மக்களுக்குக் குடையாக இருக்கும் அரசு

மக்களுக்குக் குடையாக இருக்கும் அரசு
Published on

நீங்கள் கேட்டவை தராசு பதில்கள்

? முகமதிப்பு 2,150 ரூபாய் என்று பங்குகளை வெளியிட்ட paytm , மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டதும்  1,564 ரூபாய்க்கு சரிவை சந்தித்தது எதைக்காட்டுகிறது?
–  கண்ணன், ரோஸ்மியாபுரம்
! பங்குச்சந்தையின் நுட்பங்கள் அறியாத சிறு முதலீட்டார்களின் பேராசை, அதை ஈர்க்க paytmமின்  விளம்பரங்களினால் எழுப்பப்பட்ட பிம்பம் ஆகியவற்றின் வெளிப்பாடு.

? 'தமிழ்நாடு மாநில குழந்தைகளுக்கான கொள்கை – 2021' வடிவமைக்கப்பட்டு, முதல்வர் வெளியிட்டுள்ளாரே?
– ஆ. மாடக்கண்ணு, பாப்பான்குளம்
! ஒரு நல்ல முன்மாதிரியான முன்னெடுப்பு. ஆனால் நம் ஊடகங்கள் இந்த முக்கிய ஆவணம் பற்றி பேசாமல், 'அக்னி குண்ட கேலண்டர்' பற்றி விவாதித்துக் கொண்டிருக்கின்றன.

? ஒவ்வொரு ஆண்டும் வெள்ள சேதங்களைப் பார்வையிட மத்திய குழு வருவது பெருமையா? இயலாமையா?
–  நெல்லை குரலோன், நெல்லை
! இரண்டும் இல்லை. ஒரு சம்பிராதய சடங்கு. சேதங்களை மதிப்பிடஏன் ஒரு குழு டெல்லியிலிருந்து வர வேண்டும் என்பதும், அந்தக் குழு இரண்டு நாட்களில் சில மணிநேரப் பயணங்களில் எப்படி முழு  சேதத்தையும்  மதிப்பிட்டுவிடும் என்பது ஒவ்வொரு ஆண்டு வரும்  மழையைப்போல நமக்கு வரும் சந்தேகம்.

? OTT தளம்  அவசியமானதா?  அது சினிமாவை அழித்துவிடாதா?
– து.சேரன், ஆலங்குளம்
! இணையம் தந்த கொடைகளில் OTTயும்  ஒன்று. வளரும் தொழில்நுட்பத்தின் விளைவாக எழும்  பயன்பாடுகள் அனைத்துமே வளர்ச்சிக்கு அவசியம் தான்.  ஒரு புதியதின் வருகை எதுவும் இருப்பதை அழித்துவிடாது.

? 'ஊழல் இல்லாத மாநிலமாக தமிழகத்தை ஆக்க வேன்டும்  என்பது தான் பா.ஜ.வின் நோக்கம்' என்கிறாரே அதன் தலைவர் அண்ணாமலை?
–  அமிர்தா, திண்டுக்கல்
! நோக்கம் நல்லதுதான். ஆனால், அதை அடைய ஊழல் குற்றத்துக்காக தண்டிக்கபட்ட தலைவியைத் தெய்வமாகக் கொண்டாடும் கட்சியுடன் அல்லவா இணைந்திருக்கிறார்கள்?

 ? "மழையிலும் வெயிலிலும்  தி.மு.க. அரசு  மக்களுக்குக் குடையாக இருக்கும்" என்கிறாரே முதல்வர் ஸ்டாலின்?'
– ஷாகுல் அமீது, ஆரணி
! குடையாக இருப்பதைவிட முக்கியம்,  அதைப் பயன்படுத்தி நடக்க  மழைக் காலங்களில் ஆறாக மாறிவிடாத  சாலைகள்.

? 'ஜெய் பீம்' திரைப்படத்திற்கு விருதுகள் தரக்கூடாது என
மத்திய – மாநில அரசுகளுக்கு கடிதம் எழுதியிருக்கிறதே வன்னியர் சங்கம்?  இது எதைக் காட்டுகிறது?
-ஆர்.மாதவராமன்  கிருஷ்ணகிரி
! "விருதுகள் பெறக்கூடிய தகுதிகள்  கொண்ட படம் 'ஜெய் பீம்' " என்று அவர்கள் நம்புவதை.

? வேளாண் சட்டங்கள் விவகாரத்தில் நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்டுவிட்டாரே?
– சம்பத் குமாரி, புதுக்கோட்டை
! 'எதிர்வரும் 5 மாநில சட்டமன்றத் தேர்தலை கவனத்தில் கொண்டு 'தோல்வி' பயத்தில் செய்திருக்கிறார்' என்ற அவச் சொல்லுக்கு  ஆளாகியிருக்கிறார்.

? விதிப்படிதான் நமக்கு எல்லாம் நடக்கும் என்பது சரியா?
– தாமஸ் மனோகரன், கோவை
! 'தெய்வத்தால் ஆகாதென்றாலும் முயற்சி செய்தால் முடியும்' என்கிறார் வள்ளுவர்.  விதியின் மீது பழி போடாமல்  தம் கடமையைச் செய்தவர்கள் பலர்  வாழ்க்கையில்  வெற்றி பெற்றிருக்கிறார்கள். அவர்களை முன்மாதிரியாகக் கொள்ளவேண்டும்.

? "மழை – வெள்ள பாதிப்புகளின்போது  தி.மு.க. அரசு மக்களுக்கு செய்ய வேண்டிய  கடமையை செய்யத் தவறிவிட்டது" என்கிறாரே முன்னாள் முதல்வர்?
– சுந்தர், சென்னை
! 10 ஆண்டுகளுக்கும் மேலாக ஆட்சியிலிருந்த அவருடைய கட்சி அதன் கடமைகளைச் சரிவரச் செய்திருந்தால் இன்று இந்த நிலையே  எழுந்திருக்காதே.

Loading content, please wait...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com