தன்னம்பிக்கையின் முக்கியத்துவத்தைத் திருத்தமாக உணர்த்துகிறார்.

தன்னம்பிக்கையின் முக்கியத்துவத்தைத் திருத்தமாக உணர்த்துகிறார்.
Published on
 சினிமா விமர்சனம்
– லதானந்த்

குழந்தைகளுக்கான திரைப்படங்கள் அதிகம் வெளிவராத இந்தக் காலத்தில் அபூர்வமாக வெளியாகியிருக்கிறது, 'மை டியர் பூதம்!' வெறும் ஃபாண்டஸிப் படமாக மட்டும் அல்லாமல் சிறப்பானதொரு மெசேஜையும் பொதிந்து வைத்திருக்கிறார்கள். அதற்காக முதலில் பாராட்டுகளைத் தெரிவித்துவிடலாம்.

பூத லோகத்தில் சாபத்துக்கு ஆளாகும் பூதங்களின் தலைவனான 'கர்க்கிமுகி' என்னும் பெயருடைய பிரபுதேவா நீண்ட காலம் கழித்துத் தமக்கு வாரிசாகக் கிடைத்த கிங்கிணியாவுடன் சந்தோஷமாய் வாழ்கிறார். சந்தர்ப்பவசத்தால் அவருக்கு முனிவர் ஒருவரின் சாபம் கிடைத்துவிட, கல்லாய் மாறி பூமிக்கு வந்துவிடுகிறார். 3000 ஆண்டுகள் கழித்து, 'திருநாவுக்கரசு' என்ற பெயருள்ள சிறுவன் அஷ்வந்த் மூலம் அவருக்கு சாப விமோசனம் கிடைக்கிறது. கடைசியில் வேறொரு காரணத்துக்காக மிகப் பெரியதொரு தியாகத்தைச் செய்துவிட்டு பூதம் இறந்துபோகிறது. இந்த மாயாஜாலக் கதையில் லாஜிக் ஓட்டைகளை ஒருபோதும் 'பூத' கண்ணாடி வைத்துத் தேடக்கூடாது என்பதை முதலில் புரிந்துகொண்டால் படத்தை ரசிக்கலாம்.

சிறுவன் அஷ்வந்த் நடிப்பு பிரம்மாதம். உண்மையில் இந்தப் படத்தையே ஒற்றையாளாய்ச் சுமந்து திரிவது அவன்தான். சுய பச்சாதாபம், அன்பு, நகைச்சுவை, கோபம் என அத்தனை உணர்வுகளையும் முகத்தின் ஒவ்வொரு தசை அசைவுகளிலும் கச்சிதமாக வெளிப்படுத்துகிறான். படம் ஆரம்பித்து அரை மணி நேரம் கழித்துத்தான் பிரபுதேவா வருகிறார். நடனக் காட்சி இல்லாத பிரபுதேவா படம் இருக்க முடியுமா என்ன? சம்பந்தமில்லாமல் பிரபு தேவாவின் நடனக் காட்சி ஒன்றும் இடம்பெற்றிருக்கிறது.

உதவி செய்யும் பூதத்துடன் ஒரு கட்டத்தில் மனவருத்தம் ஏற்பட்டு அதைப் பிரிந்து போகச் சொல்லும் காட்சிகள் பட்டணத்தில் பூதம் திரைப்படத்தை நினைவூட்டுகின்றன. அதைப் போலவே பந்து விளையாட்டுக் காட்சிகளும்!

பூதம் செய்யும் சேட்டைகளில் கிராஃபிக்ஸ் உச்சத்தைத் தொட்டிருக்கிறது. பறக்கும் குதிரையில் சவாரி செய்வதும், பந்துக்குள் புகுந்து பூதம் செய்யும் ரகளைகளும் அதகளம்!

'உசுப்பேத்தும்போது உம்முன்னும், கடுப்பேத்தும்போது கம்முனும் இருந்தா வாழ்க்கை ஜம்முனு இருக்கும்' என்ற விஜயின் பொன்மொழியைத் தக்க இடத்தில் பயன்படுத்தியிருக்கிறார்கள்.

'திக்குவாய்ப் பிரச்னை என்பது திக்குபவர்களின் வாயில் இல்லை; அது கேட்பவர்களின் காதில் இருக்கிறது' என்பதை அழுத்தமாக உணரவைத்திருக்கிறார்கள்.

உறவினர் குஞ்சித பாதம் மற்றும் பிரபுதேவா பூதம் சம்பந்தப்பட்ட காட்சிகளில் சிரிப்பு எட்டிப்பார்க்கிறது. மற்றபடி நகைச்சுவைக்கு நல்ல ஸ்கோப் இருந்தும் அவ்வளவாகப் பயன்படுத்தப்படவில்லை.

செந்தமிழில் பேசும் பூதத்திடம், "நீ பேசும் தமிழ் புரியவே இல்ல. ஒழுங்காத் தமிழில் பேசு" என்று சிறுவன் சொன்னதும், பூதம் தமிங்கிலீஷில் பேசிப் புரியவைப்பது குறும்பு!

தமிழாசிரியர், "நாவுக்கே பிரச்னையா?" என்பார். ஆசிரியர்களே திக்குவாய் மாணவனைச் சீண்டுவதைத் தவிர்த்திருக்கலாம். (படத்தின் கடைசியில் ஆசிரியை தமது தவறை உணர்வதாக் காட்டியிருக்கிறார்கள் என்பது வேறு விஷயம்).

பள்ளி விழா ஒன்றில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொள்ளும்          திரு.இறையன்பு ஐ.ஏ.எஸ் அவர்கள் பரிசுகொடுத்துப் பேசும் உரை பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்படவேண்டியவை. அவ்வளவு நேர்மறை எண்ணங்களை விதைக்கிறார். தன்னம்பிக்கையின் முக்கியத்துவத்தைத் திருத்தமாக உணர்த்துகிறார். வாழ்த்துகள் சார்!

படத்தின் ஆரம்பத்தில் வாய்ஸ் ஓவர் மூலம் சொல்லப்படும் நீண்ட வசனங்களையே வேறோர் இடத்தில் பிரபுதேவா மீண்டும் ஒருமுறை சொல்கிறார். ஏதாவது ஒன்றைக் கத்தரித்திருக்கலாம்.

அதேபோலப் போலி டாக்டராக வரும் சுரேஷ் மேனன் தொடர்பான காட்சிகளும் அவர் கைதாவதும் படத்தின் நகர்வுக்கு எந்த விதத்திலும் உதவவில்லை. அவற்றையும் வெட்டியிருக்கலாம்.

பின்னணி இசை படத்துக்குப் பக்கபலம்.

குழந்தைகள் மட்டும் அல்ல… பெரியவர்களுக்கும் இந்தப் படம் பிடிக்கும். ஆனால் ஒன்று… பள்ளி விடுமுறை நாட்களில் இந்தப் படம் வெளியாகியிருந்தால் இன்னும் கூட்டம் கொஞ்சம் அதிகம் வந்திருக்கும்.

மொத்தத்தில் மை டியர் பூதம்: நல்ல பூதம்!
Loading content, please wait...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com