தமிழ் இனம் 70,000 வருடங்களுக்கு முன் தமிழகம் வந்து சேர்ந்தது

தமிழ் இனம்  70,000 வருடங்களுக்கு முன் தமிழகம் வந்து சேர்ந்தது
Published on

உலகக் குடிமகன் –  18

– நா.கண்ணன்

சூழலியல் என்றொரு துறை இல்லாத நிலையில் நான் சூழலியல் பற்றி மதுரை காமராசர் கல்லூரியில் பேசிக் கொண்டிருந்தேன். அவ்வகையில் நானொரு முன்னோடியாக அங்கிருந்தேன். எனது ஆய்வுகள் துறைக்கு நிறைய வருமானம் கொடுக்கத் தொடங்கியது. எனவே நான் வைத்த செடி வளரத் தொடங்கியது. எனக்கு உதவ இளம் ஆய்வியல் மாணவர்கள் வந்து சேர்ந்தனர். நானே இன்னும் எனது முனைவர் பட்டத்தை முடிக்கவில்லை, ஆனால் எனக்குக் கீழே ஆய்வியல் மாணவர்கள் இருந்தனர், உதவியாளர்கள் இருந்தனர். ஒரு நிலையில் என் ஆய்வு உயிர் வேதியியல் துறையின் உபகிளையாகி எனக்கென ஓர் ஆய்வகம் உருவாகத் தொடங்கியது. அவ்வப்போது என்னைப் பார்க்க ஆர்.ஜே வருவார். "என்னையா இது அநியாயம்? நீ இன்னும் படிப்பு முடிக்கவில்லை அதற்குள் உனக்கோர் ஆய்வகம், மாணவர்கள்! அதிசயமாகவும், பொறாமையாகவும் இருக்கிறது" என்பார். எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும். அமெரிக்க பாஸ்டன் பல்கலைக் கழக மேனாள் ஆய்வாளர் என் வளர்ச்சி கண்டு பாராட்டுவதை நினைத்து.

எனக்கு சாம்பிள் என நெல், அரிசி வரும், காய்கறிகள் வரும், பழங்கள் வரும். எல்லாவற்றிலும் முன்பு அடித்த பூச்சி மருந்து எவ்வளவு தூரம், எவ்வளவு நாள் நிற்கிறது எனக் கண்டுபிடிக்க வேண்டும். வரும் ஒவ்வொரு சாம்பிளும் வித்தியாசமானவை. அவைகளுக்குள் மறைந்திருக்கும் பூச்சி கொல்லி வேதிமத்தைக் காணுதல் சவாலானது. இச்சவாலை நான் ஏற்றுக் கொண்டு பல்வேறு வழிமுறைகள் கண்டேன். இப்பயிற்சி பின்னால் எனது ஜப்பானிய ஆய்விற்கு உதவியது. அங்கு நான் கண்டறிந்த வேதிம விதிமுறைகள் உலக விஞ்ஞானிகளால் மிக அதிகமாக பாராட்டப்பட்டது. அது பற்றி விரைவில் பேசுவோம்.

இப்படித்தான் ஒருமுறை நிறைய திராட்சை வந்தது. பரிசோதனைக்குப் போக நிறைய மிஞ்சிவிடும். எனவே, எனது நுண்ணுயிர் இயல் துறை நண்பர்கள் இதிலிருந்து ஒயின் தயாரித்தால் என்ன? என யோசனை தந்தனர். சரி என கிலோ, கிலோவாக கருந்திராட்சைப் பழங்களை வழங்கினேன். நண்பர் பாண்டியன் தன் பரிசோதனையை ஆரம்பித்தார். எங்களுக்கு அடிக்கடி வரும் சால்வெண்ட் பாட்டில்களில் திராட்சை ரசத்தை நிரப்பி மண்ணுள் புதைத்துவிட்டார். சில நாட்கள் கழித்து ஒயின் உருவாகி விட்டதா? எனக் காண பாட்டிலைத் தோண்டி எடுத்து, பேராசிரியர் இலட்சுமணன் அறைக்குப் போனோம் (இவர் பின்னால் பல்கலைக் கழக துணை வேந்தர் ஆனார்). அழகான அறை. அவரது மேசையில் வைத்து, பாட்டிலைத் திறந்ததுதான் தாமதம்! ரசம் நொதித்துப் போன போது உருவான வாயு பீறிட்டு எழ, திராட்சை ரசம் மேலே எழும்பி விசிறியில் பட்டு அது ஒரு ஸ்ப்ரே போல அவர் அறை முழுவதும் கருநீல வண்ணத்தைப் பூசி விட்டது! நல்லவேளை இது நடந்தது இரவு. நான் முன்பு சொன்னது போல் இரவில்தானே எங்கள் ஆய்வெல்லாம்! யாருக்கும் முகத்தில் ஈயாடவில்லை. பேராசிரியர்களுக்கு இச்சேதி போனால் என்னாகும் எனும் பயம் பீடிக்கத் தொடங்கியது. பாண்டியன் சீனியர். எப்படியாவது சமாளித்து விடுவார். என் கதி. நான் என் ஆய்வுப்பொருளை தவறான பயன்பாட்டிற்குக் கொடுத்த பழி வருமே? ஐயோ சாமி! என்று இரவெல்லாம் அவர் அறையைக் கழுவி சுத்தம் செய்தோம். காலையில் வந்த பேராசிரியர் தன் அறை பளிச்சென்று இருப்பதைக் கண்டு பாராட்டினார்.

உயிரியில் துறையின் ஒவ்வொரு பேராசிரியரும் நல்ல ஆய்வாளர்கள் என்பதோடு திறந்த மனமுடையவர்கள். மாணவர்களோடு மிகவும் நெருக்கமாக நட்போடு பழகினர். உண்மையில் எங்களை மாணவர்கள் என்றே அவர்கள் கருதியது கிடையாது. ஏதோ சக விஞ்ஞானி போல்தான் நடத்தினர். எனவே பாண்டியன் உண்மை சொல்லியிருந்தாலும் அவர் நுண்ணுயிர்களை வைத்து சரியாக எப்படி வயின் தயாரிப்பது என சொல்லிக் கொடுத்து இருப்பார். அதுவொரு நிலாக்காலம்! இப்படித்தான் எனது ஆய்வின் ஆரம்பத்தில். தொஷ்னிவால் கம்பெனியின் வளிப்பிரி சோதனைக் கலம். அதை ஆங்கிலத்தில் காஸ் குரொமொடோகிராஃபி என்போம். இப்பவெல்லாம் ஒரு சர்வீஸ் என்ஜினீயர் வந்தால்தான் உண்டு. ஆனால், பெரும்பாலான சமயங்களில் நாங்களே சோதனைக் கலத்தின் நுணுக்கமறிந்து ரிப்பேர் செய்து விடுவோம். அதை ஆசான்கள் ஆதரித்தனர். எனவே, நான் எனது வளிப்பிரிக் கலத்தை பிரித்து மாட்டிக் கொண்டிருந்தேன். முதல் முறை. கொஞ்சம் பயம்தான். அதுபோலவே எரிவளியைக் கொஞ்சம் கூடக் கொடுத்துவிட்டேன். உள்ளேயிருந்து ஒரு 'டப்' எனும் சத்தம். திறந்தால் 5000 ரூபாய் சரக்கு உடைந்து கிடந்தது. தொலைந்தோம் என பதறிப்போனேன். இது நிகழ்ந்தபோது நான் பதிவு செய்யப்பட்ட மாணவன் கூடக் கிடையாது! வழக்கம் போல் கையில் சிகரெட்டோடு என் ஆசான் ஜே.ஜே வந்தார். அவர் அதிகம் பேசமாட்டார். வந்தார், பார்த்தார். என்னைப் பார்த்து நம் காரியதரிசியிடம் சொல்லி புதிய காலம் (column) வாங்கச் சொல்லு! என்று சொல்லிவிட்டுப் போய்விட்டார். நான் திகைத்துப் போய்விட்டேன். ஒரு சுடு சொல் இல்லை. ஒரு அதட்டு இல்லை. அந்த நிகழ்ச்சிக்குப் பிறகு என் பொறுப்பு மிக அதிகமாகியது, ஒருமுறை கூட இது போன்ற தவறு அதன் பின் நடக்கவில்லை. அந்தப் பாடத்தை எனக்கு அவர் புகட்டினார். அதற்கான செலவு ரூ. 5000. அக்காலத்தில் அது பெரிய தொகை. ஆனால் அவர் அதைப் பொருட்படுத்தவில்லை. ஆனால் ஒரு ஆய்வாளனுக்கு அது தரும் நம்பிக்கை அளப்பரியது. நான் வெளி நாடுகளில் இப்பின்னணியில் செயல்பட்டபோது அந்த நாட்டு சக விஞ்ஞானிகளுக்கு இணையாக மதிக்கப் பெற்றேன்.

இந்த தயாரிப்புதான் அங்கு பயின்ற எல்லா மாணவர்களையும் உலகத்தரத்தில் வைத்தது. அவர்கள் வெளிநாடு போன பிறகு தன்னிச்சையாக ஆய்வு செய்ய முடிந்தது. உண்மையில் இரவு, பகல் பாராமல் ஆய்வு செய்பவர்கள் சீனர்களும், இந்தியர்களும் என எனது அமெரிக்க நண்பர்கள் சொல்வர். உயிரியில் பள்ளியில் நான் பெற்ற இன்னொரு ஆதர்சம் அறிவியல் வெளியீடு பற்றியது. டாக்டர் ஷண்முக சுந்தரம், பார்க்கும் போதெல்லாம் சொல்வார், "Publish or Perish" என்று. ஆய்வு முடிவுகள் உலகத்தரம் வாய்ந்த சஞ்சிகைகளில் வெளிவரவில்லையெனில் நாம் செய்யும் ஆய்வு உப்புக்கு பெறாதது என்பது எம் ஆசான்களின் முடிவு. டாக்டர் தி.ஜே.பாண்டியன் தான் மாணவராக இருந்த போது செய்த ஆய்வு Citation classic, அதாவது என்றென்றும் நினைவு கூறத்தக்க ஆய்வு எனும் நிலையை எட்டிவிட்டதாக அறிவிக்க ஒரே பரபரப்பு. எனக்கும் அந்த ஆசை ஒட்டிக்கொண்டது. நான் வரும் காலங்களில் செய்யும் ஆய்வு உலகத்தரமாக இருக்க வேண்டும். அது என்னென்றும் நினைவு கூறப்பட வேண்டும். அதை நான் பின்னால் சாதித்து முடித்தேன். என் துறையின் நோபல் நாயர்களுக்கு இணையாக என் ஆய்வு இன்று நிற்கிறது. அதற்கு ஆதர்சம் மதுரை காமராசர் உயிரியல் பள்ளி எனப் பதிவு செய்வதில் மகிழ்கிறேன். இதையெல்லாம் கேட்க இன்று ஒரு கிருஷ்ணசாமி இல்லை, ஜே.ஜே இல்லை, கே.ஜே. இல்லை, ஆர்.ஜே. இல்லை. ஆயினும் பதிவு செய்ய வேண்டியது என் கடமை. அங்கு இத்தகைய ஆய்வுகள் மேலும் உச்சத்திற்கு இட்டுச் செல்லப்பட்டது. உதாரணம் டாக்டர் செல்லப்பனின் மரபு தொடர்பான ஆய்வுகள். அவரே முதன் முறையாக ஆக்ஸ்போர்டு விஞ்ஞானிகளோடு கூட்டு சேர்ந்து தமிழ் இனம் ஆப்பிரிக்காவிலிருந்து ஏறக்குறைய 70,000 வருடங்களுக்கு முன் தமிழகம் வந்து சேர்ந்தது எனும் அரிய உண்மையைக் கண்டுபிடித்துச் சொல்லி பேரும் புகழும் பெற்றார்.

(தொடரும்)

Loading content, please wait...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com