
மானுடத் தோற்றம் பற்றி எத்தனையோ புராணங்களும், அறிவியல் தியரிகளும் உள்ளன. அதில் மிகவும் பிரபலமாகவும் ஏற்றுக் கொள்ளப்பட்ட தியரி, மனித இனம் ஆப்பிரிக்காவில் தோன்றியது என்பது. பின் அங்கிருந்து மெல்ல, மெல்ல மேற்கும், கிழக்கும் பரவியது என்பது இக்கருத்து. ஆதாம் எனும் ஆதித்தாய் ஓர் கருப்பி என்பது இந்த ஆய்வின் முடிவு. சமகால டி.என்.ஏ. மூலக்கூற்றுவியல் மனித இனம் ஒரே இடத்தில் பிறந்துதான் போயிருக்க வேண்டும் என்பதில்லை, அது ஆசியாவின் 'போர்னியோ காடுகளில் தோன்றியும் பரவியிருக்கலாம்' என்று சொல்கிறது. எப்படியாயினும் மனிதனுக்கு ஓரிடத்தில் இருக்கும் சுபாவமில்லை. கி.மு. 600 எனக் கணிக்கப்படும் ஆதிச்சநல்லூர் முதுமக்கள் தாழிகளிலிருந்து எடுக்கப்பட்ட மண்டை ஓடுகள், பல்வேறு இன மக்களைச் சுட்டுகிறது. ஆப்பிரிக்கர்கள், ஐரோப்பியர்கள், மங்கோலியர், தென்னாசியர் என பல இனப் போக்குவரத்து கி.மு. 600 லேயே நடந்திருக்கிறது. பெருங்கற்கால மக்கள் மிக சுலபமான முறையில் கடல் கடந்து சென்றிருப்பது அறியக் கிடைக்கிறது. அதன்பின் சங்ககாலத்தில் நல்ல நாவாய்கள் கொண்டு கடலோடியான தமிழன் கிழக்கும் மேற்கும் போயிருப்பதற்கான ஆதாரங்கள் கிடைக்கின்றன. எனது ஆய்வுகள் இக்காலக்கட்டத்தில்தான் தமிழன் கொரியா, ஜப்பான் சென்றிருக்க வேண்டும் எனச் சுட்டுகின்றன. பின்னால் அரேபியரும், யவனரும், சீனரும் பெருங்கடல் பயணம் செய்துள்ளனர். 'சீனர்கள் கொலம்பஸ் போவதற்கு முன்னமே அமெரிக்கா சென்றுள்ளனர்' எனச் சில ஆய்வுகள் சுட்டுகின்றன.
எப்படியாயினும் நாமறிந்த சரித்திர காலத்தில், ஐரோப்பியர் நாவாய் பயிற்சி பெற்று, உலகைச் சுற்றி காலனிகள் அமைத்து, அடிமை வாழ்வியலை உருவாக்கியது தெரியும். அப்போதிருந்து இன்றுவரை இந்தியக் கண்ணோட்டம் என்பது ஆங்கில மொழிவழி உலகறிதல் என்றே இருக்கிறது. ஆனால், ஒரு காலத்தில் உலகைத் தமிழ் மூலம் தமிழன் அறிந்திருக்கிறான். தமிழ், சீனம், அரபி இவையே பண்டைய கடல் வாணிக மொழிகள் எனத் தெரிகிறது. கிழக்கின் அறிவியல் ஆன்மீகப்பரிமாணம் கொண்டு இந்தியாவின் தலைமையில் திசை மாற, மேற்கின் அறிவியல் இப்போது நாம் காணும் வளர்ச்சியைக் கண்டுள்ளது. இந்த அறிவியல் வளர்ச்சி புதிய அலையாக கிழக்கே பாயும் போது முதலில் மெய்ஜி ஜப்பான் விழித்துக் கொள்கிறது, பின் கொரியாவும், சீனாவும் மேற்கு வாழ்வியலை அறிகின்றன. இந்தியாவிலும், மத்திய கிழக்கிலும் ஐரோப்பிய தாக்கம் இருந்தாலும் ஜப்பான் முன்னேறிய வேகத்தில் அது அமையவில்லை. சமகால ஜப்பான், கொரியா, தைவான் என்பவை மேலை நாடுகள் போன்ற அமைப்பில், வளர்ச்சியில் இருக்கின்றன. அதீத சுத்தம், அழகு, திறமை, பொருளாதாரம், கல்வி போன்றவற்றில் மேற்குலகிற்கு நிகராக இவை உள்ளன. ஐரோப்பிய அரசியல் கண்டுபிடிப்பான மக்களாட்சி என்பது மெல்ல, மெல்ல ஆசிய நாடுகளுக்குப் பரவி வெவ்வேறு வகையில் அது கட்டமைக்கப்பட்டு இருக்கின்றன. எவ்வாறு மக்கள் வித்தியாசமாக இருக்கிறார்களோ, அதுபோல் மக்களாட்சியும் வித்தியாசமாக இருக்கின்றன.
இதில் குட்டி நகர-நாடான சிங்கப்பூரையும் சேர்த்துக் கொள்ளவேண்டும். சீனக் குடிகள் கம்யூனிச சித்தாந்தம் கொண்ட பெருஞ்சீனா, ஜனநாயக தைவான், ஹாங்காங், சிங்கப்பூர் என்று பரவிக்கிடக்கின்றனர். உலகின் ஒவ்வொரு ஐந்தாவது மனிதனும் இந்த ஏதாவதொரு சீனனாக இருப்பான். அவன் மலேசியாவிலும், இந்தோனீசியாவிலும் வாழ்ந்தாலும் தைவான், சிங்கப்பூர் சீனர் போல் முழு சுதந்திரத்துடன் வாழவில்லை. இஸ்லாமிய தாக்கத்தில் அவர்கள் அடங்கி வாழ்கின்றனர். இந்தோனீய அரசு சீனர்கள் சுதந்திரமாக தங்கள் சீனப்பெயர்களை வைத்துக் கொண்டு அலையக் கூடாது இந்தோனீயப் பண்பாடு கொண்ட பெயர்களில்தான் வாழ வேண்டும் என்று சொல்கிறது.
சமகாலப் பொருளாதார வளர்ச்சிக் கணக்குப்படி மேலை நாடுகளோடு ஜப்பானும், கொரியாவும், சீனாவும், சிங்கப்பூரும் சேர்ந்துவிட்டன. ஜப்பான், கொரியா, சீனா போன்ற நாடுகள் தங்கள் அபரித வளர்ச்சியைத் தத்தம் தாய்மொழி கொண்டே சாதித்துள்ளன. இது தாய்லாந்து, இந்தோனீசியா, மலேசியாவிற்கும் பொருந்தும். ஆயினும் சிங்கப்பூர், மலேசியா, இந்தியா போன்ற நாடுகளில் ஆங்கிலத்தின் ஆளுமை தூக்கலாக உள்ளது உண்மை. தாய்மொழியா? ஆங்கிலமா? எனும் போராட்டம் தொடர்ந்து நடந்து வருவது கண்கூடு.
செம்மொழியான தமிழ் மொழி வேர்ச்சொல் வளம் கொண்ட மொழி என்பதால் நிறைய புதிய சொல்லாக்கம் நடந்து வருகிறது. உயர் கல்வி தாய் மொழியில் அமையவில்லை எனினும் ஆங்கில மொழி மேலாண்மையைக் குறைத்து சீரிளமைத் திறத்துடன் தமிழைத் தக்க வைத்துக்கொள்ள பெரிய போராட்டம் நடந்து கொண்டு இருக்கிறது. ஆனால், ஜப்பான், கொரியா, மலேசியா, இந்தோனீசியா மொழிகள் ஆங்கிலச் சொற்களை தங்கள் உச்சரிப்பில் மாற்றி அப்படியே பயன்படுத்துகின்றன. ரிமோட் கண்ட்ரோல் என்பது ஜப்பானிய மொழியில் ரிமகோன் ஆகிவிடும். மலேய்/இந்தோனீசியன் மொழியில் இங்கிலீஸ் என்பது இங்கரீஸ் ஆகிவிடும். abolition என்பது abolisi என்றும், act (சட்டம்) என்பது akta என்றும், activity என்பது aktivitas என்றும் எளிதாக ஏற்றுக் கொள்ளப்பட்டுவிட்டன.
நான் கொரியாவின் கடல் சூழலியல் பயிற்சி மையத்தை பரிபாலித்து வரும்போது நிறைய மலேசிய, ஸ்ரீலங்கா மாணவர்களுக்கு வாய்ப்புக் கொடுத்தேன். அரசு முறைப்படி அணுகினால் இலங்கையிலிருந்து சிங்களவரும், மலேசியாவிலிருந்து மலேய் மாணவர்கள் மட்டுமே வருவதைக் கண்ணுற்று தமிழ் மாணவர்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டுமென நினைத்து தனிநபர் தொடர்பு, தமிழ் பத்திரிக்கைத் தொடர்பு எனும் வழிமுறையில் தமிழ் மாணவர்களை வரவழைத்தேன். இதில் பயனுற்று இன்று நல்ல நிலையில் இருக்கும் தமிழர்களைக் காணும்போது மகிழ்ச்சியாக உள்ளது. நான் மலேசியப் பல்கலைக் கழக ஆசிரியர்களுக்கும் வாய்ப்புக் கொடுத்தபோது புத்ரா பல்கலைக் கழகம் என்னை அங்கு வந்து சூழலியல் துறையில் பேராசிரியராக அமர அழைத்தது. எனக்கு சிறு வயதிலிருந்து சிங்கப்பூர் மலேசியாவை குறித்து கனவு உண்டு. திருப்பூவணம் கிராமத்தில் பர்மா, மலேசியா, சிங்கப்பூர் தமிழ் தொடர்பிருந்தது. முஸ்லிம் மக்கள் வழியில் மலேசியா, சிங்கப்பூர் தொடர்பைக் கண்ணுற்றேன். இந்த நாடுகளுக்கெல்லாம் நானும் போவேனா? என ஏங்கியதுண்டு. அக்கனவும் நிறைவேறியது.
சிங்கப்பூர் கொஞ்சம் ஆங்கிலத் தாக்கமுள்ள நாடு. சிங்கப்பூர் ஏர்லைன்ஸில் தமிழில் அறிவிப்பு வந்தாலும் சென்னைவாசிகளை அவர்கள் நடத்தும் விதம் அவ்வளவாக மகிழ்ச்சியூட்டும் வகையில் அமைவதில்லை. நம்மாளும் காணாததைக் கண்டது போல், பியர், பியர் என அலைவது மானக்கேடாக இருக்கும். சிங்கப்பூர் தண்டனை கொடுத்துத்தான் தமிழனைத் திருத்த முடியும் என நம்புகிறது. நம்ம ஊரில் வெற்றிலை போட்டு எச்சத்துப்பும் வழக்கம் உண்ட என அறிந்து, இந்த நாடுகளில் வெற்றிலை, பான் பயன்பாடே இல்லாமல் செய்துவிட்டது. சிங்கப்பூரில் குப்பை போட்டு எச்சல் துப்பினால் அபராதம் உண்டென அறிந்து நம்ம ஆள் அங்கு இந்தச் சேட்டைகள் செய்வதில்லை. சென்னை வந்து சேர்ந்த அடுத்த நிமிடம் சுதந்திரமாக கிடைக்கும் இடத்தில் சிறுநீர் கழிப்பதும், குப்பையைக் கண்ட இடத்தில் வீசுவதும், வேகமாகப் போகும் ரயிலிருந்து எச்சல் துப்புவதும், கைகழுவுவதும் என்று சுயநிலைக்கு வந்துவிடுகிறான்.
தமிழ் அழகியல் என்றொரு சமாசாரம் பண்டையத் தமிழகத்தில் இருந்திருக்கிறது. ஆனால், இடையில் சுய மானம் என்பது காற்றில் பறக்க விலங்குகள் போல் வெளியில் சிறுநீர், மலம் கழிக்கும் பழக்கம் பரவலாகிவிட்டது. இலங்கையில் கோயில்கள் சுத்தமாக பராமரிக்கப்படுகின்றன. ஆனால், தமிழகத்தில் கோயிலைச் சுற்றிக் கழிப்பிடம் எனும் நிலை. இஸ்லாம் மதத்தில் தொழுகைக்கு முன் மல, ஜல சுத்திகரிப்பு அவசியம் என்பதால் மலேசியாவில் எங்கு பார்த்தாலும் தொழுமிடத்திற்கு அருகில் இவ்வசதியைச் செய்துள்ளனர். திருப்பதி கோயிலில் மட்டும் அவ்வசதி இருப்பதாகக் கேள்விப்பட்டேன். பிற எக்கோயிலிலும் அதுவொரு டெபூ சப்ஜெக்ட்! ஏனென்று தெரியவில்லை. சடங்கு, வழிபாடு எனும் கோதாவில் சிற்பங்களுக்கு சந்தனம், மஞ்சள், வெண்ணெய் இவை பூசி அசிங்கப்படுத்தி விடுகின்றனர். பல அழகிய கோயில்களின் விதானம் தெரியா வண்ணம் எண்ணெய் விளக்கின் கரும்பூச்சு. நம் அழகியல் மறைந்துவிட்டது. இல்லையெனில் 'கூவம்' எனும் அழகிய நதியை சாக்கடையாக ஆக்கி வைத்திருக்க மாட்டோம். ஏழை நாடான பிலிபைன்ஸில்கூட நதிகளை இப்படி மோசம் செய்வதில்லை. சுவிஸ் நாட்டுக்கு முதல்முறை போனபோது 'ஏன் இந்த நாடு இவ்வளவு அழகாக இருக்கிறது?' என விசாரித்தேன். ஏன் எல்லோர் வீட்டிலும் வெளியே பூந்தொட்டி வைத்திருக்கிறீர்கள்? எனக் கேட்டேன். "நீங்கள் பார்த்து மகிழத்தான்" என்று பதில் வந்தது. ஜெர்மன் தெருக்களில் படுத்துக்கொள்ளலாம். அவ்வளவு சுத்தமாக இருக்கும். ஜப்பான், கொரியா, தைவான் நாடுகளிலும் அதேகாட்சிதான்! நமக்கென்ன குறை? ஏன் இச்சுரணையே இல்லாமல் இருக்கிறோம்? 1989ம் ஆண்டு தூர்தர்ஷனுக்குக் கொடுத்த நேர்காணலில் சொன்னேன், "இந்தியா ஒரு சொர்க்கம். ஆனால், மேலாண்மை இல்லாமல் குப்பை மேடாக இருக்கிறது" என்று. வளர்ச்சியுற்ற நாடுகளில் சுத்தம், சுகாதாரம் படிப்பிக்கப்பட்டு நடைமுறைக்கு வருகிறது. மக்கள் சமூகப் பொறுப்புள்ளவர்களாக உள்ளனர். "சொர்க்கமே என்றாலும் நம்ம ஊரு போலாகுமா?" எனக் கேட்டுவிட்டு, "வெத்தலைய மடிச்சு மாமன் அதைக் கடிச்சு துப்ப ஒரு வழியில்லையே" என ஏதோ எச்சல் துப்புதல் ஓர் மகாப் பெரிய அழகியல் விழுமம் போல் பேசுவதுதான் நம் குறை!
(தொடரும்)