“எல்லாரும் சமம்னா யார் ராஜா?”

“எல்லாரும் சமம்னா யார் ராஜா?”

தமது எழுத்தின் மூலம் சமூக மாற்றத்தை ஏற்படுத்த விரும்பும் எழுத்தாளர். சுவாரஸ்யமான நடையில், பயனுள்ள தகவல்களையும், புதிய சிந்தனைகளையும் தமது பல்வேறு படைப்புகள் வாயிலாக கல்கி ஆண்லைன் வாசகர்களுக்கு வழங்குகிறார்.

Updated on: 

நெஞ்சுக்கு நீதி விமர்சனம்

– லதானந்த்

தாத்தாவின் சுயசரிதைத் தலைப்பு என்பதைத் தவிரப் பேரனின் திரைப்படத்துக்கும் தலைப்புக்கும் அதிக சம்பந்தம் ஏதும் இல்லை.

"வன்புணர்வுக்கு ஆளாக்கப்பட்டுத் தூக்கில் தொங்கவிடப்படும் இரு சிறுமியரின் இறப்புக்குக் காரணம் ஆணவக் கொலையே" என்ற கோணத்தில் வழக்கு ஒன்று ஜோடிக்கப்பட்டு, சிறுமியரின் பெற்றோரே கைதுசெய்யப்பட்ட நிலையில், வழக்கின் உண்மைத் திருப்பங்களைக் காவல்துறை அதிகாரி ஒருவர் கண்டறிவதுதான் கதை. துப்புத் துலக்கும்போது அவருக்குக் காவல் துறையிலிருந்தும் அரசியலில் இருந்தும் பற்பல குறுக்கீடுகள் வந்தாலும், திறமையாக அவற்றைச் சமாளிக்கிறார்.

ஆர்டிகிள் 15 என்ற பாலிவுட் படத்தின் அதிகாரப்பூர்வமான தமிழாக்கம்தான் இந்தப் படம். பெரும்பாலும் மூலப் படங்களில் இருந்து தமிழில் மறு ஆக்கம் செய்யப்படும்போது இடம், பொருள், ஏவல் மாற்றங்களினால் சில சமயங்களில் மூலக் கதையின் ஜீவன் பிசிறடித்துப் போய்விடுவதுண்டு. ஆனால் இந்தப் படத்தில் இயல்பான த்ரில்லர் படத்தைப் பார்ப்பதைப் போன்றதோர் உணர்வே மேலிடுகிறது. தொய்வில்லாத நகர்வோடு படம் பயணிக்கிறது. கூர்மையான எடிட்டிங் படத்துக்கு இன்னும் வேகம் சேர்க்கிறது. திறமையான இயக்கத்துக்கு அருண் காமராஜுக்கு ஒரு 'ஜே' போடலாம்!

உதயநிதியின் நடிப்பில் படத்துக்குப் படம் மெருகேறி வருகிறது. IPS அதிகாரி விஜயராகவனாக நடித்து நீதி கிடைக்க நெடும் போராட்டத்தில் ஈடுபடுகிறார். எந்த ஓர் இடத்திலும் மிகை நடிப்பு என்பதே இல்லை.

ஆதிக்க சாதியினரின் அடக்குமுறைகள், அதிகார மீறல்கள் பலவும் தோலுரித்துக் காட்டப்பட்டிருக்கின்றன. சக பணியாளர்களின் ஜாதி பற்றி கதாநாயகன் விசாரிக்கும் காட்சியின் போது ரசிகர்கள் ஆரவாரம் செய்கின்றனர்.

திபு நினன் தாமஸின் இசை படத்துக்குப் பக்க பலம். இளவரசு, மயில்சாமி, சாயாஜி ஷிண்டே நடிப்பு கச்சிதம்.

"மொழியைக் கற்றுக் கொள்வது ஆர்வம்; திணிப்பது ஆணவம்!" என்பது போன்ற அரசியல் சாய வசனங்களும் ஆங்காங்கே ஒலித்து ஓய்கின்றன.

பொதுவாக ஜாதி வேறுபாடுகளைச் சாடும் படங்களில் க்ரைம் த்ரில்லிங் என்ற அம்சம் இருக்காது; க்ரைம் த்ரில்லர் படங்களில் ஜாதிப் பாகுபாட்டுக்கு இடம் இருக்காது. ஆனால் நெஞ்சுக்கு நீதியில் இரண்டுமே சம அளவில் கலக்கப்பட்டிருக்கின்றன.

வன்புணர்வு செய்யப்பட்ட சடலங்களை மரத்தில் தொங்கவிடுவது திரைக்கதையின் பலவீனமா? அல்லது வில்லன்களின் மடத்தனமா? உடற்கூறாய்வில் உண்மைகள் தெரிந்துவிடாதா?

தமிழரசன் பச்சமுத்துவின் வசனங்கள் பொளேர் ரகம்.

"எல்லாரும் சமம்னா யார் ராஜா?"

"சமம்னு நெனைக்கிறவன்தான் ராஜா"

"நடுவில் நிக்கிறது இல்ல சார், நடுநிலை!  நியாயத்தின் பக்கம் நிக்கிறதுதான் நடுநிலை" போன்றன சில உதாரணங்கள்.

பொதுவாக நெஞ்சுக்கு நீதி = நம்பிப் பார்க்கலாம்!

Loading content, please wait...
logo
Kalki Online
kalkionline.com