வாசகர் கேள்வியும் வல்லுநர் பதிலும்

வாசகர் கேள்வியும் வல்லுநர் பதிலும்
Published on

தொடர்ந்து விலைவாசி உயர்ந்து கொண்டிருக்கும் நேரத்தில்  வங்கிகளில் டெபாஸிட்களுக்கு வட்டி விகிதங்களை  குறைத்துக் கொண்டே  இருக்கிறார்களே ஏன்? அரசுக்கு மக்கள் வங்கிகளில் சேமிப்பை ஊக்குவிக்க  விரும்பவில்லையா?

– சுஹைல் ரஹ்மான், திருச்சி

 வாசகர் கேள்விக்கு பதிலளிக்கிறார்
                 நிதி மேலாண்மை ஆலோசகர் லதா ரகுநாதன் :

உங்கள் கேள்வியை இரண்டு பாகமாகப் பிரித்து அதற்கான பதிலைப் பார்க்கலாம்.

முதல் பாகம் :

வங்கிகள் எந்தக் காரணத்தால் சேமிப்பு கணக்குகளுக்கான  வட்டி விகிதத்தைக் குறைத்தவண்ணம் உள்ளார்கள்?

உங்களையே ஒரு உதாரணமாக எடுத்துக்கொள்ளப்போகிறேன். நீங்கள் எப்போது கடன் வாங்குவீர்கள்? உங்களுக்குப் பணத்தேவை இருந்து அதற்கான போதிய பணம் கைகளில் இல்லாதபோதுதானே? வங்கிகளும் இந்த கொடுக்கல் வாங்கலைத்தான் செய்கிறார்கள். அவர்களுக்கான பணத்தேவை அதிகரிக்கும்போது மக்களான நம்மிடமிருந்து சேமிப்பாக வாங்குகிறார்கள். இங்கே அடிப்படை அவர்கள் செய்வது தொழில். அதில், நமக்குக் கொடுக்கும் வட்டி விகிதத்தைவிட, வங்கிக் கடன் வாங்குபவர்களிடமிருந்து அவர்கள் அதிக வட்டி பெற வேண்டும். இதுதான் வெற்றிகரமான தொழிலுக்கு அடிப்படை. ஆனால் இப்போதுள்ள சூழ்நிலையில் பல தொழில்கள் முடங்கிய நிலையில் உள்ளன. அவர்களை நம்பி கடன் கொடுக்க முடியாது. அப்படி என்றால், அதிக வட்டி கொடுத்து நம்மிடமிருந்து சேமிப்புகளாகப் பெற்ற தொகையிலிருந்து அவர்கள் லாபம் பார்க்க இயலாது. அதைப் பெட்டிகளில் முடக்கித்தான் வைக்கவேண்டும். அதற்கு ரிசர்வ் வங்கி கொடுக்கும் வட்டி விகிதம் மிகவும் குறைவானது. அதனால் அதிக வட்டி கொடுத்து நம்மிடமிருந்து சேமிப்புகளை வாங்குவது லாபமானதல்ல. மேலும், முன்னர் இருந்ததுபோல் இன்று வங்கிகள் வாடிக்கையாளர்களின் சேமிப்பை மட்டும் கடன் வழங்க பயன்படுத்துவதில்லை. உங்கள் சேமிப்புக்கு கொடுக்கும் வட்டியைவிட மிக குறைந்த வட்டியில் நீண்ட நாட்கள் கடன்கள் இப்போது வங்கிகளுக்கு பல வகைகளில் கிடைக்கிறது. கடன்களை தவிர குறுகிய கால  தேவைகளுக்கு ரிசர்வங்கி அனுமதித்த பல வகைகளில் குறைவான வட்டிக்கு தேவையான பணத்தை பெறுகிறது. இது உலகெங்கும் வங்கிகளில்  நெடு நாட்களாக இருக்கும் முறை. நம் வங்கிகள் கடந்த சில வருடங்களாகதான் இந்த முறையை மேற்கொண்டிருக்கிறது.

நாட்டின் தொழில்வளம்  பெருக  வங்கிகள் அதிக அளவில் கடன் கொடுக்க வேண்டும் என்பதை கொள்கையாக அரசு அறிவித்திருக்கிறது. அதனால் வங்கிகள் டெப்பாஸிட்களைவிட குறைந்த வட்டிக்கு கிடைக்கும் நிதியாதாரங்களை நோக்கி வேகமாக நகர்ந்துக் கொண்டிருக்கிறது.

இதுதான் குறைந்துக்கொண்டிருக்கும் வட்டி விகிதத்திற்கான முதல் காரணம். இது வர்த்தகத்தின் அடிப்படையான Demand and Supply கணக்குதான்.

 இரண்டாம் பாகம் :

அரசாங்கம் மக்கள் சேமிப்பை விரும்பவில்லையா?

இதற்கான பதிலைக் குறைந்து கொண்டிருக்கும் வங்கிக் கடன் வட்டி விகிதங்கள் உங்களுக்கு உணர்த்தும். எதனால் அரசாங்கம் மக்கள் கைகளில் அதிகப் பணம் புரளுவதை இப்போது விரும்புகிறது? கரோனா இடறினால் மக்களின் பணப்புழக்கம் குறைந்து விட்டது. அவர்களைக் குறைந்த வட்டிக் கடன் என்ற கேரட்டை முன் நிறுத்திச் சேமிப்பை விடச் செலவழிப்பதில் ஆர்வம் கொள்ளத் தூண்டுகிறார்கள். ஒரு விதத்தில் பொருளாதார முன்னேற்றத்திற்கு இப்போது உள்ள நெருக்கடி நிலையில்  இதுவும் தேவைப்படுகிறது.அரசாங்கத்தின் இந்த நிலைக்கு மற்றுமொரு உதாரணம் Gold monetisation schemes. தனி மனித பாதுகாப்பை மனதில் கொண்டு முடக்கப்படும் சேமிப்புக்களை அரசாங்கம் விரும்பவில்லை. மேலும்  மக்களின் வங்கி சேமிப்பைத் தாண்டிய இதர சேமிப்பு வகைகள் பெருக்குவதும் நாட்டின் பொருளாதார சுழற்சிக்கு உதவும்  அடிப்படையில் இன்றைய அரசின் கொள்கை முடிவுகள் இருக்கின்றன.

இப்போது கேள்வியில் தொங்கி நிற்கும் ஒரு பாகத்திற்கு வரலாம்.

இந்த குறைவான வட்டி வரும் ஆண்டுகளில் தொடருமா?

'ஆம்' என்றே தோன்றுகிறது. முதல் காரணம், வீட்டுக்கடன் போன்ற பல வருடக் கடன்களை வங்கிகள் குறைவான வட்டி விகிதத்தில் கொடுக்கத் தொடங்கி உள்ளன. இனி வரும் ஆண்டுகளுக்கு அவர்களை இந்த குறைந்த வட்டிக்கடன் நிலை கட்டுப்பாட்டில் வைத்திருக்கும். அதனால் சேமிப்பு கணக்குகளுக்கு அதிக வட்டி கொடுப்பது சாத்தியப்படாது.

தவிர, பல நாடுகளின் தளர்த்தப்பட்ட பொருளாதார கொள்கையால் சந்தையில் பணப்புழக்கம் அதிகம் நிலவுகிறது. இதனைக் குறைப்பதற்கு ரிசர்வ் வங்கி முயற்சிகளை எடுக்கவேண்டும். ஆனால் தற்போது உள்ள பொருளாதார மந்த நிலையில் இனி வரும் சில வருடங்களுக்கு இது சாத்தியப்படப்போவதில்லை.

பொருளாதார முன்னேற்றம் கண்டுள்ள பல நாடுகளில் சேமிப்புக் கணக்குகளுக்கு வட்டி எதுவும் கொடுக்கப்படுவதில்லை.அல்லது மிகக்குறைவான விகிதத்தில் கொடுக்கப்படுகிறது. சில நாடுகள் இதற்கு நம்மிடமிருந்து கூட பணம் அதாவது சர்வீஸ் சார்ஜ் வசூலிக்கிறது.

ஆக, கூட்டிக் கழித்து பதில் என்ன என்று நீங்களே நாளைய நிலை எவ்வாறு இருக்கும் என்பதை அனுமானித்துக்கொள்ளுங்கள்.

Loading content, please wait...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com