
? ஓர் எழுத்தாளன் எப்படியிருக்க வேண்டும்?
– மதி மாறன், சேலம்
! ஓர் எழுத்தாளன் தம் வாசகர்களுக்கு நெருக்கமான, தம்மைப் போன்ற ஒரு மனிதனாக, தாம் எளிதில் அணுகி உரையாடக்கூடிய ஒருவனாக, தமக்குப் பிடிக்கக்கூடிய பல செய்திகளையும் புதிய பார்வைகளையும் தரக்கூடிய ஒரு சுவையான அனுபவத்தைக் கொடுக்கும் நண்பனாகப் பார்க்க வைத்தால் அந்த எழுத்தாளன் என்றென்றும் வாசகர்கள் நெஞ்சில் வாழ்வான். மறைந்த சுஜாதா, அசோகமித்திரன் போன்றவர்கள் அப்படியிருந்தவர்கள். இன்று சில எழுத்தாளர்கள் தங்களை கடவுளாக கருதிக்கொண்டு கனவுலகில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.
? செஸ் ஒலிம்பியாட் ' விளம்பரத்தில் பிரதமர் படம் இடம் பெறவில்லை என்று கூறப்படுவது பற்றி?
– ஆ. மாடக்கண்ணு, பாப்பான்குளம்
! அதைவிட வருத்தமான விஷயம் உலக சாம்பியன் விஸ்வநாதன் ஆனந்த் முதல் தமிழகத்திலிருந்து உருவான 24 கிராண்ட் மாஸ்டர்ஸ் படங்களில் ஒருவர் படம் கூட இடம் பெறாததுதான்.
இந்த வார ஜோக்
? "தமிழகத்திற்கு ஒவ்வொரு முறையும் உதவி செய்வது பா.ஜ.க. தான்" என்று வானதி சீனிவாசன் கூறியுள்ளாரே…?
– எஸ். இராமதாஸ், வாணரப்பேட்டை
! மத்திய அரசு அறிவிக்கும் நலத் திட்டங்களுக்கு தரும் பணத்தை உதவி என்று சொன்னால் அது தவறு. தமிழகத்துக்கு வர வேண்டிய ஜிஎஸ்டி பணத்தை உரிய நேரத்தில் தராமல் இப்படி பேசுவதை தமிழ் நாட்டு மக்கள் விரும்பவில்லை என்பதை அவர் உணர வேண்டும்.
80 கோடி மதிப்பில் 134 அடி உயரத்தில் பேனா நினைவுச் சின்னம் அமைக்க போகிறார்களாமே ?
– கி. சோழராஜன்,, புதுச்சேரி – 605107
! ஏற்கெனவே உள்ள நினைவிடங்கள், சிலைகள் பரப்பாத புகழையா இந்த பேனா செய்துவிடப் போகிறது?
புதிய தலைமை புதிய சிந்தனைகளுக்கு இடமளிக்காமல் மீண்டும் பழைய பாணியில் நினைவுச் சின்னங்கள் வைப்பதும், சிலை வைப்பதுமாக எந்த விதத்திலும் பலன் தராத, வீண் விமர்சனங்களுக்கு மட்டுமே வழி வகுக்கும் யோசனை இது! கடல் நடுவே நிறுவப்படும் ஒரு பேனாவின் உருவம் நாளடைவில் உப்புக்காற்றில் நனைந்து ஒரு வெற்றுத்தூண் போல காட்சியளிக்கும்! எந்தவிதத்திலும் அது அவரின் பெருமையை நினைவுகூறுவதாக அமையாது! வீண் விளம்பரம் என்கிற விமர்சனமே மிஞ்சும்!
அப்படி எதையாவது செய்தே ஆகவேண்டும் என்று நினைத்தால், இதைவிட இந்தப் பணத்தை வைப்புத்தொகையாக வைத்து அதில் வரும் வருமானத்தில் ஆண்டுதோறும் கலைஞர் பிறந்தநாளன்று தமிழில் சிறந்த படைப்பிலக்கியங்களுக்கு "நாடகம், நாவல், கவிதை" போன்றவற்றிற்கு பரிசளிப்பதன் மூலம் அவரை ஒரு இலக்கியவாதியாக, கலைஞராக காலம் காலமாக நினைவுகூறுவதாக அமையும்!
நீட் தேர்வில் 163 கேள்விகள் மாநிலப் பாடத் திட்டத்திலிருந்து கேட்கப்பட்டிருப்பது நம் மாணவர்களுக்கு உதவும் விஷயம் தானே?
– மஹாலட்சுமி, திண்டுக்கல்
! இல்லை. நீட் தேர்வு முறையை சரியாகப் புரிந்துகொள்ளாமல் இப்படிச் சொல்வது ஊடகங்கள் செய்யும் ஒரு தவறு.
நீட் தேர்வில் ஒரு மாணவர் 180 கேள்விகளுக்குப் பதில் அளிக்க வேண்டும் (20 கேள்விகள் சாய்ஸ்); சரியான ஒவ்வொரு பதிலுக்கும் 4 மதிப்பெண்கள்; தவறான பதில் அளித்தால் நெகடிவ் மதிப்பெண்.
இதன்படி 162 கேள்விகள் தமிழக அரசுப் பாடநூல்களிலிருந்து வந்திருக்கின்றன எனக் கொண்டால்கூட ஒரு சிபிஎஸ்இ மாணவர் 720 மதிப்பெண்களுக்குப் பதில் எழுதுகிறார்; மாநிலக் கல்வி வாரிய மாணவருக்கோ தேர்வே 648 மதிப்பெண்களுக்குத்தான் நடத்தப்படுகிறது. அதாவது, பரிட்சை எழுதும் முன்னரே 10% மதிப்பெண்களும், கூடவே 20 சாய்ஸ் கேள்விகளும் காலி. மாநிலப் பாடத்திட்டத்தின் கீழ் படிக்கும் ஒரு மாணவர் முழுமையாக தன்னுடைய புத்தகங்களைக் கரைத்துக் குடித்திருந்தாலும்கூட மிச்சம் 38 கேள்விகளுக்கு அவர்களால் பதில் அளிக்க முடியாது; ஏனென்றால், அவை தேசிய பாடத்திட்டத்திலிருந்து கேட்கப்படுபவை. இதற்காகதான் நீட் தேர்வை எதிர்த்துப்போராடுகிறார்கள்.
தொலைகாட்சி விவாதங்களினால் என்ன பயன்?
– சண்முக நாதன், பாளையங்கோட்டை
! ஒரு செய்தியின் , தகவலின் இரு பக்கங்களையும் புரிந்துகொள்வதற்காகதான் விவாதங்கள் மேற்கொள்ளப்படுகின்றன. ஆனால், அண்மைக்காலமாக இம் மாதிரி விவாதங்கள் ஒரு சார்புடையதாகவே இருக்கிறாது. சில சானல்களில் நெரியாளரும் ஒரு சார்பு நிலையில் நிகழ்ச்சியை நடத்துகிறார். பத்திரிகையாளர்கள் என்பவர்கள் எந்த ஒரு நிகழ்விலும் உணர்வுப்பூர்வமாய் கலந்துவிடக்கூடாது. அப்படி ஆகும்போது சார்பு நிலை எடுத்து விடுகிறார்கள்.
ஒரு நிகழ்வு, சட்டப்பூர்வமாய், தார்மீகமாய், மனித நேயத்தைச் சார்ந்து, தேசபக்தியைச் சார்ந்து இன்னின்ன காரணங்களால் தவறு அல்லது இன்னின்ன காரணங்களால் சரி என்கிற பார்வையை உணர்வு கலக்காமல் முன்வைக்க வேண்டும்.
அப்படிச் செய்யாதவர்கள் பத்திரிகையாளர்களின் மாண்பைக் குறைக்கிறார்கள். இந்த விவாதங்களால் பலன் பெறுபவர்கள் விளம்பரதாரர்களும் சானல்களும்தான்.
இங்கிலாந்து பிரதமர் தேர்தலில் ரிஷி சூனாக் வெற்றிபெறுவாரா?
– சுசீலா ரங்கன், வேலூர்
! வாய்ப்புகள் அதிகம். ரிஷி சூனக் முன்னிலையில் இருக்கிறார். சூனக் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவராக கருதப்படுகிறார். அதுமட்டுமில்லாமல் இந்தியாவின் பிரபலமான தொழிலதிபரும் இன்ஃபோஸிஸ் ( Infosys) நிறுவனத்தை உருவாக்கியவர்களான நாராயண மூர்த்தி மற்றும் சுதா மூர்த்தியின் மருமகன் என்பதால் தமிழகத்தில் ஆர்வம் அதிகமாகியிருக்கிறது.
போரிஸ் ஜான்சன் பிரதமராக இருந்தபோது, சூனக் பிரிட்டனின் நிதியமைச்சர் பொறுப்பில் இருந்தார். ஜான்சன் பதவி விலகிய பிறகு, கன்சர்வேட்டிவ் கட்சியின் தலைமைக்கான போட்டியில் சூனக் தன்னை இணைத்துக் கொண்டார். இந்திய வம்சாவளியைச் சேர்ந்த முதல் பிரிட்டன் பிரதமராக இவரே வருவார் என்று கன்சர்வேட்டிவ் கட்சிக்குள்ளும் வெளியிலும் பலரும் கணிக்கின்றனர்.
ஆனால், பலர் எண்ணிக்கொண்டிருப்பதைப்போல இவர் நேரடியாக இந்திய வம்சாவளியில் வந்தவர் அல்ல. ரிஷி சூனக் லண்டன் சவுத்தாம்ப்டனில் (Southampton) பிறந்தவர். அவருடைய பெற்றோர்கள் கிழக்கு ஆப்பிரிக்காவின் வெவ்வேறு பகுதிகளில் இருந்து பிரிட்டனுக்கு புலம் பெயர்ந்தவர்கள். இருப்பினும், இந்தியாவில் இருக்கின்ற பஞ்சாப் மாநிலத்துக்கும் அவர் தாத்தாவின் சகோதரருக்கும் தொடர்பு இருக்கிறது என்பதால் நமது ஊடகங்கள் அவர் 'இந்திய வம்சாவளி' என்று கொண்டாடுகின்றது. சூனக்கின் தந்தை யஷ்விர் கென்யாவில் இருந்து பிரிட்டனுக்கு புலம் பெயர்ந்துள்ளார். சூனக்கின் தாயார் தான்சானியாவில் இருந்து வந்தவர்.
உணவுப் பொருட்களுக்கும் ஏன் ஜி.எஸ்.டி. போடுகிறார்கள்?
– வண்ணை கணேசன், தூத்துக்குடி
! உணவுப் பொருட்களுக்கும் முன்பு வரிவிதிக்கப்பட்டிருந்தது. அது மக்களுக்கு பலனளிக்கும் வகையில் நீக்கப்பட்டிருந்தது. இப்போது ஜி.எஸ்.டி. உருவில் புது அவதாரம் எடுத்திருக்கிறது. அதிகம் விற்கப்படும் பொருட்களுக்கும் வரிவிதிப்பது என்பது அரசின் வருவாயைப் பெருக்கும் வழிகளில் ஒன்று. ஆனால், அத்தியாவசிய உணவுப் பொருட்களான அரிசி, பால் போன்றவற்றிற்கு வரி விதிப்பது மக்களுக்குச் செய்யும் அநீதி. அதைவிட மோசம் புரியாத வரிவிதிப்பு முறை. நீங்கள் 25 கிலோ அரிசி வாங்கினால் வரி கிடையாது. ஆனால், 5 கிலோ வாங்கினால் வரி.