாடிக்குடுவையில் வைக்கப்பட்டிருந்த தஸ்மேனியன் புலிக்குட்டியிலிருந்தே ஒப்பீட்டிற்கு அவர் அதன் நிறத்தின் மூலப்பிரதியைப்  பெற்றுக்கொண்டார்.

ஆனால், பச்சத் தண்ணியில் பலகாரம் சுட முடியாதே! இதுபோன்ற ஆராய்ச்சிகளுக்கு நிதியுதவி தேவையல்லவா? இதுபோன்ற ஆராய்ச்சிகளுக்கு அதிக நிதியுதவிகள் தேவை. எனவே, ஆராய்ச்சி எதிர்பார்த்த வேகத்தில் நடைபெறுவது தடைப்பட்டது.

ஆனாலும் இந்த ஆராய்ச்சியில் 2017 முதல் ஈடுபட்டு இக்கனவை நனவாக்க முன்னின்று உழைப்பவர் மெல்பேர்ன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் ஆண்ட்ரூ பாஸ்க் (Prof. Andrew Pask).

அதிர்ஷட வசமாக இத்திட்டத்திற்கான நிதியுதவி எதிர்பார்க்காத ஒரு மையத்தில் இருந்து அண்மையில் கிடைத்தது!

ஆம், ஆஸ்திரேலியாவில் பிறந்து இன்று ஹாலிவுட்டில் கொடிகட்டிப் பறக்கும் நடிகர்கள்  ஹெம்ஸ்வேர்த் சகோதரர்கள் (Hemsworth brothers) இந்த ஆராய்ச்சிக்கான நிதி உதவிகளை செய்வதாக அண்மையில் அறிவித்தனர். Chris Hemsworth பல 'மார்வல்' திரைப்படங்களில் "தோர்" (Thor) பாத்திரமேற்று நடித்து சக்கைபோடு போட்டவர்  இவர்கள் யார் என்று தெரியவில்லை என்றால் உங்கள் பேரக்குழந்தைகளைக்  கேட்டால் சொல்வார்கள்.

இப்போது … நிதி கிடைத்துவிட்டது. பேராசிரியர் ஆண்ட்ரூவின் ஆராய்ச்சி வெற்றிகரமாய் நடந்தேறினால் இன்னும் 10 ஆண்டுகளில் மறைந்துபோன தஸ்மேனியன் புலியை எம் கண்முன்னே கொண்டு நிறுத்துவார் என்பதில் ஐயமில்லை! இத்துறையில் மாஸ்டர்களான அமெரிக்காவின் Colossal Biosciences (https://colossal.com/) எனும் நிறுவனம் பேராசிரியர் ஆண்ட்ரூவுடன் இணைந்து இப்பயணத்தை ஆரம்பித்துள்ளனர்.

நவீன விஞ்ஞான வளர்ச்சியின் விளைவாக மரபணு பொறியியல் துறை இன்று இமயம் தொடும் சாதனைகளை படைத்துள்ளது. விசேடமான மருத்துவத்துறையில் இவற்றின் உச்சம் தொட்ட சாதனைகள் பல.

பேராசிரியர் ஆண்ட்ரூ பாஸ்கின் கனவு நனவானால் நாம் திரையில் பார்த்த Jurassic Park நனவாக அதிக நாட்கள் இல்லை! ஆனால் அதுவரை நம் தயவில் வாழும் உயிரினங்களின் நல்வாழ்விற்காய் சிந்தித்து செயல்படுவோம்.

Loading content, please wait...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com