ஆரியம், திராவிடம் எனும் கருதுகோள் மிகப்பலமான அரசியல் இயங்கு சக்தி..

ஆரியம், திராவிடம் எனும் கருதுகோள் மிகப்பலமான அரசியல் இயங்கு சக்தி..
Published on

உலகக் குடிமகன் – 30 

நா.கண்ணன்

ன்றைய ஜெர்மனிதான் எவ்வளவு மாறிவிட்டது. இந்த மாற்றத்தைக் கண்கூடாகக் கண்டவன் நான். ஆனால், மக்கள் மனதை இனவாதத்திலிருந்து மாற்றுவது எளிதல்ல. மனிதனுக்கு நல்லதை பிடித்துக் கொள்வதைவிட கெட்டதை பிடித்துக்கொள்ளப் பிடிக்கிறது. இனவாதம் இப்படிப்பட்டது. மாறுபட்டு இருந்தால் அது விலக்கத்தக்கது என்று சமூகம் காண்கிறது. நிறவாதத்தின் அடிப்படை இது. கருப்பு, வெள்ளை, மஞ்சள், பளுப்பு என உலகம் இருக்கிறது. உலகப் பயணம் மேற்கொண்ட வெள்ளையர்க்கு கருப்பை முதலில் கண்டபோது ஓர் பயம் பிடித்துக்கொண்டது. இவர்கள் ஏதோவொரு மிருகம் எனக் கண்டனர். அவர்களை அடிமைப்படுத்தி சந்தையில் விற்றனர். ஸ்பானியர்கள் தென் அமெரிக்கா சென்றபோது அங்கு கண்ட செவ்விந்தியப் பழங்குடிகளை மிருகம் எனக் கண்டனர். கூண்டில் அடைக்கப்பட்டு அவர்களைக் காட்சிப்படுத்தியதை உலகம் கண்டது. இது நேரடியாகப் புரிந்து கொள்ளத்தக்க இனபேதம்.

ஆனால், ஹிட்லர் கொண்டு வந்தது மத அடிப்படையிலான இனவாதம். யூதமா? கிறிஸ்தவமா? என ஆரம்பித்து யூதர்களை வன்கொடுமைக்கு உள்ளாக்கியது நாட்சி அரசு. அதற்கு பொருளாதாரக் காரணங்கள் இருந்தாலும் யூதர்களை மிருகம்போல் காட்சிப்படுத்தி வன்கொடுமை செய்தது அராஜகம். நான் சென்ற முறை கீல் சென்றிருந்தபோது இந்தியவியல் பேராசிரியர் ஹெர்மான் குல்க அவர்களை சந்தித்து உரையாடிக் கொண்டிருந்தேன். அப்போது எங்கிருந்தோ தேடி நாட்சி காலத்து பத்திரிக்கை ஒன்றைக் காட்டினார். அதில் ஆரியர்கள் கீல் நகரின் ஊஸ்டுபர் எனும் இடத்திலிருந்து உருவாகி உலகப்பரவல் ஆயினர் என்று இருந்தது. நாட்சிகளின் இனவாதத்தில் ஆரிய மேலாண்மை முக்கியம். ஆரியர்கள் உயர்ந்தவர்கள். அவர்களே உலகை ஆளத்தக்கவர் என்பது அவர்கள் வாதம். அதை வைத்து ஐரோப்பாவிலிருந்து நாடோடிகள் (ஜிப்ஸி) மற்றும் பலரை விஷவாயு வைத்துக் கொன்றனர்.

நாட்சிகளுக்கும் இந்தியாவிற்கும் ஆதித்தொடர்பு இருக்கிறது. இந்த ஆரியம் உயர்வு எனும் கருத்து இந்தியக்கருத்தியல். அது மொழியியல் சார்ந்தது. பாரதி நம் எல்லோரையும் ஆர்ய புத்ர என்கிறார். அதாவது, 'உயர்ந்த குடிகள்' என்று பொருள். சமஸ்கிருத மொழிக்கும், ஜெர்மன் மொழிக்கும் ஆழமான தொடர்புண்டு. எனவே, இக்கருத்து அங்கேயும் இருந்ததில் வியப்பில்லை. ஆனால், மொழியியல் பயன்பாட்டை இனவியலாக மாற்றியது நாட்சி அரசு. இதை வெள்ளை ஆங்கில அரசும் ஆதரித்தது. ஏனெனில், எங்கோ இருந்த கிழக்கிந்தியக் கம்பெனி இந்தியாவை ஆள்வதை இந்த இனவாதத்தால் சப்பை கட்டு கட்ட முடிந்தது. எப்படி? முன்பே ஆரியர்கள் இந்தியாவில் வந்து ஆளுமை செய்துள்ளனர். இப்போது நாங்கள் இருக்கிறோம். எங்களுக்கு ஆரிய உரிமை இருக்கிறது என்று சொல்லி தங்கள் அந்நிய இருப்பை நியாயப் படுத்தினர். மேக்ஸ் முல்லரின் வேத ஆராய்ச்சியில் கூட காலக் கணிப்பை தீர்மானித்தது கிறிஸ்தவ நம்பிக்கைகளே.

இப்படி இவர்கள் ஒரு நூதன இனவாதத்தை இந்தியாவில் வைத்தபோது இந்தியர்களால் அதை எளிதாக நம்ப முடிந்தது. ஏனெனில் உலகின் மிகத்தொன்மையான இனவாதக் கலாசாரம் இந்தியக் கலாசாரம். நாம் அதை இனவாதம் எனக் கண்டுகொள்வதில்லை. மனிதனை மனிதன் வேறுபடுத்திக் கொடுமைப்படுத்தும் ஜாதீயம் நாட்சியியத்திற்கு எவ்வகையிலும் குறைந்தது அல்ல. எனவே, ஒட்டுமொத்த இந்தியாவும் வெள்ளையனை 'துரை' எனச் சொல்ல ஆரம்பித்தது. இந்தியாவில் நாட்சி ஆதரவு இருந்தது. அதை இவர்கள் தன்வயப்படுத்த முயன்றனர். "பிளவு பட்ட இந்தியா ஆள்வதற்கு எளிது" எனும் அதிகாரக் கருத்தியலை சுதந்திரத்திற்குப் பின் இந்தியர்கள் ஆரியவாதத்தை வைத்து தக்க வைத்துக் கொண்டனர். இப்படித்தான் மொழியியல் கருத்தான ஒரிஜினல் ஆரியம், இரண்டாம் உலகப் போருக்குப் பின் இனவாதக் கருத்தியலாக உருமாற்றம் பெற்றது. அதுவும் தமிழகத்தில் ஆரியம், திராவிடம் எனும் கருதுகோள் மிகப்பலமான அரசியல் இயங்கு சக்தியாக மாறிப்போனது.

இந்த சமூகக்கேடை தமிழ்ச் சமயம் எதிர்த்த வரலாறு காணக்கிடைக்கிறது. இராமானுசர் எனும் துறவி "மனிதருள் வேற்றுமை கிடையாது" என்று பரவலாக ஆழ்வார்கள் வழியில் சொல்லி மாற்ற முயன்றார். ஜாதி வேற்றுமை கருதாது இறை அடியார் எனும் ஒற்றை அடையாளத்தில் எல்லோரையும் ஒன்று சேர்த்த வரலாறு, பதிவு பெற்ற வரலாறு. ஆயினும் இனவாதம் என்பது மிக அடிப்படையான விலங்கியல் சார்ந்த உயிர்ப்பொருள் என்பதால் அது வென்றுகொண்டே இருக்கிறது. வெறும் இரட்டைச் சுழலாக இருந்த டி.என்.ஏ இன்று இத்தனை உயிர்களாக பரிணமித்து இருப்பதற்கு இனக்கலப்பு இல்லாத பிரிவு என்பது முக்கியம். அதுவே புதிய இனங்களை உருவாக்கி பல்லினப் பெருக்கத்தைக் கூட்டும். எனவே, எல்லாம் ஒன்று எனும் கருதுகோள் உலகளவில் முயன்று தோற்ற வண்ணமேயுள்ளது.

ஆனால், ஜெர்மனியில் தொடர்ந்து அறிவியல் அணுகுமுறையால் இனவாதத்தை எதிர்கொண்டு வந்தது பலனளித்துள்ளது. நாங்கள் அங்கு வாழ்ந்த காலத்தில் நிற வேற்றுமைக்கு உள்ளாகவில்லை. ஆனால், நான் எதிர்பாராத வண்ணம் அமெரிக்காவிலுள்ள டென்னிசி மாநிலத்தில் நிறத்தால் வேறுபடுத்தப்பட்டு இனவாதத்திற்கு உட்பட்டேன். அங்கு கென்னி ரோஜர்ஸ்ஸின் நாட்டுப் பாடல்கள் அடங்கிய ஒரு சிடியை வாங்கிவிட்டு வரிசையில் நின்றால், அவன் வெள்ளையரை மட்டும் கவனித்து அனுப்பிக்கொண்டே இருந்தான். காண்டாகி நான் கேட்ட பிறகே நான் ஒருவன் அங்கு வரிசையில் காசு கட்ட சிடியுடன் நிற்பது அவன் கண்ணிற்குத் தெரிந்தது. இந்த அயலக வாழ்வு தமிழனின் கண்ணைத் திறந்தது என்றே சொல்ல வேண்டும். இந்தியாவில், இலங்கையில் பெரிய குடியில் பிறந்தவன் எனும் மமதையில் காலோட்சலாம். ஆனால், அயலகம் வந்தால் நாமெல்லோரும் ஒட்டு மொத்தமாக நிறமுடையோர் என ஒதுக்கப்படும் போதுதான் நம் நாட்டில் ஜாதி அடிப்படையில் ஒதுக்கப்படும் மக்களின் மன அழுத்தம் புரியும். குறிப்பாக அகதிகளாக வந்து சேர்ந்த தமிழர்களின் ஜாதீயப்பீடு ஐரோப்பாவில் ஒட்டு மொத்தமாக உடைகிறது.இலங்கையில் என்ஜினீயராக இருந்தவன் இங்கு வந்து கக்கூஸ் கழுவும் போது தன்மானம் உடைகிறது. அப்போதுதான் கக்கூஸ் கழுவும் பிற மனிதரை, மனிதராகக் காண்கிறான். இதை நாங்கள் ஐரோப்பாவில் தொடர்ந்து நடத்திய இலக்கிய சந்திப்புகளில் விரிவாக அலசியிருக்கிறோம். அதே போல் ஆசிய ஆணாதிக்கக் கட்டுமானமும் இங்கு வந்த போது உடைகிறது. பெண்ணிய எழுச்சியைத் ஐரோப்பிய தமிழ்ப் பெண்களிடம் காணமுடிகிறது.

(தொடரும்)

Loading content, please wait...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com