
இந்த வருடம் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள்
ஆன் லைனில் வகுப்புகள் நடத்துகின்றன. இது குழந்தைகளின் கண்களை பாதிக்குமோ என்று அம்மா அப்பாக்கள் தாத்தா பாட்டிகள் பலரும் கவலைப்படுவதை கவனிக்கிறேன்.
ஆனால் கொரோனா வருவதற்கு முன்பும் நம் குழந்தைகள் கம்ப்யூட்டர் மற்றும் மொபைல் ஃபோன்களில் புகுந்து கலக்குவதையும் நாம் பெருமையாகத்தான் பார்த்தோம் இல்லையா?
மேலும் தமிழக அரசு ஏழை எளிய மாணவர்களுக்கு கடந்த 10 வருடங்களாகவே மடிக்கணினி (லேப் டாப்) வழங்கி வருவதும் நமக்கு தெரியும் இல்லையா?
ஒரு காலத்தில் மணலை சமமாக பரத்தி, அதில் ஆட்காட்டி விரலால் எழுதிப் படித்தார்கள்.
அதன் பின்னர் பனை ஓலையை பதப்படுத்தி, வசதியைப் பொருத்து இரும்பு, அலுமினியம், செம்பு, தங்கத்தினால் எழுத்தாணி செய்து அதனால் எழுதிப் படித்தார்கள்.
நம் தாத்தா பாட்டிகளும், நம்மில் சிலரும் கல் சிலேட்டு, தகர சிலேட்டு, அட்டை சிலேட்டில் பலப்பம், சாக்பீஸ் வைத்து எழுதிப்படித்தோம்.
இன்று நம் குழந்தைகள் நேரடியாக தாளில் பென்சில், பால்பாயிண்ட் பேனா வைத்து எழுதிப் படித்து வருகிறார்கள். இன்னும் சில குட்டீஸ்கள் ஸ்டெனொக்ராபரை விட வேகமாக மொபைல் போனில் படபடவென்று டைப்படித்து வருகிறார்கள். அதை பெருமையாக பார்த்து பேசும் வழக்கமும் நம்மில் சிலருக்கு உண்டு.
அப்போதெல்லாம் இல்லாத பயம் இப்போது எதற்கு?
இது வளர்ச்சி. இந்த மாற்றத்தை ஏற்றுக்கொள்வதைத் தவிர வேறு வழி இல்லை.
கம்ப்யூட்டர், மொபைல் போன் காரணமாக நம் கண்கள், குறிப்பாக குழந்தைகள் சந்திக்கும் சிரமங்கள் மற்றும் கிட்டப்பார்வை பற்றி நாம் தெரிந்து கொள்ள சென்னை, சங்கர நேத்ராலயா துணைத்தலைவர் மற்றும் குழந்தைகள் கண் மருத்துவ துறை இயக்குநர் பேராசிரியர் டாக்டர் டி.எஸ்.சுரேந்திரன் அவர்களும், குழந்தைகள் கிட்டப்பார்வை துறை டாக்டர் ஜமீல் ரிஸ்வானா அவர்களும்
அளித்த விளக்கம்.
கண்ணில் மொபைல் போன் மற்றும் லேப்டாப்களின் தாக்கம்:
அறிவியல் பூர்வமான ஆதாரங்களால் வழங்கப்படும் முக்கியமான ஆலோசனைகள்:
* இந்த சாதனங்களைப் பயன்படுத்தும் போது
– குறைந்த பட்சம் ஒரு கை வேலை செய்யும் தூரத்தில் (ஒன்று முதல் இரண்டு அடி தூரம்) இவற்றை வைத்து பயன்படுத்துதல்,
– சுற்றுப்புற வெளிச்சத்தின் கீழ் படிப்பது, இயற்கையான வெளிச்சத்தில் கேட்ஜெட்களுடன் வேலை செய்வது, மற்றும்
– குழந்தைகள் வறண்ட கண் உருவாகாமல் இருப்பதை உறுதிசெய்ய அடிக்கடி கண்களை சிமிட்டுவதற்கு அல்லது கண்களை ஒரு குறிப்பிட்ட கால இடைவெளிகளில் கண்களை மூடி திறந்து பயிற்சி செய்யும்படி அறிவுறுத்துவதன் மூலம் உலர் கண் நோய் அறிவுரை மற்றும் உலர் கண் நோய் தொடர்பான அறிகுறிகள் எடுத்துச் சொல்வதும் நல்லது.
இன்றைய காலகட்டத்தில் அறிவியல் மற்றும் தொழில் நுட்ப வளர்ச்சியை ஒரு வரமாகவோ அல்லது தடைசெய்ய வேண்டிய சாபமாகவோ நினைப்பது நம்முடைய அறிவுதான் தீர்மானிக்க வேண்டும்.
தொழில்நுட்பம் நம் வாழ்நாள் முழுவதையும் தளர்த்தியுள்ளது என்பதையும், நம் வீடுகளிலிருந்து நம்முடைய எல்லா பழக்க வழக்கத்தையும் எளிமையாக்கியும் எல்லா வயதினருக்கும் ஒரு மதிப்பு மிக்க, வசதி மிக்க வாழ்க்கை அமைந்துள்ளதையும் புரிந்து கொள்ள வேண்டியது அவசியம்.
கொடுக்கப்பட்ட இந்த ஆலோசனைகளை செயல்படுத்துவது நம் கைகளில் உள்ளது, அதாவது குழந்தைகள் உட்பட அனைவருமே நல்ல கண் ஆரோக்கியத்தையும் ஒட்டுமொத்த சுகாதாரத்தையும் தொடர்ந்து பராமரிக்கும் போது அறிவுபூர்வமாக தூண்டப்படுகிறார்கள். ஏனெனில் கல்வி என்பது 80% நமது கண் ஆரோக்கியத்தை சார்ந்தே உள்ளது.