கோபத்தைக் குறைப்பதில் ஆன்மீகத்தின் பங்கு என்ன?

கோபத்தைக் குறைப்பதில் ஆன்மீகத்தின் பங்கு என்ன?
Published on

நூல் அறிமுகம்

இந்துமதி

றையன்பு என்றதும் அனைவருக்குள்ளும் படிப்படியாக வருகின்ற பிம்பங்கள்-பாலுத்தேவர்-என்கிற மாதிரி IAS என்பதும், மிகவும் நேர்மையான அரசாங்க உயரதிகாரி என்பதும்-திறமையான நிர்வாகி என்பதும்-சிறந்த தன்முனைப்பு பேச்சாளர் என்பதும்-இளைஞர்களை எழுச்சிகொள்ள வைக்கும் உத்வேகி என்பதும்தான்.

இவை அனைத்தும் அனைவரும் அறிந்ததே. அவரின் ஆளுமை நிறைந்த அறியாத பக்கம் ஒன்றுள்ளது. அது அவர் மிகச் சிறந்த ஆன்மீகவாதி என்பது.

ஆன்மீகம் என்பது கோயில்களுக்குச் செல்வதோ, யாத்திரைகளுக்குப் போவதோ, புனித நதிகளில் நீராடுவதோ, காவி உடுப்பதோ, மழித்தலும் நீட்டலும் செய்வதோ, பிற புறச்சின்னங்களை அணிவதோ மட்டுமல்ல; இவை அனைத்தையும் மீறின மேலான ஆன்மிகம் ஒன்று உள்ளது என்பதைத் தன் மென்மையும் அழகும் நிறைந்த எழுத்துக்களால் எடுத்துக் கூறுகிறார் திரு இறையன்பு அவர்கள்.

இந்த 'சத்சங்கம்' என்ற நூலில் அவர் கூறுகின்ற ஆன்மீகத்தை நான் ஒரு தத்துவ தரிசனம் என்பேன். சத்தியத்தின் சாரம் என்பேன். உண்மையின் பேரொளி என்றும் கூறுவேன்.

எது எதையோ ஆன்மீகம் என்று நானாக உருவகப்படுத்திக் கொண்டு ஓடிய ஓட்டத்தின் நீளம் மிக அதிகம். அது ஒரு மராத்தான் ரேஸ்!

தேடிய தேடல் மெக்கன்னாஸ் கோல்ட்!

நினைவு தெரிந்த நாள் முதலாய் எங்கெல்லாம் போயிருக்கிறேன்!

கோடிச் சாமியார், மாயம்மா, விசிறி சாமியார், சங்கர மடம்,
ஜக்கி வாசுதேவ், ரவிஷங்கர் என எத்தனை இடங்கள்!

பாலகுமாரன் கூட 'எனக்கு ஒரு குரு கிடைக்காததை என் கர்மா' என்று குறிப்பிட்டார். பின்னர் தானேகூட குரு ஸ்தானத்திற்கு உயர்ந்தார். ஆனால், என் மனது மட்டும் எங்கும் நிலைபெறவில்லை.'இது இல்லை… அது இல்லை' என்று ஒதுக்கிக்கொண்டே வந்து, பின் 'எதுதான்' என்ற கேள்வி மனதைக் குடைந்தெடுத்துக் கொண்டிருந்தபோது, வெகு சமீபத்தில் –
'இதுதான்' என்று ஆணித்தரமாக நெஞ்சில் அறைகிற மாதிரி சத்தியத்தின் நீட்சியாக இந்த 'சத்சங்கம்' எனக்குக் கிடைத்தது பெரும் பேறு. ஒரு வரப் பிரசாதம்.

ஏதோ ஒரு பாக்கியம்!

ஆன்மீகத்தின் அடிப்படையாகக் கருதப்படும் குரு-சீடன் உறவின் மூலமாகவும் கேள்வி – பதில் வாயிலாகவும் அழகானதும் ஆழமானதுமான கட்டமைப்போடு ஆன்மீகத் தேடலின் அனைத்துப் பரிமாணங்களையும் அற்புதமான கேள்விகளாலும் பதில்களாலும் விளக்கிக் கூறுகிறார் இறையன்பு அவர்கள். அவரது ஆழ்ந்த அனுபவமாக, தெளிவான சிந்தனைகளின் முடிவுகளால் எழுதப்பட்ட 'பொக்கிஷம்' என்றே இந்நூலை  சொல்லத் தோன்றுகிறது.

நல்ல கேள்வி நம்மைக் கைபிடித்து அழைத்துச் செல்லும் என்பதை 'உண்மையாகக் கேள்வி கேட்பவர்களும் அதற்கு உள்ளொளியிலிருந்து பதில் சொல்பவர்களும் அறிவார்கள்' என்கிற இவரே, தானே இவ்விரண்டையும் செய்திருக்கிறார்! அந்த உண்மையும் உள்ளொளியும் இவரிடம் இருக்கின்ற காரணத்தினால் தானே செய்ய முடிந்திருக்கிறது!

அழகான மலரைப் பார்த்தால் மகிழ்ச்சி ஏற்படுகிறதா?

ஒடிந்த இறகுடன் ஒரு பறவையைப் பார்த்தால் மனம் வலிக்கிறதா?

பசியினால் ஒடுங்கிய உடலுடன் யாரையாவது சந்திக்க நேர்ந்தால் கண்கள் கசிகின்றனவா? உன் உள் மையத்துள் ஏதேனும் மாற்றம் ஏற்படுகிறதா? அப்படி நிகழ்ந்தால் 'ஆன்மீகப் பயணத்தில் நீயும் இருக்கிறாய்' என்று பொருள்.

இதற்கு முன்பு இப்படிப் பொருள்படும்படி நான் படித்ததே இல்லை.

துறவு நிலை என்பது உடல்களால் தீர்மானிக்கப்படுவதில்லை. மனம் பழுத்த தன் குறியீடாகக் காவி உடுப்பதும், எல்லோரையும் அரவணைக்க வேண்டும் என்கிற தாத்பரியத்தில் வெள்ளை ஆடை அணிவதும் இலக்குகளாகின்றன.

தான் ஆன்மீகவாதி என்று தெரியாமல் ஆன்மீகவாதியாக இருப்பதே சிறந்த ஆன்மீகம்.

'வழிபாடு வலியைத் தடுப்பதற்கல்ல; வலியைக் கடப்பதற்காக' என்கிற கூற்று சாலச்சிறந்தது

'கற்றவற்றை முழுவதுமாக மறக்கும் போது ஞானத்தின் பிறப்பு ஆரம்பமாகிறது' என்பது அபாரம்!

அதுபோலவே ஆலயத்தின் மைய நோக்கு மனிதர்களை மேம்படுத்துவது என்பதும்!

நம்முடைய பண்டைய கோயில்களுக்கு வழிப்பாட்டைத் தாண்டிய மகத்தானதும் உன்னதமானதுமான நோக்கம் இருந்தது. அப்போது அறிவுப் பரிமாற்றமும் அகலமாக இருந்தது என்கிறவர், ஆன்மீகத்திற்குக் கோயில்கள் எதிரானவை அல்ல எனவும் ஆணித்தரமாக வலியுறுத்துகிறார். அவற்றை வெறும் படாடோபத்திற்காகவும், வெற்று கௌரவத்திற்காகவும் பயன்படுத்தக் கூடாது என்பது இவரது தீர்மானமான கருத்து. இதை நாம் அனைவரும் ஒப்புக் கொண்டே ஆகவேண்டும்.

வன்மம் ஏன் உண்டாகிறது? வன்மத்தின் ஆணிவேர் எது?

கோபத்தைக் குறைப்பதில் ஆன்மீகத்தின் பங்கு என்ன?

கோபத்தை யாரும் காகம் இறகை உதிர்ப்பதைப் போல உதிர்த்துவிட முடியாது. எங்கு வேண்டுமானாலும் சிறுநீர் கழிக்கும் விலங்குகள் போல வெளிப்படுத்திவிட முடியாது.

எல்லா பேதங்களையும் கரைக்கும் அன்பே ஆன்மீகத்தின் சாரம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஒரு மழை உலகையே மாற்றி விடுகிறது!

ஒரு புன்னகை உறவையே மாற்றி விடுகிறது!

ஒரு பரிமாற்றம் பார்வையையே திசை திருப்பி விடுகிறது!

அன்பே நீ!

அன்பே நான்!

அன்பே சிவம்!

அன்பே அனைத்தும் – என்கிறபோது,

அந்த ஆன்புதானே ஆன்மீகமும்!

அன்பு பரவலாகிறபோது, அன்பு அடித்தளமாகிறபோது, அன்பு ஜீவநாடியாகிறபோது தனியாக ஆஸ்ரமங்கள் எதற்கு?

வீடே ஆஸ்ரமமாகி விடாதா!

இதுபோன்று எத்தனைக் கேள்விகள்!

அத்தனைக்கும் எவ்வளவு ஆழமான பதில்கள்!

கேள்வியும் அவரே!

பதிலும் அவரே!

இதற்கு எவ்வளவு ஞானம் வேண்டும்.

இவரது பெற்றோர் தீர்க்கதரிசிகள் போலும்!

அன்பே இறைமை என்கிறவருக்கு மிகவும் பொருத்தமாக 'இறையன்பு' என்று பேர் வைத்திருக்கிறார்கள்.

நான் படித்த ஓஷோ, ஜே. கிருஷ்ணமூர்த்தி அனைவரின் ஒட்டு மொத்த சாரத்தையுமே இந்த 'சத்சங்கம்'பிழிந்து கொடுத்து விடுகிறது.

வாசிக்கின்ற அத்தனைப் பேராலும் புரிந்துக்கொள்ளக் கூடிய பூடகத் தன்மையற்ற எழுத்திற்காக மேலும் திரு இறையன்பு அவர்களைப் பாராட்டியே ஆகவேண்டும்.

இந்தப் புத்தகத்தைப் பற்றி இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம்தான். எவ்வளவு சொன்னாலும் நான் சாப்பிட்ட இனிப்பை சொற்களால் உங்களுக்கு எப்படி விளக்க முடியும்?

சொற்களால் ஒரு போதும் உள்ளத்து உணர்வுகளை முழுமையாகப் பிரதிபலிக்க முடியாது. 'இனிப்பு' என்று எழுதிக் காட்டுவது இனிப்பாகி விடாது.

நீங்களே சாப்பிட்டால்தான் சுவை தெரியும். இனிப்பு என்பது பிடிபடும். அனுபவிக்க இயலும்.

ஒன்றை மட்டும் என்னால் நிச்சயமாகத் தெளிவுபடுத்த முடியும்.

இந்த சத்சங்கத்தில் சேர்ந்த பின்னால் ஆன்மீகத்தைத் தேடி வெளியில் ஓட மாட்டீர்கள்.

வீட்டை ஆஸ்ரமமாக்கும் கலையைக் கற்றுக்கொண்டு விடுவீர்கள்! இது போதாதா? வேறு என்ன சொல்ல வேண்டும்? வேறு என்ன சொல்ல முடியும்…?

பாத்திரம் நிறைந்து வழிகிற அளவிற்கு ஊற்றிய பின் அதற்கு மேல் ஊற்ற முடியுமா என்ன..?

ஊற்றத்தான் என்ன இருக்கிறது..?

( அடுத்து ஆத்தங்கரை ஓரம், சாகாவரம்)
நூல் : சத்சங்கம்
ஆசிரியர் : வெ.இறையன்பு
பதிப்பகம் : நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி)லிட்,
பக்கங்கள் : 159.
Loading content, please wait...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com