என் மகன் கல்கியைப்போல, பெரிய எழுத்தாளனாக வருவான்

என் மகன் கல்கியைப்போல, பெரிய எழுத்தாளனாக வருவான்
Published on

வல்லபா ஶ்ரீனிவாசன்

சென்னையில் "தமிழ் புத்தக நண்பர்கள்"  என்ற அமைப்பு  மாதந்தோறும்   நடைபெறும் அவர்களது கூட்டத்தில் ஒரு புத்தக விமர்சனம் இடம்பெறும். விமர்சனம் செய்யும் எழுத்தாளர் அல்லது வாசகரின் விமர்சனத்துக்கு பின்னர் அந்த புத்தக ஆசிரியர் உறுப்பினர்களுடன் உரையாடுவார்,  கூட்டங்களை சிறப்பாக திட்டமிட்டு சரியான நேரத்தில் தொடங்கி குறிப்பிட்டிருக்கும் நேரத்தில் முடிக்கிறார்கள்.  மற்ற இலக்கிய கூட்டங்களைப்போல் இல்லாமல்  உறுப்பினர்கள் தங்கள் பங்கேற்பை முன்னதாகவே உறுதி செய்யவேண்டும்.

ஒவ்வொரு கூட்டத்திலும்

செவிக்குணவு இல்லாத போழ்து சிறிது
வயிற்றுக்கும் ஈயப் படும்

என்பதை சற்று மாற்றி  நல்ல சிற்றுண்டிக்கு பின்னரே செவிக்குணவு தொடங்குகிறது. இந்த உணவு வேளையில் பங்கு கொள்ளும் உறுப்பினர்கள், விருந்தினர் உரையாடி, புதிய நட்புகள் அறிமுகமாகி  நட்பை வளர்த்துக்கொள்ளும் வாய்ப்பாக அமைவதால் மாதம்தோறும் பங்குகொள்வோரின் எண்ணிக்கை உயர்கிறது. அதிலும் குறிப்பாக பெண்கள் அதிகம் பங்கு கொள்கிறார்கள்.

2014ல் நான்கு நண்பர்களின் முயற்சியால்  "தமிழ்ப் புத்தக நண்பர்கள்" அமைப்பு உருவானது.  தொழிலதிபரும் புரவலருமான ஆர்.டி.சாரியின் இந்த முயற்சிக்கு உறுதுணையாக, விளம்பரத் துறையில் பிரபலமானவரும், சிறந்த ஆங்கில எழுத்தாளருமான திரு ஆர்.வி. ராஜன், பல்லாயிரக் கணக்கான தமிழ்ப் புத்தகங்களை வெளியிட்ட மணிமேகலை பிரசுரம் மேலாண்மை இயக்குநர் ரவி தமிழ்வாணன்,  காலமான மூத்த பத்திரிகையாளர் சாருகேசி, தற்போது, கலைமகள் ஆசிரியர் கலைமாமணி கீழாம்பூர் சங்கர சுப்ரமணியன் இணைந்திருக்கிறார்.

மூத்த எழுத்தாளர் அசோகமித்திரனிலிருந்து தொடங்கி, இதுவரை 62 நூலாசிரியர்களின் படைப்புகள் அறிமுகப்படுத்தப்பட்டு  விமர்சிக்கப்பட்டிருக்கின்றன. விமர்சிப்பவர்களுக்கு சன்மானம் வழங்குகிறார்கள். அதுமட்டுமில்லாமல் ஆண்டின் சிறந்த விமர்சகர் தேர்ந்தெடுக்கப்பட்டு  அவருக்கு 20,000 பணப் பரிசும் வழங்குகிறார்கள். இதைத் தவிர  கடந்த சில ஆண்டுகளாக  மூத்த எழுத்தாளர்களுக்கு வாழ்நாள் சாதனையாளர்களுக்கு 75,000 பணப் பரிசும்  விருதும் வழங்கி சிறப்பிக்கிறார்கள்.  ஆண்டுதோறும்   இந்தப் பணப் பரிசுகளை வழங்குபவர், இசை, எழுத்து, இந்திய கலாசாரம் போன்றவற்றை நேசிக்கும் தொழிலதிபர் சாரி  மாதந்தோறும் கூட்டங்கள்  நடத்த தன் அரங்கத்தை அளித்து,  உறுப்பினர்களுக்கு சிற்றுண்டியும் அளித்து உபசரிப்பவரும் அவரே.

அண்மையில் நடந்த இந்த அமைப்பின் 62வது  கூட்டத்தில் மூத்த எழுத்தாளர் ராஜேஷ்குமாருக்கு "வாழ்நாள் சாதனையாளர்"  விருது வழங்கப்பட்டது. அவரை அறிமுகம் செய்த லேனா தமிழ்வாணன்  "தமிழ் இலக்கிய உலகம் சரித்திர, சமூக  நாவல்களை எழுதும்  எழுத்தாளர்களை அங்கீகரிப்பதைப் போல துப்பறியும் கதைகள் எழுதும் எழுத்தாளார்களை கெளரவிப்பதில்லை என்ற குறை இன்று தீர்ந்தது" என்றார்.

எழுத்தையே முழுநேர தொழிலாகக் கொண்டு கடந்த 60 ஆண்டுகளாக துப்பறியும் கதைகளும் நாவல்களும் எழுதி வரும் ராஜேஷ்குமார் தனது ஏற்புரையில் கல்லூரி படிப்பு முடித்தவுடன் வேலைக்குப்போக முயற்சி செய்யாமல் கதை எழுதிக்கொண்டிருப்பதைப் பார்த்த உறவினர்கள் தன் தாயிடம் குறை சொன்னபோது அவர் "என் மகன் கல்கியைப் போல, நா.பாவைபோல பெரிய எழுத்தாளனாக வருவான்"  என்று சொன்னதை தன் எழுத்துக்காக வாழ்நாள் சாதனை விருதுபெறும்  இந்த நேரத்தில் நினைவுகொள்கிறேன்" என்று நெகிழ்ச்சியுடன் சொன்னார்.  அவருடன் அந்த கணத்தில் அந்தத் தாயை அவையினரும் பெருமிதமாக உணர்ந்தது நிஜம்.

இந்த விழாவில் வாழ்நாள் விருதுபெற்ற மற்றொரு சாதனையாளர்  எழுத்தாளர் மருத்துவர் டாக்டர் தாமரை ஹரிபாபு.  வாசகர்களிடையே பரவலாக அறியப்படாத இவர் செய்திருக்கும் சாதனைகள் அறிவிக்கப்பட்டபோது அவையினர் வியந்துபோனார்கள். இதுவரை 50000 பிரசவங்களை வெற்றிகரமாக நடத்தியிருக்கும் மகப்பேறு மருத்துவரான இவர் கிடைத்த ஒய்வு நேரத்தில் புத்தகங்களும் எழுதியிருக்கிறார்.

அதுவும் காந்தி பெரியார் ஒப்பிடு, மருதுசகோதர்கள் போன்ற சீரியசான விஷயங்கள் குறித்து எழுதியிருக்கிறார். தமிழ் மறையான  திவ்யபிரபந்தத்தின் 4000 பாடல்களையும் மனனம் செய்திருப்பவர். ஒரு மருத்துவர், எழுத்தாளர் என்ற பாணியில் இல்லாமல் மிக எளிமையாக நிதானமாக எந்தக் குறிப்பும் இல்லாமல்  ஆனால், கண்முன் இருக்கும் ஒரு பேப்பரை படிப்பதுபோல  பேசினார்.

இந்த அமைப்பு கடந்த 6 ஆண்டுகளில்  நிகழ்த்திய  கூட்டங்களில் அறிமுகப்படுத்தப்பட்ட நால்கள், அதன் ஆசிரியர்கள் அதை விமர்சனம் செய்தவர்களின் விபரங்களை சுருக்கமாகத் தொகுத்து அளிக்கும் அரிய பணியைச் செய்யும் வாய்ப்பு எனக்கு கிட்டியது என் பாக்கியம். அது இந்த  நிறைவு விழாவில் அழகான ஒரு புத்தகமாக இனிப்புடன் அனைவருக்கும் அளிக்கப்பட்டது.

"சரியான நபர்களுக்கு வாழ்நாள் விருது வழங்கப்பட்டிருக்கிறது" என்று உறுப்பினர்கள்  எவ்வளவு  மகிழ்தார்களோ அதே அளவு  "இந்த அமைப்பின் கடைசிக் கூட்டம் இதுதான்" என்ற அறிவிப்பினால் வருத்தமடைந்தார்கள் என்பதே உண்மை.

Loading content, please wait...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com