நம்பிக்கை

நம்பிக்கை
Published on

சிறுகதை

 – செல்வராஜ் ஜெகதீசன்
ஓவியம் : தமிழ்

நீண்ட நாட்களுக்குப்பின் தயாளனின் அலைபேசி அழைப்பு.

"ஹலோ எப்படி இருக்கே"

"அப்படியேதான் இருக்கேன்"

"லொள்ளு…? சரி அதை விடு, ஒரு முக்கியமான நியூஸ் உன்கிட்ட சொல்லணும்"

"என்ன, நயன்தாராவுக்கு கல்யாணமா?"

"அதில்லப்பா, இது ஆன்மீகம் சம்பந்தப்பட்ட விஷயம்"

"இன்னொரு சாமியார் மேட்டரா?"

"ஆமா.  ஆனா நீ நினைக்கறா மாதிரி இல்ல?"

"நான் எதுவுமே நினைக்கலயேப்பா?"

"சும்மா லொள்ளு பண்ணாம நான் சொல்றத கேட்கிறியா?"

"சொல்லு. "

தயாளன் வேலை பார்ப்பது துபாயில். நான் அபுதாபியில்.  காரில் ஒண்ணரை மணி நேரப் பயணத்தில் (120 கிமீ வேகத்தில்) போய்ப் பார்த்துவரும் தூரம்தான். வேலைப் பளு, குடும்பம் என்று ஏதாவது ஒரு காரணத்தில் ஐந்தாறு மாதங்களுக்கு ஒரு முறைதான் நேரில் பார்த்துக் கொள்வோம்.

ஆனால் எப்படியும் மாதத்திற்கு ஒருநாள் தயாளனின் அலைபேசி அழைப்பு தவறாது.

ஒவ்வொரு முறையும் புதுத் தகவல் ஒன்றுடன் கூப்பிடுவான்.

இனி தயாளன் சொன்ன விஷயம் அப்படியே உங்கள் முன்.

டல் கடந்து வருவது இதுதான் அவருக்கு முதல் முறை.

அவர் என்று இங்குச் சொல்லிவிட்டோமே தவிர, மற்ற எல்லோருக்கும் அவர் சுவாமி. வாழும் தெய்வம். அவர் வாழ்த்தோ ஆசியோ (இரண்டும் வேறு வேறா?) கிடைத்தால் ஜென்ம சாபல்யம் அடைந்து விட்டதாய் புளகாங்கிதம் அடையும் ஒரு பெருங்கூட்டம் உண்டு.

தமிழகத்தில் பெரும்பெயர் உண்டு சுவாமிகளுக்கு.

இதோ இப்போது அயலக மண் நோக்கி இந்தப் பயணம்.

விமானப் பயணம் அவர் எதிர்பார்த்தது போல் இல்லை.

தரையில் இருந்து மேலே ஏறின சிறிது நேரத்திற்கெல்லாம் இரண்டு காதுகளும் அடைக்க ஆரம்பித்தன. தொடர்ந்த பயணம் முழுவதும் கழுத்து, காது, தலை என்று வலி இருந்துக்கொண்டே இருந்தது.

'யாரெல்லாம் வெஜிடேரியன்' என்று கேட்கப்பட்டு சாப்பாடு ட்ரேக்கள் கொடுக்கப்பட்டன.

தலைவலியில், கொடுக்கப்பட்ட உணவையும் ஏதோ பட்டும் படாமல்தான் சாப்பிட்டார். அதுவும்கூட வெளியே வந்துவிடுவது போன்றே, முழுப் பயணத்திலும் பயமுறுத்திக் கொண்டிருந்தது.

அப்படியே சாய்ந்து உறங்க யத்தனித்தார். கால்களை முன்னால் தாராளமாக  நீட்ட முடியாமல்  சாப்பாடு ட்ரே இடைஞ்சலாக இருந்தது. சீக்கிரம் இதை எடுத்துச் சென்றால் நன்றாக இருக்கும்.

தலையைச் சற்று எம்பி முன்னும் பின்னும் பார்த்தார்.

கொஞ்ச நேரத்திற்கு முன் சாப்பாடு வண்டியைத் தள்ளிக் கொண்டு இப்படியும் அப்படியும் போய்க்கொண்டிருந்த பணிப் பெண்கள் ஒருவரும் தென்படவில்லை.

கால்களைக் குறுக்கிக்கொண்டு பின்பக்கம் சாய்ந்தபடி கண்களை மூடியவர் அப்படியே உறங்கிப் போனார்.

"சீட் பெல்டை போட்டுக் கொள்ளுங்கள்" என்று ஆங்கிலத்திலும் இவருக்குப் புரியாத இன்னொரு மொழியிலும் அறிவிப்பு செய்த பின், விமானம் மெதுவாகத் தரை இறங்கத் தொடங்கியது.

புது கார் ஒன்று, துபாயில் தொழில் அதிபர்களாயிருந்த இரண்டு பேரின்  ஏற்பாட்டில் சிறப்பு அனுமதி பெற்று விமானம் வரை கொண்டுவரப்பட்டிருந்தது.

விமானத்தை விட்டு இறங்கியவர், அங்கு நிறுத்தப்பட்டிருந்த புது காரில் அமர்ந்து விமான நிலைய கட்டிடத்தை அடைந்தார்.

நினைத்ததைவிட துபாய் விமான நிலையம் ரொம்பவே பெரிதாக இருந்தது.

'எப்படி இவ்வளவு பெரிய விமான நிலையத்தை நடந்து கடப்பது' என்று யோசித்துக் கொண்டிருந்தவரை, கட்டிட நுழைவாயிலில்  இருந்து இமிகிரேஷன் கவுண்டர் இருக்கும் இடம் வரை ஒரு சின்ன கார் போன்ற வண்டியில் அமர வைத்து ஒருவன் ஓட்டி வந்தான்.

இமிகிரேஷன் வேலைகள் எல்லாம் யாரோ சென்று முடித்து வந்தார்கள்.

கொஞ்சம் தள்ளியிருந்த இருக்கை ஒன்றில் அமர்ந்தபடி எல்லாவற்றையும் வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருந்தார்.

தலைவலி இன்னும் விட்டபாடில்லை. விமான நிலையத்தில் ஏசி ரொம்பவும் குறைந்த அளவில்  வைக்கப்பட்டிருந்ததில் கொஞ்சம் குளிர்வது போலும் இருந்தது.

எப்போது அறைக்குப் போய் ஓய்வெடுப்போம் என்று இருந்தது.

இமிக்ரேசன் வேலைகள் முடிந்து விமான நிலையத்தை விட்டு வெளியே வந்தபோது,  அதே புது கார் அங்கு நிறுத்தப்பட்டிருந்தது.

விமான நிலையத்தை விட்டு வெளியே வர எண்ணற்ற வாசல்கள் இருந்தன. எப்படியோ சரியாக அவர் வெளியான வாசலில் அந்தக்  கார் நிறுத்தப்பட்டிருந்தது.

அவர் தங்குவதற்கென்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இடத்தை நெருங்கும்போது, சாலையின் இரு பக்கங்களிலும் திரண்டிருந்த மக்கள் கூட்டம் சென்னையை நினைவுப்படுத்தியது அவருக்கு.

வலது கையை உயர்த்தி ஆசி கூறியபடி இடதும் வலதும் திரும்பிப் பார்த்தபடி இருந்தார் அவர்.

காரை விட்டு இறங்கியதும், சூழ்ந்த மக்கள் கூட்டத்தை யாரோ கட்டுப்படுத்தினர்.

சுவாமி மறுநாள்தான் மக்களைச் சந்திப்பார் என்று சொல்லப்பட்டது.

மறுநாள் சுவாமிகள் மக்களைச் சந்திக்கும் அந்தக் கூட்டம் நடந்த இடம் தயாளன் தங்கியிருந்த பிளாட்டிற்கு அடுத்த பிளாட்.

நண்பன் ஒருவன் அழைத்ததின் பேரில் அங்குச் சென்ற தயாளன், அந்த பெரிய ஹாலில் காத்திருந்த கூட்டத்தோடு ஒருவனாய் அமர்ந்து கொண்டான்.

சுவாமிகளுக்காக அலங்கரிக்கப்பட்ட ஒரு நாற்காலி போடப்பட்டிருந்தது. இன்னும் கொஞ்ச நேரத்தில் சுவாமிகள் வருவார் என்று சொல்லப்பட்டது.

காத்திருந்த நேரத்தில், (முந்தைய நாள் விமான நிலையத்திற்கு வரவேற்கப் போயிருந்த குழுவில் இருந்தவன் என்ற முறையில்) தயாளனின் நண்பன் சொன்ன தகவல்களே மேற்சொன்னவை அனைத்தும்.

தயாளன் சுற்றிலும் உட்கார்ந்திருந்தவர்களை ஒரு நோட்டம் விட்டான். ஏதோ ஒரு எதிர்பார்ப்புடன் கூடிய நம்பிக்கை எல்லா முகங்களிலும் இருந்தது.

இரண்டு மூன்று வாண்டுகள் ஒன்றாகக் கூடி என்னமோ விளையாடிக் கொண்டிருந்தன.

"நாம் எதற்காக வந்திருக்கிறோம்" என்று தயாளனுக்கு ஒரு யோசனை ஓடியது.

"நண்பன் சொன்னான் என்று வந்தது தவிர, வந்திருப்பவரிடம் கேட்பதற்கு தன்னிடம் எதுவுமே இல்லையோ" என்றும் தோன்றியது.

வார விடுமுறை நாள் என்று கிடைப்பதே இந்த ஒரு வெள்ளிக்கிழமைதான்.

குடும்பத்தோடு எங்காவது  வெளியில் போய் சாப்பிட்டுவிட்டு, ஏதாவது ஒரு மாலில் கால்கள் ஓயும் வரை சுற்றிவிட்டு வருவதுதான் பிரதி வெள்ளியன்று நடைபெறும் காரியங்கள்.

'ஒரு வாரம் அதெல்லாம் இல்லாவிட்டால் என்ன' என்று யோசித்துக்கொண்டிருக்கும்போதே சுவாமிகள் வந்து அவர் இருக்கையில் அமர்ந்தார்.

ஒவ்வொருவராகச் சென்று அவர் பாதங்களைத் தொட்டு வணங்கிவிட்டு, அவர் ஆசிகளைப் பெற்றபடி நகர்ந்து கொண்டிருந்தனர்.

"என்ன செய்யப்போகிறோம்" என்று தெரியாமல் தயாளனும் வரிசையில் சேர்ந்து கொண்டான்.

அவன் முன்னால் இருந்த பெண் கைகளைக் குவித்தபடி நகர்ந்து கொண்டிருந்தாள். வாய் ஏதோ மந்திரம் போல ஒன்றை முணுமுணுத்துக் கொண்டிருந்தது.

சுவாமிகள் கால்களைத் தொட்டு நிமிர்ந்தவளிடம் சொல்லப்பட்ட வார்த்தைகள் தெளிவாகத் தயாளனுக்குக் கேட்டன.

"சீக்கிரமே மனம்போல் மணாளன் அமைவான்."

"என்னப்பா… ரொம்ப சாதாரணமாப் போவுதே கதை…?" என்றேன்.

"பேசாமக் கேளு. இதுக்கப்புறம்தான் பெரிய ட்விஸ்ட்டே…"

"என்னது…"

"ஆசி வாங்கிட்டு, கொஞ்சம் தள்ளிப் போனப்பறம், ஒரு மூணு வயசுப்பொண்ணு அந்த லேடியை நோக்கி ஓடி வந்தது."

"சரி…"

"அந்தக் குட்டிப் பொண்ணு என்னானு கூப்பிட்டுக்குனு வந்துச்சு தெரியுமா? "

"போதும் நிறுத்து. அது எப்படிக் கூப்பிட்டிருந்தாலும் சரி."

"ஏன்?"

"எல்லாமே ஒரு நம்பிக்கைதானே?"

"எது?"

"இப்ப… நீ என்ன எதிர்பார்த்து அங்க போன?"

"என்னதான் நடக்குது பார்க்கலாம்னு"

"அதுவே ஒரு நம்பிக்கைதானே?

"எப்படி?"

"ஏதாவது நடக்கும்னு நம்பினது."

"இப்ப…என்னதான் சொல்ல வரே?

"எல்லா எதிர்பார்ப்புக்கும் காரணம் ஏதோ ஒரு நம்பிக்கைதான்."

Loading content, please wait...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com