குரு என்பவர், நெருப்பை உண்டாக்கும் அரணிக்கட்டையில் அடிப்பாகம் போன்றவர்.

குரு என்பவர், நெருப்பை உண்டாக்கும் அரணிக்கட்டையில் அடிப்பாகம் போன்றவர்.
Published on

உத்தவகீதை – 5 (உலக வாழ்க்கை நிலையற்றது)

டி.வி. ராதாகிருஷ்ணன்

அவதூதன் யதுகுல பெரியவரிடம் மேலும் கூறினான்…

மனித உயிர் வாழும்போது, அவனுடைய மூக்கு, நாக்கு, வாய், காது, கண், உடம்பு போன்றவை தன் ஆசைகளை உண்டுபண்ணி பல வழிகளில் இழுக்கின்றன.

கடவுள் எல்லா உயிர்களையும்விட மேலாக தன்னுருவில் மனிதனைப் படைத்தான். பல பிறவிகளுக்குப் பிறகு அவன் மனிதப் பிறவியை அடைகின்றான். அவன் தன் முக்தியைத் தேடிக்கொள்ள முடியும். ஆகையால் நானும், பாசம், பற்று, பந்தம் நீக்கி மேற்கூறிய குருமார்களிடம் ஞானம் பெற்று, உலகில் பற்றின்றி வலம் வருகிறேன் என்று கூறி அந்த அவதூதன் தன் வழியில் சென்றான்.

யதுகுல மன்னனும், உலக ஆசைகளை நீக்கி மன அமைதியும். மனப்பக்குவமும் அடைந்தான்.

இனி உலக வாழ்க்கைப் பற்றி உத்தவர் கேட்க கிருஷ்ணன் சொன்னது.

மனிதன் தன் ஆசைகளைத் துறந்து, பலனில் பற்று வைக்காமல், தன் கடமைகளைச் செய்ய வேண்டும். சக மனிதர்கள், இந்திரிய சுகங்களில் ஈடுபட்டு இவ்வுலக வாழ்க்கையை நித்தியமானது என்று எண்ணி, எப்படி துன்பத்தில் உழலுகிறார்கள் என்பதை கவனிக்க வேண்டும்.

முக்குணங்களின் உந்துதலால், கர்மம் செய்கின்ற மனிதன், உலக வாழ்க்கைக்கு உயிர் வாழ்வதற்கு தேவையான கர்மங்களை, ஆசையின் காரணமாகயில்லாமல் இயற்கையின் கடமை என்று செயலாற்ற வேண்டும்.

தன் ஆன்மாவை அறிய முயற்சி செய்யும் மனிதன் சாஸ்திரங்களால் விதிக்கப்பட்ட கர்மாக்களை வேண்டுமானால் தவிர்க்கலாம். என்னை வழிபடுகிறவன், பெருமை, பொறாமை, சாஸ்திரங்களில் கண்டிக்கப்பட்ட செயல்களைத் தவிர்த்தல், பற்று, பாசம் ஆகியவற்றைத் தவிர்க்க வேண்டும். பிறரிடம் குறை காணுதல், தேவையற்ற வார்த்தைகளைப் பேசுதல் ஆகியவற்றை நீக்க வேண்டும்.

தீயில் எரிகின்ற மரக்கட்டைக்கும், தீயில் எரிந்து அவிந்து சாம்பலான மரக்கட்டைகளுக்குமுள்ள வித்தியாசம் போல… தன்னை உணர்ந்த சாதகன், உலகு, மனைவி, மக்கள், உறவினர், தன் உடம்பு ஆகியவற்றின் நிலையற்ற தன்மையை உணர வேண்டும்.

குரு என்பவர், நெருப்பை உண்டாக்கும் அரணிக்கட்டையில் அடிப்பாகம் போன்றும், சீடன் என்பவன் அதில் உண்டாக்கக் கடைதலுக்கான கட்டையென்றும், நெருப்பை உண்டாக்குதல் என்ற கடைதல் தன்னையறிய முயற்சி செய்யும் முயற்சி என்றும் உணர வேண்டும்.

அதில் உண்டாகும் 'நெருப்பு' என்ற ஞானம் எல்லா உலகப் பற்றுகளையும் பாகங்களையும் அழித்து, மாயையிலிருந்து விடுபட உதவும். அந்த மாயை, முக்குணங்களின் சேர்க்கையால் ஏற்பட்டது. அதில் மாயையை நீக்கினால், அந்த ஆன்மா விடுதலை பெறும்.

(தொடரும்)

Loading content, please wait...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com