தபால்காரரின் குரல் வாசலில் கேட்டது. பொதுவாக வீட்டுவாசலில் கடுதாசுகளை வீசிவிட்டு செல்கிறவர் நின்று குரல் கொடுக்கிறாரென்றால்….?.சமையல்கட்டிலில் இருந்து அம்மாவின் குரல் கேட்டது. "சுந்து. உன்னோட ரிசல்ட் கார்டு கொண்டு வந்திருக்காரு போலிருக்கே… என்னாச்சோ… பரிட்சை நேரத்துல ரொம்ப ஆட்டம் வேற போட்டிருக்க… போய் கார்டை வாங்கிட்டு வா…".அம்மாவின் சுபாவம் அப்படித்தான். பரிட்சைக்கு படிக்கும்போதும் ஏதாவது சொல்லி பயமுறுத்துவாள். "பராக்கு பார்க்காதே… சத்தமாப் படி… தூக்கம் வர்ற மாதிரி இருந்ததுன்னா எழுந்து நடந்துண்டே படி…" என்பாள்..நன்றாகவேதான் அனைத்து பாடங்களிலும் பரீட்சை எழுதியிருந்தான். ஆனால் கணக்குப் பரீட்சையை மட்டும் எழுதிவிட்டு வெளியில் வரும்போது அவனுக்காவே சீனுவும், முருகனும் காத்துக் கொண்டிருந்தார்கள். பெரிய படிப்பாளிகள் அவர்கள்..முன்பெல்லாம் கணக்கு பாட கேள்வித்தாளில் , ஒவ்வொரு கேள்விக்குப் பக்கத்திலும் பதில் எழுதிக் கொண்டு வருவான். இதே சீனுவும், முருகனும் , அவன் எழுதிய பதில்களைப் படித்துவிட்டு "டேய் தப்புடா…" என்று முதல் பக்கத்திலேயே சொல்ல ஆரம்பித்து விடுவார்கள். நன்றாக எழுதியிருக்கிறோம் என்று நிமிர்ந்து நிற்கும் நெஞ்சைக் குத்தி பஞ்சராக்கி பம்ம வைத்து விடுவார்கள். அதனால் பதில் எழுதிக் கொண்டுவருவதில்லை இப்போதெல்லாம்.."எப்படிடா கணக்கு போட்டிருக்கே?" என்றார்கள் கோரசாக. "பரவாயில்லடா…" என்றபடி ஆரம்பத்திலேயே பணிந்து போனான். அப்படியாக அவர்களிடமிருந்து தப்பிக்க முடிந்தது..கடைசிப் பரீட்சை முடிந்த கையோடு அம்மாவுடன் அன்று மாலையே மீனாட்சி கோயிலுக்கு போனான். தெற்கு கோபுரம் வழியாக கோயிலுக்குள் நுழைந்து, விபூதிப் பிள்ளையாரைச் சுற்றி வந்து, அவரைச் சுற்றிப் பரந்து கிடக்கும் விபூதியைக் கிள்ளி எடுத்து அவரது தலையில் போட்டுவிட்டு, மிகுதியை நெற்றியில் இட்டுக் கொண்டான். அதற்கப்புறம் , அம்மாவின் கையை உதறிவிட்டு நேரடியாக கிளிமண்டபத்திற்கு ஓடினான்..இரும்புக்கூண்டினுள், செயற்கை மரக்கிளைகளில் ஏகப்பட்ட கிளிகள் அங்குமிங்குமாய் தாவியபடி இருந்தன. எல்லாக் கிளிகளுக்கும் மீனாட்சியின் கையை அலங்கரிக்கும் யோகம் கிடைக்குமா என்ன?.கம்பி இடுக்கில் முகம் புதைத்து, "மீனாட்சி… நான் பாஸா பெயிலா?" என்று கேட்டான். அவன் கேட்டதைக் கவனிக்காதது போல அவை தமக்குள் கீ, கீ என்று கத்திக் கொண்டிருந்ததைப் பார்க்கும் போது அவனுக்கு வயிற்றைக் கலக்கியது. உண்மையிலேயே அம்மா சொல்வது போல ஃபெயில் ஆகிவிடுவோமோ?.நெஞ்சம் பதைபதைத்தது..சில நிமிட சஸ்பென்சிற்குப் பிறகு, ஒரு கிளி மட்டும் போனால் போகிறது என்பது போல் "பாஸ் பாஸ்" என்று மூலையில் இருந்தபடி சொன்னது. அது போதும். மீனாட்சியே சொல்லிவிட்டாள். சீனா,முருகனைப் பற்றி அவனுக்கு கவலை இல்லை… அவன் கட்டாயம் பாஸ்தான்..சந்தோஷமாக திரும்பி ஓடிவந்து அம்மாவின் கையைக் கோர்த்துக் கொண்டான். 'மீனாட்சி பாஸ் பாஸ் சொல்லிடுச்சு'. அம்மா சிரித்துக் கொண்டாள்..'எதுக்கும் கையில் காசு எடுத்துக்கிட்டு போ' என்று அம்மா சொன்னதையும் கேட்காமல் வாசலுக்கு ஓடினான்..அவன் ஓடிவருவதைப் பார்த்ததுமே, "தம்பி… பாஸாயிட்டே…" என்று ராமதூதன் போல தபாலட்டையைக் கொடுப்பதற்கு முன்னால் செய்தியைக் கொடுத்தார்..அட்டையை வாங்கிக் கொண்டு உள்ளே அம்மாவிடம் ஓடினான். பெயிலாகும் அளவிற்கு அவன் மக்கு இல்லை என்று அம்மாவிற்கு தெரியும். ஆனாலும், "ஏதோ தப்பிச்சுட்ட போலிருக்கு இந்த வருஷம்" என்றாள். அம்மா எப்பவும் அப்படித்தான். அப்படியே, அஞ்சரைப் பெட்டியைத் திறந்து ஒரு நாலணா எடுத்து அவன் கையில் திணித்து, தபால்காரரிடம் கொண்டு போய்க் கொடு என்றாள்..தபால் அட்டையை மறுபடி படித்தான். 'ப்ரொமோட்டட்' என்று ஆங்கிலத்தில் ரப்பர் ஸ்டாம்ப் குத்தி , அதனருகில் '7 பி' என்று வகுப்பும் குறிப்பிட்டிருந்தது..அன்றைக்கு சாயங்காலமே நன்மை தருவார் கோயி லில் சீனா, முருகனை சந்திப்பதாக ஏற்பாடு. கூடவே பாஸ்கரனும் சேர்ந்து கொள்வதாக சொல்லியிருந்தான்..சாயரட்சைக்கு அடிக்க ஆரம்பித்த கோயில்மணி பின்னணியில் ஒலிக்க, நண்பர்கள் தரையில் வட்டமாய் அமர்ந்து கொண்டார்கள்..கோயில் மணிக்கு போட்டியாக பாஸ்கர் அபாயமணி அடித்தான். "டேய்… உன்னோட '7 பி' கிளாசுக்கு வாத்தியார் யாரு தெரியுமா? கோபால் சார்டா…" என்றான்..சீனா இடைமறித்தான். "அதென்ன கோபால் சார்… பிரம்படி வாத்தியார்னு சொல்லு…"."சுந்து … நீ நல்லா மாட்டிக்கிட்ட…" என்றபடி மூவரும் விழுந்து விழுந்து சிரித்தார்கள்..பிரம்படி வாத்தியாரின் பெயரைக் கேட்டதுமே சுந்துவிற்கு வயிற்றை முறுக்கிப் பிழிந்தது போலிருந்தது.."சரியாகப் படிக்கலேன்னா அடி…" – சீனா.."அதுவும் கணக்கைச் சரியாப் படிக்கலேன்னா அடி…"- பாஸ்கர்."அடிக்கடி லீவு போட்டாலும் பிரம்படி" – முருகன்..அவர் கொடுக்கும் அடிக்காகவே , கோபால் சார் என்பதைவிட 'பிரம்படி வாத்தியார்' எனும் பெயர் பள்ளியில் பிரபலம். அவரைக் கண்டாலே மாணவர்கள் தெறித்து ஓடுவார்கள்..கோயிலிலிருந்து திரும்பிய அவனிடம் அம்மா கேட்கவே செய்தாள். "என்னாச்சுடா… மூஞ்சி சுறுங்கிக் கிடக்கு… யாரு என்ன சொன்னாங்களாம்?".அவனுக்கு கண்ணில் நீர் கோர்த்துக் கொண்டது. "அது இல்லம்மா… இந்த வருஷம் என்னோட கிளாஸ் வாத்தியார் 'கோபால் சார்'னு பாஸ்கரன் சொன்னாம்மா… நாங்க எல்லோரும் அவரை 'பிரம்படி வாத்தியார்'னுதான் சொல்லுவோம். பயங்கர கோபக்காரர் வேற…".அம்மாவின் முகத்தில் ஒரு திருப்தி பரவியது. "அப்பாடா… இனிமேல் உன்னைப் படிபடின்னு சொல்லவேண்டாம். சரியா படிக்கலேன்னா முட்டிக்கு கீழே எங்க வேணும்னாலும் அடிங்கன்னு உன் வாத்தியார்கிட்ட வந்து சொல்லப் போறேன்… உங்கப்பா வேற நான் உனக்கு செல்லம் கொடுத்து கெடுத்துட்டேன்னு சொல்றாரு…" என்றாள்.."போம்மா. உனக்கு என் மேல ஆசையே கிடையாது" என்றபடி உள்ளே ஓடினான்..கோபால் வாத்தியார் கோபக்காரர்தான். ஆனால் நன்றாக பாடம் சொல்லிக் கொடுப்பார். பாடத்தைத் தவிர பொது அறிவு விஷயங்களைச் சொல்லித் தருவார். வகுப்பறையிலேயே பொது அறிவு சம்பந்தமான புத்தகங்களை வாங்கி வைத்திருப்பார்..நன்றாகப் படிக்கிறவர்களை அவருக்கு மிகவும் பிடிக்கும். ஏழை மாணவர்களுக்கு தன் சொற்ப சம்பளத்திலிருந்து புத்தகங்கள் வாங்கிக் கொடுப்பார்..அவருடைய வகுப்பு மாணவர்களை யாரும் ட்யூஷனுக்கு செல்ல விரும்பமாட்டார். அது தன்னுடைய திறமையைக் குறை சொல்கிறது போல என்பார். பரீட்சை வருவதற்கு முன்னால் கூடுதல் வகுப்புகளை நடத்துவார். லீவு நாட்களில் வகுப்பு எடுத்தால் அனைவருக்கும் கணபதி ஹோட்டலின் போண்டா, பஜ்ஜி நிச்சயம்..ஆனாலும் என்ன… அவரது கையில் பளபளவென்றும் கோதுமை நிறத்தில் மின்னும் பிரம்பல்லவா எல்லோரின் நினைவிலும் தங்கிப் போயிற்று? அதை மேலும் கீழுமாக வீசும்போது காற்றைக் கிழித்தது போல் எழுப்பும் 'விஷ்' என்னும் ஒலிதான் எப்போதும் கேட்பது போல் தோன்றுகிறது..பிரம்பு என்றைக்காவது உடைந்து போய்விட்டது என்று சந்தோஷப்படக்கூட நேரமிருக்காது. ஆபிஸ் ரூமில் அவருக்கென்று நான்கைந்து பிரம்புகள் தயாராக வைத்திருப்பார். சில சமயம் அடி வாங்கப் போகிறவனையே போய் எடுத்து வரவும் செய்வார்..அவரைப் பற்றி நினைக்கையில், 'எப்போ பள்ளி திறக்கும்?' என்று ஆர்வத்தோடு இருந்த சுந்துவிற்கு அந்த ஆசையே போய்விட்டது..விடுமுறை நாட்கள் முடிந்தன. பள்ளியும் திறந்தாயிற்று. முதல் ஓரிரு நாட்களில், புதிய நண்பர்களை அறிந்து கொள்வதில் போயிற்று. வடக்கு சித்திரை வீதியில் இருக்கும் கோபாலகிருஷ்ண கோன் கடையிலும், புதுமண்ட கடைகளிலும் ஏழாம் வகுப்பு பாடப் புத்தகங்கள் வரவில்லை என்று கையை விரித்தார்கள். அப்படியே வந்தாலும் எவ்வளவு வேலை இருக்கிறது? புத்தகம் அழுக்காவதற்கு முன்னால் காலிகோ பைண்ட் செய்யவேண்டும். "நீதான் புத்தகத்தையே தொடுவதில்லையே . எப்படி அழுக்காகும்?" என்பது அம்மாவின் வாடிக்கை இடைச்செருகல். பைண்டிங் செய்து வாங்கி, பசையின் ஈரமணம் போனதற்கு பிறகுதான் பள்ளிக்கே எடுத்தே செல்லமுடியும்..புத்தகங்கள் வரும் வரை படிக்காமல் இருக்க முடியுமா? கோபால் சார்தான் சும்மா இருப்பாரா?.ஆறாம் வகுப்பு பாடத்திலிருந்து பத்து கணக்குகளை போர்டில் எழுதிப் போட்டார். "பசங்களா… இதுதான் ஹோம் ஒர்க். நாளைக்கு வரும்போது பதில் எழுதிக்கிட்டு வரணும். சரியா…" என்றார்..மற்ற செக்சன் ஆசிரியர்கள் பேசாமல் இருக்கும்போது, இவர் மட்டும் தான் இப்படி. அதுதான் கோபால் சார்….••• ••• •••.மறுநாள் காலை பள்ளிக்கு வந்ததும், அவரது மேசையின் மேலிருந்த நோட்டுக்களை எண்ணிப் பார்த்தார். நாற்பது மாணவர்கள் இருக்கிற வகுப்பில் முப்பத்தொன்பது நோட்டுக்கள்தான் இருந்தன.."எவன்டா ஹோம் ஒர்க் பண்ணாம இருக்கிறது. அதுவும் என்னோட கிளாஸ்ல… கையைத் தூக்கு" என்றார். அதற்கு முன்னரே அவர் கையில் பிரம்பைத் தூக்கியிருந்தார்..யாரும் கையைத் தூக்கியது போல் தெரியவில்லை. வந்த பையன்களை எண்ணிப் பார்த்ததும்தான் ஒருவன் ஆப்சென்ட் என்று தெரிந்தது.."பாய்ஸ்… ஒரு பையன் ஸ்கூலுக்கு மட்டம் போட்டிருக்கான்… யாருடா அது?" என்று கர்ஜித்தார்..புது வகுப்பு என்பதனால் யார் வரவில்லை என்பதில், மாணவர்களிடம் ஒரு குழப்பம் தெரிந்தது..சட்டென்று ஒரு பையன் எழுந்து , "சார் அந்த லொட்டாங்கைப் பையன்தான் வர்லை…" என்றான். வகுப்பில் சிரிப்பலை.."ஏண்டா அவனுக்கு பேர் கிடையாதா?"."அந்த பையன் இந்த வருசந்தான் நம்ம ஸ்கூல்ல சேர்ந்திருக்கான் சார். "."அதுனாலதான் நீங்களே பேர் வெச்சுட்டீங்களாக்கும்…"."அவன் பேரு செல்லபாண்டி சார்.".இரண்டு நாட்கள் கழித்துத்தான் செல்லப்பாண்டி ஸ்கூலுக்கே வந்தான். அதுவும் தாமதமாக..இடுப்பிலிருந்து நழுவி விழுகிற மாதிரி காக்கி டவுசர். பெரிய அளவில் தொளதொள வெள்ளைச் சட்டை… இல்லை…முன்பொரு காலத்தில் வெள்ளையாக இருந்திருக்கவேண்டும். தற்போது பழுப்பு நிறத்தில் இருந்தது. வலது தோளில் மஞ்சள் நிறத்தில் ஸ்கூல் பை. அதை அரவணைத்தபடி அவனது வலதுகை..கோபால் சாரைப் பார்த்ததும் இடதுகையால் 'குட்மார்னிங் சார்' என்று வணக்கம் வைத்தான்..அப்போதே கோபால் சாருக்கு அந்தப்பையன்தான் 'லொட்டாங்கை எனும் செல்லப்பாண்டி' என்று புரிந்தது.."என்னடா பாண்டி? வீட்டுப்பாடம் குடுத்ததும் லீவு போட்டியாக்கும்?" என்றார்.."இல்ல சார்… வீட்டுல…" என்று இழுத்தான் செல்லபாண்டி.."சரி வீட்டுல பிரச்னையா… இன்னிக்காவது போட்டுக் கொண்டு வந்திருக்கியா..".பாண்டி மெதுவாக மஞ்சள் பையிலிருந்து இடது கையால் நோட்டை எடுத்து சாரிடம் நீட்டினான்..அவனது நோட்டை வாங்கி அப்படியே திருத்த ஆரம்பித்தார். அப்படியும் இப்படியுமாக தலையை ஆட்டிவிட்டு, நோட்டை தூக்கி விட்டெறிந்தார்.."சுத்தம்… போனவருஷ கணக்குப் பாடத்திலேர்ந்துதான் கேள்வி கேட்டேன். தப்பு தப்பா பதில் எழுதியிருக்கே…" அவரது குரலில் கடுமை ஏற ஆரம்பித்தது..சாரைப் பற்றி அவனும் கேள்விப்பட்டிருந்தான். அது அவனது குரல் நடுக்கத்தில் தெரிந்தது.."சார் இனிமேல் நல்லாப் படிக்கிறேன் சார்…" கெஞ்சினான் பாண்டி.."இரண்டு மாசத்துக்கு முன்னால பரீட்சை வேற எழுதியிருக்கே. எப்படி மறந்து போகும்…" சொல்லிக்கொண்டே மேசையிலிருந்த பிரம்பை எடுத்தார். பார்த்துக் கொண்டிருந்த மற்ற பையன்களுக்கும் உதறல் எடுத்தது. 'நாளைக்கி நமக்கும் அதே கதிதான். '."கைய நீட்டுறா..".தயக்கத்துடன் இடதுகையை நீட்டினான்.."அறிவு கெட்டவனே… அப்பவும் லொட்டாங்கைதானா… வலது கையை நீட்டுறா…"."சார்… வேணாம் சார்…"."சொல்றதைக் கேக்கப் போறியா இல்லியா… கையை நீட்டு" அவரது குரலில் உறுதி இருந்தது.."சார்…சார்… இந்த கையிலேயே அடியுங்க சார்…' பாண்டி கெஞ்சினான்..கோபால் சாரின் கையிலிருந்த பிரம்பு உயர்ந்து நின்றது. பளபளவென்று, மழமழவென்று. அது மின்னல் வேகத்தில் கீழிறங்கி அவனது கையைத் தாக்க இருந்தது. பயத்தில் பையன்கள் படிக்கிற மேசைக்கு கீழே தமது கைகளை ஒளித்துக் கொண்டனர்..பாண்டி அப்போதும் இடதுகையை நீட்டியபடிதான் இருந்தான். சாரிடம் நல்ல பெயரை வாங்கி , வகுப்பு லீடராக அப்ளிகேஷன் போட தயாராக இருந்த ஒரு பையன் எழுந்து பாண்டி அருகில் நின்றான்.."குட்… டேய் இவனோட வலது கையைப் பிடிச்சு நீட்டுடா…அடிக்கும் போது கையை கீழ இறக்காமப் பாத்துக்க…".வருங்கால லீடர் அவனது வலதுகையை இறுக்கப் பிடித்துக் கொண்டான்..சாரின் பிரம்புக்கை கீழிறங்கப் போகும் நேரம்.."சார்… வேணாம் சார். சின்ன வயசுலேர்ந்து என்னோட வலது கை விழுந்திருச்சு சார்.".கோபால் சார் அவன் சொன்னதைப் புரியாதது போல் பார்த்தார்.."ஆமாம் சார். என்னோட வலதுகை செத்துப் போச்சு… அப்பா சொன்னாரு… நீங்க எவ்வளவு அடிச்சாலும் எனக்கு வலி தெரியாது. அப்புறம் நான் அழாம இருக்கிறேன்னு நீங்க கோபப்படுவீங்க… நீங்க லொட்டாங்கையில அடிங்க சார். அப்பத்தான் எனக்கு வலிக்கும் …" என்று செல்லப்பாண்டி சொன்னபோது அவன் முகத்தில் வெகுளித்தனம் தெரிந்தது..சார் பிரம்பை உயர்த்தினார்..கையில் விழப்போகும் அடியையும் அது தரப்போகும் வலியையும் எதிர்பார்த்தபடி கண்களை மூடிக்கொண்டு, உதடுகளை இறுகக் கவ்வியபடி நின்று கொண்டிருந்தான்..'க்ளக்" என்று சப்தம். கையில் விழவில்லை. வலிக்கவும் இல்லை. கண்களைத் திறந்து பார்த்தால் கோபால் சார் டேபிளின் மேல் அதை ஓங்கி அடித்து உடைத்தெறிந்திருந்தார். பிரம்பிற்கு விழுந்த அடி அது..உடைந்துபோன பிரம்பை தூக்கி விட்டெறிந்தார். அவரது கண்கள் கலங்கியிருந்தன. தனது நாற்காலியில் போய் அமர்ந்து கொண்டார்.."நீங்க எல்லாரும் நல்லாப் படிக்கணும் மக்களே…" என்ற ஒற்றை வாக்கியம் மட்டுமே அப்போதைக்கு வெளியில் வந்தது. அதன் பின்னர் அவரது ஆபீஸ் ரூமில் சேர்த்து வைத்திருந்த பிரம்புகளையெல்லாம் கூட தூக்கி தெருவில் வீசி எறிந்துவிட்டார் என்று பேசிக்கொண்டார்கள்..செல்லபாண்டி அவரது செல்ல மாணவன் ஆனான். அவனுக்கு பள்ளி சீருடை, புத்தகங்கள் வாங்கிக் கொடுத்து , தனியாக வீட்டுக்கு வரச்சொல்லி பாடம் எடுக்கத் தொடங்கினார்..ஆனால் "பிரம்படி வாத்தியார்" என்கிற பட்டம் மட்டும் அவருடன் தங்கிப் போயிற்று..••• ••• •••."காலைப் பேப்பர்ல அப்படி என்ன நியூஸ்? ரொம்ப நேரமா அப்படியே உட்கார்ந்து யோசிச்சுக்கிட்டே இருக்கீங்க?" என்றபடி நாற்பது வருட பழைய நினைவுகளைக் கலைத்தாள் மனைவி மணிமேகலை.."எங்க ஸ்கூல் பிரம்படி வாத்தியார் செத்து போயிட்டாராம். இரங்கல் செய்தி வந்திருக்கு. படிச்சவுடனே பழசெல்லாம் ஞாபகத்திற்கு வந்தது…" என்றபடி பேப்பரை மடித்து வைத்தான் சுந்து..'என் இதயத்தில் என்றென்றும் வாழும் தெய்வம்' என்று தலைப்பிட்டு, கோபால் சாரின் புகைப்படத்துடன், இரங்கல் செய்தியை , செல்லமாணவன் செல்லபாண்டி- இப்போது உயர் நீதிமன்ற வழக்கறிஞர்- அவன்தான் வெளியிட்டிருந்தான்.